search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொடர்ந்து 3 நாட்கள் சேலத்தில் தங்கும் எடப்பாடி பழனிசாமி சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
    • இனிவரும் நாட்களில் கட்சியினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

    சேலம்:

    தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    தொடர்ந்து இன்று மாலை கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டம் வழியாக சேலம் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான தீவட்டிப்பட்டியில் சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    தொடர்ந்து 3 நாட்கள் சேலத்தில் தங்கும் எடப்பாடி பழனிசாமி சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் இனிவரும் நாட்களில் கட்சியினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. அப்போது அண்டை மாவட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அவரை சந்தித்து பேச உள்ளனர்.

    இதற்கிடையே நாளை மறுநாள் முதல் 2 நாட்கள் வி.கே.சசிகலா சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சேலத்தில் 3 நாட்கள் தங்கி எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதால் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    • மதுரை மட்டுமின்றி ஒவ்வொரு நகரங்களிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • நான் மட்டுமல்ல அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக முன்னோடிகள் அனைவரும் அயராது உழைத்து கொண்டிருக்கிறார்கள்.

    மதுரை:

    மதுரை ரிங்ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அரங்கில் தமிழக வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மகன் தியானேஷ்-ஸ்மிர்தவர்ஷினி திருமணம் இன்று நடந்தது. திருமணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

    நான் ஒவ்வொரு அரசியல் நிகழ்ச்சிகளுக்கு பேசுவதற்காக சில குறிப்புகளை எடுத்து செல்வது வழக்கம். ஆனால் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் மணமக்களை வாழ்த்துவதற்கு குறிப்புகளை எடுத்துச் செல்வதில்லை. ஆனால் இந்த திருமண விழாவில் பேசுவதற்காக குறிப்புகளை எடுத்து வந்துள்ளேன். அந்த அளவுக்கு மூர்த்தி அவர்கள் இந்த துறையில் மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளார்.

    இதுவரை இல்லாத வகையில் 13 ஆயிரத்து 913 கோடி ரூபாய் வருவாயை ஈட்டி மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமல்ல பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை திங்கட்கிழமை தோறும் குறைகேட்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    கடந்த காலங்களில் இவைகள் நடத்தப்படவில்லை. அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் சென்று வர சாய்தள பாதை அமைக்கப்பட்டுள்ளது. பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வந்த உயர் மேடை, தடுப்புகள் அகற்றப்பட்டு பத்திரப்பதிவு அலுவலகங்கள், திராவிட மாடல் ஆட்சிக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.

    மேலும் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சார் பதிவாளர் அலுவலகங்களில் போலி ஆவணங்களை ரத்து செய்வதற்குரிய சட்ட திருத்தம் அமைச்சரவை கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்பட்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தோம். அவரும் ஒப்புதல் தந்து விட்டார்.

    இந்த சிறப்பு சட்டத்தை பின்பற்ற மற்ற மாநிலங்களும் நம்மை அணுகி வருகிறார்கள். இதுபோன்று எத்தனையோ மாற்றங்களை தனது துறையில் செய்து மூர்த்தி காட்டியுள்ளார். மூர்த்தி பெரிதா? கீர்த்தி பெரிதா? என்பார்கள். என்னை பொறுத்தவரை மூர்த்தி தான் பெரிது என்று சொல்லுவேன். அந்த அளவுக்கு அவர் பணியாற்றி வருகிறார்.

    கடந்த சட்டசபை தேர்தலின்போது மக்கள் எந்த நம்பிக்கையில் நமக்கு வாக்களித்தார்களோ அந்த நம்பிக்கையை காப்பாற்றுகின்ற வகையிலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தார்கள். நம்மை சட்டமன்றத்திற்கு தேர்வு செய்தார்கள். அந்த நம்பிக்கையை நிறைவேற்றுகின்ற ஆட்சி நடந்து வருகிறது.

    தேர்தல் நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு தி.மு.க. ஆட்சி அமைய தேவையான வெற்றி கிடைத்த நிலையில் நான் கோபாலபுரம் வீட்டில் இருந்து புறப்பட்டு லயோலா கல்லூரிக்கு சென்று அங்கே எனது கொளத்தூர் தொகுதிக்கான வெற்றி சான்றிதழை பெற்று நம் தலைவர் கலைஞரின் நினைவு மண்டபத்திற்கு சென்று மரியாதை செய்து வெற்றிக்கனியை சமர்ப்பித்தோம்.

    அந்த நேரத்தில் மக்களுக்கு நன்றியை தெரிவித்ததோடு மேலும் சில வாக்குறுதிகளையும் அறிவித்தோம். நமக்கு ஓட்டு போட்டவர்களுக்கு பணியாற்றி மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன், நமக்கு வாக்களிக்காதவர்களுக்கும் பணியாற்றி இவர்களுக்கு வாக்களிக்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படும் அளவுக்கு பணியாற்றுவோம் என்று கூறினேன். அந்த வகையில் செயலாற்றி வருகிறோம்.

    இப்போது மக்கள் மத்தியில் நம் மீது அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பல மடங்கு நம்பிக்கையோடு இந்த ஆட்சிக்கு மக்கள் துணை நின்று வருகிறார்கள். இனி எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெறும் என்று நம்மை விட மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளுக்காக சுற்றுப்பயணம் செல்லுகின்ற போது ஒவ்வொரு மாவட்ட ங்களிலும் மக்கள் வழி நெடுக நின்று வரவேற்கிறார்கள். பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என்று அனைத்து தரப்பினரும் சாலைகளின் இருபுறமும் திரண்டு நின்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். வரவேற்பு மட்டுமின்றி கோரிக்கை மனுக்களையும் தருகிறார்கள். பலமுறை கொடுத்துவிட்டோம் என்ற எதிர்பார்ப்பின்றி இவரிடம் மனு கொடுத்தால் நடக்கும் என்ற நம்பிக்கையில் இந்த மனுக்களை தருகிறார்கள்.

    அந்த மனுக்களை மக்கள் தரும்போது நன்றி என்று சொல்லி தருகிறார்கள். நம்பிக்கையோடு தருகிறார்கள். மேலும் தற்போது உங்கள் உடல் நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார்கள். அப்படி என்றால் இந்த அரசு மீதும், என் மீதும் மக்கள் எந்த அளவுக்கு நம்பிக்கையையும், பாசத்தையும் வைத்துள்ளார்கள் என்பதை கண்கூடாக பார்க்கிறேன்.

    கழக அரசு பல்வேறு சாதனைகளை நிறைவேற்றி வருகிறது. மதுரையில் மாபெரும் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. 70 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது. அதுபோல தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை போற்றும் வகையில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைய சட்டசபையில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் பணி தொடங்கும்.

    அதுபோது மதுரை எல்லையில் கீழடி பண்பாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. சென்னையை போல மதுரையிலும் பெருநகர குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பன்னடுக்கு வாகன காப்பகம் மற்றும் தமுக்கம் மைதானத்தில் மாநாட்டு அரங்கு ஆகியவை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    மதுரை மட்டுமின்றி ஒவ்வொரு நகரங்களிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நான் மட்டுமல்ல அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக முன்னோடிகள் அனைவரும் அயராது உழைத்து கொண்டிருக்கிறார்கள்.

    ஒவ்வொரு அமைச்சர்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் துறையில் பணிகளை செய்து வருகிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் அசைக்க முடியாத நம்பிக்கையை நாம் பெற்றுள்ளோம்.

    நேற்று நெல்லை மாவட்டத்தில் நான் சுற்றுப்பயணம் செய்தபோது ஒரு சுவரொட்டியை பார்த்தேன். அதில் ஏ.எம். பி.எம். பார்க்காத சி.எம். என்று வாகனம் இடம் பெற்றிருந்தது. நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதை குறிக்கும் வகையில் அந்த சுவரொட்டியை ஒட்டி இருந்தார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை எம்.எம். (மினிட் டூ மினிட்) சி.எம். என்ற நிலையில் ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் பணி செய்து டி.என்.நம்பர்-1 என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பது தான்.

    அந்த வகையில் ஒவ்வொரு நிமிடமும் வீணாக்காமல் நம் பணிகளை செய்து வருகிறோம். இந்த சந்தடி சாக்கில் ஒரு காமெடியை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தன்னிடம் பேசி வருவதாக எடப்பாடி பழனிசாமி ஒரு காமெடியை கூறியிருக்கிறார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களே அவரிடம் பேசுவது இல்லை. இந்த நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரிடம் பேசுவதாக ஒரு புருடா விட்டுள்ளார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்ததோடு உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்த அவர் இப்படி காமெடி பண்ணுகிறார்.

    தற்போது அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். அணி, இ.பி.எஸ். அணி என்று பிளவு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியே டெம்பரவரி பதவியில் இருக்கிறார். எனவே டெம்பரவரியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. நான் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக அவர் கூறி வருகிறார்.

    நமக்கு நல்லது செய்வதற்கே நேரம் போதவில்லை. எனவே இது போன்ற பொய் பிரசாரங்களை பற்றி பேச நேரம் எங்கே இருக்கிறது? எனவே இருக்கின்ற காலங்களில் இதுபோன்ற விமர்சனங்களை புறந்தள்ளி விட்டு மக்களுக்கு நன்மை செய்வோம். மக்களிடம் நம்பிக்கையை பெறுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தற்செயலாக இந்த சந்திப்பு நடந்ததாக வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
    • தன்னை காப்பாற்றிக்கொள்ள யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துக் கொண்டு ஈபிஎஸ் அதிமுகவை அழிக்க பார்க்கிறார்.

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காவாரப்பட்டு கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் எம்.எல்.ஏ வைத்திலிங்கம் சந்தித்துக் கொண்டனர்.

    அ.தி.மு.க. விவகாரம் பரபரப்பாக பேசப்படும் சூழ்நிலையில் இன்று சசிகலாவும், ஓ.பி.எஸ். ஆதரவாளரான வைத்திலிங்கம் சந்தித்து பேசிக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்செயலாக இந்த சந்திப்பு நடந்ததாக வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம் பின்னர் பேசியதாவது:-

    சசிகலாவை எதேச்சையாக சந்தித்தேன். அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை. அதிமுகவில் ஒற்றுமை தேவை. அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும்

    தன்னை காப்பாற்றிக்கொள்ள யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துக் கொண்டு ஈபிஎஸ் அதிமுகவை அழிக்க பார்க்கிறார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • ஓ.பி.எஸ். உயர்ந்த பொறுப்பில் இருந்தவர். அவரே ஒரு கொள்ளை கூட்டம் போல் புகுந்து அராஜகத்தில் ஈடுபட்டார்.
    • இனி மன்னிப்பு கேட்டு வந்தாலும் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழு ஒரு மனதாக ஒற்றைத் தலைமை என்பதை முடிவு செய்து இடைக்கால பொதுச்செயலாளராக நானும் மற்ற நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டார்கள். பொதுச்செயலாளருக்கான தேர்தல் விரைவில் தொடங்கும்.

    பொதுக்குழு நடந்து கொண்டிருந்தபோது ஆட்சியாளர்களின் துணையோடு தலைமை கழகத்தில் ரவுடிகளுடன் புகுந்து கதவை உடைத்து ஓ.பி.எஸ். சூறையாடினார். கம்ப்யூட்டர்கள் சேதப்படுத்தப்பட்டன.

    வேண்டுமென்றே திட்டமிட்டு வன்முறையை நிகழ்த்தியவர்கள் மீது போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் பிறகு கோர்ட்டுக்கு சென்றோம்.

    கோர்ட்டு உத்தரவிட்டும் கிடப்பில் போட்டார்கள். மீண்டும் கோர்ட்டை நாடினோம். அப்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக அறிவித்தார்கள்.

    32 ஆண்டுகள் ஆட்சி செய்த பிரதான எதிர்கட்சி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சட்டம்-ஒழுங்கு எந்த அளவு சீர் குலைந்துள்ளது என்பதை பார்த்துக்கொள்ளலாம்.

    கழகம் எம்.ஜி.ஆர். காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும், அவரது மறைவுக்கு பிறகும் சோதனைகளை சந்தித்து வந்துள்ளது. எல்லா சோதனைகளையும் வென்று சாதனை படைப்பது தான் வரலாறு.

    அ.தி.மு.க.வில் பிளவு என்பது கிடையாது. கட்சிக்கு விரோதமாகவும், எதிராகவும், அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் சிலர் செயல்பட்டார்கள். அவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    ஓ.பி.எஸ். உயர்ந்த பொறுப்பில் இருந்தவர். அவரே ஒரு கொள்ளை கூட்டம் போல் புகுந்து அராஜகத்தில் ஈடுபட்டார். இனி மன்னிப்பு கேட்டு வந்தாலும் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்.

    இது தொண்டர்களின் இயக்கம். ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தான் இணைத்து உயர்ந்த பொறுப்பும் கொடுக்கப்பட்டது.

    ஆனால் அவரோ தனக்கு சாதகமானதை மட்டும் தான் பேசுவார். பச்சோந்தியை போல் நிறம் மாறி கொண்டிருப்பவர்.

    96 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பான்மையான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும் உள்ளது. சட்ட ரீதியாகவும் யாரும் எதையும் செய்து விட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மியூசிக் அகாடமி சிக்னலில் இருந்து லாயிட்ஸ் ரோடு சிக்னல் வரை கூட்டம் நிரம்பி வழிந்தது.
    • வழி நெடுக தோரணங்கள், கட்சி கொடிகள் ஏராளமாக கட்டப்பட்டு இருந்தன.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று எழுந்த கோரிக்கையால் ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இடையே மோதல் வெடித்தது.

    பெருவாரியான நிர்வாகிகளும், தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவானார்கள். இதையடுத்து கடந்த ஜூலை 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழு கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    அதை ஏற்காததால் அன்றைய தினமே ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் புகுந்தார். இதனால் பெரும் மோதல் ஏற்பட்டது.

    இதையடுத்து அதிகாரிகள் தலைமை கழகத்தை பூட்டி சீல் வைத்தனர்.

    இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது.

    அதே நேரம் பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி தீர்ப்பளித்தார். அதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உற்சாகம் அடைந்தனர்.

    72 நாட்களுக்கு பிறகு இன்று எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழகம் செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் களைகட்டியது. தலைமைக் கழகம் அமைந்து உள்ள ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் இன்று காலையில் இருந்தே தொண்டர்கள் திரள தொடங்கினார்கள்.

    மியூசிக் அகாடமி சிக்னலில் இருந்து லாயிட்ஸ் ரோடு சிக்னல் வரை கூட்டம் நிரம்பி வழிந்தது. வழி நெடுக தோரணங்கள், கட்சி கொடிகள் ஏராளமாக கட்டப்பட்டு இருந்தன.

    எடப்பாடி பழனிசாமி கார் வந்ததும் தொண்டர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினார்கள்.

    கழகத்தை 'கட்டிக்காத்த காவல் தெய்வம்', 'கழக பொதுச்செயலாளர்' என்று முழங்கினார்கள். மக்கள் கூட்டத்தில் மிதந்தபடியே அவரது கார் வந்தது.

    ரோட்டின் இருபுறமும், தாரை தப்பட்டைகள் முழங்கியும், கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. ஏராளமானவர்கள் வரிசையாக நின்று திருஷ்டி பூசணிக்காய் சுற்றி உடைத்தனர்.

    கார் தலைமை கழகத்தை அடைந்ததும் தலைமை கழக நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு இனிப்புகள் வழங்கினார்.

    அதன்பிறகு தலைமை கழகத்துக்குள் சென்று தனது அறையில் அமர்ந்து இருந்தார்.

    • ஐகோர்ட்டு உத்தரவின்படி அந்த 'சீல்' அகற்றப்பட்டு, சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • எடப்பாடி பழனிசாமி அங்குள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்

    சென்னை, கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

    பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்படி அந்த 'சீல்' அகற்றப்பட்டு, சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் அவர் தலைமை அலுவலகத்திற்கு வரவில்லை.

    இந்தநிலையில் அவர் இன்று கட்சி அலுவலகத்திற்கு வருகிறார். காலை 10 மணிக்கு கட்சி அலுவலகம் வரும் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகம் செல்ல அனுமதிக்க கூடாது என டிஜிபியிடம் ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் புகழேந்தி புகார் மனு கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த புகார் மனுவில் சிபிசிஐடி விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக அலுவகத்தில் அனுமதிக்க கூடாது என புகழேந்தி புகார் கொடுத்துள்ளார்.

    • கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார்.
    • ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல் முறையீடு செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    சென்னையில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தும், அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்றும் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல் முறையீடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனுதாக்கல் செய்துள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. நிர்வாக செயல்பாடுகளை மீண்டும் அமல்படுத்த தொடங்கி உள்ளார்.
    • சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை எழுந்ததால் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள்.

    இரு தரப்பினரும் அ.தி.மு.க.வை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீவிரமாக உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. தலைமை கழகம் முன்பு இருதரப்பு ஆதரவாளர்களும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். அப்போது தலைமை கழகத்துக்குள் புகுந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆவணங்கள், பரிசுப்பொருட்களை எடுத்துச்சென்றனர்.

    இதையடுத்து அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி கோர்ட்டுக்கு சென்று அந்த சீலை அகற்ற வைத்தார். என்றாலும் தலைமை கழகத்துக்குள் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் செல்ல முடியாத நிலை இருந்தது.

    இந்த நிலையில் ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு சமீபத்தில் அறிவித்தது. இதனால் அந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது நடைமுறைக்கு வந்துள்ளது.

    அவர் அ.தி.மு.க. நிர்வாக செயல்பாடுகளை மீண்டும் அமல்படுத்த தொடங்கி உள்ளார். அதன் ஒருபகுதியாக எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 8.9.2022-வியாழக்கிழமை காலை 10 மணியளவில், தலைமைக் கழகம்-புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைக்கு வருகை தந்து, தலைமைக் கழக வளாகத்தில் உள்ள கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் ஆகியோர் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. தலைமை கழகம் முன்பு மோதல், வன்முறை ஏற்பட்டதால் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் இதுவரை போலீஸ் விசாரணைக்காக காத்திருந்தனர். இந்த நிலையில் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேரில் ஆய்வு செய்தனர்.

    ஆவணங்கள், பரிசு பொருட்கள் மாயமானது பற்றி விசாரணை நடத்தி உள்ளனர். இதனால் தலைமை கழகம் வருவதற்கான அனைத்து தடைகளும் இன்றுடன் நீங்கி உள்ளது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி நாளை தலைமை கழகம் வருகிறார்.

    இது அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது. மீண்டும் அ.தி.மு.க.வில் விறுவிறுப்பை ஏற்படுத்த எடப்பாடி பழனிசாமியின் வருகை உதவியாக இருக்கும் என்று நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

    இது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி நிர்வாக செயல்பாடுகளை மேற்கொள்ளும் பட்சத்தில் தேர்தல் ஆணையம் அவருக்கு சாதகமாக முடிவு எடுக்கும் என்பதால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு கடும் பின்னடைவாக கருதப்படுகிறது.

    • அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி நேரடி விசாரணையை தொடங்கியுள்ளது.
    • அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணையை எம்பி சி.வி.சண்முகம் நேரில் பார்வையிட்டார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி இன்று நேரடி விசாரணையை தொடங்கியுள்ளது. விசாரணையை துரிதப்படுத்த டிஜிபிக்கு உத்தரவிடமாறு சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்றுள்ள சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் ராஜா பூபதி, வெங்கடேசன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணையை எம்பி சி.வி.சண்முகம் நேரில் பார்வையிட்டார்.

    • அ.தி.மு.க. அலுவலக மோதல் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.
    • முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஐகோர்ட்டில் இன்று கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். ஒரு தரப்பினர் மீது மற்றொரு தரப்பினர் உருட்டுக்கட்டை, கற்களால் தாக்கினர். இந்த மோதலில் 2 போலீசார் உள்பட 47 பேர் காயமடைந்தனர். காவல்துறையைச் சேர்ந்த 4 வாகனம் உள்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. அலுவலகத்தில் இருந்த கோப்புகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஓ.பனனீர்செல்வம் ஆதரவாளர்கள் திருடிச்சென்றதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பான 4- வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு அண்மையில் தெரிவித்தது.

    இந்நிலையில், அ.தி.மு.க. அலுவலகம் சூறை தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அ.தி.மு.க. அலுவலக மோதல் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய பிறகும் இதுவரை விசாரணை தொடங்காதது அதிர்ச்சி தருகிறது. அலுவலகத்தில் இருந்து திருடப்பட்ட பொருட்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. அ.தி.மு.க. அலுவலகம் சூறை தொடர்பாக உரிய விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும். டிஜிபி உத்தரவிட தவறினால் வழக்குகளை வேறு தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    • தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அளித்த உத்தரவு ரத்து.
    • இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு.

    அதிமுக சார்பில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தீர்ப்பு அளித்தது. இதன்மூலம் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த உத்தரவு ரத்தானது.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

    இதையடுத்து, வரும் திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக ஓபிஎஸ் தரப்பு கடந்த சனிக்கிழமை தெரிவித்தது.

    இந்நிலையில், இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

    • மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் அமைந்திருக்கும் மூக்கையா தேவர் நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    அரசியலிலும், பொதுச்சேவை புரிவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், எம்.பி.யாகவும், எம்.எல்.ஏ.வாகவும் மக்களுக்கு அருந்தொண்டு ஆற்றிய வரும், கல்விப் பணிகளில் அதிக நாட்டம் கொண்டவருமான, போற்றுதலுக்குரிய பி.கே.மூக்கையா தேவரின் 43-வது நினைவு நாளான வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.45 மணியளவில், மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் அமைந்திருக்கும் மூக்கையா தேவர் நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    இதில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, முன்னாள் எம்.பி. ஜக்கையன், மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரிய புள்ளான் என்ற செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    மூக்கையா தேவருக்கு வீர அஞ்சலி செலுத்தும் இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×