search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் விசுவாசமாக இருந்தது இல்லை.
    • அ.தி.மு.க. என்றால் நாம் தான். நமக்கு எதிரி தி.மு.க. தான்.

    தஞ்சாவூர் :

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணையும் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, ஓ.எஸ்.மணியன், அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் சேகர் வரவேற்றார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மாற்று கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தவர்களை வரவேற்று பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர். தோற்றுவித்த, ஜெயலலிதா கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் சேகர் உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் இணைந்ததை வரவேற்கிறேன். துரதிருஷ்டவசமாக அ.ம.மு.கவுக்கு சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர வேண்டும் என்ற நோக்கத்தில் இணைந்து உள்ளனர். ஒவ்வொரு தொண்டர்களும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

    ஆனால் கட்சியில் நிர்வாகியாக, எம்.எல்.ஏ.வாக., அமைச்சராக, எம்.பி.யாக இருந்த வைத்திலிங்கத்திற்கு அந்த எண்ணம் இல்லை. 20 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த அவர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதில் இருந்து வைத்திலிங்கம் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

    எல்லா அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் தங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு ஏதாவது செய்து தாருங்கள் என்று கூறுவார்கள். ஆனால் யாருக்கும் எதுவும் செய்யக்கூடாது என்று கூறியவர் தான் வைத்திலிங்கம். இப்படிப்பட்டவரை நான் வாழ்க்கையில் பார்த்ததே கிடையாது. திருச்சியில் ஒரு கூட்டத்தை கூட்டி ஓ.பன்னீர்செல்வமும், வைத்திலிங்கமும் என்னைத்தான் திட்டினார்கள். என்னை திட்டி எந்த பிரயோஜனமும் இல்லை.

    நான் அடிமட்டத்தில் இருந்து வந்தவன். நான் மட்டும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இல்லை. இங்கு வந்திருக்கும் அனைத்து அ.தி.மு.க.வினரும், பொதுச்செயலாளர்கள் தான். ஓராயிரம் வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் வந்தாலும் அ.தி.மு.க.வில் துரோகிகளுக்கு இடம் இல்லை. ஜெயலலிதா சட்டசபையில் பேசும் போது எனக்கு பின்னால் இந்த இயக்கம் நூறாண்டுகளுக்குமேல் இருக்கும் என்று கூறினார். அவர் மறைவுக்குப்பின்னர் எவ்வளவோ சோதனைகளை நாம் சந்தித்தோம். அதற்கு யார் காரணம்?.

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கினார். பின்னர் அ.தி.மு.கவில் இணைந்தார். ஜெயலலிதா இரவு, பகலாக உழைத்து 2016-ல் அ.தி.மு.க. ஆட்சியை உருவாக்கினார் ஆனால் அந்த ஆட்சியை கலைக்க, எதிர்த்து வாக்காளித்தார். அவரை அ.தி.மு.க. தொண்டர்கள் எவரும் மன்னிக்க மாட்டார்கள். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும், கட்சி வலிமையோடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி, துணை முதல்-அமைச்சர் பதவி கொடுத்தோம். இதைவிட வேறு என்ன செய்ய வேண்டும்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா யாரோடு சேரக்கூடாது என நினைத்தார்களோ? தீய சக்தி என கூறினார்களோ? ஜெயலலிதா உயிர் போக காரணமாக இருந்தார்களோ? அவர்களை தேடிச்சென்று தி.மு.க.வுக்கு பினாமியாக, பி டீமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.

    பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்பதை போல பீ டீம் என்பதை நிரூபிக்கும் வகையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது முதல்-அமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்துள்ளீர்கள். தி.மு.க.வின் பீ டீமாக செயல்படுபவர்கள் எப்படி இந்த கட்சிக்கு விசுவாசமாக இருக்க முடியும்.

    டி.டி.வி. தினகரன் 10 ஆண்டு காலம் கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர். ஓ.பன்னீர்செல்வத்தை அவர் துரோகி என்றார். தி.மு.க. எங்கள் எதிரி, டி.டி.வி. துரோகி என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். துரோகிகள் என மாறி, மாறி கூறியவர்கள் இன்று ஒன்று சேர்ந்துள்ளனர். கட்சி, ஆட்சியை டி.டி.வி.தினகரனால் கைப்பற்ற முடியாது. முதல்-அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது விசாரிக்க வேண்டும் என்றார்.

    நம்மை உருவாக்கிய தலைவர் ஜெயலலிதா. அவருடைய மறைவு தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுமா? என நாங்கள் கேட்டோம். ஆனால் விசாரணை கமிஷன் அமைத்தால் தான் நாங்கள் இணைவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். தி.மு.க. எதிரி, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் துரோகி என்று கூறிய இரண்டு துரோகிகளுமான டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இன்று நண்பர்களாகி விட்டனர்.

    ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் விசுவாசமாக இருந்தது இல்லை. அ.தி.மு.க.வை ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனால் கைப்பற்ற முடியாது. அ.தி.மு.க. தொண்டர்கள் இருக்கும் வரை யாரும் கைப்பற்ற முடியாது. அ.தி.மு.க. 1½ கோடி தொண்டர்களின் சொத்து என்று நீதிமன்றம் கூறி விட்டது. அதில் இருந்து ஒரு செங்கலை கூட பிடுங்க முடியாது. அ.தி.மு.க.வின் கோவிலான தலைமைக்கழகத்துக்குள் புகுந்து ஆவணங்களை திருடியவர்களை மக்கள் மன்னிப்பார்களா? நாம் நீதிமன்றம் சென்று அவற்றை திரும்ப பெற்றோம்.

    அ.தி.மு.க. என்றால் நாம் தான். நமக்கு எதிரி தி.மு.க. தான். தமிழகத்தில் தி.மு.க.வை அழிக்க அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தோற்றுவித்தார். அதை கண் இமைபோல ஜெயலலிதா காத்தவர்.

    தி.மு.க. நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன், ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் குறித்து ஆடியோவில் கூறினார். அ.தி.முக. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த பணத்தை எப்படி மீட்க முடியுமோ அப்படி மீட்கும்.

    அந்த ரூ.30 ஆயிரம் கோடி குறித்து மத்திய மந்திரி அமித்ஷாவிடம் கூறியபோது, அவரும் ஆதாரங்களை திரட்டிக்கொண்டு இருப்பதாக கூறியுள்ளார். விரைவில் கவர்னரை சந்தித்து விசாரிக்க வேண்டும் என்று மனு அளிக்க உள்ளோம். ரூ. 30 ஆயிரம் கோடி விவகாரத்தை அ.தி.மு.க., சும்மா விடாது.

    தமிழகத்தில் கள்ளச்சாராயம், போலி மது, கஞ்சா போன்ற பேதைப்பொருள் விற்பனை அதிகமாக உள்ளது. தி.மு.க. ஆட்சி என்றாலே மக்கள் அவதிப்படுகிறார்கள். இன்று கள்ளச்சாராயம் குடித்ததினால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும். இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி விலக்க வேண்டும்.

    இந்த ஆட்சி எப்போது போகும் என மக்கள் எண்ணுகிறார்கள். அ.தி.மு.க. கட்சி தற்போது புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும், அதைத் தொடர்ந்து 2026 சட்டமன்றத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினர்.

    விழாவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வெள்ளி வீரவாள், செங்கோல் பரிசாக வழங்கப்பட்டன. விழாவில் ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர்காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், திருஞானசம்பந்தம், சி.வி.சேகர், கோவிந்தராசு, முன்னாள் தஞ்சை நகர செயலாளர் பஞ்சாபிகேசன், எஸ்.டி.எஸ்.செல்வம், பேராவூரணி ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவிசங்கர், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன் (திருவோணம்), சாமிவேல் (தஞ்சை மேற்கு), நாகத்தி கலியமூர்த்தி (தஞ்சை கிழக்கு), முருகானந்த் (பட்டுக்கோட்டை),முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், பட்டுக்கோட்டை நகர்மன்ற துணைத்தலைவர் சுரேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கதிரவன், தஞ்சை தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் முத்துமாறன், மருத்துவக்கல்லூரி பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் மனோகர், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் நெம்மேலி திப்பியக்குடி கவாஸ்கர், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஆழிவாய்க்கால் கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் மேலஉளூர் சங்கர், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் வினோத்சத்தியமூர்த்தி, ஒன்றிய பாசறை பொருளாளர் தெற்கு கோட்டை காமராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.தனபால் நன்றி கூறினார்.

    • தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு அதிகரித்துள்ளன.
    • பாலியல் வன்கொடுமை மற்றும் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெறுகிறது.

    திருச்சி:

    தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்று தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கின்றேன். நேற்றிலிருந்து ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 60 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.

    அதில் 9 பேர் இறந்துள்ளதாக வந்துள்ள செய்தி வருத்தம் அளிக்கிறது. மேலும் பல பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அறிகிறேன். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் இறப்புகள் நடக்குமோ என்ற அச்சத்தில் அவர்களின் உறவினர்களும் குடும்பத்தினரும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

    அதுமட்டுமல்லாமல் செங்கல்பட்டு மாவட்டம் சுக்கானுர் பெருங்கரணை பகுதியில் போலி மதுபானம் அருந்திய 4 பேர் இறந்துள்ள தகவலும் வந்துள்ளது. நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. ஒரு பொம்மையான, திறனற்ற முதல்வர் தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறார். சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கையின் போது கள்ளச்சாராயம் தொடர்பாக நான் பேசியிருக்கின்றேன்.

    அதனைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. அதேபோன்று மரக்காணத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக சில பத்திரிகைகளிலும் செய்திகள் வந்துள்ளது. அதை பார்த்தாவது விழித்துக் கொண்டு வேகமாக துரிதமாக நடவடிக்கையில் இறங்கி இருந்தால் இறப்புகளை தடுத்து நிறுத்தி இருக்கலாம்.

    இந்த கள்ளச்சாராய உயிர் இழப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு பொறுப்பெடுத்து தார்மீகமாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு அதிகரித்துள்ளன. பாலியல் வன்கொடுமை மற்றும் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெறுகிறது.

    தமிழகத்தின் டி.ஜி.பி. முதலில் கஞ்சாவை ஒழிப்பதற்காக 2.0 என்றும் அதன் பின்னர் 3.0 என்றும் இப்போது 4 ஓ என ஓ மட்டுமே போட்டுக் கொண்டிருக்கிறார். சட்ட ரீதியாக தடை செய்ய இந்த முதல்வருக்கு திறமை இல்லை. காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. குடும்ப உறுப்பினர்கள் தலையீடு அதிகமாக இருக்கிறது.

    கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நாளை காலை மரக்காணம் பகுதிக்கு சென்று இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருக்கிறேன். அதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் செல்ல இருக்கின்றேன்.

    தமிழகத்தில் 24 மணி நேரமும் டாஸ்மாக் பார்கள் திறந்து இருக்கின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே கடைகள் திறந்து இருந்தன. அதேபோன்று தற்போது போலி மதுபானங்களும் அதிகம் விற்கப்படுகிறது. இதில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. வருமானத்தை மட்டுமே பார்க்கிறார்கள். மக்கள் பிரச்சனைகளை பற்றி எள்ளளவும் சிந்திக்கவில்லை.

    500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக தெரிவித்து விட்டு ஆயிரம் சில்லறை கடைகளை திறந்து இருக்கிறார்கள். திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு இனிமையான நிகழ்வு. அந்த திருமண மண்டபத்திலும் மதுபானம் விற்கலாம் என இந்த அரசு கொண்டு வந்தது. அதேபோன்று விளையாட்டு மைதானத்திலும் மதுவை விற்கலாம் என கொண்டு வந்தார்கள். மதுவை ஊக்குவிக்கும் அரசாங்கமாக இருக்கிறது.

    இந்த கள்ளச்சாராய சாவுகளுக்கு பொறுப்பேற்று துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் ராஜினாமா செய்ய வேண்டும். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலையில் தங்கி இருந்த வடமாநில தொழிலாளர்கள் மீது மேற் கூரையை பிரித்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது.

    அவர்களை உயிரோடு எரித்துக் கொல்ல முயற்சி நடந்துள்ளது. ஆனால் தற்போது அக்கம்பக்கத்தினரின் முயற்சியால் அவர்களை காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள்.

    இதுபோன்ற பிரச்சினைகளை நீங்கள் கேள்வியாக எழுப்பியவர்கள் என்ற காரணத்திற்காக முதல்வர் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுக்கின்றார்

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், மு.பரஞ்ஜோதி, என்.ஆர்.சிவபதி, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.
    • நாளை மரக்காணம் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூற உள்ளேன்.

    திருச்சி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    * தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    * கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.

    * கள்ளச்சாராய உயிரிழப்புக்கு தார்மீக பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியே ராஜினாமா செய்ய வேண்டும்.

    * நாளை மரக்காணம் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூற உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க.வின் வலிமை இனிமேல் தான் பா.ஜ.க.வுக்கு தெரியவரும்.
    • மத்திய அரசு தி.மு.க. அரசு மீது 356-வது சட்ட பிரிவை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகரில் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம் பூஜ்ஜியம். அவர் சந்தித்துள்ள டி.டி.வி.தினகரனும் பூஜ்ஜியம். 2 பூஜ்ஜியங்களும் ஒன்று சேர்ந்தால் பலனில்லை. அ.ம.மு.க. கூடாரம் காலியாகிவிட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. வலிமை பெற்றுள்ளது. கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்துள்ளது. அ.தி.மு.க.வின் வலிமை இனிமேல் தான் பா.ஜ.க.வுக்கு தெரியவரும்.

    மத்திய அரசு தி.மு.க. அரசு மீது 356-வது சட்ட பிரிவை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. கர்நாடக தேர்தலுக்கு பின் இந்த நடவடிக்கை விரைவுபடுத்தப்படும்.

    விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்காபுரத்தில் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி அதற்கான இடத்தை எடப்பாடி பழனிசாமி ஒதுக்கீடு செய்தார். தற்போது அந்த திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் அந்த திட்டத்தை தாங்கள் கொண்டு வந்ததாக தி.மு.க. அரசு பொய் பிரசாரம் செய்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தை சேர்ந்த 6 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர்.
    • தமிழகத்தில் குட்கா, கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதை பொருட்கள் விற்பனை அதிகரித்தது கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தான்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தை சேர்ந்த 6 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். மேலும் 28 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று மதியம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தனர். மேலும், அங்கிருந்த டாக்டர்களிடம் உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

    பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் குட்கா, கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதை பொருட்கள் விற்பனை அதிகரித்தது கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தான். அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்தி விற்கவைத்ததே அவர்கள்தான்.

    கடந்த 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது தொடர்பாக சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக காவல்துறைக்கு அவர் அடிக்கடி ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். மேலும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறையில் தனி ஆணையத்தையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி உள்ளார். அதனால் தான் குறைந்துள்ளது.

    தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை. கடந்த காலத்தில் ஜெயலலிதா ஆட்சியில் தான் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுவை அரசே விற்பனை செய்யும் என அறிவித்தார். அரசின் வருமானத்திற்காக டாஸ்மாக் மூலம் மது விற்பனையை கொண்டு வந்தார். அதற்கு சட்டமன்றத்தில் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். தற்போது வேண்டுமென்றே அரசின் மீது குறை, பழி சொல்லவேண்டும் என ஒருவர் பேசியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரசாரம் செய்யப்பட்ட 11 தொகுதிகளில் எட்டு தொகுதிகளை காங்கிரஸ் வென்றிருக்கிறது என்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
    • கர்நாடகாவில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பா.ஜ.க. முற்றிலும் துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. பா.ஜ.க.வின் ஊழல் ஆட்சியையும், மதவெறி அரசியலையும் மரண அடி கொடுத்து வீழ்த்தியுள்ளனர்.

    இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழர்கள் வாழும் பெங்களூரு பகுதிகளில் பத்து சட்டமன்றத் தொகுதிகளில் வி.சி.க. சார்பில் பிரசாரத்தை மேற்கொண்டோம். பிரசாரம் செய்யப்பட்ட 11 தொகுதிகளில் எட்டு தொகுதிகளை காங்கிரஸ் வென்றிருக்கிறது என்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

    கர்நாடகாவில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பா.ஜ.க. முற்றிலும் துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை தூக்கிச் சுமந்து வரும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் இந்தத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், பா.ஜ.க.வுடன் கொண்டுள்ள தங்களது கூட்டணி உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் ஏற்பாட்டில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் அம்மன் ஆலய கிழக்கு கோபுர வாசலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
    • எஸ். எஸ். ஆர். சத்யா ஏற்பாட்டில் தேரடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து 501 தேங்காய் உடைக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    அ. தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் தலைமையில் காஞ்சிபுரம் மாநகரில் காஞ்சி பன்னீர்செல்வம் ஏற்பாட்டில் குமரகோட்டம் முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது,

    இதனை தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவிலில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் ஏற்பாட்டில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் அம்மன் ஆலய கிழக்கு கோபுர வாசலில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம் அண்ணா பஸ் நிலையம் அருகே அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட பொருளாளர் வள்ளி நாயகம் ஆகியோர் ஏற்பாட் டில் வழக்க றுத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாவட்ட பொருளாளர் வள்ளி நாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம் ஏற்பாட்டில் பிரமாண்ட கேக் வெட்டப்பட்டது. எஸ். எஸ். ஆர். சத்யா ஏற்பாட்டில் தேரடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து 501 தேங்காய் உடைக்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

    இரவு 8மணிக்கு கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன் ஏற்பாட்டில் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் தங்கத் தேர் பவனி நடைபெற்றது.

    இதில் அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட அவை தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆர்.டி.சேகர், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.ஆர்.மணி வண்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார், ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி, அத்திவாக்கம் ரமேஷ், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் விஸ்வநாதன், பகுதி செயலாளர் என். பி. ஸ்டாலின், பாலாஜி, கோல்ட் ரவி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் படுநல்லி தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • எடப்பாடி பழனிச்சாமி நீடுடி வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
    • சிவசர்மிளா கருனை இல்லத்திற்கு டேபிள் மற்றும் சேர் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    அ.தி.மு.க., பொது ச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பு பூஜைகள் செய்தும் நலத்திட்ட உதவிகள் அன்னதானம், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீடுடி வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ தலைமையில் அவைத் தலைவர் பழனிச்சாமி, முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் பகுதி செயலாளர் கண்ணப்பன் ஏற்பாட்டின் பெயரில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காங்கேயம் ரோடு ராக்கியாபாளையம் பிரிவு பட்டத்தரசி அம்மன் கோவிலில்ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு டேபிள் மற்றும் சேர் வழங்குதல் வழங்கப்பட்டது. பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து திருமுருகன் பூண்டி,பெரி யாயிபாளையம், சிவசர்மிளா கருனை இல்லத்திற்கு டேபிள் மற்றும் சேர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா கவுன்சிலர் கண்ணப்பன், மாநகர் மாவட்ட இணை செயலாளர் சங்கீத சந்திரசேகர், பகுதி செயலாளர் கருணாகரன், ஹரிஹரசுதன், கே.பி.ஜி. மகேஷ்ராம், கேசவன், குமார், தொழிற்சங்க செயலாளர் கண்ண பிரான், வக்கீல் அணி செய லாளர் முருகேசன், நிர்வாகிகள் உஷா ரவிக்குமார், ஆண்டவர் பழனிச்சாமி, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கேக் வெட்டி எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை கொண்டாடினார்கள்.
    • ஒவ்வொரு பகுதிகளிலும் கட்சி நிர்வாகிகள் அன்னதானம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69-வது பிறந்த நாளை எளிமையுடன் கொண்டாடினார்.

    சேலத்தில் அவர் நிர்வாகிகளுடன் கேக் வெட்டினார். முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கூட்டணி கட்சித் தலைவர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கேக் வெட்டி எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை கொண்டாடினார்கள். இதில் முன்னாள் அமைச்சர் பொன்னையன், பா.வளர்மதி, தாடி ம.ராசு, கமலக்கண்ணன், கோ.சமரசம், மகாலிங்கம், கோவிந்தராஜ், சங்கரலிங்கம் உள்பட முக்கிய பிரமுகர்களும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

    சென்னை மேற்கு மாம்பலம் கல்கத்தா காளிபாரி கோவிலில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் சுனில் மண்சோறு சாப்பிட்டு எடப்பாடி பழனிசாமி உடல் ஆரோக்கியத்துடன் திகழவும், மீண்டும் முதல்-அமைச்சராக வேண்டியும் அம்மனுக்கு விசேஷ பூஜையும் நடத்தினார்.

    இதை முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தொடங்கி வைத்தார். இதில் 69 மகளிரணியினர் பங்கேற்றனர். டாக்டர் சுனிலுடன் தி.நகர் பகுதிச் செயலாளர் உதயா, இலக்கிய அணி டி.சிவராஜ், எம்.ஜி.ஜீவா, ஆலந்தூர் பகுதிச் செயலாளர் பரணி பிரசாத், ஜாகீர் உசேன், சூரியகலா, சுரேஷ்குமார், லோகநாதன், ராயல் வெங்கடேஷ் உள்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

    ஆயிரம் விளக்கு பகுதி 117-வது வட்டச் செயலாளர் முன்னாள் கவுன்சிலர் சின்னையன் (எ) ஆறுமுகம் தேனாம்பேட்டையில் 1000 பேருக்கு பிரியாணி வழங்கி எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை கொண்டாடினார்.

    ஆயிரம்விளக்கு தொகுதி 110-வது வார்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி வைகுண்டபுரம் தேவி கருமாரியம்மன் கோவிலில் 1001 பெண்கள் பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். பால்குட ஊர்வலத்தை முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தொடங்கி வைத்தார்.

    இந்த சிறப்பு வழிபாட்டில் இலக்கிய அணி இணைச் செயலாளர் டி.சிவராஜ், பரணி பிரசாத், கே.எஸ்.மலர்மன்னன், புஷ்பா நகர் ஆறுமுகம், செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பெரும்பாக்கத்தில் அம்மா பேரவை துணைச் செயலாளரான பரங்கிமலை கிழக்கு ஒன்றியச் செயலாளர் பெரும்பாக்கம் எ.ராஜசேகர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி ஸ்ரீ பழண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி அன்னதானம், வேட்டி-சேலை வழங்கினார். இதில் ராஜாராம் உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

    வேளச்சேரியில் கழக வர்த்தக அணி இணைச் செயலாளரான காத்தான் குளம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஏ.எம்.ஆனந்தராஜா எடப்பாடி பழனிசாமி பெயரில் கோவிலில் விசேஷ பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்கினார்.

    இதே போல் ஒவ்வொரு பகுதிகளிலும் கட்சி நிர்வாகிகள் அன்னதானம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

    • ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
    • ஒரு சில படங்கள் ஹிட் கொடுத்த விஷாலே அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லும் போது, பல படங்கள் ஹிட் கொடுத்த நடிகர் விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம்.

    மதுரை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி மதுரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொண்டர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

    அமைச்சர் பி.டி.ஆரிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டதற்கு ஆடியோ தான் காரணமாகும். தவளை தன் வாயால் கெடும் என்பது போல பி.டி.ஆர். கெட்டுள்ளார். இப்போது அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினால், ஆடியோ விவகாரம் உண்மையாகி விடும் என்பதால் சாதாரண இலாகாவை கொடுத்துள்ளனர்.

    நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசு சிறந்த நிர்வாகி. எந்த துறையிலும் அவர் முத்திரை பதிக்கக்கூடியவர். இன்றுள்ள அமைச்சர்களில், பிறரை தரக்குறைவாக பேசாதவர். நிதி துறையிலும் அவர் சிறப்பாக செயல்படுவார். அவருக்கு பாராட்டுக்கள்.

    ஓ.பி.எஸ்., இல்லாமல் எடப்பாடியால் முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது என்ற வைத்தியலிங்கத்தின் கருத்துக்கு, எதிர் முகாமில் உள்ளவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். பொறுத்திருந்து பாருங்கள். எடப்பாடி தலைமையில் தான் ஆட்சி அமைப்போம்.

    எங்களுடைய ஒரே அரசியல் எதிரி தி.மு.க. மட்டும் தான். பா.ஜ.க.வும், காங்கிரசும் எங்கள் நண்பர்கள் தான். எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்.

    நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா என்று கேட்கிறீர்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒரு சில படங்கள் ஹிட் கொடுத்த விஷாலே அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லும் போது, பல படங்கள் ஹிட் கொடுத்த நடிகர் விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம்.

    நடிகர் கமல் கூட மக்களுக்கு நல்லது செய்ய போவதாக சொல்லித்தான் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இப்போது நீதியும், மய்யமும் எங்கே போனது? என்று தெரியவில்லை.

    எனவே நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து தேர்தலை சந்திக்கட்டும். அதன் பின்னரே அவருடைய செயல்பாடுகள் குறித்தும், அவருடன் கூட்டணி வைப்பதா என்பது குறித்தும் சொல்ல முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலம், மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பெயரில் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, பிரசாதம் வழங்கினார்கள்.
    • சீர்வரிசை தட்டுக்களுடன் 1000-க்கும் மேற்பட்டோருடன் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாஜலம் ஊர்வலமாக வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    சேலம்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் அவரது பெற்றோர் உருவ படங்களுக்கு மலர்கள் தூவி வணங்கினார். தொடர்ந்து சாமி கும்பிட்டு விட்டு தொண்டர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார்.

    அப்போது வீட்டின் வெளியே தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வரிசையாக நின்று பூங்கொத்து, சால்வை, பூச்செண்டு, சாமி போட்டோ உள்ளிட்டவை கொடுத்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறினார்கள்.

    நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் ஆளுயுர ஆரம், பல்வேறு வகை மலர்கள் ஆன பூ மாலைகள் உள்ளிட்டவை எடப்பாடி பழனிசாமிக்கு அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    சேலம், மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பெயரில் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, பிரசாதம் வழங்கினார்கள். மேலும் கோவில் பூசாரிகள் அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து கூறினார்கள்.

    முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, அவை தலைவர் தமிழ்மகன் உசேன் பூங்கொத்து கொடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    தொடர்ந்து சீர்வரிசை தட்டுக்களுடன் 1000-க்கும் மேற்பட்டோருடன் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாஜலம் ஊர்வலமாக வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    அ.தி.மு.க. மகளிரணி, எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி, மாணவர் அணி, வக்கீல் பிரிவு, மகளிர் அணி, விவசாய அணி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை, அ.தி.மு.க. தொழிற்சங்கம் உள்ளிட்ட சார்பு அணியினர் வாழ்த்துக்கள் கூறினர். அதுபோல் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

    • தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளுக்கு தலைவர், செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.
    • பூத் கமிட்டிகளில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சுமார் 1.20 லட்சம் பேர் இடம் பெறுவார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க.வை தயார்படுத்தும் பணிகளை எடப்பாடி பழனிசாமி தீவிரப்படுத்தி வருகிறார்.

    குறிப்பாக அ.தி.மு.க.வின் அடிமட்டத்தை வலுப்படுத்த கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் பூத் கமிட்டிகள் வலுவாக்கப்பட்டு வருகிறது.

    தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களை தலா 50 வீதம் அ.தி.மு.க. நிர்வாகிகள் பிரித்து உள்ளனர். அந்த 50 நிர்வாகிகளுக்கும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த 50 வாக்காளர்களையும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக வாக்களிக்க செய்ய வேண்டிய பணி பூத் கமிட்டிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பூத் கமிட்டிகளை திறம்பட செயல்படுத்த அ.தி.மு.க. தரப்பில் தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு உடனுக்குடன் உத்தரவுகள், வியூகங்களை வகுத்து கொடுப்பதற்கு தலைவர், செயலாளர் பதவிகளை உருவாக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளுக்கு தலைவர், செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

    இதற்கு முன்பு அ.தி.மு.க. பூத் கமிட்டிகள் அந்தந்த பகுதி ஒன்றிய தலைவர் மூலம் இயக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக காலதாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தது. மேலும் ஒன்றிய தலைவர் செயல்பாடுகள் குறைவாக இருக்கும்பட்சத்தில் பூத் கமிட்டிகளும் செயலிழந்து விடுவதாக கருதப்படுகிறது.

    அந்த குறையை நிவர்த்தி செய்யவே ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் தலைவர், செயலாளர் தேர்வு செய்ய எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து இந்த திட்டத்தை அமல்படுத்த தொடங்கி உள்ளார். இது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கும் அவர் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.

    தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு அ.தி.மு.க. பூத் கமிட்டி பணிகள் விரைவில் வரையறுக்கப்படும் என்று தெரிகிறது. சுமார் 66 ஆயிரம் பூத் கமிட்டிகள் உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த பூத் கமிட்டிகளில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சுமார் 1.20 லட்சம் பேர் இடம் பெறுவார்கள். இவர்கள் மூலம் வாக்காளர்களை அணுகுவதற்கு அ.தி.மு.க. தலைவர்கள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    ×