search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95579"

    • சீனாவின் கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தைவிட 48.9% அதிகமாகும்.
    • 2019ம் ஆண்டு அளவுகளில் இது 26.2% மட்டுமே இருந்தது.

    கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்ததை அடுத்து, சீனா தளர்வுகளை அறிவித்தது. சீனாவிற்கு வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் போன்ற கட்டுப்பாடுகள் ரத்து செய்ததை அடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனா தனது எல்லைகளை மீண்டும் திறந்தது.

    இந்நிலையில், சீனாவில் ஜனவரி 8ம் தேதியில் இருந்து 12ம் தேதிக்கு இடையில் மட்டும் தினமும் சுமார் 4,90,000 பயணிகள் பயணம் செய்துள்ளதாக அந்நாட்டின் குடியேற்றப் பணியகத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இது சீனாவின் கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தைவிட 48.9% அதிகமாகும். ஆனால் 2019ம் ஆண்டு அளவுகளில் இது 26.2% மட்டுமே இருந்தது.

    அதாவது 4,90,000 எண்ணிக்கையில், 2,50,000 பயணிகள் சீனாவிற்குள் நுழைந்ததாகவும், 2,40,000 பயணிகள் சீனாவில் இருந்து வெளியேறியதாகவும் அதிகாரி கூறினார்.

    • தைவான் விவகாரத்தில் தேசிய இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் இப்போதும் சீனா உறுதியாக உள்ளது.
    • சீனாவுக்கு தீங்கிழைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் சில நாடுகள் தைவானுக்கு ஆதரவாக செயல்படுகின்றன.

    தைவானை, சீனா தனது நாட்டின் ஒரு பகுதி என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    தைவானுடன் இணைந்து அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றார்.

    அதேபோல் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தற்போது தைவான் சென்றுள்ளது. இது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில் தைவானை ஆதரிக்கும் நாடுகளுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து சீனாவின் தைவான் விவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "தைவான் விவகாரத்தில் தேசிய இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் இப்போதும் சீனா உறுதியாக உள்ளது. சீனாவுக்கு தீங்கிழைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் சில நாடுகள் தைவானுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. அந்த நாடுகள் நெருப்புடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

    • நோயை தடுக்க சீன அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
    • இந்திய மருந்துகளுக்கு மவுசு அதிகரித்து உள்ளதால் சீனாவில் கள்ள மார்க்கெட்டில் போலி கொரோனா மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    பீஜிங்:

    சீனாவில் கொரோனாவின் பரவல் உச்சத்தை தொட்டது.இதனால் தினமும் ஏராளமானோர் கொரனோ நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதனால் நோயை தடுக்க சீன அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பிரிமொவிர், பஞ்சிஸ்டா, மல்லுநெட் ஆகிய 4 மருந்துகளுகளின் தேவை சீனாவில் அதிகமாக உள்ளது.

    அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த இந்தியா அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்த மருந்துகளை பயன்படுத்த சீனா இன்னும் அனுமதி வழங்கவில்லை. இதனால் பலர் ஆன்லைன் மூலம் இந்த மருந்துகளை வாங்கி வருகின்றனர்.

    இந்திய மருந்துகளுக்கு மவுசு அதிகரித்து உள்ளதால் சீனாவில் கள்ள மார்க்கெட்டில் போலி கொரோனா மருந்துகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    சீனாவில் புழக்கத்தில் உள்ள இந்திய மருந்துகளில் அதிக அளவு போலியானது என சீன சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கொரோனா கட்டுப்பாடுகள் கடந்த மாதம் நீக்கப்பட்டன.
    • முக்கிய பிரபலங்கள் உயிரிழந்திருப்பது சீனாவில் முதல் முறையாகும்.

    பீஜிங் :

    சீனாவில் உருமாறிய கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அங்கு போடப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் கடந்த மாதம் நீக்கப்பட்டன. இதனால் தொற்று பரவலும், உயிரிழப்புகளும் பல மடங்கு அதிகரித்து உள்ளன.

    இதற்கிடையே சீன என்ஜினீயரிங் அகாடமியை சேர்ந்த முக்கிய என்ஜினீயர்கள் மற்றும் விஞ்ஞானிகள் 20 பேர் கடந்த ஒரு மாதத்துக்குள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக டிசம்பர் 15 முதல் கடந்த 4-ந் தேதிக்குள் இத்தனை மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

    சீனாவின் மிகவும் புகழ்பெற்ற என்ஜினீயரிங் அகாடமியான இதில் 900-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். நாட்டின் மிகப்பெரிய திட்டங்களில் இவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது ஆகும்.

    ஆனால் எந்தவொரு விஞ்ஞானியின் உயிரிழப்புக்கும் குறிப்பிட்ட காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை. ஒரு மாதத்துக்குள் இவ்வளவு முக்கிய பிரபலங்கள் உயிரிழந்திருப்பது சீனாவில் முதல் முறையாகும். அங்கு கடந்த 2017-2020 ஆண்டு காலகட்டத்தில் சராசரியாக ஆண்டுக்கு 17 பேர் உயிரிழந்து இருந்தனர்.

    ஆனால் இந்த ஒரு மாதத்துக்குள் 20 பேர் உயிரிழந்திருப்பது நாட்டில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • ஒமைக்ரான் வைரசின் பிஎப்.7 வகை திரிபு சீனாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
    • சீனாவில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கவும் பல்வேறு நாடுகள் முடிவு செய்துள்ளன.

    பீஜிங்:

    சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா உச்சத்தில் இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒமைக்ரான் வைரசின் பிஎப்.7 வகை திரிபு சீனாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இதனை தொடர்ந்து சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை, நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் அமெரிக்கா, கனடா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் என கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும், சீனாவில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கவும் பல்வேறு நாடுகள் முடிவு செய்துள்ளன.

    இந்நிலையில், தங்கள் நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மாவொ நிங் கூறுகையில், 'தங்கள் நாட்டிற்குள் நுழைய சீன பயணிகளை மட்டும் குறிவைத்து சில நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ அடிப்படை இல்லை, இந்த நடைமுறைகளில் சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. பரஸ்பர கொள்கையின் அடிப்படையில் சீனா எதிர் நடவடிக்கைகளை எடுக்க முடியும்' என்று எச்சரிக்கை விடுத்தார்.

    • ஒரு வருட கட்டாய ராணுவ சேவை 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்.
    • தைவானில் ஆண்கள் 4 மாதங்களுக்கு ராணுவத்தில் கட்டாயமாக பணியாற்ற வேண்டும்.

    தைவானை சீனா தனது நாட்டின் ஒரு பகுதி என சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

    சமீபத்தில் தைவானை நோக்கி போர் விமானங்களை சீனா அனுப்பியதால் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்தநிலையில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் தைவான் தனது ராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தைவானில் ராணுவத்தில் கட்டாய பணியாற்றும் காலம் ஒரு ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தைவானில் ஆண்கள் 4 மாதங்களுக்கு ராணுவத்தில் கட்டாயமாக பணியாற்ற வேண்டும் என்ற சட்டம் உள்ளது. தற்போது இந்த கட்டாய ராணுவ சேவை ஒரு ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஒரு வருட கட்டாய ராணுவ சேவை 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் 2005-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்த ஆண்களுக்கு இது பொருந்தும் என்றும் தைவான் அதிபர் சாய் இங்வென் தெரிவித்தார்.

    • நிமோனியா மற்றும் சுவாச கோளாறுகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அரசு தரப்பில் பதிவு
    • உலகில் இதுவரை இல்லாத அளவில் நோய்த் தொற்று பரவுவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

    பீஜிங்:

    சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவதாகவும், உயிரிழப்புகளும் அதிகமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மயானங்களில் ஏராளமான உடல்கள் குவிந்து கிடப்பதாகவும், இடைவிடாமல் தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. ஆனால் கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீனா அரசு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. நிமோனியா மற்றும் சுவாச கோளாறுகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அரசு தரப்பில் பெரும்பாலான இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், சீன அரசின் உயர்மட்ட சுகாதார ஆணையத்தின் மதிப்பீடுகளின்படி, இந்த வாரம் ஒரே நாளில் சீனாவில் கிட்டத்தட்ட 37 மில்லியன் (3.7 கோடி) மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும், உலகில் இதுவரை இல்லாத அளவில் நோய்த் தொற்று பரவுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 248 மில்லியன் மக்கள் அல்லது கிட்டத்தட்ட 18 சதவீத மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தகவல் மனித குலத்திற்கு கவலை அளிக்கக்கூடிய வகையில் உள்ளது. இது உண்மையாக இருக்கக்கூடாது என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது.

    டிசம்பர் 20 அன்று மதிப்பிடப்பட்ட தினசரி 37 மில்லியன் பாதிப்பு என்பதற்கும், அந்த நாளில் சீனாவில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட 3,049 நோயாளிகள் என்ற எண்ணிக்கைக்கும் மிகப்பெரிய அளவிலான வித்தியாசம் உள்ளது. தினசரி பாதிப்புக்கான முந்தைய உலக சாதனையை விட இது பல மடங்கு அதிகமாகும்.

    ப்ளூம்பெர்க் தொகுத்த தரவுகளின்படி, தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் தோன்றி பல்வேறு நாடுகளில் பரவியதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 19ம் தேதி தினசரி பாதிப்பு 4 மில்லியனை எட்டியது. இதுவே உலக அளவில் அதிகபட்ச தினசரி பாதிப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

    • உருமாறிய கொரோனாவின் 'பிஎப்.7' வகை முக்கிய பங்கு வகிக்கிறது.
    • சீனாவில் கொரோனா புதிய அலை ருத்ர தாண்டவமாடுகிறது.

    பீஜிங் :

    சீனாவில் தற்போது கொரோனா வைரசின் புதிய அலை எழுச்சி பெற்றுள்ளது. அங்கு இந்த தொற்றால் நாள்தோறும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு அந்த நாட்டின் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பீஜிங் தென் மேற்கு பகுதி மற்றும் சிறிய நகரங்களில் வார்டுகள் நிரம்பி வழிகின்றனவாம்.

    சீனாவின் தொழில்துறை மாகாணமான ஹீபெய் மாகாணத்தில் உள்ள ஜூஜவ் நகரில் உள்ள நெரிசலான வார்டுகளில் ஆபத்தான நிலையில் உள்ள டஜன் கணக்கான வயதான நோயாளிகள் சக்கர நாற்காலியில் கொண்டு செல்லப்படுவதை பத்திரிகையாளர்கள் நேரில் கண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    சீனாவில் கொரோனா புதிய அலை ருத்ர தாண்டவமாடுவதில், உருமாறிய கொரோனாவின் 'பிஎப்.7' வகை முக்கிய பங்கு வகிக்கிறது.

    'ஜீரோ கோவிட்' கொள்கை என்ற பெயரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவதற்காக சீனா கொண்டு வந்த தீவிர கட்டுப்பாட்டுக்கொள்கை மக்களை விரக்தியில் ஆழ்த்தி, போராட்டத்தில் குதிக்க வைத்தது. இதையடுத்து அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கொரோனா பரிசோதனைகள் நிறுத்தப்பட்டன. பலர் தங்கள் வீடுகளிலேயே சோதனை செய்து கொள்கின்றனர்.

    அதன்பிறகுதான் இப்போதைய கொரோனா அலை எழுச்சி பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    கொரோனாவால் உயிர்ப்பலிகள் பெருகி வந்தாலும், கொரோனாவால் ஏற்பட்ட உயிர்ப்பலிகளாக அவை காட்டப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக நிமோனியா மற்றும் சுவாசக்கோளாறுகளால் உயிரிழப்புகள் நேரிடுவதாகத்தான் சீனா பதிவு செய்கிறது.

    பீகிங் பல்கலைக்கழகத்தின் முதலாம் எண். ஆஸ்பத்திரியின் தலைவர் வாங் கெய்கியாங், ஏற்கனவே உள்ள உடல்நல பாதிப்புகளால்தான் நோயாளிகள் சாகிறார்கள் என கூறி உள்ளார்.

    ஆனால் தகன மையங்கள், உடல்களால் நிரம்பி வழிவதாகவும், உடல்களை தகனம் செய்து விட்டு, அஸ்தியைப் பெறுவதற்காக மக்கள் கார்களில் காத்திருப்பதாகவும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

    ஜூஜவ் நகரில் இறுதிச்சடங்குக்கான பொருட்களை விற்பனை செய்கிற கடைக்காரர்கள், ஒரு தகன மைய ஊழியர் இதுபற்றி கூறும்போது, "கொரோனா கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியது முதற்கொண்டு, சாவு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதற்கு முன்பு தினமும் 3 அல்லது 4 உடல்களை எரித்த தகன மையங்களில் இப்போது கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர் தினமும் 20 முதல் 30 உடல்கள் எரிக்கப்படுகின்றன" என தெரிவித்தனர்.

    நேற்று முன்தினம் (புதன்கிழமை) கொரோனாவால் ஒருவர் கூட இறந்ததாக சீனாவில் பதிவாகவில்லை. ஆனால் அந்த நாட்டின் கொரோனா இறப்பு எண்ணிக்கையில் ஒன்றைக் கழித்து 5 ஆயிரத்து 241 என சீன தேசிய சுகாதார கமிஷன் பதிவு செய்துள்ளது. இதற்கான காரணத்தைக்கூட பதிவு செய்யவில்லை.

    உலக சுகாதார நிறுவனத்தின் அவசர நிலை தலைவர் டாக்டர் மைக்கேல் ரேயான், "கொரோனா இறப்பு குறித்த சீனாவின் வரையறை மிகவும் குறுகலானது" என விமர்சித்துள்ளார்.

    இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், "கொரோனாவால் சாகிறவர்கள், நோய்த்தொற்றின் தீவிரத்தால் பல்வேறு மாறுபட்ட உறுப்புகளின் செயலிழப்பால்தான் மரணத்தை தழுவுகிறார்கள். எனவே, கோவிட் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டு, சுவாசக் கோளாறு உள்ள ஒருவருக்கு கொரோனா இறப்பைக் கண்டறிவதைக் கட்டுப்படுத்துவது, கொரோனாவுடன் தொடர்புடைய உண்மையான இறப்பு எண்ணிக்கையைக் குறைத்துக்காட்டும்" என தெரிவித்தார்.

    சீனாவின் கொரோனா நிலைமை குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறும்போது, "சீனாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருப்பதாக வருகிற தகவல்கள் கவலை அளிக்கின்றன" என தெரிவித்தார்.

    • மேற்குப் பகுதி எல்லைக் கோட்டில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து ஆலோசனை.
    • இருதரப்பும் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட முடிவு

    இந்தியா-சீனா ராணுவ கமாண்டர் அளவிலான அதிகாரிகள் பங்கேற்ற 17-வது சுற்றுப் பேச்சு சீனாவில் உள்ள சுசுல் மால்டோ எல்லைப் பகுதியில் நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் 17ந் தேதி அன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டத்தில், மேற்குப் பகுதியின் எல்லைக் கோட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

    மேற்கு பகுதியில், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பது என்று இருதரப்பினரும் அப்போது ஒப்புக் கொண்டனர். ராணுவம் மற்றும் தூதரக நிலையில், இருதரப்பும் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது என்று இந்த கூட்டத்தில் முடுவு செய்யப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • சீன விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
    • சீனாவில் அதிகரித்து வரும் தொற்று குறித்து பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என டாக்டர் சங்கீதா ரெட்டி கூறுகிறார்

    புதுடெல்லி:

    சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுத்து வரும் நிலையில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவும், முகக்கவசம் கட்டாயம் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    தற்போது சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசின் உருமாறிய வகையான பிஎப்-7 ஒமைக்ரான் இந்தியாவிலும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. எனவே சீனா-இந்தியா இடையிலான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    சீனாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் அங்கிருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும், இந்தியாவில் இருந்து சீனா செல்லும் விமானங்களுக்கும் தற்காலிகமாக தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் பரவும் தொற்று மற்றும் இந்தியாவில் ஒரு புதிய ஆபத்தான கொரோனா திரிபு பரவுவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு, கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்றும் மணீஷ் திவாரி யோசனை கூறி உள்ளார்.

    அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சங்கீதா ரெட்டி கூறுகையில், 'சீனாவுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானப் பயணம் தொடர்பான நமது கொள்கையின் மீது அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும்' என்றார். 'பயனுள்ள தடுப்பூசிகளுடன் இந்தியாவில் விரிவான தடுப்பூசி இயக்கம் செயல்படுத்தப்படுவதால், சீனாவில் அதிகரித்து வரும் தொற்று குறித்து பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை. இருப்பினும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது' என்றும் டாக்டர் சங்கீதா ரெட்டி கூறியுள்ளார்.

    சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்தபோதும், சீன விமானங்கள் இந்தியாவுக்கு வருவது தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் பெரும்பான்மையான இந்தியர்கள் கூறி உள்ளனர். சமூக நலன் சார்ந்த லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற வலைத்தளம் நடத்திய சர்வேயில், சீன விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று 10-ல் 7 இந்தியர்கள் (71 சதவீதம்) கருத்து தெரிவித்துள்ளனர். 

    • சீன ஊடுருவல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க மறுப்பது ஜனநாயகத்தை அவமரியாதை செய்வதாகும்.
    • இமாச்சல பிரதேச மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    பாராளுமன்ற மைய மண்டபத்தில் காங்கிரஸ் பாராளுமன்ற கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் முன்பு சோனியா காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நமது எல்லையில் சீனாவின் அத்துமீறல் தொடர்வது கவலைக்குரிய விஷயமாகும். சீனாவின் ஊடுருவல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு பிடிவாதமாக மறுக்கிறது. இது கண்டனத்திற்குரியது. தீவிர அக்கறையுள்ள விஷயங்களில் மவுனம் காப்பது சரியல்ல.

    சீனா நம்மை தொடர்ந்து தாக்க துணிவது ஏன்? இந்த தாக்குதலை தடுக்க என்ன தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் என்ன செய்ய வேண்டும்.

    எதிர்காலத்தில் சீன ஊடுருவுவதை தடுக்க அரசின் கொள்கை என்ன? சீனாவுக்கு நாம் ஏற்றுமதி செய்வதைவிட இறக்குமதி அதிகமாக செய்கிறோம். சீனாவின் ராணுவ விரோத போக்குக்கு பொருளாதார பதில் இல்லாதது ஏன்?

    இந்த மோதலில் இருதரப்பில் இருந்தும் ஒருசில வீரர்களுக்கு சிறுகாயம் ஏற்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் வெளிப்படையான விவாதம் தேவை. இதை நாடே எதிர்பார்க்கிறது. பொது மக்களிடம் கொள்கைகளை, செயல்களை விளக்குவதும் அரசின் கடமையாகும்.

    சீன ஊடுருவல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க மறுப்பது ஜனநாயகத்தை அவமரியாதை செய்வதாகும். மேலும் அரசின் நோக்கங்களை மோசமாக பிரதிபலிக்கிறது.

    வெறுப்பை பரப்புவதன் மூலமும், சமூகத்தில் சில பிரிவினை குறிவைப்பதன் மூலமும் வெளிநாட்டு அச்சுறுத்தலுக்கு எதிராக ஒன்றாக நிற்பதை அரசு கடினமாக்குகிறது.

    இத்தகைய பிளவுகள் நம்மை பலவீனப்படுத்தி மேலும் பாதிப்படைய செய்துள்ளன. இதுபோன்ற சமயங்களில் மக்களை ஒன்றிணைப்பது அரசின் முயற்சியாகவும், பொறுப்பாகவும் இருக்க வேண்டும். பிளவுபடுத்தக்கூடாது.

    எல்லாம் நன்றாக இருக்கிறது என்று அரசு தெரிவித்தபோதிலும் பொருளாதார நிலை தொடர்ந்து துயரத்தில் இருக்கிறது.

    டெல்லி, குஜராத் தேர்தல் முடிவுகள் துரதிருஷ்டவசமானது. இமாச்சல பிரதேச மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு சோனியா பேசினார்.

    • சீனா கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க போராடி வருகிறது.
    • பாதிப்பு அதிகரித்து வருவதால் எந்த நேரத்திலும் மற்ற நாடுகளுக்கு பரவலாம் என அஞ்சப்படுகிறது.

    வாஷிங்டன்:

    சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினமும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 90 நாட்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படக்கூடும். லட்சக்கணக்கானோர் உயிரிழக்க கூடிய வாய்ப்பு உள்ளதாக தொற்று நோயியல் நிபுணர் எரிக் பீகல் டிங் தெரிவித்துள்ளார்.

    சீனாவில் கொரோனா அதிகரித்து வருவதால் எந்த நேரத்திலும் மற்ற நாடுகளுக்கு பரவலாம் என அஞ்சப்படுகிறது.

    சீனாவின் இந்த பாதிப்பு வைரசின் புதிய பிறழ்வுகளை உருவாக்கலாம் என்றும், இது உலகையே கவலை அடைய செய்திருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஏனெனில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க போராடி வருகிறது.

    எந்த நேரத்திலும் வைரஸ் வேகமாக பரவலாம். வைரசின் பிறழ்வு எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் திறன் கொண்டது என்பதை நாங்கள் அறிவோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்தார்.

    பிரைஸின் கருத்து பற்றி வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டதற்கு, அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    ×