search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    • முதல்முறையாக தமிழக அரசு நிறுவனமான டேம் கால் இந்த ஆண்டு தீபாவளி லேகியத்தை தயாரித்துள்ளது.
    • நமது பாரம்பரிய மருத்துவ முறைகளால் எந்த பக்க விளைவுகளும் கொடுக்காத முறையில் தீபாவளி லேகியத்தை நிறுவனம் தயாரித்துள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையின்போது இனிப்பு மற்றும் கார வகைகளை பொதுமக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் மூலப்பொருட்கள் இது தவிர அதிகமாக சாப்பிடுவது போன்ற பிரச்சினைகளால் வயிற்று கோளாறுகள் உருவாகும்.

    கடைகளில் தீபாவளி லேகியம் விற்கப்படும் முதல்முறையாக தமிழக அரசு நிறுவனமான டேம் கால் இந்த ஆண்டு தீபாவளி லேகியத்தை தயாரித்துள்ளது.

    இந்த லேகியத்தை ஆயுர்வேத தினத்தை ஒட்டி இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    நமது பாரம்பரிய மருத்துவ முறைகளால் இந்த பக்க விளைவுகளும் கொடுக்காத முறையில் தீபாவளி லேகியத்தை நிறுவனம் தயாரித்துள்ளது.

    பொதுமக்கள் இதை வாங்கி பயன்படுத்தலாம் தமிழகம் முழுவதும் டைம் கால் விற்பனை கடைகளில் இன்று முதல் கிடைக்கும் என்றார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் கஹந்தி சிங் பேடி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சென்னை மாநகர் முழுவதும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் கடை வீதிகள் களை கட்டியுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகிறார்கள். தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை உள்ளிட்ட வணிக பகுதிகளில் தீபாவளி பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் இறுதிக்கட்ட வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

    தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்களை வாங்கும் மக்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டில் ஈடுபடும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இது போன்ற தீபாவளி திருடர்கள் கூட்டத்துக்குள் புகுந்துள்ளார்களா? என்பதை கண்காணிப்பதற்காக ரங்கநாதன் தெருவில் மட்டும் 25 கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலமாக போலீசார் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே திருடர்களை கண்காணித்து வருகிறார்கள். இதற்காக தனி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அங்கிருந்தபடியே போலீசார் கண்காணித்து சந்தேக நபர்களை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கூட்டத்தில் ஊடுருவி இருக்கும் திருடர்களை பிடிக்க கம்ப்யூட்டர் உதவியுடன் கண்காணிக்கும் போலீசார் கூட்டத்துக்குள் ரகசியமாகவும் கண்காணித்து வருகிறார்கள். பெண் போலீசார் சாதாரண உடையில் ரோந்து சுற்றி வருகிறார்கள். கூட்டத்தில் ஊடுருவும் கொள்ளையர்கள் மற்றும் சில்மிஷ மன்னர்களை பிடிக்க பெண் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். தி.நகர் பகுதியில் மட்டும் சுழற்சி முறையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தீபாவளி திருடர்களின் போட்டோக்களை பேனராக தயாரித்து போலீசார் பொது இடங்களில் வைப்பது வழக்கம். அதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து தற்போது அதுபோன்று போலீசார் பேனர் வைப்பது இல்லை. அதற்கு பதிலாக கம்ப்யூட்டர்களில் திருடர்களின் போட்டோக்களை சேமித்து வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போன்று புரசைவாக்கம், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை மாநகர் முழுவதும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீபாவளி முடியும் வரை இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் கடை வீதிகள் களை கட்டியுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    • தீபாவளி பண்டிகையை கொண்டாட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.
    • மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடம் தூய்மை செய்யப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    பனியன் தொழில் நகரான திருப்பூரில் வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றி வருகிறார்கள். தீபாவளி பண்டிகையை கொண்டாட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) முதல் சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கிறார்கள்.

    இதற்காக திருப்பூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கோவில்வழி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் மூலமாக சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்மாவட்ட பஸ்கள் அனைத்தும் தாராபுரம் ரோடு , கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி தேனி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், சிவகங்கை, சிவகாசி, தென்காசி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர் மார்க்கமாக 250-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பஸ் நிலையத்துக்குள் கட்டுமான பணி நடப்பதால் பஸ்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படும் நிலை உள்ளது.

    இதற்காக பஸ் நிலையத்துக்கு மேற்கு பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடம் தூய்மை செய்யப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் மின்விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருப்பூரில் இருந்து தீபாவளி பண்டிகைக்கு 450 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
    • அதிகாலை 3 மணி முதல் 5.30 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

    அனைத்து மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்படக்கூடிய மிக முக்கிய பண்டிகை தீபாவளி திருநாள். ஒரே மாதிரியாக கொண்டாடப்படும் சில பண்டிகைகள் நாட்டில் பல்வேறு இடங்களில், அந்த பகுதிக்கு ஏற்ப பல பெயர்களில் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த தீபாவளி பண்டிகை மட்டும் ஒரே பெயரில் கொண்டாடப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டு ஐப்பசி 26-ந்தேதி (நவம்பர் 12) ஞாற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் விதமாக தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது நரகாசுர சதுர்தசி என்பார்கள். அதாவது அமாவாசை தினத்திற்கு முன் வரக்கூடிய திதி சதுர்த்தசி. இதன் காரணமாக வட இந்தியாவில் இந்த சதுர்தசி திதி வரக்கூடிய நாளில் தீபாவளி கடைப்பிடிக்கப்படுகிறது.

    தமிழகம் உள்ளிட்ட தென் இந்தியாவில் சதுர்தசி திதியும், அமாவாசை தினமும் சேர்ந்து வரக்கூடிய நவம்பர் 12-ந்தேதி தீபாவளி கடைப்பிடிக்கப்படுகிறது. மற்ற விரத தினங்களைப் போல தீபாவளி நன்னாளிலும் விரதம் இருந்து பகவான் கிருஷ்ணரை நினைத்தும், மகாலட்சுமி, குபேரரை வணங்கி பூஜை செய்தால் நல்லது. அதுமட்டு மல்லாமல் மிக முக்கியமான ஒன்று என்ன வென்றால், தீபாவளி அன்று வீட்டை சுத்தம் செய்யக்கூடாது. முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து தயாராக வைக்க வேண்டும்.

    தமிழக மக்கள் இதை ஒரு நாள் மட்டும் கொண்டாடுகின்றனர். ஆனால் மற்ற பல இடங்களில் தீபாவளியை ஐந்து நாள் கொண்டாட்டமாக கொண்டாடுகின்றனர். நவம்பர் 10-ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்கி 14-ம் நாள் செவ்வாய்க்கிழமை அன்று தீபாவளி கொண்டாட்டம் முடிவடைகிறது.

    பொதுவாகவே அமாவாசை அன்று தான் தீபாவளி வரும். ஆனால் ஒரு சில வருடங்கள் அமாவாசைக்கு முதல் நாளே தீபாவளி வரும். இந்த வருடம் அமாவாசைக்கு முந்தைய நாள் தீபாவளி வருகிறது. தீபாவளி அன்று புத்தாடை அணிதல், பட்டாசு வெடித்தல், இனிப்பு சுவைத்தல் போன்றவை எப்படி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறதோ, அதே போல அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து கங்கா நீராடல் எனப்படும் எண்ணெய் தேய்த்து குளிப்பதும் முக்கியம் ஆகும்.

    தீபாவளி அன்று அதிகாலை 3 மணி முதல் 5.30 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். தீபாவளி பண்டிகையின் போது ஏழை, எளியோருக்கு, முடிந்த வரை புத்தாடை தானமும், இனிப்பு மற்றும் உணவு தானமும் செய்தால் அந்த மகாலட்சுமியின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவகாசியில் தொடக்கத்தில் வந்த வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வகை பட்டாசுகளும் கிடைக்கும்.
    • இறுதி வியாபார நாட்களில் வருபவர்களுக்கு கேட்கும் பட்டாசுகள் கிடைப்பது அரிதாக உள்ளது.

    சிவகாசி:

    பட்டாசு உற்பத்திக்கு பெயர் போன விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய மற்றும் சிறிய அளவில் 1500-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

    நாடு முழுவதும் 90 சதவீத பட்டாசு தேவைகளை சிவகாசி நகரம் பூர்த்தி செய்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பே பட்டாசு உற்பத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இரவு பகலாக ஊழியர்கள் பட்டாசுகளை உற்பத்தி செய்தனர்.

    பண்டிகை நாட்கள் நெருங்க நெருங்க வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் சிவகாசிக்கு நேரடியாக வந்து பட்டாசுகளை ஆர்டர் செய்து வாங்கி சென்றனர். குறிப்பாக வட மாநிலத்தில் இருந்து அதிக அளவில் ஆர்டர்கள் குவிந்தன.

    சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும். பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு வகைகள் உற்பத்தி செய்ய வேண்டும். சரவெடிக்கு தடை, பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் போன்ற பல்வேறு விதிமுறைகளை கோர்ட்டும், அரசும் விதித்துள்ளது.

    இவ்வளவு இடர்பாடுகளையும் மீறி இந்த முறை சிவகாசியில் கடந்த சில வாரங்களாகவே பட்டாசு வியாபாரம் தீவிரமாக நடைபெற்றன. வெளி மார்க்கெட்டுகளில் விற்பதை விட சிவகாசியில் விலை குறைவாக இருக்கும். எனவே தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சிவகாசிக்கு வந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆலைகள் மற்றும் கடைகளுக்கு நேரடியாக சென்று பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர். தீபாவளிக்கு முதல் நாள் வரை சிவகாசிக்கு வந்து பட்டாசு வாங்க வாடிக்கையாளர்கள் வருவது வழக்கம்.

    சிவகாசியில் தொடக்கத்தில் வந்த வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வகை பட்டாசுகளும் கிடைக்கும். நாட்கள் செல்ல செல்ல பட்டாசுகள் விற்பனையாகி வருகின்றன. இதனால் இறுதி வியாபார நாட்களில் வருபவர்களுக்கு கேட்கும் பட்டாசுகள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் கிடைக்கும் பட்டாசுகளை வாங்கிக் கொண்டு திரும்புகின்றனர்.

    சிவகாசியில் பட்டாசு விலை விபரம்:-

    புஷ்வாணம் 1 பாக்ஸ்-ரூ.90, தரைசக்கரம்-ரூ.80, சீனிவெடி பாக்கெட்-ரூ.30, சாட்டை-ரூ.15, கம்பி மத்தாப்பு-ரூ.40, ராக்கெட் சிறியது-ரூ.40, 30 ஷாட் பெட்டி-ரூ.350.

    மேற்கண்ட பட்டாசுகள் வெளி மார்க்கெட்டுகளில் பல மடங்கு விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிவகாசியில் பட்டாசு வாங்க குவிகின்றனர்.

    நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் இந்த முறை சிவகாசியில் பட்டாசு வியாபாரம் நன்றாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 95 சதவீத பட்டாசுகள் விற்பனை ஆகியுள்ளது.

    இன்னும் பண்டிகைக்கு 2 நாட்கள் இருப்பதால் முழுமையாக பட்டாசுகள் விற்பனையாகிவிடும் என வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • லண்டனில் 10 டவுனிங் தெருவில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
    • தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி பிரதமர் இல்லம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது மனைவி அக்ஷதா மூர்த்தி. இவர் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் ஆவார்.

    இந்த நிலையில் ரிஷி சுனக் தனது மனைவியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். லண்டனில் 10 டவுனிங் தெருவில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் இந்திய சமூகத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

    ரிஷி சுனக், அக்ஷதா மூர்த்தி குத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். அப்போது இந்திய சமூகத்தினருடன் ரிஷி சுனக் கலந்துரையாடினார். தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி பிரதமர் இல்லம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் கூறும்போது, "பிரதமர் ரிஷி சுனக், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டவுனிங் தெருவில் உள்ள இல்லத்தில் இந்து சமூகத்தினருடன் இணைந்து கொண்டாடினார். இது இருளுக்கு எதிராக ஒளியின் வெற்றியின் கொண்டாட்டமாகும்.

    இந்த வார இறுதியில் கொண்டாடும் தீபாவளியை முன்னிட்டு இங்கிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளது.

    சமீபத்தில் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த ரிஷி சுனக், கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எந்தவித சிறு விபத்தும் ஏற்படாமல் இருக்க முக்கிய சந்திப்புகளில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • அனைத்து வழிபாட்டு தலங்கள் அருகிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் மக்கள், ஜி.எஸ்.டி. சாலை வழியாக செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், எந்தவித சிறு விபத்தும் ஏற்படாமல் இருக்கவும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 20 போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய சந்திப்பு பகுதிகள் மற்றும் மாவட்ட எல்லைகளில் வாகன சோதனை சாவடிகளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க 24 இடங்களில் வாகன சோதனை பணிக்காக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலையம், மார்கெட் மற்றும் அனைத்து வழிபாட்டு தலங்கள் அருகிலும் குற்றம் எதுவும் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 20 போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதியிலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க 33 இடங்களில் குற்ற ரோந்து பணிக்காக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 3 உட்கோட்டத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் ட்ரோன் சர்வலைன்ஸ் பணிக்காக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரணீத் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 20 போலீஸ் சூப்பிரண்டுகள், 90 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என சுமார் 500 போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தென்மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரெயில்களின் முன்பதிவு நிறைவடைந்து அதிக அளவில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
    • சென்னை எழும்பூரில் இருந்து இன்று கூடுதலாக ஒரு சிறப்பு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரெயில்களின் முன்பதிவு நிறைவடைந்து அதிக அளவில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இதனால் சென்னை எழும்பூரில் இருந்து இன்று (வியாழக்கிழமை) கூடுதலாக ஒரு சிறப்பு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மேலும் 4 நாட்களுக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இது குறித்து தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூர்-நெல்லை இடையே நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) மற்றும் வருகிற 13, 14-ந் தேதியும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது.

    சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் (வண்டி எண். 06055) மதியம் 2 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும் ரெயில் (06056) அதே நாள் இரவு 11.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • லாரிகள் போன்ற கனரக வாகனங்களுக்கு சென்னை நகருக்குள் அனுமதி மறுக்கப்படும்.
    • ஆந்திரா போன்ற மாநிலம் செல்லும் பஸ்கள் மாதவரத்தில் இருந்தும் புறப்பட்டுச் செல்லும்.

    சென்னை:

    தென்சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, வடசென்னை கூடுதல் கமிஷனர் அஷ்ராகார்க், போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் சுதாகர் ஆகியோர் இணைந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    போலீஸ் கமிஷனர் உத்தரவுக்கிணங்க, தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

    சென்னை நகரில் புரசைவாக்கம், பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலை மற்றும் தியாகராயநகர் ஆகிய பகுதிகளில் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு சிறப்பான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட 3 இடங்களுக்கு வாகனங்களில் செல்பவர்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லவேண்டும்.

    என்.எஸ்.சி. போஸ் சாலைக்கு செல்பவர்கள் பூக்கடை போலீஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லலாம். தியாகராயநகருக்கு செல்பவர்கள், ஜி.என். செட்டி ரோடு, வெங்கட்நாராயணா ரோடு போன்ற இடங்களில் வாகனங்களை நிறுத்துவிட்டு செல்லவேண்டும்.

    மேலும் சென்னையில் போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    லாரிகள் போன்ற கனரக வாகனங்களுக்கு சென்னை நகருக்குள் அனுமதி மறுக்கப்படும். வணிக உபயோகத்துக்காக சரக்குகளை ஏற்றிச்செல்லும் மினி கனரக வாகனங்கள் சென்னை நகருக்குள் நுழைவது பற்றி சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும். போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தால், மினி கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்படும். கனரக வாகனங்களும் மாற்றுப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படும்.

    தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக 10 ஆயிரம் அரசு பஸ்கள் இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுதினம் (சனிக்கிழமை) வரை இயக்கப்படுகிறது. ஆம்னி பஸ்கள் எத்தனை இயக்கப்படும் என்பது குறித்து அதன் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    சென்னையில் கே.கே.நகர், தாம்பரம், கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம் ஆகிய 5 இடங்களில் இருந்து இந்த 10 ஆயிரம் அரசு பஸ்களும் புறப்பட்டுச் செல்லும். ஈ.சி.ஆர்.சாலை வழியாக செல்லும் பஸ்கள் கே.கே.நகரில் இருந்தும், திண்டிவனம் வழியாக செல்லும் பஸ்கள் தாம்பரத்தில் இருந்தும், நெல்லை, நாகர்கோவில் போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் கோயம்பேட்டில் இருந்தும், கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் பூந்தமல்லியில் இருந்தும், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள் மாதவரத்தில் இருந்தும் புறப்பட்டுச் செல்லும்.

    இதுதொடர்பாக ஏற்கனவே போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை சீர்செய்ய பணியில் இருப்பார்கள். குறிப்பாக வெளி இடங்களுக்கு பஸ்கள் புறப்பட்டுச் செல்லும் இந்த 5 இடங்கள் உள்ள பகுதிகளில் 150 போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுவார்கள்.

    ஆலந்தூர் பகுதிகளில் சாலையோரமாக நின்று பயணிகளை ஏற்றிச்செல்லக் கூடாது என்று ஏற்கனவே ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு பஸ்களை நிறுத்தி ஏற்றிச்செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் பாதுகாப்பாகவும், சந்தோஷமாகவும் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாட வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறோம். ஏதாவது பிரச்சினை என்றால், போலீசார் உடனடியாக விரைந்து சென்று பொதுமக்களுக்கு உதவி செய்வார்கள்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
    • அதிவிரைவு சிறப்பு ரெயில் 10, 12 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பயணிகளின் நலனுக்காகவும் சென்னை எழும்பூர் - தூத்துக்குடி இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

    இந்த அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண். 06001) 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். இதேபோல மறுமார்க்கமாக, அதிவிரைவு சிறப்பு ரெயில் (06002) 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீபாவளிக்கு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குங்கள்.
    • நமது பாரம்பரியம் செழிப்படைய டிஜிட்டல் ஊடகத்தை பயன்படுத்துவோம்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி கடந்த மாதம் 29-ந்தேதி, வானொலியில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

    அப்போது, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில், உள்ளூர் பொருட்களை வாங்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சுற்றுலா தலத்துக்கோ, ஆன்மிக தலத்துக்கோ எங்கு சென்றாலும் உள்ளூர் பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தினார். இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று மீண்டும் இந்த வேண்டுகோளை விடுத்தார். அவர் தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்த தீபாவளிக்கு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குங்கள். அந்த பொருட்களுடனோ அல்லது உற்பத்தி செய்தவருடனோ 'செல்பி' எடுத்து, அதை 'நமோ' செயலியில் பதிவிடுங்கள்.

    உங்கள் நண்பர்களையும், குடும்பத்தையும் இதில் சேர சொல்லுங்கள். நேர்மறை உணர்வை பரப்புங்கள்.

    உள்ளூர் திறமைசாலிகளுக்கு ஆதரவு அளிக்கவும், சக இந்தியர்களின் படைப்புத்திறனை ஊக்கப்படுத்தவும், நமது பாரம்பரியம் செழிப்படையவும் டிஜிட்டல் ஊடகத்தை பயன்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விலங்குகள் வெடி சத்தத்தை கேட்டு மிகவும் பயப்படும்.
    • செல்லப் பிராணிகளுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவ உதவி தேவைப்பட்டால் உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    சென்னை:

    தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்கும் போது மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வெடிசத்தம் உள்ளூர பயத்தையும் ஏற்படுத்தும். மனிதர்களே இப்படி என்றால் செல்லப் பிராணிகளின் நிலைமை எப்படி இருக்கும்?

    சென்னையில் நாய் வளர்ப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள். வெடி சத்தம் என்றாலே நாய்கள், பறவைகளுக்கு அலர்ஜி தான். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நாளில் நாய் ஓடிவிட்டது என்று தங்கள் விலை உயர்ந்த நாய்களை தொலைத்துவிட்டு பலர் புளூகிராசில் புகார் செய்கிறார்கள்.

    கடந்த ஆண்டில் மட்டும் 6 போன்கால் வந்ததாக இந்த நிறுவன நிர்வாகி சின்னி கிருஷ்ணா கூறினார்.

    விலங்குகள் வெடி சத்தத்தை கேட்டு மிகவும் பயப்படும். எனவே கவனம் தேவை என்கிறார்கள் விலங்குகள் நல ஆர்வலர்கள். பக்கத்து தெருவில் வெடி சத்தம் கேட்டாலே நாய்கள் பயந்து ஓடும். தீபாவளி நேரத்தில் எல்லா பகுதிகளிலும் பட்டாசு வெடிப்பார்கள்.

    இந்த நேரத்தில் நாய்களை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். பட்டாசு வெடிக்கும் நேரங்களில் உரிமையாளர்கள் நாயின் அருகில் இருந்தால் அதன் பயம் குறையும். எங்கேயும் ஓடிவிடக்கூடாது என்பதற்காக நாய்களை கட்டி போடக் கூடாது. வீட்டுக்குள் பாதுகாப்பாக அவிழ்த்து விட வேண்டும்.

    வீட்டுக்கு வெளியே அல்லது பால்கனிகளில் கட்டி வைக்க கூடாது. கழுத்தில் அடையாள அட்டையை கட்டி வைக்க வேண்டும். எதிர்பாராதவிதமாக தொலைந்து போக நேரிட்டால் அடையாளம் காண வசதியாக இருக்கும்.

    மரங்களின் அடியில் வைத்து அதிக சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு வெடித்தால் பறவைகள் பீதியில் அங்கும் இங்கும் பறக்கும்.

    வீட்டு உரிமையாளர்கள் இல்லாமல் நாயை தனி அறைக்குள் கட்டி போடுவதை தவிர்க்க வேண்டும். செல்லப் பிராணிகளுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவ உதவி தேவைப்பட்டால் உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    சில ஆண்டுகளாக பட்டாசு பயன்பாடு குறைந்து வருகிறது. இதற்கு காரணம் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பட்டு இருக்கும் விழிப்புணர்வுதான் என்றார் சின்னிகிருஷ்ணா.

    ×