search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94803"

    • இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் ஜனவரி 3ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.
    • கிரிக்கெட் வாரியத்தால் நீக்கப்பட்ட கேப்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழுதான் இலங்கை தொடருக்கான அணியை தேர்வு செய்கிறது.

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இன்று நடைபெற்ற கடைசி போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றிப்பெற்றது. அத்துடன், இன்றுடன் வங்காளதேச தொடர் முடிவடைந்தது.

    இந்திய அணி அடுத்து இலங்கையுடன் விளையாடுகிறது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் ஜனவரி 3ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. 2வது ஆட்டம் புனேயில் 5ம் தேதியும் 3வது மற்றும் கடைசி போட்டி ராஜ்கோட்டில் 7ம் தேதியும் நடக்கிறது.

    ஒருநாள் போட்டிகள் ஜனவரி 10, 12 மற்றும் 15ம் தேதிகளில் கவுகாத்தி, கொல்கத்தா, திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

    இந்தப் போட்டிக்கான இந்திய அணி அடுத்த வாரம் அறவிக்கப்படுகிறது. கிரிக்கெட் வாரியத்தால் நீக்கப்பட்ட கேப்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழுதான் இலங்கை தொடருக்கான அணியை தேர்வு செய்கிறது.

    புதிய தேர்வு குழுவை தேர்வு செய்வதில் கால தாமதம் ஆவதால் சேட்டன் சர்மா தலைமையிலான குழு வீரர்களை அறிவிக்கிறது. புதிய தேர்வு குழுவை கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனை குழு நாளை முதல் 28ம் தேதிக்குள் முடிவு செய்யும்.

    இதனால் பழைய தேர்வு குழு நாளை அல்லது நாளை மறுநாள் இலங்கை தொடருக்கான அணியை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்வு குழு உறுப்பினர்கள் பதவிக்கு சேட்டன் சர்மா மற்றும் தற்போது மத்திய மண்டல குழு உறுப்பினரான ஹர்வீந்தர் சிங் ஆகியோர் மீண்டும் விண்ணப்பித்து உள்ளனர். முன்னாள் வீரர்களான வெங்கடேஷ் பிரசாத், நயன் மோங்கியா, மனிந்தர் சிங், அதுல் ஹாசன், நிதில் சோப்ரா, அமய் குருசியா உள்ளிட் டோர் தேர்வு குழு உறுப்பினர் பதவிக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே இலங்கை தொடருக்கான 20 ஓவர் அணியில் இருந்து லோகேஷ் ராகுல் நீக்கப்படுகிறார். இதை கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதேபோல் ரோகித் சர்மாவும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை.

    இதனால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படலாம். முன்னாள் கேப்டன் வீராட் கோலிக்கும் ஓய்வு கொடுக்கப்படுகிறது.

    • வெற்றிக்கு 100 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கைவசம் 6 விக்கெட்டுகளுடன் இந்திய அணி இன்று களம் இறங்கியது.
    • 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரேயஸ் அய்யர், அஷ்வின் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தலா 87 ரன்களும், 71 ரன்களும் எடுத்தனர்.

    இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது.

    வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 314 ரன் குவித்தது. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் ஆடியது. அந்த அணி 2-வது இன்னிங்சில் 231 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 145 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    லிட்டன் தாஸ் அதிகபட்சமாக 73 ரன்னும், ஜாகீர் ஹசன் 51 ரன்னும் எடுத்தனர். அக்ஷர் படேல் 3 விக்கெட்டும், அஸ்வின், முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    145 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. ஆனால் 37 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகள் சரிந்தன.

    சுப்மன் கில் 7 ரன்னிலும், புஜாரா 6 ரன்னிலும் , விராட் கோலி ஒரு ரன்னி லும் சுழற்பந்து வீச்சாளர் மெகிதி ஹசன் மிராஸ் பந்தில் பெவிலியன் திரும்பினார்கள். கேப்டன் லோகேஷ் ராகுல் 2 ரன்னில் சகீப்-அல்-ஹசன் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்து இருந்தது. அக்‌ஷர் படேல் 26 ரன்னும், ஜெய்தேவ் உனட்கட் 3 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 100 ரன் தேவை கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து ஆடியது.

    அதே நேரத்தில் 6 விக்கெட்டை கைப்பற்றினால் வெற்றி என்ற நிலையில் வங்காளதேசம் தொடர்ந்து பந்து வீசியது.

    மெகிதி ஹசன் மிராஸ் தொடர்ந்து அபாரமாக பந்து வீசி இந்திய வீரர்களை திணறடித்தார்.

    ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரில் ஜெய்தேவ் உனட்கட் 13 ரன்னில் சகீப் அல் ஹசன் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் ஏமாற்றம் அளித்தார். அவர் 9 ரன்னில் வெளியேறினார். அவர் முதல் இன்னிங்சில் 93 ரன் எடுத்து இருந்தார். அதை தொடர்ந்து அக்‌ஷர் படேலும் 34 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இந்த இருவரையும் மெகிதி ஹசன் மிராஸ் அவுட் செய்தார்.

    74 ரன் எடுப்பதற்குள் இந்திய அணி 7 விக்கெட் களை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.

    8-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யர்-அஸ்வின் ஜோடி ஆடியது. விக்கெட் இழக்காமல் இருக்கும் வகையில் இரு வரும் நிதானமாக ஆட் டத்தை வெளிப்படுத்தினர்.

    இந்த ஜோடி தொடக்கத்தில் ஒவ்வொரு ரன்னாக எடுத்த நிலையில் நேரம் செல்ல செல்ல பவுண்டரிகளை விளாசினர். இருவரின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றியை நோக்கி முன்னேறியது. இந்திய அணி 47 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 147 எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அஸ்வின் 62 பந்தில் 42 ரன்னுடனும் (4 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஸ்ரேயாஸ் அய்யார் 46 பந்தில் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 2போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

    முதல் டெஸ்டில் இந்திய அணி 188 ரன் வித்தி யாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    • என்னைப் பொறுத்தவரை பெரும்பாலான நேரங்களில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாட முயற்சிக்கிறேன்.
    • ஸ்ரேயாஸ் அய்யர் என்னுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சிக்கலில் இருந்து மீட்டது மகிழ்ச்சி அளித்தது.

    வங்காள தேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அபாரமாக ஆடினார்.

    சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 93 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் அவர் 6-வது சதத்தை தவற விட்டார். ரிஷப்பண்ட் 6-வது முறையாக 90 ரன்னுக்கு மேல் அவுட் ஆகி உள்ளார்.

    இந்த நிலையில் சதம் அடிக்க இயலாமல் போனது தனக்கு எந்தவித வருத்தத்தையும் ஏற்படுத்தவில்லை என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தனிப்பட்ட வீரராக நான் சாதனைகள் பற்றி சிந்திப்பது இல்லை. 3 இலக்கம் என்பது வெறும் நம்பர்தான். என்னைப் பொறுத்தவரை பெரும்பாலான நேரங்களில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாட முயற்சிக்கிறேன்.

    சதம் அடித்து இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். அப்படி நடக்காவிட்டாலும் ஒன்றுமில்லை. அதற்காக வருத்தமும் படமாட்டேன். எனது பேட்டிங் நன்றாக அமைந்தது.

    ஸ்ரேயாஸ் அய்யர் என்னுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சிக்கலில் இருந்து மீட்டது மகிழ்ச்சி அளித்தது.

    இவ்வாறு ரிஷப்பண்ட் கூறியுள்ளார்.

    • வங்காளதேச அணி முதலில் களமிறங்கி உள்ளது.
    • இந்திய கேப்டன் ரோகித் சர்மா இடதுகை விரலில் ஏற்பட்ட காயத்தால் முதலாவது டெஸ்டில் ஆடவில்லை.

    வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சட்டோகிராமில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்தநிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்கா அருகே உள்ள மிர்புரில் இன்று நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, வங்காளதேச அணி முதலில் களமிறங்கி உள்ளது.

    இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு மாற்றாக ஜெய்தேவ் உனத்கட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா இடதுகை விரலில் ஏற்பட்ட காயத்தால் முதலாவது டெஸ்டில் ஆடவில்லை. காயம் குணமடையாததால் 2-வது டெஸ்டில் இருந்தும் விலகி விட்டார். இதனால் இந்திய அணியின் கேப்டனாக லோகேஷ் ராகுல் செயல்படுகிறார்.

    • வங்காளதேச அணி சார்பில் ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளும், எபடோட் ஹொசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • 50 ரன்கள் பார்டன்ர்ஷிப் அமைத்து வங்கதேச அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றனர்.

    இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.

    அண்மையில் நடந்த நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பி இருக்கின்றனர். முன்னணி வீரர்கள் திரும்பி இருப்பதால் அணி மேலும் வலுப்பெற்று இருக்கிறது.

    இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் முதலாவது ஒருநாள் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர். தொடக்கத்தில் தவான், 7 ரன்களிலும், ரோகித் சர்மா 27 ரன்களிலும் வெளியேறினர்.

    பின்னர் வந்த விராட் கோலி 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த வீரர்களில் கே.எல்.ராகுல் மட்டும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். நிலைத்து ஆடிய அவர் அரைசதம் அடித்தார்.மறுபுறம் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில் 41.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக ராகுல் 73ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வங்காளதேச அணி சார்பில் ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளும், எபடோட் ஹொசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 187 ரன்கள் இலக்குடன் வங்காளதேச அணி விளையாடியது.

    இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது. முதல் ஓவரிலே சாண்டோ விக்கெட்டை தீபக் சாஹார் வீழ்த்தி அந்த அணிக்கு அதிர்ச்சியளித்தார்.

    இதனை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் லிண்டன் தாஸ் 41 ரன்களுக்கு ஷாகிப் ஆல் ஹாசன் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தொடர்ந்து சீரான இடைவெளியில் வங்காளதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது 136 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்து இருந்ததால் வெற்றி இந்திய அணியின் பக்கம் இருந்தது கடைசி விக்கெட்டுக்கு ஹாசன் மிர்ஸ் மற்றும் முஸ்தாபிசுர் ரகுமான் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.

    கடைசி விக்கெட்டிற்கு இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர். 50 ரன்கள் பார்டன்ர்ஷிப் அமைத்து வங்கதேச அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றனர். பரபரப்பாக சென்ற போட்டியில் வங்காளதேச அணி 40 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 187 ரன்கள் எடுத்து, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • முதலில் பேட்டிங் செய்த அணி 271 ரன்கள் குவித்தது.
    • 2-வது பேட்டிங் செய்த அணி 230 ரன்கள் சேர்த்தது.

    ஐ.பி.எல்., பிக் பாஸ் போன்று தென் ஆப்பிரிக்காவில் டி20 சேலஞ்ச் தொடர் நடத்தப்படுகிறது. இந்த வருடம் அறிமுகமாகிய இந்த தொடரில் விளையாடும் அணிகளை ஐ.பி.எல். தொடரில் விளையாடும் அணிகளை வாங்கிய உரிமையாளர்கள்தான் வாங்கியுள்ளன.

    லீக் ஆட்டம் ஒன்றில் நைட்ஸ் மற்றும் டைட்டன்ஸ் அணிகள் மோதின. நைட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் இளம் வீரரான தெவால்ட் பிரேவிஸ் அபாரமாக விளையாடி 57 பந்தில் 162 ரன்கள் விளாச, டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. பிரேவிஸின் ஸ்டிரைக் ரேட் 284.21 ஆகும். அவரது ஸ்கோரில் தலா 13 பவுண்டரி, சிக்சர்கள் அடங்கும்.

    அதன்பின் 272 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டைட்டன்ஸ் அணி 230 ரன்கள் சேர்த்தது. இரண்டு அணிகளும் இணைந்து 501 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த போட்டியாக இந்த ஆட்டம் அமைந்துள்ளது.

    இதற்கு முன் நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் இரண்டு அணிகளும் இணைந்து 497 ரன்கள் குவித்திருந்தது. 2016-ம் ஆண்டு அடிக்கப்பட்ட இந்த ரன்தான் அதிகபட்ச ரன்களாக இருந்தது. தற்போது 7 வருடங்களுக்குப்பின் அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

    டி20 கிரிக்கெட்டில் பிரேவிஸ் விளாசிய 162 ரன்கள், நான்காவது அதிகபட்ச ஸ்கோராகும்.

    கிறிஸ் கெய்ல் ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் குவித்தது அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. ஆரோன் பிஞ்ச் 172 ரன்களுடன் 2-வது இடத்திலும், ஜிம்பாப்வே வீரர் ஹாமில்டன், ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரதுல்லா ஜாஜாய் ஆட்டமிழக்காமல் 162 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளனர்.

    • உலகக் கோப்பையில் பாபர் ஆசம் ஆட்டம் மோசமாக இருக்கிறது.
    • மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்க விமர்சகர்கள் வலியுறுத்தல்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கும் அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் கருதப்பட்டது. தற்போது, அரையிறுதிக்கு முன்னேறுமா? என்ற நிலை அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசமின் ஃபார்ம் முக்கிய காரணம்.

    மூன்று போட்டிகளில் விளையாடி முறையே 0, 4 மற்றும் 4 ரன்களே அடித்துள்ளார். இதனால் அவரது ஆட்டம் குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் வரிசை பலவீனமாக இருப்பதால், அவர் தொடக்க வீரராக களம் இறங்குவதற்குப் பதிலாக மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் எங்கள் கேப்டன் ஃபார்ம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சதாப் கான் தெரிவித்துள்ளார்.

    பாபர் ஆசம் குறித்து சதாப் கான் கூறுகையில் ''பாபர் ஆசம் உலகத்தரம் வாய்ந்த வீரர். இதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால், அவரும் ஒரு மனிதன்தான். சில நேரங்களில் அவர் தவறு செய்யலாம். இருந்தாலும், அவர் எங்களுடைய கேப்டன். அவர் எங்களுடைய சிறந்த கேப்டன். அவர் எங்களுக்கு ஆதராவாக உள்ளார். இதனால், தற்போது அவருக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம். மூன்று போட்டிகள் மட்டும். அதனால் யாரும் அவருடைய ஃபார்ம் குறித்து கவலைப்பட வேண்டாம். அவர் உலகத் தரம் வாய்ந்த வீரர்.

    அவர் ஃபார்ம்-க்கு வருவதற்கு ஒரு ஷாட் மட்டுமே தேவை. ரிஸ்வான் போன்று ரன்கள் குவிக்க தொடங்கி விடுவார். ஆகவே, பாபர் ஆசம் அடுத்த போட்டியில் ரன்கள் குவிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களுக்கு அடுத்த போட்டி மிகப்பெரியது. ஆகவே, அவர் அணிக்காக ரன்கள் குவிப்பார்'' என்றார்.

    பாகிஸ்தான் நாளை தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    • உலக கோப்பை முடிந்த உடன் இந்தியா நியூசிலாந்து சென்று டி20 தொடரில் விளையாடுகிறது.
    • ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான அணியில் ஷுப்மான் கில்லுக்கு இடம் கிடைத்துள்ளது.

    இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் நடைபெற்று வருகிறது. இன்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற காலிறுதியில் பஞ்சாப்- கர்நாடகா அணிகள் விளையாடின.

    டாஸ் வென்ற கர்நாடகா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் விளையாடி வரும் ஷுப்மான் கில் அபாரமாக விளையாடி 55 பந்தில் 11 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 126 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரர் அன்மோல்ப்ரீத் சிங் 43 பந்தில் 59 ரன்கள் விளாசினார். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது.

    தற்போது உலகக் கோப்பையில் விளையாடி வரும் இந்தியா, அதன்பிறகு நியூசிலாந்து சென்று 3 டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. முன்னணி வீரர்கள் பலருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் ஷுப்மான் கில் இடம் பிடித்துள்ளார்.

    இந்த அணியில் சதம் பிடித்ததை சதம் விளாசி ஷுப்மான் கில் கொண்டாடியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கில் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.

    • கே.எல். ராகுல் 4,9 மற்றும் 9 என மூன்று போட்டிகளில் மோசமாக விளையாடியுள்ளார்.
    • தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிராக தினேஷ் கார்த்திக் காயம் அடைந்தார்.

    இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா உடன் கே.எல். ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளில் அவர் 4, 9 மற்றும் 9 ரன்கள் என மோசமான ஃபார்மில் உள்ளார்.

    பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரைசதம் விளாசியிருந்தால், ஆஸ்திரேலியாவில் பேக்-ஃபுட் வீரர்கள் சிறப்பாக விளையாட முடியும். கே.எல். ராகுல் பேக்-ஃபுட் வீரர் என்பதால் இந்திய அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது.

    இருந்தாலும், மோசமாக விளையாடி வருவதால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேபோல் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடவில்லை. அவருக்கு போதுமான பந்துகள் கிடைக்கவில்லை என்றாலும், பாகிஸ்தானுக்கு எதிராக இக்கட்டான நிலையில் ஆட்டம் இழந்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

    இதற்கிடையே, அதிரடி வீரரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட்-க்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடியுள்ளார். இதனால் கே.எல். ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவரை நீக்கிவிட்டு ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

    இந்திய அணி நாளை வங்காளதேசத்தை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இன்று இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது தினேஷ் கார்த்திக் நாளைய போட்டியில் பங்கேற்பாரா? கே.எல். ராகுல் நீக்கப்படுவாரா? என்பது குறித்த கேள்விக்கு ராகுல் டிராவிட் பதில் அளித்தார்.

    ராகுல் டிராவிட் அளித்த பேட்டியின் முழு விவரம் பின்வருமாறு:-

    கே.எல். ராகுல் தலைசிறந்த வீரர். ஆடுகளத்தில் சாதனைகள் மூலம் அதை அவர் நிரூபித்துள்ளார். அவர் சூப்பராக பேட்டிங் செய்து வருகிறார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு இந்தத் தொடர் எளிதானதாக அமையவில்லை. இதுபோன்ற விஷயம் டி20-யில் நிகழும். இந்த தொடர் மிகவும் சவாலானது. பயிற்சி ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்த சில போட்டிகளில் எல்லா துறைகளிலும் சரியான வகையில் செயல்படுவோம் என்று நம்புகிறேன்.

    அவருடைய திறமை மற்றும் தரம் எங்களுக்கு தெரியும். இந்த கண்டிசனுக்கு அவர் மிகவும் பொறுத்தமானவர். சிறந்த ஆல்-ரவுண்ட் விளையாட்டை பெற்றுள்ளார். சிறந்த பேக்-ஃபுட் வீரர். இந்த கண்டிசனுக்கு இதுபோன்ற வீரர்தான் தேவை. அவர் பந்தை எதிர்கொள்ளும் விதத்தில் நாங்கள் மகிழ்ச்சியாகத்தான் உள்ளோம்.

    வீரர்களுடன் நாங்கள் ஏராளமான பேசியுள்ளோம். சரியான தகவலை இங்கே பகிர்ந்து கொள்வது கடினம். ஆனால் வார்த்தை மற்றும் செயல் மூலமாக அவருக்கு நாங்கள் கடந்த ஓராண்டாக ஆதரவாக இருக்கிறோம் என்பதை உறுதியாக கூற இயலும். இந்த தொடரில் இந்திய அணி செல்லும் பாதை குறித்து தெளிவாக உள்ளோம். அவற்றில் இருந்து பின் வாங்கவில்லை. நாங்கள் ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளோம்.

    தினேஷ் கார்த்தில் இன்று நல்ல முறையில் பயிற்சி மேற்கொண்டார். துரதிருஷ்டவசமாக, பந்தை துள்ளி பிடிக்கும்போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. சிகிச்சை மேற்கொண்டு நல்ல நிலையில் உள்ளார். பயிற்சி மேற்கொண்டார். நாளைய போட்டிக்கு முன் அவருடைய உடல் நிலை எப்படி இருக்கிறது என்பது மதிப்பீடு செய்ய வேண்டும். அவர் பழைய உடல் தகுதியை பெற, சிறந்த பயிற்சி அளித்துள்ளோம். நாளை காலை அவர் எவ்வாறு உள்ளார் என்பதை பார்த்து, அதன் பிறகு இறுதி முடிவு எடுப்போம்.

    தினேஷ் கார்த்திக் இந்த தொடரில் எப்படி விளையாடினார் என்பதை மதிப்பீடுவது மிகவும் கடினம். ஏனென்றால், அவருக்கு விளையாடும் வகையில் போதுமான பந்துகள் கிடைக்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு பந்துதான் கிடைத்தது. நெதர்லாந்துக்கு எதிராக விளையாடவில்லை. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்து ஒரு பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தினார் என நாங்கள் நினைத்தோம். இதுதான் எங்களுக்கு தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனது குடும்பத்தினருடன் மும்பையில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா சென்றார்.
    • கர்நாடக மாநிலம் பெலகாவி வழியாக பயணித்துள்ளார்.

    முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானாக கருதப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். இவர் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெற்றார்.

    தற்போது இவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று பொழுதை கழித்து வருகிறார். இந்தநிலையில் அவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா சென்றார்.

     இதற்காக அவர் கர்நாடக மாநிலம் பெலகாவி வழியாக பயணித்துள்ளார். அப்போது அவர் பெலகாவி புறநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ குடித்தார்.

    மேலும், அவரது ரசிகரான கடை உரிமையாளருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • ஜெய் ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அறிவிப்புகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • ஆசிய கோப்பை திட்டமிட்டபடி பாகிஸ்தானில் தான் நடைபெற வேண்டும் என கம்ரான் அக்மல் வலியுறுத்தினார்

    கராச்சி:

    பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தார். மேலும், ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் அல்லாத நடுநிலையான இடத்திற்கு மாற்றப்படலாம் என்றும் கூறினார்.

    ஜெய் ஷாவின் இந்த கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சமூகத்திடம் இருந்து கடும் கண்டனங்களுக்கு வழிவகுத்தது. ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் அல்லாத நடுநிலையான இடத்திற்கு மாற்றப்பட்டால், இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ஜெய் ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த அறிவிப்புகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை ஆட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "ஜெய் ஷாவின் இந்த பேச்சை நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் கடந்த முறை இந்தியா பாகிஸ்தான் ஆசிய கோப்பையில் விளையாடிய போது அவர் மைதானத்தில் நேரில் வந்து பார்த்தார். ஜெய் ஷா விளையாட்டில் அரசியலை கொண்டுவர கூடாது. ஆசிய கோப்பை திட்டமிட்டபடி பாகிஸ்தானில் தான் நடைபெற வேண்டும். அப்படி இல்லை என்றால் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்க கூடாது. இதே போன்று எவ்வித ஐசிசி போட்டியிலும் பாகிஸ்தான் இந்தியாவுடன் மோதக் கூடாது' என்றார்.

    வரும் ஞாயிறு அன்று நடைபெறும் இந்தியா- பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடைபெறும். ஆனால், பிசிசிஐ-யின் இந்த நடவடிக்கை, எதிர்வரும் ஐசிசி நிகழ்வுகளில் இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

    • முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
    • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் பதவிக்கு இந்தியா சார்பில் யார் போட்டியிடுவது என்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாகிகள் இன்று நடந்த ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இந்நிலையில், கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்த முன்னாள் வீரர் ரோஜர் பின்னி போட்டியின்றி அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டார்.

    செயலாளராக ஜெய்ஷா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் மற்ற நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    கடந்த 3 ஆண்டுகளாக கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் பதவிக்கு இந்தியா சார்பில் யார் போட்டியிடுவது என்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×