search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • அதிகாரப்பூர்வ வேட்பாளரான டி. அன்பரசன் அவர்கள் தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுள்ளார்
    • கர்நாடகாவில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் வருகிற 10-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ம் தேதி நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

    இந்த நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து அதிமுக விலகியதுடன். தனது வேட்பாளரை திரும்ப பெற்றுள்ளது.

    இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்களை இன்று (24.04.2023 - திங்கட் கிழமை), பாரதிய ஜனதா கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, கர்நாடக மாநிலத்தில் 10.05.2023 அன்று நடைபெற உள்ள சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், (159) புலிகேசிநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கழக வேட்பாளர் டி.. அன்பரசன் அவர்களை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தலைமை பரிசீலனை செய்து, பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று, கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான டி. அன்பரசன் அவர்கள் தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டணி கட்சிக்குள்ளேயே ஒரு கட்சியிலிருந்து, மற்றொரு கட்சிக்கு இழுக்கும் யுக்தி புதுவை அரசியலில் உருவாகியுள்ளது.
    • அரசியல்கட்சிகள் தங்கள் நிர்வாகிகளை தக்க வைப்பதிலும் பெரும் முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. புதுவையில் அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பணிகளை தொடங்கியுள்ளன.

    புதுவை மக்களிடம் செல்வாக்கை பெற மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம், ஆர்ப்பாட்டம், சத்தியாகிரகம் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு நிர்வாகிகளை இழுக்கும் வேலையும் நடந்து வருகிறது.

    கூட்டணி கட்சிக்குள்ளேயே ஒரு கட்சியிலிருந்து, மற்றொரு கட்சிக்கு இழுக்கும் யுக்தி புதுவை அரசியலில் உருவாகியுள்ளது.

    காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்று சட்டசபையில் எதிர்கட்சி அந்தஸ்து பெற்ற தி.மு.க. காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், பிரமுகர்கள், அனுதாபிகளை தங்கள் பக்கம் இழுத்துள்ளனர்.

    • மாநாட்டு மேடையின் முகப்பு பகுதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் மாதிரியில் அமைக்கப்பட்டுள்ளது.
    • எங்கள் புகார் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    திருச்சி:

    திருச்சி பொன்மலை ஜி. கார்னரில் இன்று மாலை ஓ.பி.எஸ். அணியின் முப்பெரும் விழா மாநாடு நடைபெறுகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில் இந்த மாநாட்டில் ஓ.பி.எஸ். அணியினர் கட்சி கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று கூறி போலீசில் கடந்த சனிக்கிழமை புகார்கள் அளிக்கப்பட்டன.

    ஏற்கனவே கட்சி பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்து இருந்தார். இதுதொடர்பாக ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் கூறுகையில், நாங்கள் அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்துவோம். எங்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றனர். அதேபோல் சற்று திருத்தம் செய்யப்பட்ட கொடி திருச்சி மாநாட்டில் முழுக்க முழுக்க பயன்படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் மாநாட்டு மேடையின் முகப்பு பகுதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் மாதிரியில் அமைக்கப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க.வினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக திருச்சி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், ஏற்கனவே திருச்சி மாநாடு உள்பட எந்த இடத்திலும் அ.தி.மு.க.வின் கொடி, சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கடந்த சனிக்கிழமை திருச்சி போலீசில் புகார்கள் அளித்துள்ளோம்.

    அதையும் மீறி இந்த மாநாட்டிற்காக அ.தி.மு.க. பெயர் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை எங்கள் புகார் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கட்சி தலைமையிடம் ஆலோசித்த பின்னர் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்றார். 

    • அ.தி.மு.க. பெயரில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.
    • ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, கர்நாடகா சட்டசபை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை களமிறங்கியுள்ளது.

    அதேவேளை, கர்நாடக தேர்தலில் காந்திநகர் தொகுதியில் அ.தி.மு.க பெயரில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார். அ.தி.மு.க. பெயரில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றது.

    இதை எதிர்த்து கர்நாடக தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் குமாருக்கு தேர்தல் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியது. அ.தி.மு.க. பெயரில் வேட்புமனு தாக்கல் செய்தது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் குமார் காந்திநகர் தொகுதியில் போட்டியிட தான் தாக்கல் செய்த வேட்புமனுவை திரும்பப்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நகர இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஆர்.வினோத்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.
    • செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் சா.இராசேந்திரன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மறைமலைநகர் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் நகர இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஆர்.வினோத்குமார் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. தண்ணீர் பந்தலை செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் சா.இராசேந்திரன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களும் பழரசங்களும் கொடுத்தார்.

    நிகழ்ச்சியில் நகர செயலாளர் டிஎஸ் ரவிக்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் கஜா (எ) கஜேந்திரன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ஏஎஸ் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • மாநாடு நடைபெறும் பகுதியில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் வழிநெடுக அ.தி.மு.க. கொடியை போன்ற தோற்றத்தில் புதிய கொடிகளை கட்டி உள்ளனர்.
    • அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ கொடியில் கருப்பு சிவப்பு கலருக்கு நடுவே வெள்ளை கலரில் அண்ணா படம் இடம் பெற்றிருக்கும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டது. இதனை அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இது பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

    இதை தொடர்ந்து தனது செல்வாக்கை காட்ட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் திருச்சியில் ஆதரவாளர்களின் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார். நாளை மறுநாள் (24-ந் தேதி) திருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் 'முப்பெருவிழா' என்ற பெயரில் மாநாடு நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் அ.தி.மு.க. கொடி மற்றும் பெயரை ஓ.பி.எஸ். பயன்படுத்தக்கூடாது என்று அ.தி.மு.க.வினர் ஏற்கனவே, எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

    ஆனால் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. திருச்சி மாநாட்டை அ.தி.மு.க. மாநாடு போலவே நடத்த திட்டமிட்டுள்ளனர். "அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அழைக்கிறார்" என்று குறிப்பிட்டு அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மாநாடு நடைபெறும் திருச்சி ஜி.கார்னர் மைதான பகுதியில் கட்-அவுட் மற்றும் பேனர்களை வைத்துள்ளனர்.

    கடந்த 20-ந்தேதி மாநாட்டு பந்தலை அமைப்பதற்கான கால்கோள் விழா நடைபெற்றது. இதையடுத்து மாநாட்டு பணிகள் தீவிரமடைந்துள்ளன. மாநாட்டு மேடையில் அ.தி.மு.க. முப்பெரும் விழா என்று கொட்டை எழுத்தில் அச்சிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மாநாடு நடைபெறும் பகுதியில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் வழிநெடுக அ.தி.மு.க. கொடியை போன்ற தோற்றத்தில் புதிய கொடிகளை கட்டி உள்ளனர். அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ கொடியில் கருப்பு சிவப்பு கலருக்கு நடுவே வெள்ளை கலரில் அண்ணா படம் இடம் பெற்றிருக்கும்.

    ஓ.பி.எஸ். அணியினர் அந்த கொடியில் அண்ணாவின் கைக்கு மேலே பச்சை கலரில் வட்டமாக இரட்டை இலை சின்னத்தை அச்சிட்டு புதிய கொடியை உருவாக்கி உள்ளனர். இந்த கொடியையே மாநாடு நடைபெறும் போது பயன்படுத்தவும் மாநாட்டையொட்டி வைக்கப்பட்டுள்ள ஓ.பி.எஸ். ஆதரவாளர்களின் பேனர்களிலும் அ.தி.மு.க. பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பி.எஸ். தனது மாநாட்டுக்காக அ.தி.மு.க. பெயரை பயன்படுத்தி வருவது எடப்பாடி பழனிசாமி தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    இதையடுத்து ஓ.பி.எஸ். நடத்தும் மாநாட்டில் அ.தி.மு.க. சாயலில் ஆன கொடி மற்றும் பெயரை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அ.தி.மு.க. அதிரடியாக களம் இறங்கியுள்ளது.

    இதுதொடர்பாக திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமார் தலைமையில் இன்று அ.தி.மு.க.வினர் திரண்டு போலீசில் புகார் அளித்தனர்.

    திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் இந்த புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாவட்ட செயலாளர் குமார் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. இருப்பினும் ஓ.பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்றே பதிவிட்டுள்ளார். அதனை மாற்றவில்லை. திருச்சி மாநாட்டிலும் கட்சி கொடி, சின்னம் பெயரை பயன்படுத்த உள்ளதாக அறிகிறோம். அவ்வாறு செய்தால் ஓ.பன்னீர் செல்வம் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க.வினரின் இந்த எதிர்ப்பையெல்லாம் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கண்டு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் திட்டமிட்டபடி அ.தி.மு.க. பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியே முப்பெரும் விழா மாநாட்டை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

    அதுபோன்று மாநாட்டை நடத்தி முடித்தால் அதனை சுட்டிக்காட்டி கோர்ட்டில் முறையிடவும் அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    "அ.தி.மு.க. கொடி, சின்னத்தை ஓ.பி.எஸ். பயன்படுத்தக்கூடாது" என்று கோர்ட்டில் தடை வாங்க எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் முடிவு செய்திருக்கிறார்கள். விரைவில் இந்த தடை வாங்கப்படும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
    • இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.

    சென்னை:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் வருகிற மே மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பெங்களூரு புலிகேசி தொகுதியில் அ.தி.மு.க. தரப்பில் அன்பரசன் போட்டியிடுவதாக அறிவித்தார்.

    அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, புலிகேசி நகர் தொகுதியின் வேட்பாளராக நெடுஞ்செழியன், காந்தி நகர் தொகுதியில் கே.குமார், கோலார் தங்கவயல் தொகுதியில் அனந்தராஜா என்பவரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

    இவர்கள் மூவரும் அந்தந்த தொகுதியில் போட்டியிட வேட்புமனுக்களை நேற்று முன்தினம் தாக்கல் செய்தனர். நேற்று மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர்கள் 2 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் தவறான புரிதலால் தேர்தல் நடத்தும் அலுவலர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் மனுவை ஏற்றுள்ளார் எனவும் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அதிகாரம் உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் கடந்த 5.4.2023 முதல் தலைமைக் கழகத்தில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
    • உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் தயார் செய்யப்பட்டு அவை வழங்குவது சம்பந்தமான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும்; புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையிலும், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் கடந்த 5.4.2023 முதல் தலைமைக் கழகத்தில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

    கழகத்தில் உறுப்பினர் சேர்ப்பது சம்பந்தமாக மாவட்டக் கழகச் செயலாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், அனைத்து விபரங்களும் தெளிவாக பூர்த்தி செய்யப்பட்ட உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களில், மாவட்டக் கழகச் செயலாளரின் சீல்; சம்பந்தப்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்களின் சீலுடன் கூடிய கையொப்பம்; கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்களின் சீலுடன் கூடிய கையொப்பத்துடன், தமிழ்நாட்டில் 1 உறுப்பினர் சீட்டிற்கு 10 ரூபாய் வீதமும்; பிற மாநிலங்களில் 1 உறுப்பினர் சீட்டிற்கு 5 ரூபாய் வீதமும் கணக்கிட்டு, வருகின்ற 4.5.2023 - வியாழக்கிழமை முதல் தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்து, அதற்கான ரசீதுகளை பெற்றுக்கொள்ளலாம். அதன் பின்னர், உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் தயார் செய்யப்பட்டு அவை வழங்குவது சம்பந்தமான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அன்பரசனின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
    • ஓ.பி.எஸ். தரப்பில் கோலார் தங்க வயல், புலிகேசி நகர் தொகுதியில் நிறுத்தப்பட்ட ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் தொகுதியில் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டி.அன்பரசன் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர் கர்நாடக மாநில அ.தி.மு.க. அவைத்தலைவராக உள்ளார்.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு போட்டியாக அதே புலிகேசி நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வமும் தனது அணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டார். புலிகேசி நகர் தொகுதி மற்றும் கோலார் தங்க வயல் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார். இந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. இதில் அ.தி.மு.க. சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அன்பரசனின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

    மேலும் ஓ.பி.எஸ். தரப்பில் கோலார் தங்க வயல், புலிகேசி நகர் தொகுதியில் நிறுத்தப்பட்ட ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

    வேட்பு மனு படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாததால் மனுவை நிராகரித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

    அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், அதிமுக வேட்பாளர் மனு ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சட்டசபையில் எடப்பாடி பழனிசாமியின் அருகில் உள்ள ஓ.பி.எஸ்.சின் இருக்கை மாற்றப்பட்டு அவருக்கு வேறு இடம் ஒதுக்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    • ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை மாற்றப்பட்டால் எடப்பாடி பழனிசாமியின் இருக்கை அருகே எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் அமர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் வெடித்ததையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதையடுத்து தமிழக சட்டசபையில் ஓ.பி.எஸ். வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. அவருக்கு பதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எதிர்க்கட்சி துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இது தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் சபாநாயகர் அப்பாவுவிடம் முறைப்படி கடிதம் கொடுக்கப்பட்டது.

    சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அருகில் உள்ள அ.தி.மு.க. துணைத்தலைவர் இருக்கையில் ஆர்.பி. உதயகுமாரை அமர வைக்க வேண்டும் என்றும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு வேறு பகுதியில் இடத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால் சபாநாயகர் அப்பாவு இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டமன்ற விதிகளின்படி எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி என்பது இல்லை. அதேநேரத்தில் யார்-யாரை எங்கு அமர வைக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட அதிகாரத்துக்குட்பட்டது என்று அவர் விளக்கம் அளித்தார்.

    ஆனால் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஓ.பி.எஸ்.சின் இருக்கையை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.

    இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவுவிடம் நேரில் பலமுறை முறையிட்டுள்ளனர். இதற்காக வெளிநடப்பும் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் நேற்று அங்கீகரித்துள்ளது. இதையடுத்து அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இன்று சபை கூடும் முன்னர் சபாநாயகர் அப்பாவுவை அவரது அறைக்கு சென்று நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை சுட்டிக் காட்டி கருத்துக்களை தெரிவித்தனர்.

    ஓ.பி.எஸ்.சின் இருக்கையை மாற்றக்கோரி பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அ.தி.மு.க. சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதன்மூலம் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமியின் அருகில் உள்ள ஓ.பி.எஸ்.சின் இருக்கை மாற்றப்பட்டு அவருக்கு வேறு இடம் ஒதுக்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை அப்படி ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை மாற்றப்பட்டால் எடப்பாடி பழனிசாமியின் இருக்கை அருகே எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் அமர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எஸ்.பி. வேலுமணி பேசுவதை கண்டுகொள்ளாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தனது பதில் உரையை வழங்கத் தொடங்கினார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்வதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று ஒவ்வொரு கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ.க்கள் பேச அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் தொகுதி பிரச்சினை பற்றி எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

    அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து தனது போலீஸ் மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேச தொடங்கினார்.

    அப்போது அ.தி.மு.க. கொறடா எஸ்.பி. வேலுமணி எழுந்து ஒரு கோரிக்கையை முன்வைத்தார். சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவது தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது இல்லை என்றார்.

    ஆனால் அவர் பேச சபாநாயகர் அப்பாவு அனுமதிக்கவில்லை. எஸ்.பி.வேலுமணியின் மைக் இணைப்பும் வழங்கப்படவில்லை. என்றாலும், எஸ்.பி.வேலுமணி தொடர்ந்து பேசினார்.

    இதற்கிடையே எஸ்.பி. வேலுமணி பேசுவதை கண்டுகொள்ளாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தனது பதில் உரையை வழங்கத் தொடங்கினார். அதே சமயத்தில் எஸ்.பி. வேலுமணியும் மைக் இணைப்பு இல்லாமல் பேசிக்கொண்டே இருந்தார்.

    இதனால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு குரல் எழுப்பினார்கள். முதல்வர் பேசுகிறார். உட்காருங்கள் என்று குரல் கொடுத்தனர். ஆனாலும், எஸ்.பி.வேலுமணி தொடர்ந்து பேசினார்.

    எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் வெளிநடப்பு செய்வதாக கூறினார். இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்வதாகவும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். இதற்கு சபாநாயகர் அதிருப்தியை பதிவு செய்தார்.

    சபாநாயகர் அப்பாவு இதுகுறித்து கூறுகையில், 'ஜனநாயக முறையில் நான் இந்த அவையை நடத்தி வருகிறேன். நான் சுதந்திரமாக செயல்படுகிறேன். ஆனால் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்வதை நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள். அவர்களது வெளிநடப்பு ஏற்புடையது அல்ல' என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்ற தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளித்தது.
    • கர்நாடகாவில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலைஅடுத்து கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார்.

    இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை அடுத்து தேர்தல் நடத்தப்பட்டு முறைப்படி பொதுச்செயலாளராகவும் அவர் தேர்வு ஆனார்.

    இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. சார்பில் முறைப்படி மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இருப்பினும் தேர்தல் ஆணையம் உடனடியாக எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கும் விவகாரத்தில் 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டது. இதற்கு டெல்லி ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டு இருந்தது. இந்த அவகாசம் நாளை முடிவடைகிறது.

    இந்த நிலையில்தான் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டுள்ளது.

    தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அ.தி.மு.க.வில் திருத்தப்பட்ட விதிகளை ஏற்றுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமிக்கு முறைப்படி தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.

    தேர்தல் ஆணையத்தில் 2 முக்கியமான விஷயங்களை அ.தி.மு.க. சார்பில் முறையிட்டு கேட்டு இருந்தனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்க வேண்டும். இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் கோரி இருந்தனர்.

    இதன்படி இன்று எடப்பாடி பழனிசாமி அ.தி. மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் கர்நாடக தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் இறுதி விசாரணை இன்று பிற்பகல் தொடங்கி 2 நாட்கள் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில்தான் அ.தி.மு.க. விவகாரத்தில் பரபரப்பு திருப்பமாக எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது.

    தற்போது எடுக்கப்பட்டு உள்ள முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    ×