search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97669"

    கடைமடை பகுதி வரை காவிரி தண்ணீர் முழுவதுமாக சென்றுவிட்டது என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Cauvery #PaneerSelvam

    சென்னை:

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. செயற்குழு 23-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாபெரும் மறைந்த அரசியல் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதை பலர் அரசியலாக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். அது தவிர்க்கப்பட வேண்டும்.

    வெள்ளப்பாதிப்பை தடுக்கவும், அதனால் ஏற்படும் பின்விளைவுகளை தடுக்கவும், தமிழக அரசு 11 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுத்துள்ளது. மேலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து கண்காணிக்கப்படுகிறது.


    காவிரி, வைகை கரை யோரப் பகுதிகளில் வெள்ள பாதிப்பை தடுக்க ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி கரையோரங்களில் நட மாடுவது, செல்பி எடுப்பது போன்றவை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    கடைமடை பகுதிவரை காவிரி தண்ணீர் முழுவதுமாக சென்றுவிட்டது. தேனி மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக பாதை தடை செய்யப்பட்டுள்ளது. நானும் கலெக்டரும் ஆய்வு செய்தோம். விரைவில் நிலச் சரிவு பகுதி சீர் செய்யப்படும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Cauvery #PaneerSelvam

    மனிதாபிமான அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியை சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு வர இந்திய ராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பாஜக மாநில செயலாளர் கூறியுள்ளார். #Opanneerselvam
    பெரம்பலூர்:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் ராகவன் பெரம்பலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் கொண்ட 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து தேர்தலுக்கு கட்சியை தயார் செய்யவேண்டும் என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 67 ஆயிரம் பூத் கமிட்டி அமைக்கப்படவுள்ளது. ஒரு பூத் கமிட்டியில் 4 பேர் என பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகிறது. அதன் பிறகு பூத் கமிட்டி பொறுப்பாளர்களை சந்திக்க பிரதமர் நரேந்திரமோடி வருகிற நவம்பர் மாதத்தில் வருகை தரவுள்ளார்.

    இந்திய ராணுவத்தை சேர்ந்த விமானம் இயற்கை இடர்பாடுகளில் இருந்து பொதுமக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதேபோல்தான் மனிதாபிமான அடிப்படையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியை சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு வர இந்திய ராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் ஒரு வகையில் மத்திய அரசின் கடமையாகும். இதில் ராணுவ மந்திரிக்கு பிரத்யேகமான முறையில் அதிகாரம் உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக தமிழகத்தில் கூட்டணி அமைத்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Opanneerselvam
    அப்துல் கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வருகிற 27-ந்தேதி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் வருகை தர உள்ளனர். #TTVDinakaran #Panneerselvam #Abdulkalam
    ராமேசுவரம்:

    அப்துல் கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வருகிற 27-ந்தேதி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் வருகை தர உள்ளனர்.

    ராமேசுவரம் அருகே பேக்கரும்பு பகுதியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மணிமண்டபம் உள்ளது. இங்கு கலாமின் வாழ்க்கை வரலாறு, அவரது சாதனைகள் அடங்கிய பல புகைப்படங்களும், ஓவியங்களும், அவரது பல கண்டுபிடிப்புகளும் இடம் பெற்றுள்ளது. கலாம் மணிமண்டபத்தை காண பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும், மாணவ-மாணவிகளும் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி அப்துல் கலாமின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் டாக்டர் மணிகண்டன், கலெக்டர் நடராஜன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்த ராமேசுவரத்துக்கு வருகை தர உள்ளனர்.

    இதே போல் அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி அப்துல் கலாம் பவுண்டேஷன் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள் ளன. ராமேசுவரம் முதல் ராமநாதபுரம் வரை உள்ள 40 பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, மழை நீர் சேகரிப்பு, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பல விதமான போட்டிகள் இன்று முதல் வருகிற 26-ந் தேதி வரை நடத்தப் படவுள்ளது.

    இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடிக்கும் 600 மாணவர்களுக்கு விருதும், சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. மேலும் நினைவு தின நிகழ்ச்சியில் 1000 மாணவர்களுக்கு இலவச மரக்கன்றுகளும், வீட்டுக்கு ஒரு நூலகம் என்பதை வலியுறுத்தி மாணவர்களுக்கு 500 புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன. இந்த தகவலை கலாமின் பேரனும், கலாம் பவுண்டேஷன் பொறுப்பாளருமான ஷேக் சலீம் கூறினார். 
    உள்ளாட்சி நிதி தணிக்கை துறைக்கு தனி இணையதளம் உருவாக்கப்படும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #OPanneerselvam
    சென்னை:

    நிதித்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    சென்னை நந்தனத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை கட்டிடத்தில் ரூ.10.98 கோடி மதிப்பீட்டில் சுமார் 50 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 2 கூடுதல் தளங்கள் கட்டப்படும். நிதித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மீன்வளத்துறையை சார்ந்த கட்டிடங்கள் அமைந்துள்ள இவ்வாளகத்துக்கு ‘அம்மா வளாகம்’ என பெயரிடப்படும்.

    நெல்லை மாவட்ட கருவூலத்துக்கு சுமார் 21 ஆயிரத்து 400 சதுரஅடி பரப்பளவில் ரூ.3.52 கோடி மதிப்பீட்டில் சொந்த கட்டிடம் கட்டப் படும்.

    கருவூல கணக்குத்துறை பயன்பாட்டுக்காக ரூ.2.44 கோடி மதிப்பீட்டில் 38 புதிய ஜீப்புகள் வழங்கப்படுவதுடன், 38 புதிய டிரைவர் பணியிடங்களும் ஏற்படுத்தப்படும்.

    சார் கருவூலங்கள் இல்லாத வட்ட தலைமையிடங்களில் புதிய சார் கருவூலங்கள் அமைப்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழு அமைக்கப்படும்.

    உள்ளாட்சி நிதி தணிக்கை துறைக்கென தனி இணையதளம் உருவாக்கப்படும்.

    உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பயன்கள் உள்ளிட்டவற்றை மின்னணு முறையில் அனுமதித்தல் பயன்பாட்டுக்காக கணினி ‘சர்வர்’ வழங்கப்படும்.

    உள்ளாட்சி நிதி தணிக்கை துறை தணிக்கையாளர்களுக்கு ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் 165 புதிய மடிக்கணினிகள் வழங்கப்படும். 2-வது கட்டமாக ரூ.62½ லட்சம் மதிப்பீட்டில் 250 புதிய மடிக் கணினிகள் வழங்கப்படும்.

    உள்ளாட்சி நிதி தணிக்கை துறையில் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியர் அடையாள அட்டை வழங்கப்படும்.

    கூட்டுறவு சங்கங்களின் கணக்குகள் தணிக்கையின்போது கண்டறியப்பட்ட நிதி முறைகேடுகள், நிதி இழப்புகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விவரம் ஆண்டறிக்கையாக தயாரிக்கப்படும்.

    பால் கூட்டுறவு சங்கங்களின் தணிக்கை பணிகளை கூட்டுறவு தணிக்கைத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவது குறித்து ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்கப்படும்.

    அரசுத்துறை நிறுவன தணிக்கை துறையின் சார்நிலை அலுவலகங்களுக்காக ரூ.23.21 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தலா 36 கணினிகள், அச்சுப்பொறிகள், ஸ்கேனர்கள் மற்றும் தடையற்ற மின்சாரம் தரும் கருவிகள் வழங்கப்படும்.

    அரசுத்துறை நிறுவன தணிக்கைத்துறையில் ஆய்வாளர் நிலையில் இயங்கிவரும் 10 மாவட்ட அலுவலகங்கள் உதவி இயக்குனர் நிலைக்கு தரம் உயர்த்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #OPanneerselvam
    ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களின் நலன்கருதி உயர் கல்வி உதவித் தொகைக்கான கூடுதல் நிதிச் சுமையை தமிழக அரசே ஏற்கும் என்று சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #OPannerselvam #TNAssembly #ADMK
    சென்னை:

    சட்டசபையில் நேற்று நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. உறுப்பினர் கணேசன் (திட்டக்குடி தொகுதி) பேசினார். அப்போது அவர், பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜலட்சுமி, ‘பஞ்சமி நிலங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

    தொடர்ந்து பேசிய உறுப்பினர் கணேசன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர் கல்வி உதவித் தொகை வழங்கப்படாத நிலை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசியதாவது:-

    மத்திய அரசின் நிதி உதவியோடு செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டம்தான் இந்தத் திட்டம். 2017-2018-ம் ஆண்டுக்கான முதலாண்டு மாணவர்களுக்கும் வழங்க வேண்டிய பராமரிப்பு உதவித்தொகையும், கல்லூரிகளுக்கு வழங்க வேண்டிய நிர்வாகக் கட்டணமும் தவிர, மற்ற அனைத்து உதவித்தொகைகளையும் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கான நிதியை உடனடியாக வழங்க தமிழ்நாடு அரசு தற்போது ரூ.850 கோடியை விடுவித்துள்ளது. 2018-2019-ம் ஆண்டிற்கான சேர்க்கை முடிவுற்ற பின்பு, கல்வி உதவிக்கான கேட்பு கணக்கிடப்பட்டு, அதற்கான உதவித்தொகையையும் மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைப்படி, மாநில அரசின் பொறுப்புத் தொகை ரூ.1,526 கோடியே 46 லட்சமாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இத்திட்டத்தின் மொத்த கேட்பு 2018-2019-ம் ஆண்டிற்கு அதற்கு மேல் உயர வாய்ப்பில்லை.

    இந்தநிலையில், மத்திய அரசின் இந்தத் திட்டத்தில், இந்தத் திட்டத்திற்கான முழு நிதியையும் இனிமேல் மாநில அரசு, அதன் நிதி ஆதாரத்தில் இருந்தே வழங்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களின் நலன் கருதி, இந்த நிதிச் சுமையை மாநில அரசே தொடர்ந்து ஏற்று செயல்படுத்தும்.

    அதே நேரத்தில், மற்ற மத்திய அரசின் திட்டங்களைப்போல், நிதிப்பகிர்வில் மத்திய அரசின் நிதி 60 சதவீதம், மாநில அரசின் நிதி 40 சதவீதம் என்ற விகிதாச்சாரத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பேசிய உறுப்பினர் கணேசன், திட்டக்குடி வெலிங்டன் ஏரி கரை உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “வெலிங்டன் ஏரியை பராமரிக்க ரூ.36 கோடியே 45 லட்சத்தில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. விரைவில், ஏரி பராமரிப்பு பணிகள் தொடங்கும்” என்றார். #OPannerselvam #TNAssembly #ADMK
    கிருஷ்ணகிரியில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் 90 ஜோடிகளுக்கு திருமணத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தனர். #edappadipalanisamy #opanneerselvam

    கிருஷ்ணகிரி:

    அ.தி.மு.க. சார்பில் மறைந்த முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி விளையாட்டு மைதானம் அருகே அமைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர்.அரங்கில் இன்று 90 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது.

    இந்த திருமணங்களை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தாலியை எடுத்து கொடுத்து நடத்தி வைத்தனர்.

    இந்த திருமண விழாவுக்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி. முனுசாமி தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., அசோக்குமார் எம்.பி. மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள்.

    திருமணம் செய்த 90 ஜோடிகளில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் அடங்குவார்கள். மணமக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் 4 கிராம் தங்கத்தாலி, குத்துவிளக்குகள், காமாட்சி விளக்கு, கட்டில், மெத்தை, தலையணை, சமையல் பாத்திரங்கள், தட்டுகள், பீரோ, குடங்கள், அண்டா, பூஜை சாமான்கள் ஆகியவை உள்ளிட்ட 35 வகையான சீர் வரிசை பொருட்களாக மணமக்களுக்கு வழங்கப்பட்டன.

    மேலும் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. மணமகனுக்கு பட்டு வேட்டியும், பட்டு சட்டையும், மணமகளுக்கு பட்டுச் சேலை மற்றும் துணிகளும் வழங்கப்பட்டன. #edappadipalanisamy #opanneerselvam

    ஓ.பன்னீர்செல்வம் உள்பட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரும் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தினகரன் அணியினர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. #OPPanneerselvam #TTVDhinakaran
    புதுடெல்லி:

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரும் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தினகரன் அணியினர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்றபின் தனது அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்தார். அந்த தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுபோட்டனர். இதுகுறித்து சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.



    இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவரை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்றும் கவர்னரிடம், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்தனர்.

    இதையடுத்து அந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகரிடம் அரசு கொறடா புகார் செய்தார். அதன் அடிப்படையில் அந்த 18 பேரையும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அந்த 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.

    அதேநேரம் தி.மு.க. கொறடா சக்கரபாணி ஐகோர்ட்டில் புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதுகுறித்து சபாநாயகரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. (நடராஜ் (மயிலாப்பூர்), மனோரஞ்சிதம் (ஊத்தங்கரை), மாணிக்கம் (சோழவந்தான்), மனோகரன் (வாசுதேவநல்லூர்) ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததால் அவர்களை சேர்க்கவில்லை என தினகரன் தரப்பில் கூறப்படுகிறது)

    இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தங்க தமிழ்செல்வன் உள்பட தினகரன் ஆதரவாளர்கள் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்துசெய்து எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த 7 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. கொறடா சக்கரபாணி எம்.எல்.ஏ. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே இதுதொடர்பாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மே 10-ந் தேதி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.   #OPPanneerselvam #TTVDhinakaran #Tamilnews 
    தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் கே.ஏ.கே.முகில், என்.சதன், செவ்வை மு.சம்பத்குமார், காஞ்சீபுரம் மத்திய மாவட்ட மாணவர் அணி செயலாளர் க.பாலகுமார், திருச்சி புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் டி.டி.கிருஷ்ணன், மதுரை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் பா.வெற்றிவேல், பெரம்பலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் உதயம் எஸ்.ரமேஷ் ஆகியோர் அவர்கள் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து இன்று (நேற்று) முதல் விடுவிக்கப்படுகிறார்கள்.

    ஜெயலலிதா பேரவை மாநில இணைச்செயலாளர்களாக கே.ஏ.கே.முகில், டாக்டர் ஜெ.ஜெயவர்தன் எம்.பி., என்.சதன், செவ்பை மு.சம்பத்குமார், மா.இளங்கோவன் ஆகியோரும், துணைச் செயலாளர்களாக டி.ரமேஷ், சி.பி.மூவேந்தன், க.பாலகுமார், பா.வெற்றிவேல் மற்றும் பெரும்பாக்கம் இ.ராஜசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    வேலூர் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக சா.ரமேஷ், திருச்சி புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக டி.டி.கிருஷ்ணன், பெரம்பலூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக உதயம் எஸ்.ரமேஷ், மதுரை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக எஸ்.எஸ்.சரவணன், தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக பி.ரவீந்திரநாத்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அ.தி.மு.க.வினர் முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பி.ரவீந்திரநாத்குமார் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஆவார். இவர் முன்னதாக தேனி மாவட்ட அ.தி.மு.க. இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறை செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் எம்.பி., மறைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி மகன் கே.ஏ.கே.முகில் ஆகியோருக்கு ஜெயலலிதா பேரவையின் மாநில இணைச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களின் மகன்கள் 3 பேருக்கு ஜெயலலிதா பேரவையில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. #ADMK
    எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு உள்ளதா என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.#ADMK #EdappadiPalanisamy #Opanneerselvam #Jayakumar
    சென்னை:

    தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- ‘கட்சி தொடங்காவிட்டாலும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமைப்புகளை பலப்படுத்தி வருவதாகவும், பெண்கள் தான் கட்சிக்கு முழு ஆதாரம்’ என்றும் ரஜினிகாந்த் கூறியிருக்கிறாரே?

    பதில்:- ரஜினிகாந்துக்கு காலம் கடந்த ஞானோதயம் ஏற்பட்டு இருக்கிறது என்று தான் சொல்லமுடியும். ஆட்சியிலும், கட்சியிலும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான்.

    கேள்வி:- எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன என்றும், அ.தி.மு.க.வில் மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதை தருவதில்லை என்றும், புதிய உறுப்பினர் சேர்க்கை நடைமுறைகள் சரிவர இல்லை என்றும் குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?



    பதில்:- எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை. இதுபோல தவறான கருத்துகள் வேண்டுமென்றே பரப்பப்படுகிறது. வெளியில் இருந்து கொண்டே சிலர் நாரதர் போல சிண்டு முடிகிற வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர். என்ன செய்தாலும் அ.தி.மு.க.வின் ஒற்றுமையை சீர்குலைக்க முடியாது. உறுப்பினர் சேர்க்கை என்பது ஒரு தொடர் நடவடிக்கை ஆகும். எப்படி அ.தி.மு.க.வை ஒரு வலிமைமிக்க இயக்கமாக ஜெயலலிதா உருவாக்கினாரோ, அதேபோல 1.5 கோடிக்கும் அதிகமான தொண்டர்களை கொண்ட ஒரு வலிமையான இயக்கமாக அ.தி.மு.க. இயங்கும்.

    கேள்வி:- நடிகர் எஸ்.வி.சேகர் எங்கே இருக்கிறார்? என்ற தகவல் கிடைத்திருக்கிறதா?

    பதில்:- இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுகளை ஏற்று, அதன்படி உரிய நடவடிக்கைகள் நிச்சயம் எடுக்கப்படும்.

    மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.#ADMK #EdappadiPalanisamy #Opanneerselvam #Jayakumar
    தமிழகத்தில் மதவாத கட்சி உள்ளே வர காரணமாக இருந்தவர் ஓ. பன்னீர்செல்வம். அந்த துரோகத்தால் தான் அவரை கட்சி பதவியில் இருந்து நீக்க வேண்டியிருந்தது என்று டி.டி.வி.தினகரன் பேசியுள்ளார். #dinakaran #opanneerselvam

    ஈரோடு:

    கொங்குநாடு வேட்டுவக் கவுண்டர் இளைஞர் நசலச்சங்கத்தின் 3-வது மாநில மாநாடு மற்றும் புதிய கட்சி தொடக்க விழா ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடந்தது. மாநாட்டுக்கு சங்க மாநில பொதுச் செயலாளர் கே.எஸ்.ராஜ்கவுண்டர் தலைமை தாங்கினார். மாநாட்டில் புதிய திராவிட கழகம் என்கிற புதிய கட்சி தொடங்கப்பட்டது.

    மாநாட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.-

    புதிய திராவிட கழகம் என்கிற பெயரில் கட்சி தொடங்கி இருப்பதே , வருங்கால தமிழகம் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை குறிக்கிறது. பெரியார் பிறந்த மண்ணில் இந்த கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

    கொங்கு மண்டலம் எப்போதும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கோட்டையாக இருந்து வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக பதவியில் அமர்த்தியவர் சசிகலா தான்.

    தமிழகத்தில் மதவாத கட்சி உள்ளே வர அவர் காரணமாக இருந்தவர் பன்னீர்செல்வம். அந்த துரோகத்தால் தான் அவரை கட்சி பதவியில் இருந்து நீக்க வேண்டியிருந்தது.

    கடந்த 15-ந் தேதி கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் முடிவு வந்ததும், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து கடிதம் எழுதினார். அதில் தென்னிந்தியாவில் பா.ஜ.க. மலர கதவுகள் திறக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இதில் இருந்தே அவர் துரோகத்தை ஒப்பு கொண்டு உள்ளார்.

    அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் வரும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும், பகல் கனவு காண்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நான் சொல்லுவது, வரும் சட்டமன்ற தேர்தலில் நாங்கள் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.

    காரணம் மக்கள், குறிப்பாக தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இன்று கூட நான் எடப்பாடிக்கு சென்ற போது அங்குள்ள பொதுமக்கள், பெரியவர்கள் தமிழகத்தில் இன்று நடக்கும் துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்றனர். இந்த மாநாடு நடத்த பல்வேறு தடைகள் வந்தது. அதை தாண்டி தான் நடந்து வருகிறது.

    அதன் பின்னர் தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-


    கர்நாடகாவில் பெரும் பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதுபோல் எங்களது கட்சியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும். அப்போது மக்களாட்சி அமையும்.

    கமல்ஹாசன் மாற்றத்தை கொண்டு வருவேன் என்கிறார். அவரால் எப்படி மாற்றம் கொண்டு வர முடியும். மக்கள் தானே மாற்றத்தை கொண்டு வர முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #dinakaran #opanneerselvam

    இரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம் டெல்லி ஐகோர்ட்டில் நேற்று தொடங்கியது. #TwoLeavesSymbol #DelhiHighCourt
    புதுடெல்லி:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.



    டி.டி.வி.தினகரன் தரப்பில் கோர்ட்டில் நேற்று ஆஜரான அவருடைய வக்கீல் மீனாட்சி அரோரா தன்னுடைய வாதத்தில், இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்ற வழக்கு தேர்தல் கமிஷனில் நடைபெற்று வந்தபோது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த ஆவணங்களில் பல போலி என்று கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பாக அவர்கள் மீது தேர்தல் கமிஷன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் கமிஷனின் இந்த அணுகுமுறை சட்டவிரோதமானது என்றார். 7 நாட்கள் நடந்த இவர்களின் வாதம் நிறைவடைந்தது.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி தன்னுடைய வாதத்தை தொடங்கினார். வாதம் தொடங்கிய சிறிது நேரத்தில், இன்றும் (புதன்கிழமை) தொடர்ந்து வாதம் நடைபெறும் என்று கூறி நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

    வழக்கு விசாரணையின் போது அமைச்சர் சி.வி.சண்முகம் கோர்ட்டில் பார்வையாளர் பகுதியில் அமர்ந்து விசாரணையை கவனித்து கொண்டிருந்தார்.

    இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன், அவரின் நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், நரேஷ், லலித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சுகேஷ் சந்திரசேகர் தவிர மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

    டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. முதன்மையாக குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவருடைய ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோர் நேரில் ஆஜராக விலக்கு கோரியதை ஏற்று, அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பதிவு மீதான இறுதி வாதம் ஜூலை 17-ந் தேதி என்று அறிவித்த நீதிபதி, அன்றைக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.  #TwoLeavesSymbol #DelhiHighCourt
    காவிரி விவகாரத்தில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் தமிழகத்துக்கு உறுதியாக நல்ல தீர்வு வரும் என துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். #Cauvery #Paneerselvam
    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரிநீரை பெறுவதற்கு மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து ஜெயலலிதா காலம் வரையில், அந்த இருபெரும் தலைவர்கள் எடுத்த நடவடிக்கையால் தான் இப்பிரச்சினை உயிரோட்டமாக இருக்கிறது.

    இன்றைக்கு மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறது. அதில் இருக்கிற சாதக, பாதகங்களை கலந்துபேசி தருகின்ற நேரத்தில், ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும் தமிழகத்துக்கு உறுதியாக நல்ல தீர்வு வரும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். தமிழக சட்டமன்ற மானியக்கோரிக்கை கூட்டத்தில் ஒவ்வொரு துறைக்கும் உரிய நிதி அளிக்கப்படும். இதில் பல்வேறு இனங்களில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்புவார்கள். தமிழக அரசின் சார்பில் உரிய பதிலை நாங்கள் அளிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது காவிரி விவகாரம் தொடர்பாக கமல்ஹாசன் உங்களை சந்திப்பதற்கு நேரம் கேட்டிருப்பதாக சொல்லி இருக்கிறாரே? என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவர் என்னை சந்தித்தால், அந்த சந்திப்புக்கு பின்னர் என்னுடைய முடிவை நான் தெரிவிப்பேன்’ என்று ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.  #Cauvery #Paneerselvam

    ×