search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் குப்புசாமி இறந்தார்.
    • பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் சயனைடு கலந்த மதுவை வாங்கி குடித்ததால் இறந்தது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் படைவெட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 68) மீன் வியாபாரி. கீழவாசல் பூமால்ராவுத்தன் கோவில் தெருவை சேர்ந்தவர் விவேக் (36) கார் டிரைவர்.

    இவர்கள் நேற்று மதியம் கீழவாசல் தற்காலிக மீன் மார்க்கெட் எதிரே உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் மது வாங்கி குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் குப்புசாமி இறந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி விவேக் இறந்தார்.

    இவர்கள் இருவரது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் சயனைடு கலந்த மதுவை வாங்கி குடித்ததால் இறந்தது தெரியவந்தது. இவர்கள் ஒருவர் குடித்த மதுவை மற்றொருவர் குடித்ததால் இரண்டு பேரும் பலியாகினர்.

    தற்கொலையா ? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே டாஸ்மாக் பார் உரிமையாளர் செந்தில் நா.பழனிவேல், ஊழியர் காமராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் வேலை பார்த்த மேற்பார்வையாளர் முருகன், விற்பனையாளர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன் உத்தரவிட்டார்.

    • ஈரம் படிந்த கை உடன், டி.வி செட்டாப் பாக்ஸை துடைக்க முயன்றார்.
    • படுகாயம் அடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    காரமடை சாஸ்திரி நகரைச்சேர்ந்தவர் முனியப்பன்(வயது 39).

    இவர் காரமடை காய்கறி மார்க்கெட்டில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது ஈரம் படிந்த கை உடன், டி.வி செட்டாப் பாக்ஸை துடைக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.

    இதில் படுகாயம் அடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முனியப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முனியப்பனுக்கு மகள் உள்பட 2 குழந்தைகள் உள்ளன.

    இவரது மனைவி அமுதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். எனவே முனியப்பன் தனியாக பிள்ளைகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் அவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம், காரமடையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வேலாயுதம்பாளையம் அருகே மணல் சலிக்கும் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலியானார்
    • வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    கரூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 36). சம்பவத்தன்று இவர் கரூர் வேலாயுதம்பாளையம் அருகே நொய்யலில் உள்ள மணல் சலிப்பகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென குமாரசாமி மணல் சலிப்பகம் எந்திரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். பின்னர் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமாரசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார்
    • இதுகுறித்து பாலவிடுதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    தரகம்பட்டி அடுத்த தூளிப்பட்டியை சேர்ந்தவர் சீரங்கன் (வயது 58). கூலி தொழிலாளியான இவர் கோவிலுக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் மகன் தர்மராஜூடன் சென்றார். அப்போது தரகம் பட்டி-மேட்டுப்பட்டி நெடுஞ்சாலையில் அக்கரைப்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் சீரங்கன், தர்மராஜ் சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களை பரிசோதித்த டாக்டர்கள் சீரங்கன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த தர்மராஜ் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து பாலவிடுதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிழக்கு கடற்கரை சாலையில் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, நாடியம்மன்கோவில் சாலை காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது58), இவரது மனைவி ஜெயலட்சுமி (43), கூலி தொழிலாளர்கள்.

    இந்நிலை யில், நேற்று சேதுபாவா சத்திரத்தில் இருந்து கட்டுமாவடி நோக்கி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், கழுமங்குடா சந்திப்பு பகுதியில் கோபால், ஜெயலட்சுமி இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    இது குறித்து சேதுபாவா சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • படுகாயம் அடைந்த கவுதமை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் கவுதம் (வயது 21). கல்லூரி மாணவர்.

    சம்பவத்தன்று இவர் தனது நண்பரான விஷ்ணு (21) என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார்.மோட்டார் சைக்கிளை விஷ்ணு அதிவேகமாக ஓட்டிச் சென்றார். மோட்டார் சைக்கிள் கோவை - அவினாசி ரோட்டில் சென்ற போது விஷ்ணு ரோட்டின் நடுவே இருந்த வேகத்தடையை கவனிக்காமல் சென்றார்.

    அப்போது பின்னால் அமர்ந்து இருந்த கவுதம் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே கவுதம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அன்னூர் அருகே உள்ள புகலூரை சேர்ந்தவர் கந்தசாமி (69). டிரைவரான இவர் லாரியை ஓட்டிச் சென்று டிராக்டர் மீது மோதினார்.இதில் படுகாயம் அடைந்த கந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாலக்காட்டை சேர்ந்தவர் பாபு (40). சம்பவத்தன்று இவர் வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற மொபட் பாபு மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • சம்பவம் காணிமடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமத்தை அடுத்த காணிமடம் பகுதியில் ஏராளமான தொழிலாளிகள் வசித்து வருகிறார்கள்.

    இன்று காலை தொழிலாளிகள் சிலர் காணிமடம் பகுதியில் நடந்து சென்றனர். அப்போது சாலையின் ஓரம் வாலிபர் ஒருவர் தலை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரை சுற்றி ரத்தம் உறைந்து கிடந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளிகள் இதுபற்றி அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இறந்து கிடந்த வாலிபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபர் காணிமடம் பகுதியை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவரின் மகன் பிரகாஷ் (வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது வீட்டிற்கு சென்று விசாரித்தனர்.

    இதில் பிரகாஷ் நேற்றிரவு நண்பரின் இருச்சக்கர வாகனத்தை வாங்கி கொண்டு வெளியே சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள காண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பிரகாஷ், நண்பரின் இரு சக்கர வாகனத்தில் காணி மடம் சாலையில் வேகமாக செல்லும் போது விபத்தில் சிக்கி பலியாகி இருக்கலாம் என தெரிகிறது.

    இருச்சக்கர வாகனம், சாலையின் சென்டர் மீடியனில் மோதி அவரது தலை துண்டாகி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காணிமடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அமராவதி ஆற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்
    • மீன்பிடித்து கொண்டிருந்த போது சம்பவம்

    கரூர்

    கரூர் வாஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நேரு (வயது 58). கூலி தொழிலாளி. இவர் அமராவதி ஆற்றங்கரையில் நின்று மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது கால் தவறி ஆற்றில் விழுந்த நேரு தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நேருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்லையா அங்குள்ள குளத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.
    • சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று செல்லையா உடலை மீட்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் பெரியகுளத்தில் கருமடையூர் கிராமத்தை சேர்ந்த செல்லையா (வயது80). இவர் இயற்கை உபாதை கழிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்குள்ள குளத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    இது குறித்து பொதுமக்கள் பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்து
    • வழக்கு பதிந்து போலீசார் லாரி டிரைவரை கைது செய்துள்ளனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சிறுகுடல் கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார் (வயது 37). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு சுகுமார் பேரளி கிராமத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். க.எறையூர் பிரிவு பாதை அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி டிரைவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த நல்லுசாமியை (37) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வெப்பம் காரணமாக மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது.
    • விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் கடற்கரை. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஊராம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. 20-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த ஆலையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதே பகுதியை சேர்ந்த இருளாயி (வயது48), குமரேசன்(30), அய்யம்மாள்(54), சுந்தர்ராஜ்(27) ஆகியோர் ஒரு அறையில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது வெப்பம் காரணமாக மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவி பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கியது. இதில் 2 அறைகள் தரைமட்டமானது. விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

    தொடர்ந்து பட்டாசு விபத்தில் உடல் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிறிது நேரத்திலேயே 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் உள்ள 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து தொடர்பாக மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு கடையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் செந்தில்குமார் என்பவர் பலியானது குறிப்பிடத்தக்கது. சிவகாசி பகுதியில் தொடர்ந்து அடுத்தடுத்து பட்டாசு வெடி விபத்துக்கள் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
    • வச்சக்காரபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள பூலாவூரணியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் சிவகாசியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது 2-வது மகன் மகேந்திரன்(வயது34), தந்தைக்கு வியாபாரத்தில் உதவியாக இருந்து வந்தார். நேற்று வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் மகேந்திரன் கடைக்கு வந்து கொண்டிருந்தார். சிவகாசி-விளாம்பட்டி ரோட்டில் வந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த மகேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டியை சேர்ந்தவர் தெய்வக்கனி(வயது45). பட்டாசு தொழிலாளியான இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். அப்போது திடீரென தெய்வக்கனி மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தெய்வக்கனி இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி சங்கரேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×