search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96359"

    குன்னம் பகுதிகளில் பலத்த மழை பெய்த போது மின்னல் தாக்கியதில் விவசாயி பரிதாமாக இறந்தார். மேலும் பசுமாடு, 12 ஆடுகள் செத்தன.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன் அறிவழகன் (வயது 40). விவசாயி. இவர் அப்பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதையடுத்து மழைக்காக அவர் அருகில் உள்ள மரத்தடியில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் அறிவழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அறிவழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் அணைப்பாடி கிராமத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவர் தனது ஆடுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் 12 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது. இதுகுறித்து மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாடாலூரை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி வெள்ளையம்மாள். இவர் நேற்று தனது பசுமாட்டை பாடாலூர் கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள மரத்தடியில் கட்டியிருந்தார். இந்நிலையில் அப்பகுதியில் மதியம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பசுமாடு இறந்தது. இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    விவசாயிகளுக்கு ஆதரவாக பாரதீய கிசான் யூனியன் விவசாயிகள் சங்கத்தின் மற்றொரு பிரிவு விவசாயிகள் தலைநகரில் உள்ள ஜந்தர்மந்தர் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். #Farmer #Protest #Delhi
    புதுடெல்லி:

    விவசாயிகளுக்கு பென்சன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் இருந்து பாரதீய கிசான் யூனியன் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த திரளான விவசாயிகள் அதன்தலைவர் நரேஷ்திகாயத் தலைமையில் தடையை மீறி டெல்லியில் நுழைந்து கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.



    அந்த அமைப்பை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தை முடித்துக்கொண்டு நேற்று டெல்லியை விட்டு வெளியேறினர். இதுபற்றி அந்த சங்கத்தை சேர்ந்த ராகேஷ் சிங் திகாத் கூறுகையில் விவசாயிகள் போராட்டம் வெற்றி அடைந்ததாகவும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வீடுகளுக்கு திரும்பி விட்டதாகவும் கூறினார்.

    இதற்கிடையே பாரதீய கிசான் யூனியன் விவசாயிகள் சங்கத்தின் மற்றொரு பிரிவு விவசாயிகள் மதுரா, உத்தரபிரதேசத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் நேற்று மதியம் நொய்டா வழியாக டெல்லி வந்தனர். பின்னர் அவர்கள் தலைநகரில் உள்ள ஜந்தர்மந்தர் திடலில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அங்கு 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். #Farmer #Protest #Delhi
    கோபி அருகே பணியில் இருந்து நிறுத்தப்பட்ட ஆத்திரத்தில் விவசாயியை இரும்பு கம்பியால் தாக்கிய பூசாரியை போலீசார் கைது செய்தனர்.
    கோபி:

    கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்தார்.

    திடீரென அவர் பணியில் இருந்து நிறுத்தப்பட்டார். இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி லோகநாதனின் வீட்டருகே வசிக்கும் விவசாயியான ஈஸ்வரமூர்த்தி (வயது 57) என்பவர் அந்த பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது லோகநாதன் அங்கு வந்தார். அவர் ஈஸ்வரமூர்த்தியிடம் தகராறில் ஈடுபட்டார். ‘‘உன்னால்தான் எனது வேலை போனது. இப்போது வருமானம் இல்லாமல் இருக்கிறேன்’’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.

    பின்னர் ஈஸ்வரமூர்த்தியை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ. 500 பணத்தை பறித்தார். மேலும் அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து ஈஸ்வரமூர்த்தியை தாக்கினார்.

    இது குறித்து கோபி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதனை கைது செய்தனர்.

    பின்னர் அவர் கோபி முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி பாரதி பிரபா உத்தரவிட்டார். இதையடுத்து லோகநாதன் கோபி ஜெயிலில் அடைக்கப்பட்டார். #tamilnews
    கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராமல் பயிர்கள் கருகியதால் நாகை விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் நாகை மாவட்ட விவசாயிகளை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
    நாகப்பட்டினம்:

    கர்நாடக மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    பின்னர் அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் இன்று வரை தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடைமடை வரை செல்லவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே விவசாயிகள் மறியல், ஆர்ப்பாட்டம் என நடத்தி வருகின்றனர்.

    கடைமடை பகுதியில் உள்ள வாய்க்கால், ஏரி- குளங்களை தூர் வாராததால் சம்பா பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. காவிரியில் வெள்ளம் வந்தும் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. வறட்சி காலத்தை போல பம்புசெட் மூலம் தான் சம்பா சாகுபடி செய்ய வேண்டியது உள்ளது என்று விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியில் பிடியில் சிக்கிய விவசாயிகள் தற்கொலை செய்த சம்பவம் டெல்டா மாவட்டங்களில் அதிகமாக நடந்தது.

    தற்போது மேட்டூர் அணை 4 முறை நிரம்பியும் நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயி ஒருவர் தற்கொலை செய்தது விவசாயிகளிடையே மீண்டும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    நாகை மாவட்டம் கீழையூர் அருகே தலையாமழை பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி(வயது48). விவசாயியான இவர் குத்தகைக்கு நிலம் எடுத்து நெல் சாகுபடி செய்து வந்தார்.

    இந்தநிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதியான தலையாமழை பகுதிக்கு வந்து சேரவில்லை. இதனால் நெற்பயிர்கள் கருகின. இந்தநிலையில் கருகிய நெற்பயிர்களை கண்டு மனமுடைந்த ராமமூர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன் வி‌ஷத்தை குடித்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமமூர்த்தி இறந்தார்.

    கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராமல் பயிர்கள் கருகியதால் நாகை விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் நாகை மாவட்ட விவசாயிகளை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    தற்கொலை செய்த ராமமூர்த்திக்கு, ரேவதி என்ற மனைவியும் கருணாகரன், கதிர்வேல் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
    மானாமதுரை அருகே மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைதுசெய்யப்பட்டார்.
    மானாமதுரை:

    மானாமதுரை அருகே ராஜகம்பீரம், முத்தனேந்தல் உள்ளிட்ட கிராமங்கள் விவசாயம் அதிகம் நடைபெறும் பகுதியாகும். மேலும் இங்கு அதிக எண்ணிக்கையில் மயில்கள் உள்ளன. இந்தநிலையில் ராஜகம்பீரம் பகுதியில் மயில்கள் மர்மமான முறையில் இறந்துகிடந்தன. இதனை பார்த்த விவசாயிகள் சிலர் சந்தேகத்தின்பேரில் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது 7 மயில்கள் விஷத்தை தின்று இறந்துகிடப்பதை பார்த்தனர்.

    இதனையடுத்து வனத்துறையினர் கொடுத்த தகவலின்பேரில் மானாமதுரை போலீசார் நடத்திய விசாரணையில் ராஜகம்பீரத்தை சேர்ந்த விவசாயி சந்திரன்(வயது 50) என்பவர் விஷம் வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைதுசெய்தனர்.

    கைதுசெய்யப்பட்ட சந்திரன் போலீஸ் விசாரணையில் கூறும்போது, ராஜகம்பீரத்தில் குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்து வருகிறேன். ஆனால் பயிர்களை மயில்கள் சேதப்படுத்தி வந்தன. இது தொடர்கதையாகி வந்ததால் நெல்லில் குருணை மருந்தை வைத்தேன். பின்னர் அதனை தின்ற மயில்கள் இறந்துபோனதாக தெரிவித்தார்.

    மானாமதுரை பகுதியில் சமீப காலமாக மயில்கள் மர்மமான முறையில் இறந்துபோகும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட வனத்துறையினரும், போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
    விவசாயிகளுக்கு குறுகியகால பயிர்க்கடனை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கிளையின் பேரவை கூட்டம் எளம்பலூர் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட தலைவரும், மண்டல இணைச்செயலாளருமான கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். டெல்டா மண்டலத்தின் செயலாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் அன்பழகன் உறுதிமொழி வாசித்தார். மாவட்ட பொருளாளர் கோவிந்தசாமி நிதிநிலை குறித்தும், இணைச்செயலாளர் திருமுருகன் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் அறிக்கை வாசித்தனர். மாநில நிர்வாகிகளான பொதுச்செயலாளர் முத்துப்பாண்டியன், பொருளாளர் சேகர், துணைத்தலைவர்கள் சங்கரன், துரைக்கண்ணு ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.

    கூட்டத்தில், விவசாய கடன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் எவ்வித ஆவணமும் கேட்காமல் ரூ.2 லட்சம் வரை விவசாய நகைக்கடன் வழங்க அனுமதிக்க வேண்டும். விவசாய கடன்களுக்கு உரம் வழங்கிட மத்திய கூட்டுறவு வங்கிகளால் கட்டாயப்படுத்துதல் கைவிடப்பட வேண்டும். சொசைட்டி உறுப்பினர்களுக்கு குறுகியகால பயிர்க்கடன் அடமானம் பெறாமல் தனிநபர் ஜாமீன் பேரில் ரூ.1 லட்சம் வரை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. இதனை ரூ.2 லட்சமாகவும், தொடர் அடமானத்தின் பேரில் வழங்கப்படும் கடன் தொகையை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க மாநில அரசு அனுமதிக்க வேண்டும். உர விற்பனையை ஆரம்ப கால நடைமுறைப்படி வினியோகம் செய்திட அனுமதிக்க வேண்டும் அல்லது உர விற்பனையில் ஏற்படும் நஷ்டத்தை முழுமையாக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ஏற்படுகிற காலி பணியிடங்களால் பல சங்கங்கள் செயல்படாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆகவே சங்கங்களில் ஏற்படும் காலி பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பிட ஏதுவாக சங்க தலைவருக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். நகை கடனுக்கு 3 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வட்டி வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை மாநில அரசு தீவிரமாக பரிசீலனைக்கு ஏற்று உரிய நடவடிக்கை எடுத்து கூட்டுறவு கடன் சங்கங்களை பாதுகாக்க வேண்டும் இந்த விஷயத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்று (திங்கட்கிழமை) கடன் வழங்கும் பணியை பெரம்பலூர் மாவட்டத்தில் முற்றிலும் புறக்கணிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட துணைத்தலைவர் பழனிசாமி நன்றி கூறினார். 
    நரிக்குடி வட்டாரத்தில் வேளாண்மைத்துறையில் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ், நுண்ணீர் பாசன பராமரிப்பு முறைகள் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற்றது.

    பாலையம்பட்டி:

    நரிக்குடி மற்றும் ராஜபாளையம் வட்டாரத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வெளி மாநில விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    மண்ணில்லாமல் தென்னை நார் கழிவினை மக்கவைத்து, சொட்டு நீர், தெளிப்பு நீர், மழைதூவுவான் முறையில் நீர்ப்பாசனம் செய்து ஜி-9 திசுவாழை மற்றும் காய்கறிபயிர்கள் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வளர்க்கும் முறை விவரிக்கப்பட்டது.

    மேலும் மலைப்பகுதிகளில் பண்ணை குட்டைகள் அமைத்து நெல்லி, மஞ்சள், மா, மாதுளை, ஆரஞ்சு, பழவகைகள்அடர்நடவு முறையில் அமைத்து பராமரிப்பு செய்யப்பட்டு வருவதை நரிக்குடி, ராஜபாளையம் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் வெளி மாநிலமான மராட்டியத்துக்கு பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர்.

    அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு கிரீடு வேளாண் அறிவியல் மையமும், நபார்டு வங்கியும் இணைந்து பருவநிலை மாற்றம் குறித்தும், வேளாண்மை குறித்தும் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு கிரீடு வேளாண் அறிவியல் மையமும், நபார்டு வங்கியும் இணைந்து பருவநிலை மாற்றம் குறித்தும், வேளாண்மை குறித்தும் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் இளஞ்சேரன் தலைமை தாங்கினார்.

    வேளாண் அறிவியல் மையத்தின் தலைவரும், மூத்த விஞ்ஞானியுமான அழகுகண்ணன் வரவேற்றார். முகாமில் நபார்டு வங்கி மேலாளர் நவீன்குமார், தோட்டக்கலை உதவி இயக்குனர் சரண்யா, தனியார் தொண்டு நிறுவன அலுவலர்கள் ஸ்ரீதேவி மற்றும் நெடுஞ்செழியன் ஆகியோர் பேசினர். விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் ராஜாஜோஸ்லின், வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுனர் ராஜ்கலா மற்றும் கால்நடை அறிவியல் தொழில்நுட்ப வல்லுனர் கிருத்திகா ஆகியோர் தங்கள் துறை சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து பேசினர்.

    மேலும் இம்முகாமில் நுண்ணீர் பாசனம் பற்றிய செயல்விளக்கத்தை மைய பண்ணை மேலாளர் திருமலைவாசன் செய்து காட்டினார். சொட்டுநீர் பாசன உபகரணங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. முகாமில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். முடிவில் மைய பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுனர் அசோக்குமார் நன்றி கூறினார். 
    கரூரில் சாயக்கழிவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமை தாங்கி, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது சின்னதேவன்பட்டியை சேர்ந்த விவசாயி தங்கவேல் பேசுகையில், நெல்லுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதாரவிலை போதுமானதாக இல்லை. களை எடுப்பது, மருந்து தெளிப்பது என நெல் சாகுபடிக்கு செலவு அதிகம் ஆகிறது. எனவே நெல் கொள்முதல் விலையினை குவிண்டாலுக்கு ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வாழ்க்கை முழுவதும் உழைத்து கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கிட வேண்டும். காவிரியில் உபரியாக செல்லும் நீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க வேண்டும். இதற்காக குழாய் மூலம் நீரை கொண்டு வந்து கடவூர் பகுதியிலுள்ள ஏரி, குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் விவசாயம் செழிப்பதோடு, குடிநீர் பிரச்சினையும் எளிதில் தீர்ந்துவிடும் என்று கூறினார்.

    நெரூர் ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் கருமலை பேசுகையில், கடம்பங்குறிச்சியில் இருந்து நன்னியூர் வழியாக செல்லும் ராஜவாய்க்காலில் தண்ணீரை தேக்கி வைக்கும் மதகு உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் காவிரி ஆற்று உபரிநீர் ராஜவாய்க்காலில் அதிகளவு வந்ததால், இந்த மதகுக்கு முன்புறமாக ஆங்காங்கே போடப்பட்ட சிறிய தடுப்பணைகள் உடைந்து சேதமடைந்து விட்டது. அதனை சரி செய்து தர வேண்டும். மேலும் காவிரி ஆறு, நெரூர் வாய்க்காலின் கரைகளில் ஆயில் என்ஜின் மூலம் சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    கரூரை சேர்ந்த விவசாயி சண்முகம் பேசுகையில், கரூர் அமராவதி ஆற்றங்கரையோரமாக கொட்டப்படும் கழிவுகளை அகற்றி தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் கழிவுநீரை ஆற்றுக்குள் திறந்து விடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயம்பள்ளி வாய்க்காலை தூர்வாராத காரணத்தினால் அப்பகுதியில் தண்ணீர் செல்ல முடிவதில்லை. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமாநிலையூர் வாய்க்கால் உள்ளிட்டவை தூர்வாரப்படவில்லை. தாந்தோன்றிமலை ராஜவாய்க்காலை 30 ஆண்டுகளாக காணவில்லை. தூர்ந்து போய் விட்டது என்று கூறினார். உடனே எழுந்த பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், என்னுடன் வாருங்கள் தூர்வாரிய இடத்தையெல்லாம் காண்பிக்கிறேன் என கூறி அந்த குற்றசாட்டை மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கரூர் மாவட்ட நிலத்தடிநீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்க செயலாளர் ராமலிங்கம் பேசுகையில், கரூரில் சாயக்கழிவினால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கக்கோரி கடந்த 2003-2004-ம் ஆண்டில் சென்னையிலுள்ள இழப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் நீண்ட நாட்களாகியும் அந்த இழப்பீட்டு தொகை இன்னும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. அதனை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் செப்டம்பரில் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் போராட்டம் நடத்தப்படும். சணப்பிரட்டி பகுதியில் உள்ள குடிநீர் கிணறு சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது. அந்த கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார் உள்ளிட்டவை சேதமடைந்து, ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் அது சீர் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் தண்ணீர் பிரச்சினையால் அவதியடைகின்றனர். எனவே அந்த குடிநீர் கிணற்றை சீர் செய்ய வேண்டும் என்று கூறினார்.

    மேலும் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். அமராவதி, காவிரி ஆற்றங்கரையோரமாக இயங்கும் சாயப்பட்டறைகளில் அடிக்கடி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு சட்டவிரோதமாக ஆற்றில் சாயக்கழிவு திறந்து விடப்படுகிறதா? என்பதை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நரிக்காட்டுவலசு ராஜமாணிக்கம், ஆண்டிப்பாளையம் நல்லுசாமி, கீழவெளியூர் ராஜூ உள்பட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் பேசினர். முடிவில் இந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் பதில் கூறினார். இந்த கூட்டத்தில் வேளாண்மைதுறை இணை இயக்குனர் ஜெயந்தி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    விவசாயிகளுக்கு விரைவில் பயிர் காப்பீடு தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசியதும், அதற்கு கலெக்டர் அளித்த பதில்களும் விவரம் வருமாறு:-

    விவசாயி சக்கரபாணி:- பெரியசெவலை கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்காமல் பாக்கி வைத்துள்ளனர். அதை உடனே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    கலெக்டர்: விரைவில் நிலுவைத்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

    விவசாயி பிரபாகரன்:- திருப்பாச்சனூரில் இருந்து தளவானூர் வரை மலட்டாறு, நரியாறு பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து நிலமாக்கி விட்டனர். இந்த ஆறுகள் 75 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. ஆனால் ஆக்கிரமிப்பு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக ஆற்றில் தண்ணீர் வருவதில்லை. இதனால் குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும்.

    கலெக்டர்: ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    விவசாயி நாராயணன்:- அகலூர் ஏரியின் மதகு சேதமடைந்து பல மாதங்கள் ஆகிறது. இன்னும் அதை சீரமைக்கவில்லை. அதுபோல் ஏரிக்கு நீர்வரத்து வரக்கூடிய வாய்க்கால்களும் தூர்ந்து போயுள்ளது. அந்த வாய்க்காலை தூர்வார வேண்டும். காய்ந்துபோன கரும்பு பயிர்களுக்கு காப்பீடு தொகை கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கலெக்டர்: ஏரி மதகை சீரமைக்கவும், நீர்வரத்து வாய்க்காலை தூர்வாரவும் பொதுப்பணித்துறையினர் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். காய்ந்துபோன கரும்பு பயிர்களுக்கு காப்பீட்டு தொகை கிடைக்கவும் விரைவில் ஏற்பாடு செய்யப்படும்.

    விவசாயி ஸ்டாலின்மணி:- துத்தனந்தல் அணைக்கட்டுக்கு நீர்வரத்து வரக்கூடிய வாய்க்கால்கள் தூர்ந்து போயுள்ளது. அதை உடனடியாக தூர்வாரினால் வரக்கூடிய பருவமழை காலத்தில் விவசாயிகளுக்கு நீர்பாசனம் கிடைக்கும். திருக்கோவிலூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை, கரும்புக்குரிய நிலுவைத்தொகையை வழங்காமல் பாக்கி வைத்துள்ளது. அதை உடனே பெற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும்.

    கலெக்டர்: நீர்வரத்து வாய்க்கால் விரைவில் தூர்வாரப்படும். கரும்பு நிலுவைத்தொகையை ஆலை நிர்வாகத்திடம் பேசி விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

    விவசாயி மோகன்குமார்:- கடந்த 2016-ல் நெல், மணிலா, உளுந்து பயிர்களுக்கு காப்பீடு செய்தும் இதுநாள் வரை காப்பீட்டு தொகை வந்து சேரவில்லை.

    கலெக்டர்:- நமது மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு தொகை நெல்லுக்கு ரூ.53 கோடி ஒப்புதல் ஆகியுள்ளதில் விவசாயிகளுக்கு ரூ.45 கோடி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 8 கோடி ரூபாய் வர வேண்டியுள்ளது. உளுந்துக்கு ரூ.41 கோடி ஒப்புதல் ஆனதில் ரூ.33 கோடி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 8 கோடி ரூபாய் வர வேண்டியுள்ளது. மணிலாவிற்கு ரூ.1½ கோடி ஒப்புதல் ஆகியுள்ளது. அந்த தொகை இன்னும் வரவில்லை. இந்த தொகைகள் கூடிய விரைவில் வந்ததும் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க ஏற்பாடு செய்யப்படும்.

    விவசாயி ரவிச்சந்திரன்:- சங்கராபுரத்தில் இருந்து பாவந்தூருக்கு அரசு பஸ்கள் தடம் எண் 7, 8 கடந்த சில மாதங்களாக சரிவர வருவதில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளும், விவசாயிகளும் அவதிப்படுகின்றனர். எனவே அரசு பஸ்கள் தடையின்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கலெக்டர்: விரைவில் ஏற்பாடு செய்யப்படும்.

    விவசாயி ஏழுமலை:- பிரம்மதேசம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில்லை. விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர். புதுக்குப்பம் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை உள்ளது. அந்த பிரச்சினையை போக்க வேண்டும். எண்டியூரில் கால்நடை மருத்துவர் 1 மணி நேரம் மட்டுமே பணியில் உள்ளார். கூடுதல் நேரம் அவர் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கலெக்டர்: தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளை அலைக்கழிக்காமல் உடனுக்குடன் கடன் வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். சட்டவிரோதமாக மோட்டார் மூலம் குடிநீர் எடுப்பதால்தான் பல இடங்களில் தண்ணீர் பிரச்சினை ஏற்படும். எனவே மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எண்டியூரில் கால்நடை மருத்துவர் கூடுதல் நேரம் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    விவசாயி வேலாயுதம்:- கரடிசித்தூர் கிராமத்தில் அரசு பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் வசதி செய்து கொடுக்க வேண்டும். கலெக்டர்: விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, வேளாண் இணை இயக்குனர் சண்முகம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சண்முகம், முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன், மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் மலர்விழி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கருணாநிதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    எதற்கு சம்பளம் பெறுகிறோம் என உணர்ந்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் உதவ வேண்டும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) சார்பில் விவசாயிகள் மற்றும் விதை நெல் உற்பத்தியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் வேளாண்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

    வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். இயக்குநர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். பஜன்கோ முதல்வர் கந்தசாமி, வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் வசந்தகுமார், காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ரத்தினசபாபதி, கூடுதல் வேளாண் இயக்குனர் கார்த்திகேயன் மற்றும் விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் விதை உற்பத்தியாளர் சங்க பொதுச்செயலாளர் ராமமூர்த்தி பேசும்போது, விதை நெல் உற்பத்திக்கு பீடர் மற்றும் ஆதார விதையினை காலத்தோடு வழங்க வேண்டும். பாகூர் மற்றும் கரியமாணியத்தில் உள்ள சான்று விதை சுத்திகரிப்பு நிலையங்களை சரி செய்து கொடுக்க வேண்டும். 5 ஆண்டுகளாக மானிய விலையில் வழங்கப்படாமல் உள்ள சில்ப்பாலின், ஷேர்நெட், நர்சரி ட்ரே மற்றும் கோனாவீடர் உடனடியாக வழங்க வேண்டும்.

    காரைக்கால் விவசாயி கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, விவசாயிகள் உற்பத்தி செய்து கொடுக்கும் நெல்லுக்கு காலதாமதமாக பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. ஒரு சாக்கு மூட்டை பாசிக் மூலம் ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சாக்கு மூட்டை தனியாரில் ரூ.35க்கு தரமாகவே கிடைக்கிறது. ஏன் அதிக விலையில் விற்கிறீர்கள்? விவசாயிகளின் கஷ்டங்களை அரசு உணர்ந்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.

    அமைச்சர் கமலக்கண்ணன் விவசாயிகளுக்கு பதில் அளித்து பேசியதாவது:-

    புதுவையில் ஆரம் பிக்கப்பட்ட பாசிக், பாப்ஸ்கோ நிறுவனங்கள் முதலில் விவசாயிகளுக்கு இடுபொருள் கொடுப்பது, உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த உதவ தொடங்கப்பட்டது.

    ஆனால், இதனை யாரும் செய்யவில்லை. இதற்கு முன் இருந்தவர்களும் அக்கறை செலுத்தவில்லை. இப்போது உள்ளவர்களும் அக்கறை செலுத்த போவதில்லை. வருங்காலத்திலும் அக்கறை காட்ட போவதில்லை. நிம்மதியாக இருந்த விவசாயிகளிடம் அதிகாரிகள்தான் தொழில்நுட்பத்தை கொடுத்தனர்.

    அதன் அடிப்படையில் விவசாயிகள் உற்பத்தி செய்த பிறகு திரும்பி கூட பார்ப்பதில்லை. நான் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு வேளாண்துறை சம்பந்தமான உரம், பூச்சி மருந்து, நெல் எடுத்தல் ஆகியவற்றுக்கு உடனே பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்.

    இல்லையென்றால் அதிகாரிகளுக்கு சம்பளம் போடும் கோப்புக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என கூறியுள்ளேன். விவசாயிகள் கூறும் பல வி‌ஷயங்களில் எனக்கும் ஆதங்கம் உள்ளது. இயக்குனர், அதிகாரிகளிடம் என்னுடைய பாணியில் தெரிவித்தேன். அவர்கள் என்னை விட்டுவிடுங்கள் வேறு துறைக்கு போய்விடுகிறோம் என்கிறார்கள்.

    அவர்களாக விரும்பி கடிதம் கொடுக்கும்வரை விடமுடியாது. வேளாண்துறைக்கு வந்து பணியாற்றும் அதிகாரிகள் எதற்காக சம்பளம் வாங்குகிறோம் என்பதை மனதில் வைத்து விவசாயிகளுக்கு பணியாற்ற வேண்டும்.

    விவசாயிகளின் வரி பணத்தில் இருந்துதான் அவர்களுக்கு மானியம் கொடுக்கப்படுகிறது. இதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இந்தாண்டு விதை நெல் தொடர்பான வி‌ஷயங்கள் சரியாக நடைபெறவில்லை என்றால், விவசாயிகள் கூறும் குறைகளை கோப்பில் எழுதி அனுப்ப முடிவு செய்துள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருவோணம் அருகே கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

    திருவோணம்:

    திருவோணம் வட்டார விவசாய நலச்சங்கம் சார்பில் ஊரணிபுரம், திருவோணம், பேராவூரணி, கடைமடை பகுதிவரை பாசன வாய்க்கால் ஏரி, குளங்களை தூர்வாராததால் தண்ணீர் பாசனத்திற்கு வராததை கண்டித்து ஊரணிபுரம் கடை வீதியில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    சங்க ஒன்றிய செயலாளர் சின்னதுரை தலைமை தங்கினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பட்டுக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், ஒரத்தநாடு டி.எஸ்.பி. நாகராஜன், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், திருவோணம் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலை கைவிடும் படி கூறினர். மேலும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தீர்வுகாணும்படி கேட்டுக் கொண்டனர்.

    இதைதொடர்ந்து பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் அன்பரசன், உதவி பொறியாளர்கள் மதியழகன், திருவேணி, ஒரத்தநாடு தாசில்தார் ரமேஷ் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது திருவோணம் பகுதியில் உள்ள அனைத்து வாய்க்கால்களையும் முழுமையாக தூர்வாரி கடைமடை வரை பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.

    ×