search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை தேர்தல்"

    • தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திட குழு அமைத்துள்ளது பாஜக
    • இந்த மாநில அளவிலான குழுவில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திடவும். ஒருங்கிணைத்திடவும் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது என பாஜக அறிவித்துள்ளது.

    இந்த மாநில அளவிலான குழுவில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இக்குழுவில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக தேசிய இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேத்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.இராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    ஏற்கனவே பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எங்கள் தொகுதி எம்.பியை காணவில்லை, கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஒட்டப்பட்டு வருகிறது.
    • மதுரை முழுவதும் மதுரை தொகுதி MP-யை காணவில்லை, கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டரை மர்ம நபர்கள் ஒட்டியுள்ளனர்.

     'மதுரை தொகுதி MP-யை காணவில்லை' என ஒட்டப்பட்ட போஸ்டருடன் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

    மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், தமிழ்நாட்டில் பல்வறு தொகுதிகளிளும் எங்கள் தொகுதி எம்.பியை காணவில்லை, கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஒட்டப்பட்டு வருகிறது.

    சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மற்றும் கரூர் தொகுதிகளிலும் இதே மாதிரியான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

    இந்நிலையில் நேற்று மதுரை முழுவதும் மதுரை தொகுதி MP-யை காணவில்லை, கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டரை மர்ம நபர்கள் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர் பக்கத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    • இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை, இரண்டு மக்களவை இடங்கள் ஒதுக்கீடு.
    • மற்ற இரு கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்துள்ளது.

    கேரளாவில் பிரனராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிக்கும் இடையில் போட்டி நிலவுகிறது.

    கேரளாவில் மொத்தம் 20 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில் காங்கிரஸ் 16 இடங்களில் போட்டியிடும் என அம்மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியின் தலைவருமான வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார்.

    கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மூன்று இடங்கள் கேட்ட நிலையில், இரண்டு இடங்கள் அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மலப்புரம், பொன்னாணி ஆகிய இடங்களில் போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளா காங்கிரஸ் (ஜே) கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சி கோட்டயம் தொகுதியில் போட்டியிடும் எனவும், கொல்லம் தொகுதியில ஆர்எஸ்பி போட்டியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    16 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள் என சதீசன் தெரிவித்துள்ளார்.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு அடுத்த முறை காலியாகும் மாநிலங்களவை எம்.பி. தொகுதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    கடந்த முறை வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிட்டார். தற்போது வயநாட்டில் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் டி.ராஜாவின் மனைவி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராகுல் காந்தி அந்த தொகுதியில் நிற்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

    • பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்பதில் பகுஜன் சமாஜ் கட்சி உறுதியாக உள்ளது.
    • கூட்டணி குறித்த தேவையற்ற வதந்திகளை கட்சித் தொண்டர்கள் நம்ப வேண்டாம்.

    பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்றும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என்றும் அந்த கட்சியின் தலைவர் மாயாவதி மீண்டும் தெரிவித்துள்ளார்.

    பகுஜன் சமாஜ் கட்சிக்கு இந்தியா கூட்டணியின் கதவுகள் திறந்தே உள்ளன என்று உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே அழைப்பு விடுத்த நிலையில் மாயாவதி அதை அதிரடியாக நிராகரித்தார்.

    இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் மாயாவதி கூறுகையில், "கூட்டணி குறித்த தேவையற்ற வதந்திகளை கட்சித் தொண்டர்கள் நம்ப வேண்டாம். இதில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி இல்லாமல் சில கட்சிகளால் பலன் பெற முடியாது என்பது தெரிய வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்பதில் பகுஜன் சமாஜ் கட்சி உறுதியாக உள்ளது." என்றார்.

    • கடமையுணர்வோடு ஓய்வின்றி உழைப்போம்.
    • நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்பதை உறுதிசெய்வோம்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது:-

    நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்பதை உறுதிசெய்யும் விதமாக மிக எழுச்சியோடு பிரமாண்டமாகத் தமிழ்நாடெங்கும் நடந்தேறியுள்ளன 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்'பொதுக்கூட்டங்கள்!

    வெற்றிகரமாக இந்தக் கூட்டங்களை ஒருங்கிணைத்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் – கழக முன்னணியினர் என அனைவர்க்கும் பாராட்டுகள்! நன்றி!

    2024 தேர்தல் வெற்றியை நோக்கிய நம் பயணத்தில் அடுத்த நூறு நாட்களும் மிக முக்கியமானவை. கடமையுணர்வோடு ஓய்வின்றி உழைப்போம்; இந்திய கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்!

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • அ.தி.மு.க.வின் 2011 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையைத் தேடி எடுத்துப் படித்துப் பாருங்கள்.
    • அ.தி.மு.க.தான் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது.

    நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வௌியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திராவிட இயக்கக் கோட்பாடுகளைக் கொண்ட, எல்லோருக்கும் எல்லாமுமான, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு அளிக்கும் பட்ஜெட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசு தாக்கல் செய்திருக்கிறது.

    இதனால், கொதிநிலைக்குப் போயிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, 'கனவு பட்ஜெட்; மக்களுக்குப் பயன் தராது' எனப் புலம்பியிருக்கிறார்.

    'தி.மு.க. அரசுக்கு 8,33,361 கோடி கடன் உள்ளது. கடன் பெற்றே ஆட்சியை நடத்துகின்றனர். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் நம்பர் ஒன் அரசாகத் தமிழ்நாடு அரசு உள்ளது' எனச் சொல்லியிருக்கிறார்.

    எம்.ஜி.ஆர். மாளிகையின் பரணில் தூக்கிப் போடப்பட்டிருக்கும் அ.தி.மு.க.வின் 2011 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையைத் தேடி எடுத்துப் படித்துப் பாருங்கள். 

    அதையெல்லாம் படிக்க உங்களுக்கு நேரம் இருக்காது என்பது எங்களுக்குத் தெரியும். அதனால், 8-ஆம் பக்கத்தை மட்டுமாவது கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்.

    ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைக்குனிவில் இருந்து தமிழ்நாட்டை மீட்டு, தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கவும், தன்மானத்துடன் வாழவும், வழிவகை செய்யப்படும்' என வாக்குறுதி அளித்திருந்தீர்கள்.

    அந்தத் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க.தான் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. அம்மையார் ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரின் பத்தாண்டு ஆட்சிகளில் கடன் சுமை என்கிற தலைக்குனிவைப் போக்குவதற்குப் பதிலாக ஒவ்வொரு தமிழரின் தலையிலும் கடனை ஏற்றியதுதான் உங்கள் சாதனை.

    நடப்பது மக்களாட்சியா... இல்லை மன்னராட்சியா எனச் சந்தேகம் கொள்ளும் வகையில் சட்டமன்றத்தில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குத் துதி பாடிக் கொண்டிருந்தார்கள். எதார்த்தத்துக்கு வராமல் ஜெயலலிதா அவர்களையும் பழனிசாமி அவர்களையும் குளிர்விப்பதற்கே தமிழ்நாடு சட்டமன்றம் பயன்பட்டது.

    2011 - 2012-ஆம் ஆண்டில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 630 கோடி ரூபாயாக இருந்த கடனைப் படிப்படியாக உயர்த்தி 2020 - 2021-ஆம் ஆண்டில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடி ரூபாயாகக் கொண்டு வந்து நிறுத்தினீர்கள்.

    'கடன்' என்ற சொல்லுக்குக் 'கடமை' என்ற பொருளும் உண்டு. ஆனால், கடமையைச் செய்யத் தவறிக் கடன் சுமை தொடர்ந்து ஏறிக்கொண்டே போனதுதான் பத்தாண்டு அ.தி.மு.க. அரசின் சாதனை.

    'ஒரு மாநில அரசு, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் ஆண்டுக்கு மூன்று விழுக்காட்டுக்கு மேல் கடன் வாங்க முடியாது. அதே சமயம் எந்தக் காலத்திலும் ஒட்டுமொத்தமாக 25 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது' என்கிறது மத்திய நிதி கமிஷன். இந்த வரம்பைத் தமிழ்நாடு அரசு இன்னும் தாண்டவில்லை.

    ஓர் அரசு கடன் வாங்குவதில் தவறு இல்லை. உலகம் எங்கும் அரசுகள் கடன் வாங்கித்தான் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அப்படிப் பெறப்படும் கடனைத் திருப்பிச் செலுத்தக் கூடிய திறன் பெற்ற அரசாக இருக்க வேண்டும். அப்படியான அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    'வருஷா வருஷம் கடன் வாங்கித்தான் இந்த அரசு வண்டியை ஓட்டிக்கிட்டு இருக்கு' என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. பத்தாண்டு அ.தி.மு.க. அரசும் அதைத்தானே செய்து கொண்டிருந்தது. தி.மு.க. அரசின் கடனைப் பற்றிக் கவலைப்படும் பழனிசாமி ஏன் மோடி அரசின் கடனைப் பற்றி வாய் திறக்கவில்லை?

    2014-ல் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சியில் 54 லட்சம் கோடியாக இருந்த கடன் பத்தாண்டில் 205 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்திருக்கிறதே அதைப் பேசப் பழனிசாமி அவர்களின் வாய்க்கு யார் பூட்டு போட்டார்கள்?

    பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என்பதை மணிக்கொரு முறை சொல்லிக் கொண்டிருக்கும் பழனிசாமி அவர்கள், அது உண்மையென்றால் ஒன்றிய அரசின் கடனைப் பற்றி கர்ஜிக்க வேண்டியதுதானே?

    பழனிசாமி அவர்கள் அளித்த அந்தப் பேட்டியில் அவரே ஒரு உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். "அ.தி.மு.க. ஆட்சியை விட அதிக வருவாய் இப்போது தி.மு.க. ஆட்சியில் வருகிறது'' எனச் சொல்லியிருக்கிறார்.

    அதாவது வருவாயைப் பெருக்கும் பணியைத் தி.மு.க. அரசு செவ்வனே செய்து வருகிறது என அவரே சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார். கடனை அடைக்க வருவாயைப் பெருக்கும் வழியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு செய்து கொண்டிருக்கிறது. நிச்சயமாகக் கடனை அடைக்கும் வழிகளை இன்னும் சிறப்பாக இந்த அரசு மேற்கொள்ளும்.

    'தி.மு.க. அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது; மக்களுக்குப் பயன் தராது' எனச் சொல்லியிருக்கிறார். அது பயன் தரும் என நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு எழுதுவார்கள். கடந்த காலங்களில் அ.தி.மு.க.வின் பட்ஜெட்டுகளில் வெளியான அறிவிப்புகள் புஸ்வாணமானதை எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் மறந்துவிட வேண்டாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதுமை மற்றும் உடல்நல பிரச்சினைகளால் வருகிற மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன்.
    • உங்களுக்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு இருக்காது. இருப்பினும், எனது இதயமும், ஆன்மாவும் எப்போதும் உங்களுடனே இருக்கும்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, கடந்த 2004-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.

    கடைசியாக, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலிலும் ரேபரேலியில் வெற்றி பெற்று எம்.பி.யாக பணியாற்றி வருகிறார். இதற்கிடையே, இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் மக்களவை தேர்தல் வரும் நிலையில், சோனியாகாந்தி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் காலியாகும் மாநிலங்களவை இடத்துக்கு அவர் போட்டியிடுகிறார். இதனால், மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட மாட்டார் என்பது உறுதியானது.

    இந்நிலையில், தனது ரேபரேலி தொகுதி வாக்காளர்களுக்கு சோனியாகாந்தி இந்தியில் எழுதப்பட்ட ஒரு உருக்கமான செய்தியை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் இன்று அடைந்திருக்கும் நிலைக்கு காரணம் நீங்கள்தான் என்பதை பெருமையாக தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் நம்பிக்கையை கவுரவிக்க என்னால் இயன்ற அளவுக்கு செயல்பட்டுள்ளேன்.

    தற்போது முதுமை மற்றும் உடல்நல பிரச்சினைகளால் வருகிற மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன். இந்த முடிவால், உங்களுக்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு இருக்காது. இருப்பினும், எனது இதயமும், ஆன்மாவும் எப்போதும் உங்களுடனே இருக்கும்.

    கடந்த காலத்தை போலவே எதிர்காலத்தில் எனக்கும், என் குடும்பத்துக்கும் ஆதரவாக இருப்பீர்கள் என்று எனக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ரேபரேலி தொகுதியில் சோனியாகாந்தியின் மகளும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மக்களவை எம்.பி.யாக உள்ள சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களை எம்.பி.க்கு போட்டியிட இருப்பதாக தகவல்.
    • அப்படி போட்டியிட்டால் பிரியங்கா காந்தியை ரேபரேலி தொகுதியில் நிறுத்த காங்கிரஸ் முடிவு.

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் வர இருக்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, அக்கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் தொகுதி பங்கீடு முடிவடையும் எனத் தெரிவித்துள்ளது. இந்த தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் இதுவரை மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சோனியா காந்தி முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்கு போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 77 வயதாகும் சோனியா காந்தியின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

    காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியாக கருதப்படும் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல்கள் உறுதியானால் முதன்முறையாக பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடுவார்.

    சோனியா காந்தி கடந்த 2006-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வி அடைந்தாலும் சோனியா காந்தி அமைதி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

    மற்றொரு பாரம்பரிய தொகுதியான அமேதியில் ராகுல் காந்தி, ஸ்மிரிதி இரானியால் தோற்கடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டதால், இந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார்.

    கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பிரியங்கா காந்தி அரசியலில் வரவேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றனர். அப்படி தேர்தலில் வந்தால் முதல் தேர்தலில் அமோக வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் விரும்புவார்கள். அதனால் ரேபரேலி தொகுதியை அவர்கள் தேர்வு செய்வார்கள்.

    கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் அரசியலில் நுழைந்த பிரியங்கா காந்தி, 2019 மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அவர் எந்த தொகுதியிலும் போட்டியிடுவதில்லை என அறிவித்தார் என்று குறிப்பிடத்தக்கது.

    • உ.பி.யில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 69 இடங்களில் போட்டியிடுகிறது.
    • டபுள் என்ஜின் அரசு என்று சொல்லப்பட்ட போதிலும் 10 வருட பட்ஜெட்டில் பணவீக்கம் குறையவில்லை.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக தற்போதைய எம்.பி.க்கள் யாரையும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் களம் இறக்காது என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நான் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை சொல்ல இருக்கிறேன். உத்தர பிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில், ஏற்கனவே எம்.பி.யாக இருப்பவர்களுக்கு பா.ஜனதா மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காது. ஆனால் ஒருவரை தவிர்த்து. அவர் தனது தொகுதியை மாற்ற இருப்பதாக கூறப்படுகிறது.

    சமாஜ்வாதி கட்சி வெற்றியை நோக்கி முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. பா.ஜனதா கூட்டணியை PDA (Pichchde, Dalit, Alpsankhyak- பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர்) வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பிடிஏ என்பது ஊழல், பணவீக்கம், வேலைவாய்ப்பின்மையால் துன்புறுத்தப்பட்ட 90 சதவீத மக்கள் பற்றியது.

    டபுள் என்ஜின் அரசு என்று சொல்லப்பட்ட போதிலும் 10 வருட பட்ஜெட்டில் பணவீக்கம் குறையவில்லை. விவசாயிகளை யாராவது ஒருவர் துன்பத்தில் ஆழ்த்தியிருந்தால், அது பா.ஜனதாதான்.

    இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

    உத்தர பிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு எதிரான இந்தியா கூட்டணி களம் இறங்குகிறது. அகிலேஷ் யாதவ் கட்சி 69 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 11 இடங்களில் போட்டியிடுகிறது. இரு கட்சிகளுக்கும் இடையிலான இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

    • பாஜகவை எதிர்கொள்ள காங்கிரசுக்கு மம்தா சவால்.
    • இஸ்லாமிய வாக்காளர்களை தூண்டிவிடுவதற்காக யாத்திரைக்கு வந்துள்ளனர்.

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி இன்று காங்கிரசுக்கு எதிராக கடுமையான கருத்துகளை முன்வைத்தார்.

    மேலும், இந்தியின் இதயப் பிரதேசமான மாநிலங்களில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரசுக்கு மம்தா சவால் விடுத்தார்.

    காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி, மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் பயணித்ததையும் மம்தா விமர்சித்தார். 

    இதுகுறித்து மம்தா பானர்ஜி மேலும் கூறியதாவது:-

    நாடு முழுவதும் பாஜக முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் 300 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்று நான் முன்மொழிந்தேன். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.

    இப்போது, இஸ்லாமிய வாக்காளர்களை தூண்டிவிடுவதற்காக அவர்கள் மாநிலத்திற்கு வந்துள்ளனர்.

    காங்கிரஸ் 300 இடங்களில் போட்டியிட்டால் குறைந்தது 40 இடங்களையாவது பெறுவார்களா என்பது எனக்கு சந்தேகம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடகாவில் பாஜக- மதசார்பற்ற ஜனதா தளம் இடையிலான கூட்டணி உறுதியாகியுள்ளது.
    • தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி பெறவில்லை.

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. இதனால் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை தொடங்கிவிட்டன. கூட்டணி கட்சிகளுக்கு இடையில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

    பா.ஜனதாவுக்கு எதிராக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.

    அதேவேளையில் பா.ஜனதா கூட்டணியிலும் ஏராளமான மாநில கட்சிகள் உள்ளன. பல மாநிலங்களில் பா.ஜனதா தனித்து போட்டியிடுகிறது. கூட்டணியாகவும் களம் இறங்க இருக்கிறது.

    கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் முக்கியமான கட்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடா வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பா.ஜனதாவுடன் இணைந்து போட்டியிடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தேவகவுடா கூறுகையில் "மதசார்பற்ற ஜனதா தளம், பா.ஜனதா ஆகியவை இணைந்து 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடும். கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் நாங்கள் இணைந்து போட்டியிடுவோம். தேர்தலுக்குப் பிறகு முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்" என்றார்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹெச்.டி. குமாரசாமி உள்துறை மந்திரி அமித் ஷா, பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இரண்டு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதாக தெரிவித்துள்ளன. ஆனால் தொகுதி பங்கீடு இன்னும் இறுதியாகவில்லை.

    சமீபத்தில் நடந்த கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்தித்து. இதனால் தேவகவுடா கட்சியுடன் இணைந்து போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுக்க முடியும் நினைக்கிறது.

    குமாரசாமியின் ஆட்சி கவிழ காங்கிரஸ் முக்கிய காரணமாக இருந்தது. இதனால் பா.ஜனதா துணையுடன் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க வேண்டும் என குாமாரசாமி விரும்புவார்.

    • தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.- காங்கிரஸ் இடையே வருகிற 28-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
    • கூட்டணிக் கட்சி தலைவர்களையும் மல்லிகார்ஜூன கார்கே சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை:

    2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை என தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.- காங்கிரஸ் இடையே வருகிற 28-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அடுத்த மாதம் 13-ந்தேதி தமிழகம் வர உள்ளார்.

    மக்களவை தேர்தல் பணிகள் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் இடையே மல்லிகார்ஜூன கார்கே பேச உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூட்டணிக் கட்சி தலைவர்களையும் அவர் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×