search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98579"

    • ஊட்டி தமிழகம் சாலையில் வெஸ்டோடா பகுதியில் சிறுத்தை புகுந்தது.
    • நாயை சிறுத்தை தூக்கி செல்லும் காட்சி வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. சமீப நாட்களாக இங்கு குடியிருப்புகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று அதிகாலை ஊட்டி தமிழகம் சாலையில் வெஸ்டோடா பகுதியில் சிறுத்தை புகுந்தது. அங்குள்ள சுற்றுச்சுவரை தாண்டி குதித்து வீட்டுக்குள் நுழைந்தது. வீட்டு முன்பு வராண்டா பகுதியில் படுத்து கிடந்த வளர்ப்பு நாயை சிறுத்தை அலேக்காக கவ்வி சென்றது. சத்தம் கேட்டு எழுந்து வந்த வீட்டின் உரிமையாளர், வளர்ப்பு நாயை காணாததால் அதிர்ச்சி அடைந்தார்.

    நாயை சிறுத்தை தூக்கி செல்லும் காட்சி வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    ஊட்டி எச்.பி.எப் பகுதியில் பசுமாட்டை புலி தாக்கி கொன்றது. அப்பகுதியில் புலி நடமாட்டத்தை கண்காணிக்க, 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒரு சிறுத்தை கிராமத்துக்குள் அதிகாலையில் நுழைந்தது.
    • அதிகாலை நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, புலி அடிக்கடி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கிராமங்களுக்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. சில நேரங்களில் மனிதர்களையும் வனவிலங்குகள் தாக்கி வருகிறது.

    ஆசனூர் அருகே உள்ளது பங்களாதொட்டி கிராமம். இந்த கிராமத்துக்கு வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒரு சிறுத்தை அதிகாலையில் நுழைந்தது. பின்னர் அந்த சிறுத்தை குடியிருப்பு பகுதிகளை சுற்றி சுற்றி வந்தது.

    அதிகாலை நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. மேலும் கால்நடைகளும் வெளியே இல்லை. இதனால் ஊருக்குள் நுழைந்த சிறுத்தை ஏமாற்றத்துடன் மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பியது.

    சிறுத்தை ஊருக்குள் வந்து சென்ற காட்சி அங்குள்ள ஆரோக்கியசாமி என்பவரது கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுபற்றி தெரிய வந்ததும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அதிகாலை நேரத்தில் வந்து சென்ற சிறுத்தை இரவு நேரத்தில் மீண்டும் ஊருக்குள் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே வராமல் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் ஊருக்குள் நுழைந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அதிகாலை நேரத்தில் ஊருக்குள் சிறுத்தை வந்து சென்ற சம்பவம் கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • சேரம்பாடி வன ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு சென்று சிறுத்தையை மீட்க முயன்றனா்.
    • அனீஷ் (39) என்பவரை வனத் துறையினா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா சேரம்பாடி வனச் சரகத்துக்கு உள்பட்ட அத்திச்சால் பகுதியில் உள்ள தனியாா் காபி தோட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிருக்குப் போராடி வருவதாக வனத் துறையினருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, சேரம்பாடி வன ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு சென்று சிறுத்தையை மீட்க முயன்றனா். ஆனால், சிறுத்தை ஆக்ரோஷமாக சீறிப் பாய்ந்ததால் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை மீட்டனா்.

    பின்னா், காயமடைந்த சிறுத்தையை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவக் குழுவால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சுருக்கு கம்பி வைத்த தோட்ட உரிமையாளா் மாத்யூ (69) தலைமறைவானதால், உடனிருந்த அவரது உறவினா் அனீஷ் (39) என்பவரை வனத் துறையினா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

    • ஆப்பிரிக்கா நாடான நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வர ஒப்பந்தம் போடப்பட்டது.
    • இந்தியாவில் இருந்து நமீபியாவுக்கு சென்ற சிறப்பு விமானத்தில் சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டது.

    உலகின் அரிய வகை விலங்குகளில் சிறுத்தையும் ஒன்று. இந்தியாவை அக்பர் ஆட்சி செய்தபோது இங்கு 1000- க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு இந்த சிறுத்தை இனம் கொஞ்சம், கொஞ்சமாக அழிய தொடங்கியது.

    1948-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்த கடைசி சிறுத்தையும் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்பு இந்தியாவில் சிறுத்தை இனமே இல்லை என கூறப்பட்டது.

    இந்த நிலையில் ஆப்பிரிக்கா நாடான நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வர ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி இந்தியாவில் இருந்து நமீபியாவுக்கு சென்ற சிறப்பு விமானத்தில் சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டது.

    இந்த சிறுத்தைகளை மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி விடுவித்தார். பின்னர் அந்த சிறுத்தைகளை கேமராவிலும் படம்பிடித்தார்.

    நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட சிறுத்தைகள் மற்ற விலங்குகளை காட்டிலும் விசேஷ குணங்களை கொண்டது. இந்த சிறுத்தைகள் பறவைகள் போல ஒலி எழுப்பும். சிங்கம் போல் கர்ஜனை செய்வதில்லை. கூரிய பார்வை திறன் கொண்டது. இதன் கால்கள் மெலிந்து நீண்டு காணப்படும். குறைந்தது 72 கிலோ எடையுடையதாக இருக்கும்.

    ஒன்றரை மீட்டர் உயரம் கொண்டதாகவும், நீளமான வாலுடனும் இருக்கும். மான் மட்டுமே இதன் விருப்ப உணவாகும். அடுத்து முயல் மற்றும் பறவைகளையும் வேட்டையாடும்.

    மான்களை கண்டால் அதனை துரத்தி பிடிக்க ஓடும் வேகம் மனிதனின் ஓடும் வேகத்தை விட அதிகமாகும். அதாவது சிறுத்தை ஓட தொடங்கிய 3 வினாடிகளில் அதன் வேகம் சுமார் 97 கிலோ மீட்டராக இருக்கும். அதிகபட்சமாக மணிக்கு 113 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும். இதுவே ஒரு மனிதன் ஓட தொடங்கினால் அவனது வேகம் மணிக்கு 43.99 கிலோ மீட்டர்தான்.

    சிறுத்தை பூனை இனத்தை சேர்ந்ததாகும். அதாவது காட்டு பூனையின் பரிணாம வளர்ச்சியே சிறுத்தை என்று கூறப்படுகிறது.

    ஆப்பிரிக்காவிலும், ஈரான் நாட்டிலும் இத்தகைய சிறுத்தைகள் அதிக அளவில் காணப்படுகிறது. ஆப்பிரிக்காவில் 8 ஆயிம் சிறுத்தைகளும், ஆசியாவில் 50-க்கும் கீழான சிறுத்தைகளும் உள்ளதாக கூறப்படுகிறது.

    • இந்திய காடுகளில் மீண்டும் சிறுத்தைகளை வாழவைக்கும் முயற்சியாக 5 பெண் சீட்டாக்கள், 3 ஆண் சீட்டாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • சீட்டா வகை சிறுத்தைகள் மேலும் பழகுவதற்காக பெரிய கூண்டில் அடைக்கப்படுகிறது.

    தென்மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நமீபியா நாட்டில் இருந்து இன்று 8 சீட்டா வகை சிறுத்தைகள் சரக்கு விமானத்தின் மூலம் மத்திய பிரதேசத்தின் குவாலியர் கொண்டு வரப்பட்டன.

    இந்த சிறுத்தைகளை பிரதமர் மோடி தனது பிறந்தநாளையொட்டி குனோ தேசிய பூங்காவில் விடுவிக்க உள்ளார். இதற்காக அவர் இன்று மத்திய பிரதேசம் வருகிறார்.

    இந்திய காடுகளில் மீண்டும் சிறுத்தைகளை வாழவைக்கும் முயற்சியாக 5 பெண் சீட்டாக்கள், 3 ஆண் சீட்டாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    மேலும், குனோ தேசிய பூங்காவில் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட தனிமையான குடில் போன்ற வீட்டில் சீட்டா வகை சிறுத்தைகள் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன் பிறகு, சீட்டா வகை சிறுத்தைகள் மேலும் பழகுவதற்காக பெரிய கூண்டில் அடைக்கப்படுகிறது.

    • சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று பண்ணாரியம்மன் கோவில் வளாக பகுதியில் உள்ள சுற்று சுவரில் ஏறி அங்குமிங்கும் உலாவி கொண்டிருந்தது.
    • இதனால் கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அடர்ந்த வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இங்கு உலகப்பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி வனப்பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலய பகுதியில் இரவு நேரங்களில் காட்டு பன்றிகள், யானைகள் உலாவுவது வழக்கமாக உள்ளது.

    இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று பண்ணாரியம்மன் கோவில் வளாக பகுதியில் உள்ள சுற்று சுவரில் ஏறி அங்குமிங்கும் உலாவி கொண்டிருந்தது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்தார்.

    இதனையடுத்து வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கும், பக்தர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    • திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம்.
    • வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை நடமாட்டத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்தார்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன.

    இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.

    திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம்.

    இந்த நிலையில் இரவு 19-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச் சுவரில் ஒரு சிறுத்தை ஜாலியாக நடந்து சென்றது. அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்தனர்.

    வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை நடமாட்டத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்தார். சிறிது நேரம் சாலையோரம் நடமாடிய சிறுத்தை பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

    • வனத்துறை சார்பில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் இருந்தது தெரியவந்தது.
    • சிறுத்தையும், கூண்டில் இருந்த ஆட்டை பார்த்தும் உள்ளே நுழைந்தது.

    ஊட்டி:

    ஊட்டி வடக்கு வன சரகத்துக்குட்பட்ட அரக்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் வடமாநில தொழிலாளா்கள் பலா் குடும்பத்துடன் தங்கி, பணிபுரிந்து வருகின்றனா்.

    கடந்த 10-ந் தேதி, அசாம் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி நிஷாந்த் என்பவரது மகள் சரிதா (4) தேயிலைத் தோட்டத்தில் இருந்தபோது, அங்கு மறைந்திருந்த சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்தாள்.

    படுகாயமடைந்த சரிதா ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வந்தனா்.

    இருப்பினும் அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்திலேயே இருந்தனர். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கூறினர்.

    இதையடுத்து மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே துக்காராம் உத்தரவின் பேரில் அரக்காடு பகுதியில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினா் கண்காணித்தனர்.

    அப்போது வனத்துறை சார்பில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பதற்கு வனத்துறையினர் முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று சிறுத்தை நடமாட்டம் உள்ள அரக்காடு பகுதியில் 2 இடங்களில் கூண்டுகளை வைத்தனர். அந்த 2 கூண்டுகளில் சிறுத்தைக்கு பிடித்தமான ஆடு ஒன்றையும் கட்டி வைத்து சிறுத்தை வருகைக்காக காத்திருந்தனர்.

    மேலும் கண்காணிப்பு கேமராவிலும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து கொண்டே இருந்தனர்.

    எதிர்பார்த்தது போலவே இன்று அதிகாலையில் அரக்காடு பகுதியில் வைத்திருந்த கூண்டின் அருகே சிறுத்தை வந்தது. இதனை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்தனர். மேலும் கூண்டுக்குள் சென்றதும், அதனை பிடிக்கவும் தயாராக இருந்தனர்.

    சிறுத்தையும், கூண்டில் இருந்த ஆட்டை பார்த்தும் உள்ளே நுழைந்தது. இதையடுத்து வனத்துறையினர் சாதுர்யமாக செயல்பட்டு கூண்டை அடைத்தனர்.

    பின்னர் சிறுத்தையை அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட முடிவு செய்தனர். இதற்காக லாரி கொண்டு வரப்பட்டு கூண்டில் சிக்கிய சிறுத்தையை ஏற்றினர். பின்னர் சிறுத்தையை லாரியில் ஏற்றி முதுமலை தெப்பக்காடு வனப்பகுதிக்கு கொண்டு சென்று அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

    • வடமாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாள ர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர்.
    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து அதனை கூண்டு வைத்துபிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் தேனாடு கம்பை அறக்காடு பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் உள்ளது.

    இந்த தோட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாள ர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர்.இந்த நிலையில் சம்பவத்தன்று இந்த தோட்டத்தில் பணியாற்றி வரும் நிஷாந்த் என்பவரது 4 வயது மகளை புதர் மறைவில் மறைந்திருந்த சிறுத்தை தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வனத்து றையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டிக்கு அனுப் பினர்.தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

    சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து அதனை கூண்டு வைத்துபிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை கண்காணிக்க அந்த பகுதியில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். மாவட்ட வன அலுவலர் சச்சின் உத்தரவின் பேரில், உதவி வன பாதுகாவலர் சரவணன் தலைமையில், சிறுத்தை தாக்கி குழந்தை இறந்த அரக்காடு பகுதியில் 2 இடத்தில் கண்காணிப்பு காமிரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

    • பொள்ளாச்சி வனச்சரகத்தை ஒட்டிய பகுதிகளில் அவ்வப்போது வன உயிரினங்கள் வந்து செல்வது வழக்கம்.
    • விவசாய தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாய் ஒன்றை சிறுத்தை கொன்றதாக கூறப்படுகிறது.

    பொள்ளாச்சி:

    ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, ராஜநாகம், பல்வேறு வகையான மான்கள், பறவைகள் உள்ளன. பொள்ளாச்சி வனச்சரகத்தை ஒட்டிய பகுதிகளில் அவ்வப்போது வன உயிரினங்கள் வந்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில், பொள்ளாச்சி வனச்சரகம் அருகே உள்ள ஆழியாறு அணை புளியங்கண்டி பகுதி அருகே உள்ள விவசாய தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாய் ஒன்றை சிறுத்தை கொன்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து விசாரணை நடத்திய வனத்துறையினர் அந்த பகுதியில் 4 தானியங்கி காமிராக்களை நேற்று பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • சத்தியமங்கலம் அருகே இன்று அதிகாலை ரோட்டில் பாய்ந்து சென்ற சிறுத்தையால் அதிர்ச்சி அடைந்த விவசாயி.
    • பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வனப்பகுதிகள் வழியாக செல்லும்போது கவனமுடனும், எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என வனத்துறையினர் கேட்டு கொண்டனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானைகள் புலி, சிறுத்தை, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். அதே போல் இரவு நேரங்களில் புலி மற்றும் சிறுத்தைகளும் அடிக்கடி ரோட்டை கடந்து உலாவி வருகிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அடுத்த புது குய்யனூர் பகுதியை சேர்ந்தவர் மணி (41). இவருக்கு அந்த பகுதியில் 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

    இதில் மாட்டு தீவனங்கள் பயிரிட்டு பராமரித்து வருகிறார். மேலும் 2 மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பால் கறந்து சத்தியமங்கலம், பண்ணாரி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பால் விற்பனை செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை வழக்கம் போல் புது குய்யனூர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் பால் விற்பனை செய்ய சென்று கொண்டு இருந்தார். அவர் சத்தியமங்கலம்-பண்ணாரி ரோடு குய்யனூர் பிரிவு அருகே சென்றார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் முன்பு ஏதோ ஒரு உருவம் பாய்ந்து சென்றது. இதை கண்டு நிலை தடுமாறினார்.

    இதையடுத்து அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விளக்கை எறிய விட்டு பார்த்தார். அப்போது அந்த பகுதியில் ஒரு சிறுத்தை சென்று கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரது முன்பு சென்றது சிறுத்தை என தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் குறித்து பொதுமக்கள் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, வனப்பகுதிகளில் இருந்து சிறுத்தை, யானை மற்றும் வன விலங்குகள் அடிக்கடி வெளியேறி வருகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வனப்பகுதிகள் வழியாக செல்லும்போது கவனமுடனும், எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என கேட்டு கொண்டனர்.

    சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் இப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அன்னூர்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஆம்போதி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இந்த கிராமத்தையொட்டி 8 கி.மீ தொலைவில் சிறுமுகை வனப்பகுதி உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பகுதியை சேர்ந்த சிலர் ஒடை அருகே மாடுகளை மேய்ச்சலில் விட்டிருந்தனர். அப்போது அங்கு சிறுத்தை ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து சென்றது.

    இதனை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்துபோன மக்கள் உடனடியாக தங்கள் கால்நடைகளை அவசர, அவசரமாக பட்டிக்கு கொண்டு வந்து அடைத்தனர். சிறுத்தை வந்த தகவல் கிராமம் முழுவதும் வேகமாக பரவியது. இதையடுத்து மக்கள் தனியாக செல்வதற்கும், குழந்தைகளை வெளியில் விடவும் மிகவும் அச்சப்படுகின்றனர்.

    இதற்கிடையே நேற்று காலை மீண்டும் அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் சிறுத்தை சுற்றி திரிவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சிறுமுகை வனசரகர் செந்தில் குமார் தலைமையிலா வனத்துறையினர், அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்தியா தலைமையிலான போலீசார் கிராமம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 4 மணி நேரத்திற்கு மேலாக தேடியும் சிறுத்தை தென்படவில்லை. இதையடுத்து மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி விட்டு வனத்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் அதனை தேடி பார்த்தோம். மேலும் அங்கு பதிவாகி இருந்த கால் தடத்தையும் பதிவு செய்தோம். ஆய்வில் அது காட்டுப் பூனையின் கால்தடம் போல் தெரிகிறது.

    எனினும் இன்னும் அது எந்த விலங்கு என்று உறுதிபடுத்தப்படவில்லை. கால்நடைகளை சிறுத்தை தாக்குவது அறிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி அப்பகுதி மக்களிடம் தெரிவித்தனர்.

    சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் இப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் காரணமாக ஆம்போதி மற்றும் அக்கரை செங்கம்பள்ளி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

    ×