search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96106"

    பாலியல் புகார் கூறிய மாணவி கல்லூரியில் இருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவரும் சென்னையை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    விடுதி காப்பாளர்களாக உள்ள பேராசிரியைகள் மைதிலி, புனிதா பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்ததாக மாணவி குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக ஏ.டி.எஸ்.பி. வனிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கோவை வேளாண் பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி தலைமையில் 5 பேர் குழு கடந்த மாதம் 24-ந் தேதி திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் விசாரணை நடத்தியது.

    கல்லூரி முதல்வர், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியைகள், 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தி வீடியோக பதிவு செய்தனர்.

    பின்னர், விசாரணை அறிக்கையை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமியிடம் சமர்பித்தனர். முதற்கட்ட விசாரணையின் போது பாதிக்கப்பட்ட மாணவியை ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு அழைத்தது.

    அப்போது, மாணவி நீதிமன்ற அனுமதிபெற்று விசாரணையில் பங்கேற்பதாக தெரிவித்தார். இதனால், மாணவியிடம் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராக மாணவிக்கு 31-ந் தேதி ஒழுங்கு நடவடிக்கை குழு சம்மன் அனுப்பியது.

    நீதிமன்ற அனுமதி பெற்று மாணவி நேற்று மதியம் 1 மணிக்கு வேளாண் கல்லூரி வளாகத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு ஆஜரானார். மாலை 5.30 மணிவரை சுமார் 4 மணி நேரம் மாணவியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணை முழுவதும் ஒழுங்கு நடவடிக்கை குழு வீடியோவில் பதிவு செய்தது. தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து மாணவி விரிவாக விளக்கமளித்தார். மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை, துணை வேந்தரிடம் இன்று சமர்ப்பிக்கப்படுகிறது.

    இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற மாணவிக்கு பேராசிரியைகளும், மாணவ, மாணவிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கல்லூரியை விட்டு வெளியேறுமாறு கோ‌ஷம் எழுப்பினர். இதனால் மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

    தனது வகுப்பறைக்கு சென்று அமர்ந்தார். அப்போது, வகுப்பறையில் இருந்த சக மாணவ, மாணவிகளை பேராசிரியைகள் ‘வாருங்கள் வெளியே போகலாம். அந்த மாணவி மட்டும் தனியாக இருக்கட்டும்’ என்று கூறி அனைவரையும் வெளியே அழைத்து சென்றனர்.

    இதேபோல் மற்ற வகுப்புகளில் இருந்த மாணவ, மாணவிகளையும் பேராசிரியைகள் வெளியே அழைத்து செல்வதாக கூறினர். மாணவி மட்டும் தனது வகுப்பறையில் தனியாக அமர்ந்திருந்தார். பாலியல் புகார் கூறிய மாணவியை வகுப்பறையில் இருந்து வெளியேற்றினால் தான் நாங்கள் உள்ளே வருவோம் என்று பேராசிரியைகளும், மாணவ, மாணவிகளும் கூறினர்.

    இதையடுத்து, மாணவி வலுகட்டாயமாக கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால், அவருடைய படிப்பு கேள்வி குறியாகியுள்ளது. மாணவி கூறியபோது, பாதிக்கப்பட்ட எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பமுடியவில்லை என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

    இதையறிந்த வாழவச்சனூர் கிராமமக்கள் ஏராளமானோர் மாணவிக்கு ஆதரவாக கல்லூரி முன்பு திரண்டனர். கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்களை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். வாணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tamilnews
    சக மாணவர் தற்கொலைக்கு நீதி கேட்டு போராடியதன் விளைவாக கல்லூரிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவர்கள் எழுமாத்தூர் கலை கல்லூரியை முற்றுகையிட்டனர்.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூர் மலையடிவாரத்தில் அரசு கலை கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் படித்து வந்த நடுப்பாளையத்தை சேர்ந்த மாணவர் தினேஷ் குமார் (30). திடீரென தற்கொலை செய்து கொண்டார். மாணவர் சக மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டதால் கடந்த 3 மாதத்துக்கு முன் கல்லூரி நிர்வாகத்தால் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன் இதேபோல் ஏற்பட்ட தகராறில் 2-வது தடவையாக மாணவர் தினேஷ்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதனால் மாணவர் தினேஷ் 2 தினங்களுக்கு முன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். சஸ்பெண்டு செய்யப்பட்டதால் மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார்.

    இதையொட்டி மாணவ- மாணவிகள் தினேஷ்குமார் தற்கொலைக்கு காரணமான கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரின்ஸ்பாலை கைது செய்ய வேண்டும் என கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. மாணவர்களின் போராட்டம் காரணமாக இன்று முதல் 5 நாட்கள் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.

    இந்த நிலையில் இன்று கல்லூரிக்கு வந்த மாணவர்கள் கல்லூரி மூடப்பட்டதை கண்டித்தும் பிரின்ஸ்பாலை கைதுசெய்ய கோரியும் கல்லூரி முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பாதுகாப்பு பணிக்காக போலீசார் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

    மேலும் கல்லூரிக்கு போக பஸ்சில் இருந்து இறங்கி 2 கி.மீட்டர் தூரம் நடத்துதான் போக வேண்டும் ஆகவே பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கோரியும் மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை அருகே பாலியல் புகாரில் சிக்கிய கல்லூரி பின்புறம் இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு அந்தோணியார்புரத்தை சேர்ந்தவர் ராணி (வயது 28). கணவரை பிரிந்து சிறுவயது 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் பேராசிரியர்கள் மீது மாணவி பாலியல் புகார் அளித்த அரசு வேளாண்மை கல்லூரியின் பின்புறமுள்ள வனப்பகுதியில் இன்று காலை மரத்தில் ராணியின் பிணம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது.

    தகவலறிந்த வாணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராணியின் பிணத்தை தூக்கில் இருந்து இறக்கி பார்வையிட்டனர்.

    அப்போது, அவரது முகத்தில் காயங்கள் இருந்தன. மேலும் மரம் செங்குத்தாக இருப்பதால், ராணி அதில் ஏறி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை.

    எனவே, ராணி அடித்துக்கொலை செய்யபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பிணத்தை தூக்கில் தொங்க விட்டு மர்மநபர்கள் தப்பியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கணவரை பிரிந்து வாழ்ந்த ராணி வேளாண் கல்லூரி பின்புற பகுதிக்கு எதற்காக வந்தார் என்பது குறித்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    கல்லூரி பின்புறம் இளம்பெண் தூக்கில் பிணமாக கிடந்த வனப்பகுதியில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி

    ராணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்குப்பதிந்த போலீசார், ராணியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    ராணியின் உறவினர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் கொண்டு வர தடை விதித்து உயர்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. #TNColleges #MobileBan
    சென்னை:

    கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கிறது. சில கல்லூரிகள் இந்த கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்றி வருகின்றன.

    இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்பட அனைத்து கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து, கல்லூரி கல்வித்துறை இயக்குனரகம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. 

    செல்போனால் மாணவ- மாணவிகளின் கவனம் சிதறுகிறது. இதை தடுக்க இந்த முடிவை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே பள்ளிகளில் செல்போனுக்கு தடை இருக்கிறது. தற்போது கல்லூரி வளாகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், அரசின் இந்த முடிவுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாலும், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருப்பதாக கூறப்பட்டு தற்போது இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. 
    தமிழகத்தில் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து கல்லூரி கல்வித்துறை இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
    சென்னை:

    கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கிறது. சில கல்லூரிகள் இந்த கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்றி வருகின்றன.

    இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்பட அனைத்து கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்லூரி கல்வித்துறை இயக்குனரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    செல்போனால் மாணவ- மாணவிகளின் கவனம் சிதறுகிறது. இதை தடுக்க இந்த முடிவை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே பள்ளிகளில் செல்போனுக்கு தடை இருக்கிறது. தற்போது கல்லூரி வளாகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாதம் தொடக்கத்தில் கல்லூரி கல்வித்துறை இயக்குனர் சாருமதி இதற்கான உத்தரவை அனைத்து மண்டல கல்வித்துறை இணை இயக்குனர்களுக்கு பிறப்பித்துள்ளார். அவர்கள் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரி நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    உயர் கல்வித்துறை செயலாளர் (பொறுப்பு), பள்ளி கல்வித்துறை செயலாளர், உயர்கல்வித்துறை பொறுப்பாளர் ஆகியோர் தலைமையில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மாணவ-மாணவிகள் இணைந்து படிக்கும் கல்லூரிகளில் இருந்து பல்வேறு புகார்கள் வருகின்றன. மாணவர்கள் தங்களது செல்போன் மூலம் மாணவிகளை வீடியோ எடுப்பதாகவும், புகைப்படம் எடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.

    மேலும் பரீட்சையின் போது செல்போனை பயன்படுத்தி முறைகேடுகள் நடக்கிறது. செல்போனால் மாணவ-மாணவிகளின் கவனம் சிதறுகிறது. இதன் காரணமாக கல்லூரிகளில் செல்போனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டுப்பாட்டை பின்பற்றி மாணவ-மாணவிகள் கல்லூரிகளுக்கு செல்போன்களை கொண்டுவர மாட்டார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2005-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் இந்த கட்டுப்பாட்டை கொண்டு வந்தது. வகுப்பறையில் செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடு இருந்ததால் மாணவ- மாணவிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த கட்டுப்பாடு நாளடைவில் தளர்த்தப்பட்டது.

    தற்போது தமிழ்நாடு முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
    கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. #HeavyRain #SchoolCollege #Holiday
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கூடலூர்-ஊட்டி சாலை, கேரள மலைப்பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டது. தேன் வயலில் உள்ள வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆதிவாசி கிராமத்தில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    தொடர் மழையால் அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, அப்பர் பவானி, முக்குருத்தி, பைக்காரா, கிளண்மார்கன் அணைகள் நிரம்பி திறக்கப்பட்டன. இதனால் மாயார் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தெங்குமரஹாடா பகுதி மக்கள் ஆற்றை கடந்து பவானிசாகர் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) கலெக்டர் இன்னசென்ட் திவ்யா விடுமுறை அளித்துள்ளார்.   #HeavyRain #SchoolCollege #Holiday
    2-வது கட்ட மருத்துவ கலந்தாய்வு அரசு பல்நோக்கு மருத்துவ மனை கூட்டரங்கில் இன்று தொடங்கியது. வருகின்ற 13-ந் தேதி வரை நடைபெறும் இந்த கலந்தாய்வில் 241 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படுகின்றன. #TNMedicalCounselling #MBBS #MedicalEducation

    சென்னை:

    அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்.இடங்கள் ஆகியவற்றிற்கான கலந்தாய்வு கடந்த மாதம் நடந்தது.

    இதில் 3501 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பின. அதனையடுத்து தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைப்பெற்றது.

    அரசு மருத்துவ கல்லூரிகளில் மிக குறைந்த கட்டணத்தில் எம்.பி.பி.எஸ். படிக்கும் வாய்ப்பு கூட தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மட்டும் கிடைத்தது.

    இந்த நிலையில் 2-வது கட்ட மருத்துவ கலந்தாய்வு அரசு பல்நோக்கு மருத்துவ மனை கூட்டரங்கில் இன்று தொடங்கியது. வருகின்ற 13-ந் தேதி வரை நடைபெறும் இந்த கலந்தாய்வில் 241 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படுகின்றன.

    அகில இந்திய ஒதுக்கீட்டு சரண்டர் இடங்கள் 98, அரசு மருத்துவ கல்லூரிகளில் ஒதுக்கீடு பெற்று சேராத இடங்கள் 30, தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 113 என மொத்தம் 241 எம்.பி.பி.எஸ்.இடங்கள் நிரப்பபடுகிறது.

    இது குறித்து மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் செல்வராஜன் கூறியதாவது:-

    இரண்டாவது கட்ட கலந்தாய்வில் 241 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதனால் 3500 மாணவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    ஒரு சிலர் கல்லூரிகளை மாற்ற விரும்பினால் இந்த வாய்ப்பின் மூலம் மறு ஒதுக்கீடு செய்யப்படும். இது தவிர ரேங்க் பட்டியலில் காத்திருப்போருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    திங்கட்கிழமை வரை கலந்தாய்வு நடைபெறும். ஏற்கனவே அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர ஒதுக்கீடு பெற்றவர்கள் மறு ஒதுக்கீடு பெறலாம். இது தவிர சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரியில் 27 இடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. 3-வது கட்ட கலந்தாய்வு தனியார் பல் மருத்துவ இடங்களுக்கு பின்னர் நடத்தப்படும் என்றார்.

    மீன் விற்று கல்லூரியில் படிக்கும் கேரள மாணவிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. இதை சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாக விமர்சித்தவர் கைது செய்யப்பட்டார். #KeralaGirl #Hanan #FishSelling
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம், தொடுப்புழா என்ற இடத்தில் உள்ள அல் அசார் கலை, அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருபவர் மாணவி ஹனன் (வயது 19).

    இவர், குடிகார தந்தை குடும்பத்தை கைவிட்டுச்சென்ற நிலையில், தாயாருக்கு மனநிலை சரியில்லை என்ற சூழலில், தினமும் சந்தைக்கு சென்று மீன் வாங்கி வந்து விற்று, அதைக் கொண்டு தன்னையும், தாயாரையும், சகோதரரையும் காத்துக்கொண்டு படித்து வருவதாக தெரிகிறது. பகுதி நேர வேலை போல மலையாள படங்களில் சின்னச்சின்ன பாத்திரங்களில் நடித்தும் உள்ளார்.



    இவருடைய ஆசை, எம்.பி.பி.எஸ். படித்து மருத்துவர் ஆவதுதான்.

    மாணவி ஹனனைப் பற்றி பிரபல பத்திரிகை ஒன்றில் சிறப்புக்கட்டுரை வெளியானது. இது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவியது.

    அதைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் நடிக்க உள்ள படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வந்து உள்ளது. இந்த வாய்ப்பை டைரக்டர் அருண் கோபி வழங்கி உள்ளார். மேலும் பல அரசியல் பிரபலங்களும், பட உலகினரும் அவருக்கு உதவ முன் வந்தனர்.

    இது குறித்து அறிந்தவர்கள், சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டனர். ஒரு தரப்பினர், ஹனனைப் பாராட்டினர்.



    இன்னொரு தரப்பினரோ மாணவி ஹனனை கடுமையாகவும், தரக்குறைவாகவும் விமர்சித்தனர். குறிப்பாக “ஹனன் வசதியானவர், சினிமாவில் நடிப்பதற்காகத்தான் மீன் விற்பதாக நாடகம் ஆடுகிறார்” என்ற ரீதியில் கருத்துக்கள் வெளியானது. இது அந்த மாணவியை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

    இது குறித்து ஹனன் பேட்டி அளிக்கையில், “நான் பொய் பேசுவதாக சொல்கிறார்கள். இது தவறு. நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள்தான். வாழ்க்கை நடத்துவதற்கு போராடி வருகிறேன். 7 வயதிலேயே எனக்கு கஷ்டங்கள் ஆரம்பித்து விட்டது. எல்லா பகுதி நேர வேலைகளும் செய்து இருக்கிறேன்” என உருக்கமுடன் கூறினார்.

    இதை அந்த மாணவி படித்து வரும் கல்லூரி நிர்வாகமும் உறுதி செய்தது.

    இதே போன்று ஹனனுக்கு பட வாய்ப்பு தந்து உள்ள டைரக்டர் அருண் கோபி டி.வி. சேனல்களுக்கு அளித்த பேட்டியில், “ஹனனுக்கு எதிரான விமர்சனங்கள், அவரை அடித்துக்கொல்வதற்கு சமமானது. இந்த விமர்சனங்கள் அடிப்படை இல்லாதது” என கூறினார்.

    ஹனனுக்கு எதிரான விமர்சனங்களுக்கு கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், கேரளாவை சேர்ந்த மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

    ஹனனை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டார். அது மட்டுமின்றி அந்த மாணவி மீன் விற்கும் படத்தை தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டு உள்ளார்.

    அதைத் தொடர்ந்து அந்த மாணவியை தரக்குறைவாக விமர்சித்த வயநாடு பகுதியை சேர்ந்த நூருதீன் ஷேக் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர்மீது ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  #KeralaGirl #Hanan #FishSelling
    பள்ளி கல்லூரி பருவத்தின் போது ஏற்படும் தோல்விகளை மாணவர்கள் துன்பங்களாக கருதக்கூடாது என்று வைகோ கூறினார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்மொழி திராவிட மொழிகளின் மூல மொழி என்பதை கிறிஸ்தவ பாதிரியார்கள் அறிவித்துள்ளனர். விவிலியத்திற்கு யோவான் உள்பட 4 பேர் உரை எழுதியுள்ளனர். முதன்முதலில் அச்சில் பொறிக்கப்பட்ட மொழி தமிழ் மொழி என தூய யோவான் எழுதிய சுவிஷேசத்தில் இருந்து அறிய முடிகிறது. தமிழகத்தில் சமூக ஊடகங்கள் வாயிலாக கலாசார சீரழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் நமது பண்பாடு, கலாசாரம் நரகப்படு குழியில் சிக்கி தவிக்கிறது. 5 ஆயிரம் பேர் பயிலும் கல்விக்கூடங்களில் 50 பேர் தான் தவறு செய்கின்றனர். அவர்களால் ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்திற்கு தலைகுனிவு ஏற்படுகிறது. கல்வியும், கலாசாரமும் பாழ்படுகிறது. மாணவர்கள் தங்களது பள்ளி, கல்லூரி பருவத்தின் போது ஏற்படும் தோல்விகளை துன்பங்களாக கருதக்கூடாது.

    உலகில் துன்பப்படுபவர்கள் அதிகம் பேர் உள்ளனர். துயரமில்லாதவர்கள் என்று எவருமில்லை. ஆகவே மாணவிகள் துன்பப்படுபவர்களுக்கு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் போல தன்னலம் கருதாமல் சேவைப்பணியாற்ற வேண்டும். தாய் தந்தையரின் கனவுகளை நிறைவேற்ற உழைக்க வேண்டும். உழைப்பின் மூலம் பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றி அவர்களுக்கு பெருமையை தேடித்தர வேண்டும். தமிழகத்தில் மது கலாசாரத்தால் இளைஞர்கள், மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர். மது குடிப்பவர்களின் எண்ணிக்கை 5 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உள்ளது. நாம் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவிடக் கூடாது. தன்னலம் கருதாமல் சமூக மேம்பாட்டிற்காக சேவை செய்பவர்களுக்கு இதுபோன்ற விழாக்கள் கட்டாயம் நடத்தவேண்டும் என்று பேசினார்.

    இதில் கல்வியாளர்கள் ரோவர் வரதராஜன், சீனிவாசரெட்டியார், சிவசுப்ரமணியன், முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், ம.தி.மு.க. அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
    நடப்பு கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
    சென்னை:

    நடப்பு கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. நாளை(புதன்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம்.

    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உயர்கல்வி வளர்ச்சியில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ வேண்டும் எனும் இலக்கினை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு திட்டங்கள் உயர்கல்வி நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு செயலாக்கம் பெற்று வருகின்றன. அரசு கல்லூரிகளில் மாணாக்கர்களின் சேர்க்கை விகிதம் உயர்ந்து கொண்டு வருவதை கருத்தில் கொண்டு 2011-12 ஆம் கல்வியாண்டு முதல் 2017-18 ஆம் கல்வியாண்டு வரை 1232 புதிய பாடப்பிரிவுகள் முன்னாள் முதல்-அமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்டன.

    பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவு மாணவ-மாணவிகள் உயர்கல்வி பெறவேண்டும் என்ற நோக்கிலும், பல்வேறு புதிய பாடப்பிரிவுகள் தோற்றுவிப்பதால் மாணவ-மாணவிகள் அதிகளவில் பாடப்பிரிவுகளை தேர்ந்து எடுப்பதற்கு ஏற்றவாறும் இதனால் வேலைவாய்ப்புகள் அதிகம் பெற ஏதுவாக முதல்-அமைச்சர் கடந்த ஜூன் 1-ந்தேதி அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-இன் கீழ் 2018-19ஆம் கல்வியாண்டில் 264 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் இப்பாடப்பிரிவுகளை கையாளுவதற்கு 683 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் இதற்கென அரசுக்கு தொடரும் செலவினமாக 68 கோடியே 46 லட்சம் ரூபாய் ஏற்படும் என்றும் இப்பாடப் பிரிவுகளின் தேவைக்கென 324 வகுப்பறை கட்டடங்கள், 50 ஆய்வகங்கள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகள் 62 கோடியே 75 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள்.

    மேற்காணும் அறிவிப்பின்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2018-19-ம் கல்வியாண்டிலிருந்து 61 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 75 இளங்கலை, 53 முதுகலை, 65 எம்.பில் மற்றும் 71 பிஎச்.டி. ஆக மொத்தம் 264 புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கும், இப்பாடப்பிரிவுகளை கையாளுவதற்கான 693 உதவிப்பேராசிரியர் பணியிடங்களில் முதலாமாண்டிற்கு 270 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் அதற்கென ரூ.26 கோடியே 39 லட்சத்து 73 ஆயிரத்து 840 நிதி ஒப்பளிப்பு வழங்கியும், தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    மேற்காணும் பாடப்பிரிவுகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் (27-ந்தேதி) அரசாணையில் குறிப்பிடப்பட்ட கல்லூரிகளில் வழங்கப்படும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அந்தந்த கல்லூரிகளில் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 9-ந்தேதி. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 264 பாடப்பிரிவு மற்றும் கல்லூரிகள் அடங்கிய அரசாணையினை தமிழக அரசின் இணையதளத்தில் ( www.tn.gov.in ) உயர்கல்வித் துறையின் கீழ் காணலாம். மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பினை இக்கல்வியாண்டிலிருந்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. #tamilnews
    விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    விருதுநகர்:

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பா.ஜ.க. நிர்வாகிகள் மாவட்ட தலைவர் சோலையப்பன், நகர தலைவர் செந்தில் குமார், சட்டமன்ற தொகுதி அமைப்பாளர்கள் கஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரன் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    நள்ளிச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். சாத்தூர் ஸ்ரீ எஸ்.ராமசாமி நாயுடு நினைவு கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பில் நடந்த விழாவில், கல்லூரியின் தேசிய மாணவர் படை மாணவர்கள் ஆசனங்களை செய்தனர். கல்லூரி முதல்வர் கணேஷ்ராம் தலைமை தாங்கினார். ஏற்பாடுகளை என்.சி.சி. தலைமை அதிகாரி கர்னல் அன்சார் முகமது, என்.சி.சி. பொறுப்பாளர் பாண்டியராஜன் செய்திருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளியில், பள்ளி தாளாளர் குருவலிங்கம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிர்வாக அலுவலர் அழகர்சாமி, பள்ளி முதல்வர் கமலா, துணை முதல்வர் சித்ரா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் தர்மராஜ் செய்திருந்தார்.

    வெம்பக்கோட்டை தாலுகா செவல்பட்டி எஸ்.பி. மாடர்ன் பள்ளியில், பள்ளி தாளாளர் பார்வதி சுந்தரராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இயக்குனர் ஜெயபாரதி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார். மாணவர்கள் பல்வேறு விதமான யோகாசனங்களை செய்து காண்பித்தனர். ஏற்பாடுகளை ஆசிரியை ரமாபிரபா, புஷ்பா, உடற்கல்வி ஆசிரியர் நிக்‌ஷன் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    விருதுநகர் காமராஜ் என்ஜினீயரிங் கல்லூரி நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக அம்பாள் முத்துமணி கலந்து கொண்டு பேசினார். விழாவில் கல்லூரி செயலாளர் மகேஷ்குமார், முதல்வர் ஆனந்த் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    சிவகாசி ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தலைவர் வெங்கடேஷ் பிரசாத் வரவேற்றார். யோகா பயிற்சியாளர் கந்தசாமி மற்றும் பெங்களூரு வாழும் கலை மையத்தின் யோகா பயிற்சியாளர் திவாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு யோகாசனங்களை கற்றுக்கொடுத்தார். பள்ளி தாளாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தலைமை முதல்வர் பாலசுந்தரம், முதல்வர் அம்பிகாதேவி, துணை முதல்வர்கள் ஞானபுஷ்பம், சுதா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி நாயக்கர் மகமை பண்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் மற்றும் ஜே.சி.ஐ. சிவகாசி டைனமிக் நிர்வாகிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். விழாவில் பள்ளியின் தலைவர் சுப்புராஜ் செயலாளர் ரவி, பொருளாளர் ராஜாராம், இணைசெயலாளர்கள் ராஜப்பன், பாலாஜி மற்றும் ஜே.சி.ஐ. சிவகாசி டைனமிக் தலைவர் திருப்பதிராஜ், செயலாளர் ரவீந்திரன் மற்றும் பொருளாளர் கண்ணபிரான் கலந்து கொண்டனர்.

    கத்தியுடன் பஸ்களில் மாணவர்கள் ரகளை செய்ததை அடுத்து கல்லூரிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் நேற்று கலைக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து மாணவர்கள் மோதலில் ஈடுபடாமல் தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத் தனர்.

    பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரி உள்ளிட்ட சென்னை மாநகர் முழுவதும் உள்ள கலைக்கல்லூரி மாணவர்களை கல்லூரி தொடங்கும் முன்னரே போலீசார் கண்காணிக்க தொடங்கினர். மாணவர்கள் மாநகர பஸ்களில் கல்லூரிக்கு செல்லும் வழித் தடங்கள் 200-க்கும் மேல் உள்ளன.

    இந்த வழித்தடங்களில் ‘ரூட் தல’யாக (தலைவன் போல) செயல்படும் மாணவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து அது போன்ற மாணவர்கள் 75 பேரை பிடித்து போலீசார் எச்சரித்தனர். அவர்களது பெற்றோர்களை கடந்த வாரம் நேரில் அழைத்தும் அறிவுரை வழங்கப்பட்டது.

    போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கூடுதல் கமி‌ஷனர்கள் சாரங்கன், ஜெயராம் ஆகியோரது மேற்பார்வையில் இப்பணிகள் முடுக்கி விடப்பட்டன. இருப்பினும் நேற்று கல்லூரி திறக்கப்பட்ட முதல்நாளில் போலீசார் மாணவர்கள் பயணித்த பஸ்களில் கடுமையாக சோதனை செய்தனர்.

    அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பல்வேறு இடங்களில் எல்லை மீறும் வகையில் நடந்து கொண்டனர். போலீசார் எதிர்பார்த்ததை விட மாணவர்களின் அத்துமீறல்கள் அதிகமாக இருந்தன.

    சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே பூக்கடை போலீசார் நடத்திய சோதனையில் பட்டாக்கத்திகளுடன் 4 பேர் பிடிபட்டனர். மணலியை சேர்ந்த மணிகண்டன், காஞ்சீபுரம் மாவட்டம் மாத்தூரை சேர்ந்த ஜெகன், திருவள்ளூர் வெங்கல் பகுதியை சேர்ந்த பிரபாகரன் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் சிக்கினர்.

    இவர்கள் வைத்திருந்த பைகளில் 10 பட்டாக்கத்திகள் இருந்தன. ஒரே அளவில் பளபளவென மின்னிய அந்த 10 பட்டாக்கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    இவர்களில் மணிகண்டன், ஜெகன் ஆகியோர் முன்னாள் மாணவர்கள். பிரபாகரன் ஐ.டி.ஐ. முடித்துள்ளார்.


    சிறுவன் 10-ம் வகுப்பு முடித்துள்ளான். இவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான். மற்ற 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதே போல மெரினா அண்ணாசதுக்கம் பகுதியில் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அண்ணா சதுக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி எழிலகம் அருகே நடத்திய சோதனையின் போது அஜித்குமார், சுமன்ராஜ் ஆகிய 2 மாணவர்கள் பிடிபட்டனர்.

    இவர்களும் ஜெயிலில் தள்ளப்பட்டனர். இவர்களிடமிருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவல்லிக்கேணி பகுதியில் பிடிபட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

    இதற்கிடையே நேற்று காலை கோயம்பேட்டில் இருந்து எம்.கே.பி. நகர் நோக்கி சென்ற 46ஜி மாநகர பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏறி டிக்கெட் எடுக்காமல் ரகளையில் ஈடுபட்டனர். அமிஞ்சிகரை என்.எஸ்.கே. நகர் பகுதியில் பஸ் வந்த போது மாணவர்களிடம் டிக்கெட் எடுக்குமாறு கண்டக்டர் கூறினார்.

    ஆனால் இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். யாரும் டிக்கெட் எடுக்க முன்வரவில்லை. டிக்கெட் எடுக்க மாட்டோம் என்று வாக்குவாதம் செய்தனர்.

    நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு கண்டக்டர் அந்த மாணவர்களை கீழே இறக்கி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவரான கார்த்திகேயன், பொன்னேரி என்.எம்.அரசு கல்லூரி மாணவரான சக்திவேல் இருவரும் சேர்ந்து பஸ் மீது கல்வீசி தாக்கினர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அமிஞ்சிகரை இன்ஸ்பெக்டர் முருகன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். கார்த்திகேயன், சக்திவேல் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 149 மாணவர்கள் பிடிபட்டனர். இவர்களில் 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாணவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

    இந்த நிலையில் சென்னையில் இன்று 2-வது நாளாக கல்லூரிகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மெரினாவில் உள்ள மாநிலக் கல்லூரி முன்பு உதவி கமி‌ஷனர் ஆரோக்கிய பிரகாசம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மாநில கல்லூரியில் படிக்கும் 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இருப்பினும் கல்லூரிக்கு வந்த முதலாம் ஆண்டு மாணவர்களை போலீசார் பலத்த சோதனைக்கு பின்னரே கல்லூரிக்குள் அனுமதித்தனர். #tamilnews

    ×