search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேரோட்டம்"

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கொண்டாடப்பட்டு முக்கிய திருவிழாக்களில் ஒன்று திருஆடிப்பூர திருவிழா. இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டதும், ஆண்டாள்-ரங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. இரவில் 16 வண்டி சப்பரத்தில், ஆண்டாள்- ரங்கமன்னார் வீதி உலா செல்கின்றனர். தொடர்ந்து 16-ந் தேதி வரை தினமும் காலை, இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது.

    5-ந் திருநாளான 9-ந் தேதி காலை மங்களா சாசனம் வைபமும், இரவு 10 மணிக்கு 5 கருட சேவையும் நடக்கிறது. 11-ந் தேதி இரவு 7 மணிக்கு கிருஷ்ணன் கோவிலில், ஆண்டாள் திருமடியில், ரங்கமன்னார் சயனத்திருக்கோல வைபவத்தில் காட்சி அளிக்கிறார்.

    8-ம் திருநாளான 12-ந் தேதி மதுரை அழகர்கோவில், ரங்க அரங்கநாத கோவில்களில் இருந்து பிரசாதமாக கொண்டு வரப்படும் பரிவட்டங்கள், ஆண்டாளுக்கு சாற்றப்படுகிறது.

    மறுநாள் (13-ந் தேதி) காலை 7.20 மணிக்கு திருவாடிப்பூரத் தேரோட்டம் நடக்கிறது. 16-ந் தேதி ஆண்டாள்- ரெங்க மன்னார் திவ்ய தம்பதிகளுக்கு புஷ்பயாகத்துடன் விழா நிறைவடைகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நாகராஜன், தக்கார் ரவிச்சந்திரன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    இன்று நடைபெற்ற கொடியேற்று விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், சந்திரபிரபா எம்.எல்.ஏ., செயல் அலுவலர் நாகராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன், மீரா தனலட்சுமி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்செந்தூர் கடற்கரை யோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்செந்தூர் கடற்கரை யோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான ஆடி திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடந்தது.

    திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர், பு‌ஷ்ப வாகனம், தொட்டில் வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், காளை வாகனம் என பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 11-ம் திருநாள் தேரோட்டம் நேற்று நடந்தது.

    இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடைக்கு பின்னர் பு‌ஷ்ப வாகனத்தில் அய்யா பவனி நடந்தது. பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடையை தொடர்ந்து மதியம் 1.40 மணிக்கு அய்யா வைகுண்டர் தேரில் அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். தேரில் அமர்ந்த அய்யா வைகுண்டரை திரளான பக்தர்கள் சுருள் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து அன்னதர்மம் வழங்கப்பட்டது. 
    அழகர்கோவில் ஆடிப்பெருந் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி தேரோட்டம் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் ஆடிப்பெருந் திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா தொடங்கிய நாளில் இருந்து தினமும் காலை, மாலையில் சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சிம்மம், அன்னம், அனுமார், சே‌ஷ, குதிரை, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி தேரோட்டம் இன்று (27-ந் தேதி) நடந்தது. அதிகாலையில் பெருமாள், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

    பின்னர் காலை 6.20 மணிக்கு கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் தேரில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து கோவிந்தா... கோவிந்தா... என்ற கோ‌ஷத்துடன் தேரோட்டம் தொடங்கியது.

    அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கலெக்டர் வீரராகவ ராவ், பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., கோவில் தக்கார் வெங்கடாச்சலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, ஜமீன்தார் சண்முக ராஜபாண்டியன் மற்றும் முக்கிய பிரமுகர்களை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    இதில் மதுரை, திண்டுக்கல் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். காலை 8. 55 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. அமைச்சர், கலெக்டர் இறுதி வரை தேரை இழுத்தனர்.

    இன்று மாலை பூப்பல்லக்கு நடக்கிறது. சந்திர கிரகணத்தையொட்டி மாலை 4 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற 11-ந் தேதி ஆடி அமாவாசையன்று கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

    உலகப் புகழ் வாய்ந்த பூரி ஜெகந்நாதர் ஆலய தேரோட்டம் இன்று தொடங்கியது. 9 நாட்கள் நடைபெறும் இந்த தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    புவனேஸ்வர்:

    உலக அளவில் புகழ் பெற்ற 12-ம் நூற்றாண்டை சேர்ந்த ஜெகநாதர் கோவில், ஒரிசா மாநிலம் பூரி நகரில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஒன்பதுநாள் தேரோட்ட திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தேரோட்ட திருவிழா இன்று பிற்பகல் தொடங்கியது. இந்த விழாவில், உலகம் முழுவதும் இருந்து பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தேராட்ட திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகந்நாதர் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தார். மேலும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய மற்றொரு தேரில் அவருடைய சகோதரர் பாலபத்ரர் அலங்கரிக்கப்பட்டிருந்தார். 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கருப்பு நிறத்தேரில் சுபத்ரா தேவி அலங்கரிக்கப்பட்டிருந்தார்.

    கோவிலில் உள்ள சிங்கவாசல் அருகே மூன்று தேர்களும் தயார் நிலையில் இருந்தன. முன்னதாக, ஜெகநாதர், பாலபத்ரர், சுபத்ரா தேவி ஆகிய கடவுளர்களின் சிலைகளை கோவில் ஊழியர்கள் தோளில் சுமந்து வந்து தேர்களில் வைத்தனர். அப்போது, சங்கொலி முழங்க பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். இவ்விழாவில் ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    பிற்பகல் 3 மணி அளவில் தேரோட்ட விழா தொடங்குகிறது. முதலில் பாலபத்ரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி உள்ளிட்ட மற்ற சிறு தேர்களும் புறப்பட்டன. கடைசியாக ஜெகநாதர் தேர் புறப்பட்டு செல்லும்.



    தேர் திருவிழாவையொட்டி ஊர்வலப் பாதையிலும் பூரி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. போலீசாருடன் மத்திய ஆயுதப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குண்டிச்சா கோவில் நோக்கி செல்லும் இந்த தேரோட்டத்தின் ஒரு அங்கமாக, வழியில் உள்ள மவுசிமா கோவிலில் ஜெகநாதர் ஓய்வு எடுப்பது வழக்கம். அதன் பிறகு, தேரோட்டம் தொடங்கி வருகிற 22-ந்தேதி அன்று நிறைவடையும்

    முன்னதாக, பூரி ஜெகந்நாதர் ஆலய தேரோட்டத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    ஜகநாதர் அருளால் நாடு பெரிய அளவிலான வளர்ச்சியை அடைய வேண்டும். இந்தியர்கள் அனைவரும் ஜகநாதரின் அருளால் சுபிட்சத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என தனது வாழ்த்து செய்தியில் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

    இதேபோல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோரும் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
    சிதம்பரபுரம் ஸ்ரீமந் நாராயணசுவாமி கோவில் திருநாளான நேற்று (திங்கட்கிழமை) தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அய்யா நாராயணசுவாமி தேருக்கு எழுந்தருளினார்.
    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ஸ்ரீமந் நாராயணசுவாமி கோவில் 89-வது ஆனி மாத தேரோட்ட திருவிழா கடந்த 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினசரி அய்யா நாராயணசுவாமி வெவ்வேறு வாகனங்களில் திருவீதி உலா வருதல் மற்றும் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடந்து வந்தது.

    8-ம் திருநாளான கடந்த 29-ந் தேதி மாலை பரிவேட்டை விழா நடந்தது. 11-ம் திருநாளான நேற்று (திங்கட்கிழமை) தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அய்யா நாராயணசுவாமி தேருக்கு எழுந்தருளினார். அதன் பிறகு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா குழுவினர் செய்திருந்தனர்.
    வில்லியனூரில் பிரசித்தி பெற்ற தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    வில்லியனூரில் பிரசித்தி பெற்ற தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் காலையில் சிறப்பு பூஜையும், மாலையில் பல்வேறு வாகனத்தில் சாமி வீதி உலாயும் நடைபெற்று வரு கிறது.

    கடந்த 24-ந் தேதி கருட சேவை நிகழ்ச்சியும், 26-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. நேற்று இரவு பெருமாள், திருமங்கை ஆழ்வார் குதிரை வாகனத்தில் வீதி உலா மற்றும் வேடுபரி உற்சவம் நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு நடை பெற்றது.

    தேரோட்டத்தை முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். தேரோட்டத்தில் சுகுமாறன் எம்.எல்.ஏ., இந்து அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல், திருக்கோவிலூர் ஜீயர் ஸ்ரீராமானுஜர்சாரியார் உள்ளிட்ட திரளான பக்தர் கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    1-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 2-ந் தேதி விடை யாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரி ராமதாஸ் மற்றும் உபயதாரர்கள் செய்துள்ளனர்.

    வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
    நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் அர்த்தநாரீஸ்வரர் என்ற சிந்தாமணி நாதர் கோவில் உள்ளது. பழமைவாய்ந்த இக்கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்மாளுக்கு சிறப்பு பூஜைகள், திருவீதி உலா, பக்தி சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு அம்மையப்பன் தேரில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு தேரோட்ட மண்டகப்படிதாரரான வாசுதேவநல்லூர் தொழிலதிபர் எஸ்.தங்கப்பழம் குடும்பத்தினரால் அலங்காரம் செய்யப்பட்ட தேரை எஸ்.தங்கப்பழம் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். பஞ்சவாத்தியங்கள் முழங்க தேர் கோவில் முன்பு இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதிகள் வழியாக வந்து மாலை 3.45 மணிக்கு நிலையத்தை அடைந்தது.

    தேரோட்டத்தில் மனோகரன் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, ஆய்வாளர் கண்ணன், செயல் அலுவலர்கள் ஜெயராமன், தங்கப்பாண்டியன், சதீஷ், எஸ்.தங்கப்பழம் கல்லூரி தாளாளர் எஸ்.டி.முருகேசன், நகரப்பஞ்சாயத்து செயல் அலுவலர் லெனின், பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி கமிட்டித்தலைவர் தவமணி, வாசுதேவநல்லூர் வட்டார அட்மா தலைவர் மூர்த்திப்பாண்டியன், நகர அ.தி.மு.க. செயலாளர் வக்கீல் குமரேசன், ஒன்றிய அவைத்தலைவர் முகமது உசேன், நிர்வாகிகள் சீமான் மணிகண்டன், சுமங்கலி சமுத்திரவேலு மற்றும் அனைத்து சமுதாய மண்டகப்படிதாரர்களும், ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    10-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) தீர்த்தவாரி மண்டகப்படிதாரரான இல்லத்துபிள்ளைமார் சமுதாயம் சார்பில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. காலை 9 மணிக்கு தீர்த்தவாரி கனகபல்லக்கில் அம்மையப்பன் வீதிஉலாவும், மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் அம்மையப்பன் மண்டகப்படியில் இருந்து வீதிஉலாவும் நடைபெறும். தெப்பத்திருவிழா மண்டகப்படிதாரரான நாடார் உறவின்முறை சமுதாயம் சார்பில் இரவு 8 மணிக்கு 8-ம் ஆண்டு தெப்பத்திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை வாசுதேவநல்லூர் நாடார் உறவின்முறை சமுதாயத்தினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். 
    பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனி திருவிழாவையொட்டி தேரோட்டமும் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயம், ஆசியாவின் மிகப்பெரிய சிவாலயம், தமிழகத்தின் 3-வது பெரிய தேரை கொண்ட கோவில் என்ற பல்வேறு சிறப்புகளை உடையது நெல்லையப்பர் கோவில். இந்த கோவில் 14 ஏக்கர் நிலப்பரப்புடையது. அகஸ்தியர் கருவூர் சித்தர் உள்ளிட்ட பல சித்தர்கள் வழிபட்ட ஸ்தலமாகும். இந்த கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில் ஆண்டுதோறும் ஆனிப்பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஆனி திருவிழாவையொட்டி தேரோட்டமும் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஆனிப்பெருந்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவை யொட்டி தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி, அம்பாள், பரிவார மூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர்.

    விழாவின் 8-ம் திருவிழா வான நேற்று மாலை சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலாவும், இரவு சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்ககிளி வாகனத் திலும் வீதி உலா நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு தேரடி கருப்பசாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார படைப்பு தீபாராதனையும், அன்னதானமும் நடந்தது.

    இதை தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-வது நாளான இன்று காலை நடந்தது. இதையொட்டி அதிகாலை மேளதாளம் முழங்க சுவாமி, அம்பாள் தேரில் எழுந் தருளினர். தாமரை மலர் மாலை உள்ளிட்ட மாலைகள் சுவாமி, அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன. தேரோட்டத்தை காண காலை 6 மணி முதலே பக்தர்கள் நெல்லை டவுன் ரத வீதிகளில் குவிய தொடங்கினார்கள்.



    காலை 9.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் சுவாமி தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அவருடன் எம்.பி.க்கள் பிரபாகரன், முத்துக்கருப்பன், ஏ.எல்.எஸ். லட்சுமணன் எம்.எல்.ஏ.ஆகியோரும் சேர்ந்து வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    “ஓம் நமசிவாய, தென்னாடு டைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி“ என்று பக்தர்கள் பக்தி கோ‌‌ஷங்கள் எழுப்பி, தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பு மேளதாளம்,, பஞ்சவாத்தியங்கள் முழங்கின. யானை ஊர்வலமாக சென்றது. ஒரு வடத்தை பெண்களும், மீதி 3 வடங்களை இளைஞர்களும், பெரியவர்களும் பிடித்து இழுத்தனர். தேருக்கு பின்னால் இளைஞர்கள் தடி போட்டனர். தேர் காலை 11 மணிக்கு வாகையடி முனையை வந்தடைந்தது. பகல் 12 மணி அளவில், சந்தி பிள்ளையார் கோவில் திருப்பத்தை தேர் கடந்தது.

    அங்கிருந்து சற்று நேரத்தில் தேர், லாலாசத்திரம் முக்கு பகுதியை வந்து சேர்ந்தது. பின்னர் வடக்கு புறமாக உள்ள போத்தீஸ் கார்னருக்கு சுவாமி தேர் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து காந்திமதி அம்பாள் தேரை பக்தர்கள் இழுத்தனர். இதற்கிடையே சுவாமி தேரை நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தும் பணியை பக்தர்கள் மேற் கொண்டனர்.



    அதன் பின்னர் அம்பாள் தேர் இழுக்கப்பட்டு நிலைக்கு கொண்டு வரப்படுகிறது. முன்னதாக விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர்கள் இழுக்கப்பட்டன. இறுதியாக சண்டிகேசுவரர் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேரோட்டத்தையொட்டி நெல்லை மாவட்டத்துக்கு இன்று விடுமுறை விடப் பட்டிருந்தது. இதனால் தேரோட்டத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். 4 ரதவீதிகள் முழுவதும் காணும் இடமெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்தது. விழாவையொட்டி 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெளி மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணிக்கு வந்திருந்தனர். மேலும் ஊர்க்காவல் படையினர், பட்டாலியன் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.

    விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் மகேந்திர குமார் ரத்தோட் துணை போலீஸ் கமி‌‌ஷனர்கள் சுகுணாசிங், பெரோஸ்கான், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், இந்து அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்சோதி, கோவில் நிர்வாக அதிகாரி ரோஷினி, பேஸ்கால் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேரோட்டத்தையொட்டி நெல்லையப்பர் கோவில் முன்பு மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் பக்தர்களின் வசதிக்காக 4 ரதவீதிகளிலும் 18-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. லாரிகள் மூலமும் குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்தது. மேலும் 8 இடங்களில் தற்காலிக கழிப்பறைகளும் அமைக்கப்பட்டு இருந்தன. ரதவீதிகளில் உள்ள கட்டண கழிப்பிடங்களில் பக்தர்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்த வசதி செய்யப் பட்டிருந்தது.

    தேரோட்டத்தை பார்க்க வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக மெயின் வாசல் வழியாக செல்கின்ற பக்தர்கள் வடக்கு வாசல் வழியாக வெளியே சென்றனர். கோவிலுக்கு செல்கின்ற பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் வாசல் வழியாக சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர். தேரோட்ட விழாவையொட்டி நெல்லையில் இன்று போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்களின் வாகனங்கள், முக்கியபிரமுகர்களின் வாகனங்கள் செல்ல தனித்தனி இட வசதிகள் செய்யப் ஜீபட்டிருந்தன. நெல்லை நகர் பகுதிகளில் வியாபாரிகள் கடைகளை அடைத்து தேரோட்டத்தில் பங்கேற்றனர்.

    நெல்லையப்பர் கோவில் தேரோட்ட பாதுகாப்புக்கு 1,500 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். நவீன கேமராக்கள் மூலமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    நெல்லையில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனித்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாள் வீதிஉலா மற்றும் பக்தி கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 9-வது நாள் விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. காலை 9 மணிக்கு சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர் தேர்களும், சுவாமி தேரை தொடர்ந்து அம்பாள் தேரும், இறுதியாக சண்டிகேசுவரர் தேரும் இழுக்கப்படுகின்றன.

    இந்த 5 தேர்களுக்கும் கடந்த சில நாட்களாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நேற்று தேர் அலங்கரிக்கும் பணி முழுமை அடைந்தது.

    தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இதையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேந்தர்குமார் ரத்தோட் உத்தரவுப்படி துணை கமிஷனர்கள் சுகுணா சிங் (சட்டம்- ஒழுங்கு), பெரோஸ்கான் அப்துல்லா (குற்றம்-போக்குவரத்து) ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

    இன்று நடைபெறும் தேரோட்டத்தின் போது பக்தர்களை ஒழுங்குபடுத்தவும், பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் போலீஸ் உதவி கமிஷனர்கள், துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் நெல்லை டவுனில் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தேரோட்டத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    தேரோட்டத்தின் போது திருடர்கள் கைவரிசை காட்டுவதை தடுக்கும் வகையில் போலீசார் நவீன கேமராக்கள் மூலம் கண்காணிக்க உள்ளனர். இதற்காக 4 ரதவீதிகளும் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டு உள்ளன. மேலும் நாலாபுறமும் கண்காணித்து காட்சிகளை பதிவு செய்யும் கேமராக்கள் பொருத்தப்பட்ட வேனும் ரதவீதிகளில் தேர் ஓடும்போது சுற்றி வருகிறது.

    மேலும் தேரோட்டத்தையொட்டி டவுன் பகுதியில் இன்று 1 நாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தேரோட்டத்தை காண வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு ஆங்காங்கே பார்க்கிங் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கான அறிவிப்பு பேனர்களும் போலீசார் வைத்துள்ளனர்.

    தேரோட்டத்தையொட்டி ஏராளமான வியாபாரிகள் நேற்றே குவிந்தனர். அவர்கள் சுவாமி சன்னதி ரோடு, ரதவீதிகள் மற்றும் கோவிலுக்கு செல்லும் ரோடுகளில் கடைகள் அமைத்து உள்ளனர். வெளி தெப்பக்குளம் அருகில் குழந்தைகளுக்கான ராட்டினங்களும் நிறுத்தப்பட்டு உள்ளன. 
    நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. நாளை (புதன்கிழமை) காலையில் தேரோட்டம் நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித்திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், வீதி உலா வருதல், கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

    7-ம் திருநாளான நேற்று காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 8.30 மணிக்கு சுவாமி தந்தப்பல்லக்கிலும், அம்பாள் முத்து பல்லக்கில் தவழ்ந்த கோலத்தில் வீதி உலா நடந்தது. இரவு 9 மணிக்கு சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 10 மணிக்கு சுவாமி நடராஜர் திருக்கோலத்தில் மேளதாளம் முழங்க வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவில் பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.

    8-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு நடராஜர் வெள்ளை சாத்தியும், 8.30 மணிக்கு பச்சை சாத்தியும் வீதி உலா நடக்கிறது. மாலை 4 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலாவும், இரவு 10 மணிக்கு சுவாமியும், அம்பாளும் தேர்களை பார்வையிடும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்ககிளி வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு தேரடி கருப்பசாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார படைப்பு தீபாராதனையும், அன்னதானமும் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (புதன்கிழமை) காலை நடக்கிறது. இதற்காக நெல்லையப்பர் கோவிலில் உள்ள தேர்கள் சுத்தம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    நாளை அதிகாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருள்கின்றனர். காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தேரை இழுக்கிறார்கள்.

    முதலில் விநாயகர் தேர், 2-வதாக சுப்பிரமணியர் தேர், 3-வது சுவாமி தேர், அதன்பிறகு அம்பாள் தேர் இழுக்கப்படும். இந்த தேர்களுக்கு பின்னால் சண்டிகேசுவரர் தேர் வரும். ஒரே நாளில் தேரை நிலைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருப்பதால் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்சோதி, உதவி ஆணையாளர் அருணாசலம், ஆய்வாளர் முருகன், நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் சுகுணாசிங், பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் நேரடி மேற்பார்வையில் 1,500 போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுதவிர 4 ரதவீதிகளிலும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு தேரோட்ட நிகழ்ச்சிகள் கண்காணிக்கப்படுகின்றன. ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. 
    உடையப்பன் குடியிருப்பு நாராயணசாமி கோவில் ஆனி திருவிழா தேரோட்டம் நடந்தது. கொட்டும் மழையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியை அடுத்த உடையப்பன் குடியிருப்பு ஸ்ரீமன் நாராயணசாமி கோவிலில் ஆனி மாத தேர் திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் பணிவிடை, உச்சிப்படிப்பு, அன்னதானம், அய்யா வாகன பவனி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. 10-ம் நாள் திருவிழாவன்று மாலை அய்யா இந்திர வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் இறுதி நாளான நேற்று காலையில் பணிவிடை, உகப்படிப்பு நடந்தது. அதைத்தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. அப்போது மழை கொட்டியது. அதிலும் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஆஞ்சநேயர் தேர் முன் செல்ல செம்பவள பஞ்சவர்ண தேர், யானை முன் செல்ல சிங்காரி மேளம் முழங்க நாதஸ்வர கச்சேரியுடன் அய்யாவழி மக்கள் காவிக்கொடியுடன் கோஷங்கள் எழுப்பியவாறு வீதி உலா வந்தனர்.

    இந்த தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு மேல உடையப்பன் குடியிருப்பு, கோவில் விளை சந்திப்பு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. கோவில்விளை சந்திப்பில் அன்னதானம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு கிராமிய நடனம், நள்ளிரவு 2 மணிக்கு திருக்கொடியிறக்கம், இனிப்பு வழங்குதல் ஆகியவை நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில் தொழிலதிபர் முத்தழகன், ஈஸ்வர்சிங், சிவானந்தன், ஸ்ரீகாந்தி அன்பு, கந்தசுவாமி நாடார் சன்ஸ் உரிமையாளர் ராஜலிங்கம், தேர் கொடிமர ஸ்தபதி முத்துராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் என்.பிச்சைப்பழம் தலைமையில் துணை தலைவர் தங்க கணேசன், செயலாளர் பாலகிருஷ்ணன், இணை செயலாளர் கிருஷ்ணராஜா, பொருளாளர் கிருஷ்ணராஜ் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், ஊர் மக்கள் இணைந்து செய்து இருந்தனர். 
    திட்டக்குடி அருகே பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் மகா முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
    திட்டக்குடி அருகே பெருமுளை கிராமத்தில் பழமை வாய்ந்த மகா முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 15-ந் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து தினமும் மகா முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும், இரவில் சாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தது. மேலும் நாடு நலம் பெற வேண்டியும், நீர்வளம் நிலவளம் வேண்டியும் சிறப்பு பூஜை நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி மகா முத்துமாரியம்மன், காத்தவராயன் ஆகிய தெய்வங்களுக்கு மஞ்சள், பன்னீர், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மகா முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதனை தொடர்ந்து காலை 11 மணியளவில் நாதஸ்வர இசை, மேளதாளங்கள் முழங்க கோவிலில் இருந்து மகா முத்துமாரியம்மன் வெளியே கொண்டுவரப்பட்டார். கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த தேரில் மகாமுத்துமாரியம்மன் எழுந்தருளினார். அங்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர் அங்கு திரண்டிருந்த பெண்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அவர்கள் அம்மன் பக்தி பாடல்கள் பாடினர். கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், 4 வீதிகளில் வந்து மீண்டும் நிலையை வந்தடைந் தது. இதில் திட்டக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், பரம்பரைபரம்பரையாக மகா முத்துமாரியம்மன் கோவிலில் பெண்கள் மட்டுமே தேரை இழுத்துசெல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் பெண்கள் மட்டும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 4 வீதிகளில் தேர் அசைந்தாடி வந்தது என்றார். 
    ×