search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97582"

    • திருக்கல்யாணம், சஹஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டது.
    • வசந்தோற்சவம் கோலாகலமாகத் தொடங்கியது.

    வசந்த காலத்தில் சூரியன் பிரகாசமாக இருக்கும். சூரியக் கதிர்களின் வெப்பத்தால் உயிர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றன. உலக அன்னையான மற்றும் பூமிதேவியின் அம்சமான திருச்சானூர் பத்மாவதி தாயாரை வழிபடுவதால் உடல் மற்றும் மன உபாதைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சூரிய வெப்பத்தில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக பத்மாவதி தாயாருக்கு ஆண்டு தோறும் வசந்தோற்சவம் நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான வசந்தோற்சவம் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கோலாகலமாகத் தொடங்கியது. முதல் நாளான நேற்று அதிகாலை சுப்ரபாதத்தில் தாயாரை துயிலெழுப்பி சஹஸ்ர நாமார்ச்சனை, மதியம் 2.30 மணிக்கு கோவிலில் இருந்து சுக்கிர வார தோட்டத்துக்கு உற்சவர் பத்மாவதி தாயாரை மேள தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

    அங்கு மதியம் 2.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்து, பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மாலை அன்னமாச்சாரியார் திட்டத்தின் கீழ் ஆன்மிக இசை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 7.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வசந்தோற்சவத்தையொட்டி நேற்று கோவிலில் நடக்க இருந்த திருக்கல்யாணம், சஹஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டது. வசந்தோற்சவத்தின் 2-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) கோவிலின் நான்கு மாடவீதிகளில் தங்கத்தேரோட்டம் நடக்கிறது.

    • நீண்ட நேரமாகியும் மழை விடாததால் தேரோட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
    • நாளை பூப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறுகிறது.

    திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 12 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டிற்கான விழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் காலை மற்றும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. 6-ம் திருநாள் அன்று ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் வைபவமும், இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சியும், 7-ம் திருநாள் அன்று மாலை சூர்ணாபிஷேகம் மற்றும் தங்கதோளுக்கினியானில் சுவாமி புறப்பாடும் நடந்தது. 8-ம் திருநாள் அன்று இரவு சுவாமி குதிரை வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    10-ம் திருநாளான நேற்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். மாலையில் திரளான பக்தர்கள் கொட்டும் மழையிலும் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. ஆனால் 5.25 மணிக்கு மேல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நீண்ட நேரமாகியும் மழை விடாததால் தேரோட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் இன்று மீண்டும் தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக வந்து நிலையை அடைய உள்ளது.

    நாளை இரவு ஸ்ரீதேவி, பூதேவியுடன் மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் மற்றும் கோவில் கண்காணிப்பாளர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தேரோட்டத்தை தொடர்ந்து பகல் 11 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    • 9 மணிக்கு சுவாமி திருவீதி உலா மற்றும் சப்தவர்ணம் நிகழ்ச்சியும் நடைபெறு கிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தின் குருவாயூர் என அழைக்கப்படுவது நாகர்கோவில், கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ணசுவாமி கோவில். இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரி சையாக கொண்டாடப்படு வது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா, கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு தினமும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள், வீதி உலா நடைபெற்று வந்தன. மாலையில் சமய சொற்பொழிவுகள், இன்னிசை விருதுகள் போன்றவையும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை விமரிசையாக நடைபெற்றது. காலையில் சிறப்பு ஆராதனைக்கு பிறகு சுவாமி, தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    தேரோட்டத்தை தொடர்ந்து பகல் 11 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு நாதஸ்வரம் நிகழ்ச்சியும், இரவு 8.30 மணிக்கு இன்னிசை விருந்து நிகழ்ச்சியும், 9 மணிக்கு சுவாமி திருவீதி உலா மற்றும் சப்தவர்ணம் நிகழ்ச்சியும் நடைபெறு கிறது.

    நாளை (வெள்ளிக் கிழமை) 10-ம் நாள் திருவிழா நடைபெறு கிறது. காலை 11 மணிக்கு அன்னதானம் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுவாமி ஆராட்டுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், சிறப்பு பஞ்சாரி மேளம் நிகழ்ச்சியும் நடக்கிறது. அதன்பிறகு மாலை 5 மணிக்கு அலங்கார குதிரை பவனி நிகழ்ச்சி, விளக்கு ஆட்டம், அன்ன ஆட்டம் ஆகியவை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சுவாமி ஊர்வலம் நடைபெறுகிறது. பின்னர் இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. 

    • இந்த கோவில் தேர் தமிழகத்திலேயே 3-வது பெரிய தேர் என்ற சிறப்புக்குரியதாகும்.
    • இந்த தேர், அலங்காரத்துடன் 110 அடி உயரமும், 30 அடி விட்டமும், 400 டன் எடை கொண்டது.

    108 வைணவ திவ்யதேசங்களில் 3-வது தலமாக போற்றப்படுவது கும்பகோணம் சாரங்கபாணி கோவில் ஆகும்.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவின் போது நடைபெறும் தேரோட்டம் மிகவும் சிறப்புவாய்ந்ததாகும். அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 29-ந்தேதி கருட சேவை வைபவம் நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சாரங்கபாணி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத சாரங்கபாணி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தேரை சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ, கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் தமிழழகன் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 வீதிகள் வழியாக வந்து நிலையடிக்கு சென்றது. பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    இந்த கோவில் தேர் தமிழகத்திலேயே 3-வது பெரிய தேர் என்ற சிறப்புக்குரியதாகும். இந்த தேர், அலங்காரத்துடன் 110 அடி உயரமும், 30 அடி விட்டமும், 400 டன் எடை கொண்டது.

    இந்த தேரின் 4 சக்கரங்கள் 9 அடி உயரமும், அதே அளவு விட்டமும் கொண்ட இரும்பினாலான அமைக்கப்பட்டுள்ளது. தேரின் முன்பகுதியிலுள்ள 2 குதிரைகள் 22 அடி நீளமும், 5 அடி அகலத்தில், 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு இருந்தது.

    மேலும், தேரோட்ட த்திற்காக 12 இன்ச் உயரம், 10 இன்ச் அகலத்தில், ஒன்றரை அடி நீளத்தில் தலா 25 முதல் 30 கிலோ எடையிலான 250 முட்டுக்கட்டைகள் வாகமரத்தில் தயார் செய்ய ப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

    • சிறிய தேரில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார்.
    • பெரிய தேரில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளினர்.

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் காலை வெகுவிமரிசையாக நடந்தது.

    நேற்று மீனாட்சி-சுந்தரேசுவரர் தேரோட்டம் நடந்தது. இதற்காக வண்ணத் துணிகளாலும், மலர்களாலும் தேர்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

    தேரோட்டத்தையொட்டி மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் அதிகாலையில் கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்து கீழமாசி வீதியில் உள்ள தேரடி மண்டபத்திற்கு வந்தனர். அங்கு உள்ள கருப்பணசாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பெரிய தேரில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளினர். சிறிய தேரில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார்.

    தேரோட்டத்தை காண மதுரை மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாசிவீதிகளில் குவிந்திருந்தனர்.

    சரியாக காலை 6.33 மணிக்கு பக்தர்கள் ''ஹரகர சுந்தர மகாதேவா'' என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுக்க பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் இருந்த பெரிய தேர் நகர்ந்தது. சிறிது நேரம் கழித்து 6.50 மணிக்கு மீனாட்சி அமர்ந்திருந்த சிறிய தேர் புறப்பட்டது. தேர்களை பக்தர்கள் மகிழ்ச்சி பொங்க ஆரவாரத்துடன் இழுத்தனர்.

    தேர்களுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானை, 'டங்கா' மாடு ஆகியவை அணிவகுத்து சென்றன. தொடர்ந்து விநாயகரும், முருகனும் சிறிய சப்பரங்களில் சென்றனர்.

    தேர்கள், கீழமாசிவீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசிவீதிகளில் வலம் வந்தன. இது கண்கொள்ளாக்காட்சியாக அமைந்தது.

    • சிறப்பு அலங்காரத்தில் சுவாமி- அம்பாள் தேரில் எழுந்தருளினர்.
    • வருகிற 7-ந் தேதி தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற அறம்வளர்த்த நாயகி அம்மன் சமேத ஐயாறப்பர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

    முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சுவாமி- அம்பாள் தேரில் எழுந்தருளினர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் 4 வீதிகள் வழியாக வந்து நிலையடிக்கு சென்றது.

    தொடர்ந்து, வருகிற 6-ந்தேதி சப்தஸ்தான விழாவும், 7-ந் தேதி தில்லைஸ்தானம் பல்லக்கு டன், 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான டிரஸ்டி கார்ப்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    • வீரசோழன் ஆற்றிற்கு திரவுபதி அம்மன் எழுந்தருளி அங்கு தீர்த்தவாரி நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே மருத்துவக்கு டியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி ஆடுதுறை வீரசோழன் ஆற்றிற்கு திரவுபதி அம்மன் எழுந்தருளி அங்கு தீர்த்தவாரி நடந்தது.

    இதை தொடர்ந்து, அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட தூக்கு தேரில் அம்மன் எழுந்தருளினார்.

    இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மன் தேரை தோளில் சுமந்து சென்றனர்.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திரவுபதி அம்மனை தரிசனம் செய்தனர்.மேலும் பல பக்தர்கள் அழகு காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பின்னர், தூக்குத்தேர் கோவிலை வந்தடைந்ததும் அங்கு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தூக்குத்தேர் தீமிதி திருவிழாவில் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின், பேரூராட்சி கவுன்சிலர் ம.க.பாலத ண்டாயுதம், நாட்டாண்மை கள் கே. அசோக்குமார், ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள், விசேஷ அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றன
    • காலை 11 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில், கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ணசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள், விசேஷ அலங்காரத்தில் சுவாமி வீதி உலா

    நடைபெற்றன. சமய சொற்பொழிவுகள், இன்னிசை விருதுகள், பக்தர்களுக்கு அன்னதானம், சிறப்பு பட்டிமன்றம் போன்றவையும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இன்று 8-ம் திருவிழா நடைபெற்றது. காலை 6 மணிக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், தொடர்ந்து அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற்றன. மாலையில் நாதசுவரம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    நாளை (4-ந் தேதி) 9-ம் நாள் திருவிழாவில் காலை 8 மணிக்கு தேரோட்ட வைபவம் நடக்கிறது. அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம்.பி. ,எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ, மாநகராட்சி கமிஷனர் ஆனந்த் மோகன், ஆகியோரும் விழாவில் பங்கேற்கிறார்கள்.

    அதன் பிறகு காலை 11 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.மாலை 6 மணிக்கு நாதஸ்வரம் நிகழ்ச்சியும் இரவு 8:30 மணிக்கு இன்னிசை விருந்து நிகழ்ச்சியும், 9மணிக்கு சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 10 ம்-நாள் திருவிழா நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு அன்னதானம் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுவாமி ஆராட்டுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், சிறப்பு பஞ்சாரி மேளம் நிகழ்ச்சியும் நடக்கிறது. அதன் பிறகு மாலை 5 மணிக்கு அலங்கார குதிரை பவனி நிகழ்ச்சி, விளக்கு ஆட்டம், அன்ன ஆட்டம் ஆகியவை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு ஆராட்டு பூஜை, அதனைத் தொடர்ந்து நாதஸ்வரம் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு லஷ்மன் சுருதி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து 9 மணிக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு சுவாமி தெப்பத்தில் எழுந்தருளும் வைபவம் நடைபெற உள்ளது.

    • பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
    • மூலவருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றின் தென் கரை மண்ட கொளத்தூரில் ஸ்ரீ தர்ம நவேஸ்வரர் கோவிலில் வருடம் தோறும் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா 7-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

    அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவருக்கும் உற்சவமூர்த்திக்கும் அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அலங்கரித்த உற்சவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாட்டினை விழா குழுவினர் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர் அணியினர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • சித்திரை திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • தேரடியில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    திருவையாறு தருமை ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி அம்மன் சமேத ஐயாறப்பர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(புதன்கிழமை) நடைபெறுகிறது.

    விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான பெருவிழா மே 6-ந் தேதி நடக்கிறது.7-ந் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன், 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலி ன்படி தேவஸ்தான டிரஸ்டி கார்ப்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு போலீசார் செய்து வருகின்றனர்.

    • சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழாவின் 8-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் உலக புகழ் பெற்ற அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான 8-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது.

    முன்னதாக அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தக டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி- அம்பாள் தேரில் எழுந்தருளினர்.

    இதில் கோவில் கண்காணிப்பாளர் மணி மேற்பார்வையில், விருதகிரி காசாளர் கலியராஜ், தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் துளசி ரேகா, ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர், ஊராட்சி தலைவர் ஜெயமாலதி சிவராஜ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரானது 4 மாட வீதிகளையும் வலம் வந்து பின்னர் நிலையை அடைந்தது.

    • திருத்தேரின் சக்கரத்தில் உப்பு, மிளகு போட்டு கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு வழிபட்டனர்.
    • வருகிற 4-ந் தேதி தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

    திருவள்ளூரில் உள்ள வைத்திய ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி தினந்தோறும் காலையும், மாலையும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. 60 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட திருத்தேரில் காலை 5 மணிக்கு உற்சவர் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளினார்.

    இதனைத்தொடர்ந்து 7.30 மணிக்கு திருத்தேர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தேரடியில் இருந்து புறப்பட்டு பனகல் தெரு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு வழியாக தேர் மீண்டும் தேரடியை வந்தடைந்தது.

    இதில் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் வேண்டுதலை நிறைவேற்ற திருத்தேரின் சக்கரத்தில் உப்பு, மிளகு போட்டு கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு வழிபட்டனர். வருகிற 4-ந் தேதி காலை 10 மணிக்கு கோவில் திருகுளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

    தேரோட்ட விழாவையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கமலஹாசன், அந்தோணி ஸ்டாலின் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×