search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    • கடந்த சில வாரங்களாக எட்டயபுரம் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆட்டுச்சந்தை வியாபாரம் மந்தமாக இருந்தது.
    • வழக்கமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் வரும் நிலையில் இன்று 40 சதவீதம் ஆடுகள் மட்டுமே வந்தது.

    எட்டயபுரம்:

    தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச் சந்தைகளில் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச் சந்தையாகும்.

    ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச் சந்தைக்கு சென்னை, கோவை, மதுரை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருவது பொதுமக்கள், வியாபாரிகள் வழக்கம். சாதாரண நாட்களில் ரூ.1 கோடி முதல் ரூ. 2 கோடி வரையும், பண்டிகை காலங்களில் ரூ.3 கோடி முதல் ரூ.8 கோடி வரையும் விற்பனை நடைபெறுவது வழக்கம்.

    கடந்த சில வாரங்களாக எட்டயபுரம் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆட்டுச்சந்தை வியாபாரம் மந்தமாக இருந்தது. இருந்த போதிலும் நாளை தீபாவளி பண்டிகை என்பதால் வியாபாரம் களை கட்டும் என்று கால்நடை வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் எதிர்பார்த்து இருந்த நிலையில், நேற்று மாலை முதல் எட்டயபுரத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது. மேலும் இரவிலும் மழை நீடித்த காரணத்தினால் சந்தைக்கு ஆடுகள் வரத்து மிகவும் குறைவாக இருந்தது.

    வழக்கமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் வரும் நிலையில் இன்று 40 சதவீதம் ஆடுகள் மட்டுமே வந்தது. அதே போன்று வெளியூர் வியாபாரிகளும் குறைவாக இருந்தனர். ஆடுகள் விலை சற்று விலை குறைவு என்றாலும், ஆடுகள் விற்பனை மிக குறைவாக இருந்தது. மழையின் காரணமாக இந்தாண்டு தீபாவளி விற்பனை மிகவும் மந்தமாக இருந்தது. கடந்த ஆண்டு ரூ.7 கோடி விற்பனையான நிலையில் இந்தாண்டு பிற்பகல் வரை ரூ. 2 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு தான் விற்பனையாகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியூர் வியாபாரிகள் வரத்து குறைவு காரணமாக தான் விற்பனை இல்லை என்றும், கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை நன்றாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு விற்பனை மிக குறைவும், மழையினால் தான் விற்பனை இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலூர் வெளிவட்ட சாலை பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
    • ஒரே நேரத்தில் சாலைகளில் படையெடுத்த வாகனங்களால் போக்குவரத்தை சீர் செய்யும் பணி போலீசாருக்கு கடும் சவாலாகவே இருந்தது.

    சென்னை:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை (12-ந்தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஏற்கனவே நிரம்பிவிட்டன. சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள், சிறப்பு வந்தே பாரத் ரெயில்கள் ஆகியவையும் உடனடியாக நிரம்பின.

    மேலும் சென்னையில் இருந்து இயக்கப்பட்ட அரசு விரைவு பஸ்கள், அரசு சிறப்பு பஸ்கள், ஆம்னி பஸ்கள் ஆகியவையும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் சென்றவர்களும் தீபாவளிக்கு ஒரு நாளுக்கு முன்பு சொந்த ஊரில் இருக்கும் வகையில் நேற்றே புறப்பட்டு சென்றனர்.

    சொந்த ஊருக்கு செல்ல ஒரே நேரத்தில் திரண்ட மக்கள் வெள்ளத்தால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து சென்னையில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய போக்குவரத்து நெரிசல் இன்று அதிகாலை 2.15 மணி வரை சுமார் 10 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது.

    அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன், கூடுதலாக 1895 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதன் பிறகு பயணிகள் வருகை அதிகரித்ததால் கூடுதலாக 138 பஸ்கள் இயக்கப்பட்டன.

    ஆம்னி பஸ்களை பொறுத்தவரை வழக்கமாக இயக்கப்படும் 900 பஸ்களுடன் கூடுதலாக 700 பஸ்கள் இயக்கப்பட்டன. அதன் பிறகும் பயணிகள் வருகை இருந்ததால் மேலும் 80 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன.

    இது தவிர கார்கள் உள்பட சொந்த வாகனங்களிலும் நேற்று ஏராளமானோர் சென்னையில் இருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு சென்றனர். வழக்கமாக சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சாலைகளில் பயணிக்கும் வாகனங்களை விட நேற்று 2 மடங்கு வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்றன. இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறின.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் அனைத்தும் பூந்தமல்லி வழியாக வெளி வட்டச்சாலையில் திருப்பி விடப்பட்டு அங்கிருந்து நேராக வண்டலூர் சென்று பின்னர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் கார்கள் மற்றும் சொந்த வாகனங்களில் சென்ற பயணிகளும் வெளிவட்டச் சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.


    தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட பஸ்கள் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து புறப்பட்ட வாகனங்களால் பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் வரை நெரிசல் காணப்பட்டது. பெருங்களத்தூர் வழியாக சென்ற பஸ்கள் மற்றும் வாகனங்களும், வெளிவட்டச்சாலை வழியாக சென்ற பஸ்கள் மற்றும் வாகனங்களும் வண்டலூர் பகுதியில் ஒரே நேரத்தில் சாலையை கடக்க திரண்டதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் உருவானது.

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலூர் வெளிவட்ட சாலை பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    வண்டலூர் அருகேயுள்ள டோல்கேட்டில் இருந்து வண்டலூர் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையிலேயே அணிவகுத்து நின்றன. இந்த ஒரு கிலோ மீட்டர் தூரத்தை வாகனங்கள் கடக்க சுமார் 3 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை ஆனது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.

    இதற்கிடையே வண்டலூரை கடந்து சென்ற வாகனங்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலைய பகுதியில் இருந்து ஊரப்பாக்கம் வரை மீண்டும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறின. அரசு போக்குவரத்து கழக பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்குள் சென்று அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகளை ஏற்றி சென்றன.

    நேற்று மாலையில் இருந்து இரவு வரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து கழக பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்குள் புகுந்து பயணிகளை ஏற்றி சென்றன. மேலும் சென்னையில் இருந்து சென்ற ஆம்னி பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்குள் சென்று முன்பதிவு செய்திருந்த பயணிகளை ஏற்றி சென்றன.

    இதனால்அந்த பஸ்கள் வெளியே வரும் பகுதியில் இருந்து ஊரப்பாக்கம் வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அதன் பிறகும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்த படியே சென்றன.

    குறிப்பாக மறைமலைநகரில் இருந்து சிங்கபெருமாள் கோவில் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு பஸ்கள் மற்றும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் பாலப்பணிகள் வேலை நடைபெறுகிறது. மேலும் அந்த பகுதியில் ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லும் சாலையில் ரெயில் தண்டவாளத்தை கடக்க வாகனங்கள் சுமார் 10 நிமிடம் முதம் 30 நிமிடம் வரை காத்திருந்தன.

    தண்டவாளத்தை கடக்கும் வாகனங்களும் அதிக அளவில் வந்ததால் சிங்கபெருமாள் கோவில் பகுதியில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் வாகனங்கள் அந்த இடத்தை கடக்க அதிக நேரம் ஆனது.

    இதனால் நேற்று சென்னை நகரில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திக்குமுக்காடினார்கள்.

    போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட பகுதிகளில் போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். ஆனாலும் ஒரே நேரத்தில் சாலைகளில் படையெடுத்த வாகனங்களால் போக்குவரத்தை சீர் செய்யும் பணி போலீசாருக்கு கடும் சவாலாகவே இருந்தது.

    நள்ளிரவை தாண்டிய பிறகு சாலைகளில் வரும் வாகனங்கள் குறையத் தொடங்கின. அதன் பிறகு போக்குவரத்து ஓரளவு சீராகத் தொடங்கியது. தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் அதிகாலை 2.15 மணிக்கு பிறகே போக்குவரத்து சீரானது.

    செங்கல்பட்டு அருகே பரனூர் சோதனை சாவடியில் வழக்கமாக 6 வழிப்பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வந்தது. தீபாவளி போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு நேற்று 8 வழிப்பாதையிலும் வாகனங்கள் சென்றன. இதனால் செங்கல்பட்டை தாண்டியபிறகு எந்த நெரிசலும் இல்லாமல் வாகனங்கள் சென்றன. அதிகாலைக்கு பிறகு இன்று காலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. போக்குவரத்து சீராக காணப்பட்டது.

    இதேபோல் சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக வாகனங்களில் வெளியூர் சென்ற பயணிகளால் சென்னை திருவான்மியூர், சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், செம்மஞ்சேரி பகுதிகளில் நேற்று இரவு கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    • கடந்த 2017 ம் ஆண்டு இந்த தீப உற்சவ விழாவை உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.
    • இன்று காலை முதலே இதற்கான பணிகள் மும்முரமாக தொடங்கி நடந்து வருகிறது.

    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் வரும் ஜனவரி மாதம் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்ப ட்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அயோத்தி ராமர் கோவிலை பக்தர்கள் வழிபாட்டுக்கு திறந்து வைக்கிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு தீப உற்சவம் எனப்படும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2017 ம் ஆண்டு இந்த தீப உற்சவ விழாவை உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.

    அந்த உற்சவத்தின் போது, ராமர் கோவிலில் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றப்படும். அந்த வகையில் 2017 ம் ஆண்டு 1.71 லட்சம் தீபங்களும், 2018 ம் ஆண்டு 3.01 லட்சம் தீபங்களும், 2019 ஆண்டு 4.04 லட்சம் தீபங்களும், 2020ல் 6.06 லட்சம் தீபங்களும், 2021ல் 9.41 லட்சம் தீபங்களும், கடந்தாண்டு 15.76 லட்சம் தீபங்களும் ஏற்றப்பட்டது.

    இந்த ஆண்டு ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதால் உலக சாதனை நிகழ்ச்சி போல 24 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட உள்ளது. இது ராமர் கோவில் சுற்று பகுதியில் 51 இடங்களில் ஏற்றப்படுகிறது. இந்த பிரம்மாண்ட தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுகிறது.

    இந்தப் பணிக்காக 25 ஆயிரம் தன்னார்வலர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அங்கு திரண்டு உள்ளார்கள்.

    இதில் 21 லட்சம் தீபங்கள் ஏற்றுவதே இலக்காக வைக்கப்பட்டுள்ளது. எனவே 24 லட்சம் தீபங்கள் ஏற்றி அதில் சுமார் 3 லட்சம் தீபங்கள் ஆங்காங்கே அணைந்தாலும் 21 லட்சம் தீபங்கள் ஒரே நேரத்தில் பிரகாசமாக ஜொலிக்க செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தீப உற்சவத்தில் முந்தைய சாதனைகளை முறியடிக்க உத்திர பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ஒரு லட்சம் லிட்டர் எண்ணெய் மற்றும் திரிகள் பயன்படுத்தப்படஉள்ளது. இதனை லோகியா அவத் பல்கலைக்கழகத்தினர் முன்னின்று கவனித்து வருகின்றனர். இந்த தீப உற்சவத்திற்காக ரூ.3கோடி செலவிடப்படுகிறது.

    இதில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு பிரத்யேக சீருடை வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே இதற்கான பணிகள் மும்முரமாக தொடங்கி நடந்து வருகிறது.

    • பஸ் நிலையம் முழுவதும் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் மற்ற பஸ்கள் வெளியே புறப்பட்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
    • இன்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 1415 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து மக்கள் நேற்று சாரை சாரையாக புறப்பட்டு சென்றனர்.

    பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டதால் கூட்டம் அலைமோதியது.

    கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு ஒரே நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் சிறப்பு பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. பொதுவாக பண்டிகை காலங்களில் மாலை 5 மணி முதல் படிப்படியாக கூட்டம் அதிகரிக்கும். இரவு 8 மணிக்கெல்லாம் பஸ் நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி இருக்கும்.

    ஆனால் நேற்று இரவு 9.30 மணிக்கு மேல்தான் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு மக்கள் கூட்டம் வந்தது. இதனால் அனைத்து நடைமேடையிலும் பயணிகள் நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு புற்றீசல் போல் வந்து கொண்டே இருந்தனர். ஒரே நேரத்தில் பயணிகள் குவிந்ததால் பஸ்கள் இல்லை.

    சேலம், திருச்சி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி பகுதிகளுக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. சிலர் இது தெரியாமல் அங்கு வந்தனர்.

    மயிலாடுதுறை, சிதம்பரம், நெய்வேலி பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் தவறுதலாக கோயம்பேட்டிற்கு வந்ததால் பயணிகள் அங்கிருந்து பஸ்களை இயக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    தாம்பரத்திற்கு சென்று தான் பயணம் செய்ய வேண்டும், இங்கிருந்து இயக்க இயலாது என்று அதிகாரிகள் கூறியதால் பஸ் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களது கோரிக்கையை ஏற்று வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய பஸ்களை மாற்றி சிதம்பரம் மார்க்கத்திற்கு இயக்கப்பட்டது.

    இதற்கிடையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்யாமல் பயணம் மேற்கொள்ள கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்கள் உட்பட பயணிகள் அதிகளவில் பஸ் நிலையத்தில் குவிந்தனர்.

    இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12.30மணி வரை காத்திருந்தும் பஸ் வராததால் ஆத்திரமடைந்த பயணிகள் பஸ்களை வெளியே செல்ல விடாமல் மறித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உடனடியாக மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    முன்னதாக மாலை 5 மணியில் இருந்து பஸ் நிலையத்தில் நெரிசல் ஏற்படத் தொடங்கியது. திருச்சி, சேலம், திருநெல்வேலி போக்குவரத்து கழக பஸ்களை சி.எம்.டி.ஏ. பகுதியில் நிறுத்துவதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. ஆனால் அவர்கள் அனைத்து பஸ்களையும் பஸ் நிலையத்திற்குள் ஒரே நேரத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    பஸ் நிலையம் முழுவதும் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் மற்ற பஸ்கள் வெளியே புறப்பட்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட வேண்டிய பஸ்கள் புறப்பட முடியாமல் சிக்கிக் கொண்டன. பயணிகள் பல மணி நேரம் பஸ்சிற்குள் காத்து இருந்தனர்.

    திருச்சி, சேலம், திருநெல்வேலி போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டர்களுக்கு முறையான தகவல் கொடுக்காததால் இந்த பிரச்சனை ஏற்பட்டது. இதனால் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை 6 மணி நேரம் பஸ் நிலையத்திற்குள் கடும் நெரிசல் ஏற்பட்டு பஸ்கள் வெளியே செல்ல முடியவில்லை.

    பஸ் நிலையத்தை விட்டு ஒவ்வொரு பஸ்களும் ஊர்ந்துதான் சென்றன. பஸ் நிலையத்திற்குள் நெரிசல் ஏற்பட பஸ் டிரைவர்கள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க அதிகாரிகள் உரிய நடடிக்கை எடுக்க வேண்டும்.

    நேற்று முன்தினம் தொடங்கி நேற்று நள்ளிரவு 12மணி வரை தினசரி வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் சேர்த்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் என மொத்த 6656 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 லட்சத்து 66 ஆயிரத்து 80 பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இன்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 1415 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உள்ளூரில் பெண் எடுத்தவர்கள் தலை தீபாவளி கூட கொண்டாட முடியாமல் உள்ளனர்.
    • படித்த இளைஞர்கள் கூட தீபாவளி கொண்டாட முன்வரவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள ரனஸ்தலம் அருகே புன்னானா பாலம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இதில் 95 சதவீதத்திற்கும் அதிகமாக புன்னானா என்ற தலைமுறையினர் உள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

    அன்று தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த புன்னானா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆண் குழந்தையை பாம்பு கடித்தது. இதில் அந்த குழந்தை இறந்தது.

    மேலும் தீபாவளி கொண்டாடிய பிறகு 3-வது நாளில் 2 காளைகள் துரதிர்ஷ்டவசமாக இறந்தன. இது அந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவங்களால் அந்த கிராம மக்கள் தீபாவளியை கொண்டாடினால் துரதிர்ஷ்டம் வந்துவிடும் என்று நம்பத் தொடங்கினர். இதனால் ஆண்டுதோறும் அவர்கள் தீபாவளி திருநாளை கொண்டாடுவதில்லை.

    தலைமுறை தலைமுறையாக எப்பொழுதும் தீபாவளி பண்டிகை கொண்டாட வேண்டாம் என எச்சரித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படித்த இளைஞர்கள் கூட தீபாவளி கொண்டாட முன்வரவில்லை.

    அங்குள்ளவர்கள் யாருக்கும் தீபாவளி கொண்டாட தைரியம் இல்லை என கூறுகின்றனர். தலை தீபாவளி கொண்டாடுபவர்கள் வெளியூர்களில் பெண் எடுத்திருந்தால் அவர்கள் மாமனார் வீட்டுக்கு சென்று தீபாவளியை கொண்டாடலாம்.

    ஆனால் உள்ளூரில் பெண் எடுத்தவர்கள் தலை தீபாவளி கூட கொண்டாட முடியாமல் உள்ளனர்.

    இதுகுறித்து ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியர் புன்னனா நரசிம்மலூ (வயது 66) என்பவர் கூறியதாவது:-

    எங்கள் கிராமத்தில் தீபாவளி மற்றும் நகுல சவிதி பண்டிகைகள் கொண்டாட கூடாது என விதி உள்ளது.

    நான் பிறந்து வளர்ந்தது முதல் தீபாவளி பண்டிகை கொண்டாடி பார்த்ததில்லை. தீபாவளி கொண்டாட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கு எங்கள் கிராம மக்களுக்கு பல்வேறு வழிகளில் கல்வி கற்பிக்கவும் ஊக்குவிக்கவும் நான் முயற்சித்தேன்.

    அது பலனளிக்கவில்லை. என் மகன் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் நான் தடையை மீறி தீபாவளி கொண்டாட முயன்றதால் அவன் இறந்து விட்டான் என கிராமத்தில் வதந்தி பரவி விட்டது.

    கிட்டத்தட்ட 7 தலைமுறைகளாக எங்கள் கிராமத்தில் மூடநம்பிக்கை காரணமாக தீபாவளி பண்டிகை கொண்டாடாமல் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதியோர் இல்லத்திலும் தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் புத்தாடைகளை வாங்கி கொடுத்தார்.
    • ஆதரவற்ற குழந்தைகளுக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. புத்தாடைகளை வாங்கி கொடுத்ததை தொகுதி மக்கள் பாராட்டினர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தங்கபாண்டியன். தனது சட்டமன்ற ஊதியத்தின் மூலம் கொரோனா நிவாரண நிதி, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி போன்றவற்றை வழங்கி வருகிறார்.

    அதன்படி கடந்த 6 ஆண்டுகளாக தீபாவளியை முன்னிட்டு ராஜபாளையம் பொன்னகரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மருதுநகரில் உள்ள லைட் ஆப் லைப் குழந்தைகள் காப்பகம் மற்றும் சேத்தூரில் உள்ள அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தனது ஊதியம் மூலம் புத்தாடைகளை வாங்கி தந்து வருகிறார்.

    இந்த ஆண்டு 7-வது முறையாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கண்ட 3 காப்பகத்தில் உள்ள 231 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. புத்தாடைகளை வாங்கித் தந்தார். இதற்காக அவர் அந்த குழந்தைகளை ராஜபாளையத்தில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கு குழந்தைகள் விரும்பி தேர்வு செய்த புத்தாடைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தனது 3 மாத ஊதியமான ரூ. 3 லட்சத்து 15 ஆயிரத்தை செலவு செய்து வாங்கி கொடுத்தார். புத்தாடைகளை குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.

    இது குறித்து தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. கூறுகையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆதரவற்ற குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து தந்தார். அதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆதரவற்ற குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார்.

    ஆதரவற்ற குழந்தைகள் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடுவதற்காக தொடர்ந்து 7 ஆண்டுகளாக புத்தாடை எடுத்து கொடுத்து வருகிறேன். குழந்தைகளை நேரடியாக கடைக்கு அழைத்து சென்று அவர்கள் விரும்பும் உடைகளை எடுத்து கொடுப்பது, அவர்களுக்கு மகிழ்ச்சியை தருவதை போல எனக்கும் மன நிறைவை தருகிறது. தீபாவளி அன்று காப்பகத்துக்கு நேரடியாக சென்று இனிப்பு, பட்டாசு கொடுத்து அவர்களுடன் தீபாவளி கொண்டாட உள்ளேன் என்றார். ஆதரவற்ற குழந்தைகளுக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. புத்தாடைகளை வாங்கி கொடுத்ததை தொகுதி மக்கள் பாராட்டினர்.

    இதே போல் தீபாவளியை முன்னிட்டு ராஜபாளையத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்புகளை வழங்கினார். அங்குள்ள முதியோர் இல்லத்திலும் தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் புத்தாடைகளை வாங்கி கொடுத்தார்.

    • தாம்பரம், பள்ளிக்கரணை பகுதிகளில் 1100 காவலர்கள் பாதுகாப்ப பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • சென்னை காவல் ஆணையர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோருக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை விடுத்துள்ளார்.

    பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகள் மற்றும் இசிஆர் சாலைகளில் போக்குவரத்தை சரி செய்ய 300 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் டிஜிபி தெரிவித்துள்ளார்.

    தாம்பரம், பள்ளிக்கரணை பகுதிகளில் 1100 காவலர்கள் பாதுகாப்ப பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை காவல் ஆணையர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ரெயிலில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை முன்னிட்டு 700 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • இந்த தீபாவளி விருந்தில் 300-க்கும் அதிகமான விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
    • இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாஷிங்டனில் உள்ள தனது அரசு இல்லத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். கமலா ஹாரிஸ் விடுத்த அழைப்பின் பேரில் 300-க்கும் அதிகமான விருந்தினர்கள் இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினர்.

    அப்போது பேசிய கமலா ஹாரிஸ், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெறும் சூழலில், உலகம் எதிர்கொண்டிருக்கும் இருண்ட மற்றும் கடினமான நிலைக்கு ஒளி ஏற்படுத்தும் வகையில் தீபங்களின் பண்டிகையான தீபாவளியைக் கொண்டாடுவது முக்கியம்.

    இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதாக இந்த தீபாவளி அமையட்டும். பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும். அதே நேரம், இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கையை அமெரிக்கா ஆதரிக்கும் என தெரிவித்தார்.

    • தீபாவளி சிறப்பு மெனுவாக ஜிலேபி சீஸ்கேக் டோனட், கேரமல் பிஸ்தா டோனட், சோகோ சிக்கி டோனட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
    • இனிப்பு வகைகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்தியா முழுவதும் ஸ்வீட் கடைகளில் பல்வேறு புதிய ரகங்களில் இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை களை கட்டி உள்ளது.

    இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், கனடாவில் உள்ள பிரபல காபி ஹவுசான டிம் ஹார்டன்சில் தீபாவளியையொட்டி புதிய வகை டோனட்களை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

    இதில் தீபாவளி சிறப்பு மெனுவாக ஜிலேபி சீஸ்கேக் டோனட், கேரமல் பிஸ்தா டோனட், சோகோ சிக்கி டோனட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவை ஒவ்வொன்றும் தலா ரூ.185 என்ற விலையில் விற்கப்படுகின்றன. இந்த புதிய மெனுவின் ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட நிலையில், பயனர்கள் பலரும் அதன் சுவை குறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இதனால் இந்த இனிப்பு வகைகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    • கடந்த 3 ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட தீபாவளி போனஸ் ஒப்பந்தம் முடிந்து விட்டதால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான புதிய தீபாவளி போனஸ் ஒப்பந்தம் போட வேண்டும்.
    • 3-ம் கட்ட பேச்சு வார்த்தை இரவு 10.30 மணி வரை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இந்த தொழிலில் ஆண்கள், பெண்கள் என சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட தீபாவளி போனஸ் ஒப்பந்தம் முடிந்து விட்டதால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான புதிய தீபாவளி போனஸ் ஒப்பந்தம் போட வேண்டும். பள்ளிப்பாளையம் விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே கடந்த 4-ந் தேதி முதற்கட்ட போனஸ் பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் உடன்பாடு ஏற்படாததால் 2-ம் கட்ட பேச்சு வார்த்தை நேற்று முன்தினம் நடந்தது. இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. தீபாவளிக்கு இன்னும் 2 நாள் மட்டுமே உள்ளதால் போனஸ் பேச்சு வார்த்தை விரைவில் முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து நேற்று 3-ம் கட்ட பேச்சு வார்த்தை இரவு 10.30 மணி வரை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. இதுகுறித்து பள்ளிபாளையம் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் கந்தசாமி கூறியதாவது:-

    6 மாதங்களுக்கு முன்பு புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டதால் கடந்தாண்டு வாங்கிய போனசை விட இந்தாண்டு தொழிலாளர்களுக்கு கூடுதலாக ஆயிரம் ரூபாய் போன்ஸ் கிடைக்கும். மேலும் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் தேக்கம் அடைந்து தொழில் தொய்வு நிலையில் உள்ளதால் போனஸ் சதவீதம் உயர்த்தினால் மேலும் உரிமையாளர்களுக்கு நெருக்கடி ஏற்படும். கடந்தாண்டு வழங்கியது போல 9.50 சதவீதம் போனஸ் இந்தாண்டும் வழங்கப்படும் என தெரிவித்தோம். ஆனால் தொழிற்சங்கத்தினர் இதனை ஏற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • கிளாங்காடு ஊராட்சியில் 3-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஊராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் புத்தாடைகள், இனிப்பு வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள கிளாங்காடு ஊராட்சியில் 3-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கேக் வெட்டி பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் கால்நடை மருத்துவர் சிவக்குமார், ஊராட்சி செயலர் இசக்கிமுத்து, வார்டு உறுப்பினர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள்,தூய்மை காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிளாங்காடு ஊராட்சியில் பணிபுரிந்து வரும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் தீபாவளி பண்டி கைக்கான புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    • விழாவில் ஆண்களுக்கு வேட்டி, சட்டைகளும், பெண்களுக்கு சேலைகளையும் பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் சிறப்புப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்க அலுவலகத்தில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கும், பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை நங்கநல்லூர் சித்தானந்தம், பத்மாவதி அம்மாள் குடும்பத்தின் சார்பாகவும், சுப்பிரமணியபுரம் இசக்கிசெல்வம் குடும்பத்தின் சார்பாகவும், புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் தலைமை தாங்கி ஆண்களுக்கு வேட்டி, சட்டைகளும், பெண்களுக்கு சேலைகளும் வழங்கினார். சங்கத்தலைவர் தவமணி, பொருளாளர் தமிழரசன், பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் சிறப்புப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், இயன்முறை மருத்துவர் புனிதா, மாணவ - மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×