search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரில் ஒருவரை ஆதரித்தால் சர்ச்சை ஏற்படலாம் என்ற நிலையில் பாரதிய ஜனதா தவிப்புக்குள்ளானது.
    • இரு அணிகளில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமோ அவர்களை ஆதரிப்பது என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதும் அடுத்த ஒரு மணி நேரத்தில் தேர்தல் பணிக்குழுவை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

    இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜனதா களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் பா.ஜனதா மேலிடம் ரகசிய ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த சர்வேயில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பாரதிய ஜனதா தனித்து போட்டியிட்டால் சுமார் 8 ஆயிரம் வாக்குகளுக்கு குறைவாகவே கிடைக்கும் என்பது தெரியவந்தது.

    மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்பதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவை பாரதிய ஜனதா கைவிட்டது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதால் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் எந்த அணிக்கு பாரதிய ஜனதா ஆதரவு கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரில் ஒருவரை ஆதரித்தால் சர்ச்சை ஏற்படலாம் என்ற நிலையில் பாரதிய ஜனதா தவிப்புக்குள்ளானது. இந்த இரு அணிகளில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமோ அவர்களை ஆதரிப்பது என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர்.

    ஒருவேளை இரட்டை இலை சின்னம் இரு அணிகளுக்கும் கிடைக்காமல் முடங்கும் பட்சத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் சுயேட்சை சின்னத்தில்தான் போட்டியிட முடியும். ஆனால் சுயேட்சை சின்னத்துக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.

    இத்தகைய சூழ்நிலையில் தனித்து போட்டியிடாமலும், அதே சமயத்தில் அ.தி.மு.க.வை ஆதரிக்காமலும் செயல்பட பா.ஜ.க. தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர். அதன்படி அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடாமல் நடுநிலை வகிக்க முடிவு செய்து உள்ளனர்.

    இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் அளித்துள்ள பேட்டியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சூசகமாக சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அந்த பேட்டியில் அவர், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பா.ஜனதாவுக்கு பரீட்சார்த்த களம் அல்ல. 2024-ம் ஆண்டு தேர்தல்தான் இலக்கு" என்று குறிப்பிட்டு உள்ளார்.

    எனவே நாளை நடக்கும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் இந்த அடிப்படையில்தான் தீர்மானங்கள் கொண்டு வரப்படும் என்று தெரிய வந்துள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கும் நிலையில் அந்த தொகுதியில் உள்ள பா.ஜ.க. தொண்டர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப வாக்களிக்கலாம் என்று அறிவிக்கவும் தமிழக பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது.

    • திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் வரலாற்று சிறப்புமிக்கதாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும்.
    • திருப்பு முனையை உருவாக்கும் தேர்தலாக இருக்கும். வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம். எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் வழியில் எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டு காலம் தமிழகம் வியக்கத்தக்க வகையில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் பல மாற்றங்களை துறைதோறும் உருவாக்கி சிறந்த முறையில் ஆட்சி நடத்தினார்.

    பழகுவதற்கு எளிமையானவர். பொறுப்பேற்ற காலம் முதல் இன்று வரை பொதுமக்கள், கழகத்தினர் போற்றும் அயராத உழைப்பினால் எதிர்க்கட்சித் தலைவராக சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

    அவரது தலைமையில் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் களத்தில் முதன்முறையாக இடைத்தேர்தலை சந்திக்கின்றோம். கொங்கு மண்டலம் என்பது அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை. யாராலும் தகர்க்க முடியாது. அவரது தலைமையில் இன்று பணியை ஆற்றுகின்றோம்.

    அனைத்து பகுதிகளிலும் தேர்தல் களம் கண்டவர்கள் வந்துள்ளனர். பல தேர்தலை சந்தித்தவர்கள் பணியாற்றுகின்றார்கள். தேர்தல் களத்தில் அமைதியோடு மக்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்கும் பணியை சிறப்பாக செய்து வருகின்றோம்.

    இந்த தேர்தல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் வரலாற்று சிறப்புமிக்கதாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும். திருப்பு முனையை உருவாக்கும் தேர்தலாக இருக்கும். வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது.

    ஆகவே களத்தில் பணிகளை சிறப்போடு, அமைதியோடு செய்து வருகின்றோம். சரியான முறையில் கழகத்தின் சார்பாக எடப்பாடி தலைமையில் சரியான முறையில் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. தேர்தல் களத்தில் அந்த பணிகளை சிறப்பாக செய்து வருகின்றோம்.

    இரட்டை இலை சின்னம் வழக்கை பொறுத்தவரை நீதித்துறையில் என்னென்ன தேவையோ அதை பூர்த்தி செய்து செயல்பட்டு வருகிறோம். அச்சமின்றி தேர்தல் பணி செய்கிறோம். தெளிவாக 98.5 சதவீத பேர் ஒரு மனதாக பொதுச்செயலாளரை தேர்வு செய்து பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தலைமை கழக நிர்வாகிகள் செயலாற்றுகிறோம். முழு மனதோடு வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கையோடு உள்ளோம்.

    4 அணிகளாக பிரிந்து போட்டியிடுவதால் வாக்குகள் சிதறாது. தேர்தல் களத்தில் மனு தாக்கல் தொடங்கி முடிய கால அவகாசம் உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதையும் ஆய்வு செய்து வருகின்றோம். முழுமையாக ஆய்வு செய்த பிறகு வேட்பாளர் அறிவிக்கப்படுவார். குருச்சேத்திர யுத்தத்தை போல் வியூகம் வகுத்து தேர்தலை சந்தித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பா.ஜ.க. கூட்டணி, தனித்து போட்டி குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றார். மேலும் வேட்பாளர் அறிவிப்பு காலதாமதம் குறித்த கேள்விக்கு விரைவில் அறிவிக்கப்படுவார் என்று பதில் அளித்தார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 238 வாக்கு சாவடிகள் உள்ளன.
    • வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் எடப்பாடி பழனிசாமி பூத் வாரியாக ஆய்வு செய்கிறார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் 2 நாட்கள் ஆலோசனை நடத்தினார்.

    மேலும் தேர்தல் பணியாற்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கொண்ட பணிக்குழுவை அறிவித்தார்.

    அதோடு இல்லாமல் பூத் வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். தேர்தல் பணிக்குழு மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கினார்.

    அப்போது வீடு, வீடாக சென்று வாக்காளர் சரிபார்க்கும் பணியை 3 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்படி இன்றுடன் வாக்காளர் சரி பார்ப்பு பணி நிறைவு பெறுகிறது.

    இந்த பணிகளை ஆய்வு செய்ய எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஈரோட்டுக்கு வருகிறார். வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் அவர் பூத் வாரியாக ஆய்வு செய்கிறார்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 238 வாக்கு சாவடிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் தேர்தல் பணிக்குழுவினர், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் உள்ளூர் பொறுப்பாளர்களுடன் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்தனர். அவர்களிடம் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

    அதில் பூத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள், கடந்த தேர்தலில் அங்கு அ.தி.மு.க.வுக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தது. புதிதாக எத்தனை வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். அந்த பூத்தில் உள்ள மக்கள் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து விரிவாக கேட்டறிகிறார். இதே போல் 238 பூத் கமிட்டியினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

    • எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்திலும் அம்மா ஆட்சி காலத்திலும் சரி ஏழைகள் ஏற்றம் பெற வேண்டி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.
    • ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன், அந்த முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையை நிறுத்திவிட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர்-தாரமங்கலம் மெயின் ரோட்டில் வேலகவுண்டனூரில் ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தை திறந்து வைத்து பேசியதாவது:-

    ஆதரவற்ற முதியோர் இல்லத்தை திறந்து வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்திலும் அம்மா ஆட்சி காலத்திலும் சரி ஏழைகள் ஏற்றம் பெற வேண்டி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். அ.தி.மு.க.தான் ஏழைகளுக்கு உதவுகின்ற கட்சி. ஏழை மக்களுக்கு திட்டங்களை வகுப்பது தான் அ.தி.மு.க.வின் கொள்கை.

    அம்மா இருந்தபோது, ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள், வயதானவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு வழங்கி, முதியோர் உதவித்தொகை வழங்கினார்.

    இதையடுத்து அம்மா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முதியோர் உதவித்தொகை பெற கிடைக்கப்பெற வழியற்றதை கேள்விப்பட்டு நான், சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழகம் முழுவதும் தகுதியான 5 லட்சம் முதியோர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிப்பு வழங்கினேன். அதன் வாயிலாக கிட்டத்தட்ட 4 லட்சம் முதியோர்களுக்கு அம்மா அரசு அறிவித்த முதியோர் உதவித்தொகை கிடைக்கப்பெற்றது.

    ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள், ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன், அந்த முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையை நிறுத்திவிட்டது.

    முதியோர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அவர்கள் உணவு உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் அ.தி.மு.க. அரசு, அந்த திட்டத்தை அமல்படுத்தி முதியோர் உதவித்தொகை வழங்கியது. முதியோர்களை மறந்து விடாதீர்கள், கைவிட்டு விடாதீர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அ.தி.மு.க. ஆட்சி மன்ற குழுவில் 6 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
    • 31-ந்தேதி பாரதிய ஜனதா மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. வேட்பாளராக ஈரோடு கிழக்கு தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் பாரதிய ஜனதாவின் இழுபறி மற்றும் இரட்டை இலை சின்னம் காரணமாக வேட்பாளர் அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி ஒத்திவைத்தார்.

    பொதுவாக அ.தி.மு.க.வில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுப்பது ஆட்சி மன்ற குழுதான். திருத்தப்பட்ட அ.தி.மு.க. ஆட்சி மன்ற குழுவில் 8 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களில் ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர் ஒருவரும் நீக்கப்பட்ட நிலையில் தற்போது அ.தி.மு.க. ஆட்சி மன்ற குழுவில் 6 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமி, தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வராஜ், முன்னாள் எம்.பி. வேணு கோபால், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகிய 6 பேர்தான் தற்போது ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களாக நீடிக்கிறார்கள். வேட்பாளர் தேர்வு குறித்து இந்த குழுதான் இறுதி முடிவு எடுக்கும்.

    இன்றும், நாளையும் பஞ்சாங்கத்தின்படி சரி இல்லாததாக கருதியதால் அ.தி.மு.க. வேட்பாளர் தொடர்பாக எந்த ஆய்வும் நடக்கவில்லை. திங்கட்கிழமை (30-ந்தேதி) அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழு கூட்டத்தை கூட்டுவதற்கு மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அன்று ஆட்சி மன்ற குழுவை கூட்ட முடியாவிட்டால் 31-ந்தேதி உறுதியாக அந்த கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.

    அதில் அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வு பற்றி திட்டவட்டமாக முடிவுகள் எடுக்கப்படுகிறது. கூட்டம் முடிந்ததும் வேட்பாளர் பற்றி எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

    31-ந்தேதி பாரதிய ஜனதா மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாரதிய ஜனதா என்ன முடிவு எடுத்தாலும் கண்டு கொள்ள வேண்டாம் என்ற நிலைக்கு எடப்பாடி பழனிசாமி அணியினர் தீவிரமாக உள்ளனர். எனவே 30 அல்லது 31-ந் தேதி அ.தி.மு.க. வேட்பாளர் பற்றிய உறுதியான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

    • எம்.ஜி.ஆர். தலைமையில் திண்டுக்கல்லில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது போன்று இந்த தேர்தலிலும் எடப்பாடி தலைமையில் நாம் வெற்றி பெறுவோம்.
    • 98.5 சதவீத பேர் ஒரே அணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படுகிறோம்.

    ஈரோடு:

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் இது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவை எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா ஏன் உலகில் உள்ள அனைத்து தமிழ் சொந்தங்களும் இந்த இடைத்தேர்தலை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    எம்.ஜி.ஆர். தலைமையில் திண்டுக்கல்லில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது போன்று இந்த தேர்தலிலும் எடப்பாடி தலைமையில் நாம் வெற்றி பெறுவோம். இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்கி காட்டும். அ.தி.மு.க. கூட்டணியில் யார்? யார் ? இருக்கிறார்கள் என்பதை எடப்பாடி பழனிசாமி இன்னும் 3 நாட்களில் அறிவிப்பார். 98.5 சதவீத பேர் ஒரே அணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படுகிறோம்.

    இந்த தேர்தலில் சரித்திர வெற்றி பெறுவோம். இதனை நம்பி நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறோம். எங்களது வேகம், விவேகம் மக்களை சந்திக்கும் விதம் போக போக உங்களுக்கே தெரியும். இன்று முதல் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வருகிறோம். அவர்கள் மனநிலை குறித்தும் தெரிந்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி உங்களுக்கு ஆதரவு அளிக்குமா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்றார். இதேப்போல் இரட்டை இலை சின்னம் உங்களுக்கு கிடைக்குமா என்ற கேள்விக்கும் கேள்விக்கும் பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
    • பா.ஜ.க.வின் மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை ஏற்பாடு செய்துள்ளார்

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

    எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு தயாராக உள்ளார். இரட்டை இலை கிடைக்காத பட்சத்தில் தனி சின்னத்திலும் போட்டியிடுவதாக தெரிவித்து உள்ளார்.

    அதேபோல ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளரை நிறுத்துவதில் தீவிரமாக உள்ளார். அதே வேளையில் பா.ஜ.க. போட்டியிட்டால் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் ஓ.பன்னீர்செல்வமும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கேட்டனர். அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களிடமும் ஆதரவு கேட்டுள்ளனர்.

    ஈரோடு இடைத்தேர்தலில் தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்தி கொள்ள இருவரும் வரிந்து கட்டுகிறார்கள். ஆளும் தி.மு.க. கட்சிக்கு அடுத்த இடத்தை பிடிப்பதில் இருவரும் தீவிரமாக உள்ளனர்.

    அ.தி.மு.க.வின் இரு அணிகளும் பா.ஜ.க. தலைமை நிர்வாகிகளை சந்தித்து தங்களுக்கு ஆதரவு கொடுக்கும்படி வலியுறுத்தி வரும் நிலையில் இதுவரையில் எந்த பதிலையும் தெரிவிக்காமல் பா.ஜ.க. மவுனம் காத்து வருகிறது.

    அ.தி.மு.க. இரு அணிகளில் யாரை ஆதரிப்பது? அல்லது போட்டியிடலாமா? இடைத்தேர்தலில் என்ன நிலை எடுப்பது என்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படாததால் இரு அணிகளும் வேட்பாளர்களை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன.

    31-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் பா.ஜ.க.வின் முடிவை எதிர்பார்த்து நிற்கும் இரு அணிகளும் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் உள்ளன.

    இந்த நிலையில் பா.ஜ.க.வின் மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை ஏற்பாடு செய்துள்ளார். வருகிற 31-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு இக்கூட்டம் சென்னையில் கமலாலயத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட தலைவர்களும் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாநில நிர்வாகிகளும் இதில் பங்கேற்கிறார்கள். இக்கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் என்ன முடிவு எடுக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.

    எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கலாமா? ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவை தெரிவிக்கலாமா? அல்லது யாருக்கும் ஆதரவு இல்லாத நடுநிலை முடிவை எடுக்கலாமா? என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.

    மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்த பிறகு யாரை ஆதரிப்பது என்ற முடிவை அண்ணாமலை அறிவிக்க இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையில் அ.தி.மு.க. வழக்கின் தீர்ப்பு வந்துவிட்டால் அதற்கேற்றவாறு முடிவை எடுக்கவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. எனவே 31-ந்தேதி தனது இறுதி முடிவை பா.ஜ.க. அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஈரோடு மாநகர மாணவரணி அ.தி.மு.க. பொருளாளராக இருந்த முருகானந்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓ.பி.எஸ். அணியில் இணைந்தார்.
    • வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் சில தினங்களில் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    இதேபோல் தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், அ.ம.மு.க. சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுகிறது.

    இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வமும் தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளார். எனவே ஓ.பி.எஸ். அணி சார்பில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு மாநகர மாணவரணி அ.தி.மு.க. பொருளாளராக இருந்த முருகானந்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓ.பி.எஸ். அணியில் இணைந்தார். அவருக்கு ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. எனவே மாவட்ட செயலாளராக இருக்கும் முருகானந்தம் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் கூறியதாவது:-

    இந்த தேர்தலில் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம். வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் சில தினங்களில் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பார். தற்போது பூத் கமிட்டி அமைத்து அது தொடர்பான அறிக்கை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணியை தொடங்குவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் அ.தி.மு.க இரு அணிகளும் நேருக்கு நேராக ஈரோடு கிழக்கு தொகுதியில் களம் இறங்குவதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு சுப்ரீம் கோர்ட்டில் பதிலடி கொடுக்க ஆயத்தமாகி வருகிறார்கள்.
    • 30-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ள வழக்கு விசாரணை அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை களம் இறக்கும் எடப்பாடி பழனிசாமி இரட்டை சிலை சின்னம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளார்.

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தனி நீதிபதி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், 2 நீதிபதிகள் அமர்வு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளனர்.

    இதனால் சுப்ரீம் கோர்ட்டு இருவரில் யாருக்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்போகிறது என்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த பரபரப்பான சூழலில்தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் 2 அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

    இதுபோன்ற சூழலில்தான் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்திருக்கிறார்.

    இது தொடர்பாக வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) முறையிடுங்கள், நாங்கள் முடிவெடுக்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருக்கிறது.

    இதையடுத்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் சுப்ரீம் கோர்ட்டில் இதுவரை வாதிட்ட அத்தனை அம்சங்களையும் திரட்டி திங்கட்கிழமை முறையிட எடப்பாடி பழனிசாமி அணியினர் தயாராகி வருகிறார்கள். மூத்த வக்கீல் அரிமா சுந்தரம், வக்கீல் பாலாஜி சீனிவாசன் உள்ளிட்டோர் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு சுப்ரீம் கோர்ட்டில் பதிலடி கொடுக்க ஆயத்தமாகி வருகிறார்கள். சென்னை ஐகோர்ட்டில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பில் தங்களுக்கு சாதகமாக உள்ள விஷயங்களை அலசி ஆராய்ச்சி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்களும் 30-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். திங்கட்கிழமை வழக்கு விசாரணை நடைபெறும்போது கடுமையான ஆட்சேபங்களை தெரிவிக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமே நீடிப்பதால் தங்கள் தரப்புக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று அவர்களும் உரிமை கோர உள்ளனர்.

    இதனால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஓ.பன்னீர் செல்வமும் உரிமை கோர உள்ளதால் இரட்டை இலை சின்னத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவே சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனுதாக்கல் செய்ய பிப்ரவரி 7-ந்தேதி கடைசி நாளாகும். அதற்குள் இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்பட்டு விடுமா? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தொடர்ந்துள்ள மேல் முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கத்தை கேட்க வேண்டும்.

    அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவையெல்லாம் 7-ந்தேதிக்குள் முடிந்து விடுமா? என்பதும் சந்தேகமே.

    இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்கும் ஆபத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் 30-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ள வழக்கு விசாரணை அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • அண்ணா நினைவிடத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளார்.
    • அஞ்சலி செலுத்த மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை:

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு நாளான பிப்ரவரி (3-ந் தேதி) காலை 10 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அணிகளின் மாநில நிர்வாகிகளும், மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    தமிழ்நாடு மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், பிப்ரவரி 3-ந் தேதி அன்று ஆங்காங்கே அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் அஞ்சலி செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2 ஆண்டு ஆட்சி காலத்தில் கிழக்கு தொகுதிக்கு ஒரு துரும்பை கூட தி.மு.க. கிள்ளி போடவில்லை.
    • அ.தி.மு.க. செயல்படுத்திய தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை திட்டங்களை கூட தி.மு.க.வினர் நிறுத்தி விட்டனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று கிழக்கு தொகுதி அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும். மக்கள் பாராட்டுகிற அளவுக்கு தொகுதி பொறுப்பாளர்கள் பணி செய்ய வேண்டும். இரு பெரும் அரசியல் தலைவர்கள் கற்றுக்கொடுத்த அரசியலை இந்த தொகுதியில் பயன்படுத்தி மிகப்பெரிய சரித்திர வெற்றியை பெற வேண்டும்.

    கட்சிக்காரர்கள் எங்கு இருந்தாலும் அவர்களது உணர்வுகள் கிழக்கு தொகுதி நோக்கி இருக்கும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஆட்சி எப்போது விலகும் என மக்கள் எதிர்பார்ப்பதாக தி.மு.க.காரர்களே கருதுகின்றனர்.

    2 ஆண்டு ஆட்சி காலத்தில் கிழக்கு தொகுதிக்கு ஒரு துரும்பை கூட தி.மு.க. கிள்ளி போடவில்லை. தி.மு.க.காரர்கள் கூனி குறுகிதான் வாக்கு சேகரிக்க முடியும். அ.தி.மு.க.காரர்கள் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு சேகரிக்கலாம்.

    5-ல் ஒரு பகுதி ஆட்சி முடிந்த பிறகும் முக்கிய திட்டங்கள் எதையும் தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை. அ.தி.மு.க. செயல்படுத்திய தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை திட்டங்களை கூட தி.மு.க.வினர் நிறுத்தி விட்டனர்.

    ஈரோடு மாநகராட்சி மக்களுக்கு 485 கோடியில் செயல்படுத்தப்பட்ட ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டத்தை அ.தி.மு.க. கொண்டு வந்த ஒரே காரணத்துக்காக தி.மு.க. நிறுத்துகிறது. மருத்துவ கல்லூரியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. இதனால் 564 பேர் மருத்துவ கல்லூரியில் படித்து வருகின்றனர். அவர்களின் மருத்துவ படிப்பு செலவுகளையும் அ.தி.மு.க. ஏற்றது.

    தி.மு.க. ஆட்சியில் வெல்லத்தை உள்ளூரில் கொள்முதல் செய்தால் கமிஷன் பெற முடியாது என்பதால் வெளி மாநிலத்தில் இருந்து வெல்லத்தை பெற்று பயன்படுத்த முடியாத வெல்லத்தை வழங்கினார்கள். திராவிட மாடல் என்பது அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை நிறுத்துவதுதான்.

    3 நாட்களுக்குள் வாக்காளர்கள் விவரங்களை தொகுதி பொறுப்பாளர்கள் சரிபார்க்க வேண்டும். நமக்கு சோதனை புதிதல்ல. பல சோதனைகளை வென்ற இயக்கம். சிலர் எட்டப்பன்களாக மாறி எட்டப்பன் வேலை செய்து இந்த இயக்கத்தை முடக்க வேண்டும் என்று எதிரிகளோடு பணி செய்து வருகின்றனர். இந்த தேர்தல் அவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.

    சிலர் எப்படியாவது அ.தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க.வை தோற்கடித்த வரலாறு இல்லை. நாம் சரியான முறையில் உழைத்தால் வெற்றி நிச்சயம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முடிவு.
    • பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்ற கோரிக்கை.

    புதுடெல்லி:

    அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனுமதிக்ககோரி நீதிபதிகளிடம்  இன்றுமுறையீடு செய்யப்பட்டது.

    அதில், ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

    தேர்தல் ஆணைய இணையதளத்தில் அதிமுக பொதுக்குழு தீர்மானம் பதிவேற்றப்படும்பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும். எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆகிவிடுவார். சின்னமும் கிடைத்துவிடும் என்ற நோக்கில் இந்த இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து, திங்கட்கிழமை முறையிடும்படி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

    ×