search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99198"

    ரஞ்சி கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. தமிழக அணி தனது முதலாவது லீக்கில் மத்திய பிரதேசத்துடன் மோதுகிறது. #RanjiTrophy
    திண்டுக்கல்:

    உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக இந்தியாவில் ஆண்டுதோறும் ரஞ்சி கோப்பை எனப்படும் முதல்தர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு தேசிய அணிக்கான கதவு தானாகவே திறக்கும்.

    இதன்படி 85-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் இன்று தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந்தேதி வரை நடக்கிறது. இந்த சீசனில் மொத்தம் 37 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு மாநில அணிக்கும் கட்டாயம் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று லோதா கமிட்டி உத்தரவிட்டதை தொடர்ந்து மணிப்பூர், அருணாச்சலபிரதேசம், மிசோரம், உத்தரகாண்ட், சிக்கிம், நாகலாந்து, மேகாலயா, புதுச்சேரி ஆகிய அணிகள் இந்த முறை ரஞ்சி தொடரில் அறிமுகம் ஆகின்றன. இதே போல் மாநில கிரிக்கெட் சங்கத்தின் மோதல் போக்கால் ஒதுக்கப்பட்டு இருந்த பீகார் அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு திரும்புகிறது.

    அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ மற்றும் பி பிரிவில் தலா 9 மணிகளும், சி பிரிவில் 10 அணிகளும், பிளேட் பிரிவில் பீகார் மற்றும் 8 புதிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. தமிழக அணி ‘பி’ பிரிவில் ஆந்திரா, பெங்கால், டெல்லி, இமாச்சலபிரதேசம், ஐதராபாத், கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய அணிகளுடன் அங்கம் வகிக்கிறது.

    லீக் சுற்று முடிவில் ஏ, பி பிரிவில் இருந்து 5 அணிகளும், சி பிரிவில் இருந்து 2 அணியும், பிளேட் பிரிவில் இருந்து ஒரு அணியும் கால்இறுதிக்கு முன்னேறும். டாப்-2 குரூப்பில் கடைசி இடத்துக்கு தள்ளப்படும் அணி அடுத்த சீசனில் சி பிரிவுக்கு தள்ளப்படும். சி பிரிவில் முதல் இரு இடத்தை பெறும் அணிகள் ஏ, பி பிரிவுக்கு தகுதி உயர்வு பெறும். சி-யில் பின்தங்கும் அணி, பிளேட் குரூப்புக்கு தகுதி இறக்கம் செய்யப்படும். அதே சமயம் பிளேட் பிரிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி சி பிரிவுக்கு ஏற்றமடையும். #RanjiTrophy

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை-டெல்லி அணிகள் மோதுகின்றன. #ISL2018
    புதுடெல்லி:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லி நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி.-சென்னையின் எப்.சி. அணிகள் மோதுகின்றன.

    நடப்பு சாம்பியனான சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியிடமும் (0-1), 2-வது ஆட்டத்தில் கோவா அணியிடமும் (1-3), 3-வது ஆட்டத்தில் கவுகாத்தி அணியிடமும் (3-4) அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. டெல்லி அணி முதல் ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் புனேவுடன் டிராவும், 2-வது ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவிடம் தோல்வியும், 3-வது ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் கேரளாவுடன் டிராவும் கண்டது.

    கவுகாத்தி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றாலும், தடுப்பு ஆட்டத்தில் செய்த தவறால் தோல்வியை சந்தித்தது. தடுப்பு ஆட்டத்தில் சென்னை அணி முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். சென்னை, டெல்லி அணிகள் இன்னும் வெற்றி கணக்கை தொடங்கவில்லை. இதனால் முதல் வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    சென்னை, டெல்லி அணிகள் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் டெல்லி அணி 4 முறையும், சென்னை அணி ஒரு தடவையும் வென்று இருக்கின்றன. 3 ஆட்டம் டிராவில் முடிந்தது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    இதற்கிடையில் புனேயில் நேற்று இரவு அரங்கேறிய 15-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.புனே சிட்டி-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தியது. பெங்களூரு அணியில் சுனில் சேத்ரி 41-வது மற்றும் 43-வது நிமிடத்திலும், மிகு 64-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். புனே அணி பதில் கோல் திருப்ப எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. 3-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி 2 வெற்றி, ஒரு டிராவுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. 3-வது ஆட்டத்தில் ஆடிய புனே அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். ஒரு ஆட்டத்தில் அந்த அணி டிரா கண்டு இருந்தது. #ISL2018
    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #AsianHockey
    மஸ்கட்:

    5-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆண்கள் ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், ஓமன் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    தொடக்க நாளான நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஓமனை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 11-0 என்ற கோல் கணக்கில் ஓமனை ஊதி தள்ளியது. இந்திய அணி தரப்பில் தில்பிரீத்சிங் 3 கோலும், லலித் உபாத்யாய், ஹர்மன்பிரீத் சிங், நீலகண்ட ஷர்மா, கேப்டன் மன்தீப்சிங், குர்ஜந்த் சிங், ஆகாஷ்தீப் சிங், வருண்குமார், சிங்லென்சனா ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

    மற்றொரு லீக் ஆட்டத்தில் மலேசியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஆசிய விளையாட்டு சாம்பியனான ஜப்பானை வீழ்த்தி முதல் வெற்றியை தனதாக்கியது.

    இன்று (சனிக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் தென்கொரியா-ஜப்பான் (இரவு 8.25 மணி), இந்தியா-பாகிஸ்தான் (இரவு 10.40 மணி) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-2 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    போட்டி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ஹரேந்திரசிங் கருத்து தெரிவிக்கையில், ‘பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து தான் எங்களுக்கு உண்மையான போட்டி தொடங்குகிறது. ஆசிய விளையாட்டு போட்டியில் அரைஇறுதியில் தோல்வி கண்ட பிறகு சில நாட்கள் எங்கள் அணியினர் கவலையுடன் இருந்தனர். ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கத்தை வெல்ல முடியாமல் போன ஏமாற்றம் நமது வீரர்கள் மனதில் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் கடந்த காலத்தில் நடந்ததை அதிகம் நினைக்கக்கூடாது. ஓமனுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் எங்கள் அணியை சேர்ந்த 9 வீரர்கள் கோல் அடித்தனர். இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவது அடுத்த ஒரு மாதத்தில் நடக்க இருக்கும் உலக கோப்பை போட்டிக்கு நன்றாக தயாராகுவதற்கு உறுதுணையாக இருக்கும்’ என்றார். #AsianHockey

    நேற்றிரவு நடந்த புரோ கபடி லீக் போட்டியில் அரியானா குஜராத்தை வென்றது. இன்று நடக்கும் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்- உ.பி.யோத்தா, அரியானா ஸ்டீலர்ஸ்-யு மும்பா ஆகிய அணிகள் மோதுகின்றன. #ProKabaddi
    சோனிபட்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் அரியானா மாநிலம் சோனிபட்டில் நேற்றிரவு நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் அசத்தலாக ஆடிய அரியானா அணி 32-25 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை சாய்த்து முதலாவது வெற்றியை சுவைத்தது. மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 41-37 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை தோற்கடித்தது.

    இதே மைதானத்தில் இன்று நடக்கும் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்- உ.பி.யோத்தா (இரவு 8 மணி), அரியானா ஸ்டீலர்ஸ்-யு மும்பா (இரவு 9 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன. #ProKabaddi

    தேவதானப்பட்டி கோவில் திருவிழாவில் மோதலில் ஈடுபட்ட கும்பல் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலத்தில் ஸ்ரீகவுமாரியம்மன கோவில் திருவிழா நடந்து வருகிறது. இத்திருவிழாவில் அக்ரகார தெருவை சேர்ந்த காமுத்துரை என்பவர் மைக்செட் போடும் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு மைக்செட்டை அணைத்து விட்டு வீட்டிற்கு செல்ல முயன்றார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் பாட்டை போடுமாறு அவரிடம் தகராறு செய்தனர்.

    ஆனால் 10 மணிக்கு மேல் பாட்டு போடக்கூடாது என்று போலீசார் கூறி உள்ளனர் என காமுத்துரை தெரிவித்தார். பாட்டை போடாவிட்டால் உன்னை அடித்தே கொலை செய்துவிடுவோம் என மிரட்டி தாக்கி உள்ளனர்.

    இது குறித்து ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் காமுத்துரை புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் கோட்டை முருகன் (வயது33), மச்சக்கண்ணன் (40), ஆனந்த் (25), கார்த்திக் (27), முத்துப்பாண்டி (28), திலகர் (27) உள்பட மேலும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்பெயின் பார்சிலோனா நகரில் கேட்டலோனியா பிராந்திய நாடாளுமன்றத்தின் முன்பாக நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. #Spain #Barcelona
    பார்சிலோனா:

    ஸ்பெயின் நாட்டில் கேட்டலோனியா பகுதியில் அந்த நாட்டின் மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் வசிக்கின்றனர். அந்த நாட்டின் மொத்த ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்கு ஏற்றுமதியை கேட்டலோனியா பகுதி செய்கிறது. அப்படிப்பட்ட கேட்டலோனியாவை தனி நாடாக பிரித்து தர வேண்டும் என்ற கோரிக்கை அங்கு வலுத்து வருகிறது. இந்த கோரிக்கையை முன்வைத்து போராடுகிறவர்கள், பிரிவினையாளர்களாக கருதப்படுகின்றனர்.



    தனிநாடு கோரிக்கை தொடர்பாக அங்கு கடந்த ஆண்டு பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில் மக்கள் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தும், அது செல்லாது என அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    அந்த பொதுவாக்கெடுப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி பார்சிலோனா உள்ளிட்ட பல நகரங்களில் மக்கள் பெருவாரியாக திரண்டு நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.

    பார்சிலோனா நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். கேட்டலோனியா பிராந்திய நாடாளுமன்றத்தின் முன்பாக நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலைகள், நெடுஞ்சாலைகள், ரெயில் பாதைகளை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டிருந்ததால், போக்குவரத்தும் பாதித்தது.  #Spain #Barcelona 
    புதுவையில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் பேசும் போது கவர்னர் கிரண்பேடி மைக்கை அணைக்குமாறு உத்தரவிட்டதால் இருவருக்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. #Kiranbedi #Anbalagan
    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் திறந்தவெளி கழிப்பறை இல்லாத பகுதியாக அறிவிக்கும் நிகழ்ச்சி இன்று கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.

    கவர்னர் கிரண்பேடி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், ராதாகிருஷ்ணன் எம்.பி. மற்றும் பலர் கலந்து விழாவில் கொண்டனர். தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் அன்பழகனும் அழைக்கப்பட்டிருந்தார்.

    விழா தொடங்கியதும் அன்பழகன் எம்.எல்.ஏ. பேச அழைக்கப்பட்டார். அவர் மைக் முன் வந்து பேசினார். விழா அழைப்பிதழில் தனது பெயர் முறைப்படி அச்சிடப்படவில்லை என்று குற்றம்சாட்டிய அவர் தொகுதியில் உள்ள பல்வேறு குறைகளையும் சுட்டிக்காட்டி பேசினார்.

    இவ்வாறு அவர் 15 நிமிடமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது கவர்னர் கிரண்பேடி அங்கிருந்த ஒரு அதிகாரியை அழைத்து 10 நிமிடத்திற்கு மேல் பேச வேண்டாம், பேச்சை நிறுத்த சொல்லுங்கள் என்று கூறினார்.

    உடனே அந்த அதிகாரி அன்பழகனிடம் சென்று கவர்னர் சொல்கிறார், பேச்சை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதற்கு அன்பழகன், நான் தொகுதி பிரச்சனை தொடர்பாக நிறைய பேச வேண்டியது இருக்கிறது. இப்போது உடனே பேச்சை நிறுத்த முடியாது என்று கூறி பேச்சை தொடர்ந்தார்.

    அப்போது கவர்னர் கிரண்பேடி இன்னொரு அதிகாரியை அழைத்து அன்பழகனிடம் சொல்லும் படி கூறினார். அதன்படி அந்த அதிகாரியும் அன்பழகனிடம் பேச்சை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்தார்.

    ஆனால் அதையும் அன்பழகன் ஏற்கவில்லை. தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இது கவர்னர் கிரண்பேடிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. திடீரென அவர் தனது இருக்கையை விட்டு எழுந்து வந்தார். நேரடியாக அன்பழகனிடம் சென்று பேச்சை நிறுத்துங்கள், போதும், மற்றவர்களும் பேச வேண்டும் என்று கூறினார்.

    அதற்கு அன்பழகன் நான் சொல்ல வேண்டியவற்றை சொல்லியாக வேண்டும், எனவே நிறுத்த முடியாது எனக்கூறி தொடர்ந்து பேசினார்.

    இதனால் கவர்னருக்கு கோபம் மேலும் அதிகரித்தது. அன்பழகன் பேசிய மைக்கை துண்டித்தார். அன்பழகனை பார்த்து ‘யூ கோ’ (நீங்கள் போகலாம்) என்று ஆங்கிலத்தில் ஆவேசமாக கூறினார்.

    இது அன்பழகனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. கவர்னரை பார்த்து அவர் ‘யூ கோ’ என்று திருப்பி சொன்னார். இப்படி ஒருவருக்கொருவர் திரும்ப, திரும்ப சொன்னார்கள்.

    இதனால் மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் அமைச்சர்களும், அதிகாரிகளும் நெளிந்தனர். பார்வையாளர்களும் அதிர்ச்சியாக பார்த்தனர்.

    அப்போது அன்பழகன் அமைச்சர் நமச்சிவாயத்திடம் சென்று என்னை எப்படி கவர்னர் அவமதிக்கலாம், இதற்கு தான் என்னை விழாவுக்கு அழைத்தீர்களா? என்று கூறினார்.

    உடனே நமச்சிவாயம் அவரை சமாதானப்படுத்த முயன்றார். அதை அன்பழகன் ஏற்கவில்லை. என்னையும், என் தொகுதி மக்களையும் மேடையில் அவமதித்து விட்டார்கள். கவர்னர் நடந்து கொண்டது ஆணவமான செயல் என்று ஆவேசமாக குரல் எழுப்பினார். பின்னர் அவர் விழாவை புறக்கணித்துவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கினார்.

    ஒரு கவர்னருக்கு எம்.எல்.ஏ.விடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றுகூட தெரியவில்லை. அவர் நடந்து கொண்டவிதம் என்னை மட்டும் அல்ல ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.க்களையே அவமதிக்கும் வகையில் இருக்கிறது.

    எனது தொகுதியில் விழா நடக்கிறது. நான் தொகுதி பிரச்சனை பற்றி, தொகுதி மக்களுக்காக இங்கு பேசிதான் ஆக வேண்டும். அதைத்தான் நான் பேசினேன்.

    ஆனால் என்னை பேச விடாமல் தடுத்து எனது மைக்கையே கவர்னர் துண்டிக்கிறார். அவருடைய பதவிக்கு இது அழகல்ல. அவர் மீது உரிமை மீறல் பிரச்சனை புகார் கொடுப்பேன். என்னை அவமானப்படுத்தியதற்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

    டெல்லியில் மக்களால் தோற்கடிக்கப்பட்டு குறுக்கு வழியில் கவர்னராகி உள்ள கிரண்பேடி புதுவை எம்.எல்.ஏ.க்களை அவமதிக்கிறார். இது புதுவை மக்களையே அவமதிக்கும் செயலாக நான் கருதுகிறேன்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.  #Kiranbedi #Anbalagan

    மாங்காடு அருகே நள்ளிரவில் முகவரி கேட்டபோது ஏற்பட்ட மோதலில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பூந்தமல்லி:

    மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 24). வெல்டர். நேற்று நள்ளிரவு அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் உள்பட நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரசன்னா என்பவர் வந்தார். அவர் ஆனந்தராஜ் உள்ளிட்டோரிடம் ஒருவரது முகவரி குறித்து கேட்டு அவரிடம் ரூ.200 கொடுக்க வேண்டும் என்றார்.

    இதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ் மற்றும் அவரது நண்பர்கள் பிரசன்னாவை தாக்கி விரட்டி அடித்தனர்.

    இதனால் கோபம் அடைந்த பிரசன்னா, தனக்கு நேர்ந்தது குறித்து நண்பருக்கு போன் மூலம் தெரிவித்தார். இதையடுத்து அவரது 3 நண்பர்கள் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர்.

    அவர்கள் அதே பகுதியில் சுற்றி வந்த ஆனந்தராஜ் தரப்பினரை ஓட, ஓட விரட்டி வெட்டினர். இதில் ஆனந்தராஜுக்கும், அவரது நண்பர் ஸ்டீபனுக்கும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. உடன் இருந்த மற்ற நண்பர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    தலை, கழுத்தில் பலத்த காயம் அடந்த ஆனந்தராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். ஸ்டீபன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். உடனே கொலை வெறி கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    நள்ளிரவு நேரம் என்பதால் அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனால் கொலை நடந்தது உடனடியாக அப்பகுதியில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை.

    நீண்ட நேரத்துக்கு பின்னர் அப்பகுதி மக்கள் உயிருக்கு போராடிய ஸ்டீபனை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து மாங்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    பலியான ஆனந்தராஜ் உடல் போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே கொலையாளிகள் பிரசன்னா, அவரது நண்பர்கள் தினேஷ், விஜி ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

    நள்ளிரவில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மாங்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ஆவடி பஸ் நிலையம் அருகே மாநில கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருநின்றவூர்:

    ஆவடி, கோவர்த்தனகிரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முகேஷ் (வயது 21). மாநில கல்லூரியில் விலங்கியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று மாலை அவர் ஆவடி பஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அங்கு நின்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் முகேசை வழிமறித்து அரிவாளால் வெட்டி தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த தாக்குதலில் முகேசின் கை, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆவடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ‘ரூட்டுதல’ பிரச்சனையில் மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் முகேஷ் தாக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து பச்சையப்பன் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் யோகேஷ்வரன், மணிகண்டன், விஷால் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே மாணவர் முகேசை ஓட ஓட விரட்டி வெடும் காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சி வாட்ஸ்-அப்களில் பரவி வருகிறது.
    பண்ருட்டி அருகே கோஷ்டி மோதலில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த முத்தாண்டி குப்பம் அருகே உள்ள ஆத்திரிகுப்பத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 47), விவசாயி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் (40) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கலியபெருமாள் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு உறவினர்களான பலராமன் மற்றும் பாலமணிகண்டன் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அரிகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்களான மருதாசலம், வெள்ளக்குட்டி, கலைச் செல்வி, ராஜாமணி ஆகியோருடன் அங்கு வந்தார்.

    அரிகிருஷ்ணன் முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு கலியபெருமாளிடம் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றி இருதரப்பை சேர்ந்தவர்களும் தகராறில் ஈடுபட்டனர். இது கோஷ்டி மோதலாக மாறியது. அரிகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து கலியபெருமாள், பலராமன் மற்றும் பாலமணிகண்டன் ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்தி, கட்டையால் தாக்கினர்.

    இந்த தாக்குதலில் கலியபெருமாள் உள்ளிட்ட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து முத்தாண்டிகுப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் வழக்குபதிவு செய்த அரிகிருஷ்ணன், மருதாசலம் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். தலைமறைவாக உள்ள கலைச்செல்வி, ராஜாமணி மற்றும் வெள்ளக்குட்டியை தேடி வருகிறார்.

    தென்காசியில் பா.ஜ.க. நிர்வாகியின் கடை உள்பட 2 கடைகளுக்கு தீவைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தென்காசி:

    செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து தென்காசி பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏற்கனவே தென்காசி தாலுகா பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    தென்காசி நகர் முழுவதும் போலீசார் ரோந்து சுற்றிவந்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். மதுக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

    இந்தநிலையில் நேற்றிரவு தென்காசியில் 2 கடைகளுக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசியை சேர்ந்தவர் ஜீவன்ராம். இவர் மேல ஆவணி மூலவீதியில் பேன்சி கடை வைத்துள்ளார். இரவு இந்த கடைக்கு மர்ம நபர்கள் தீவைத்தனர். இதனால் கடையில் பெரும் பகுதி தீயில் எரிந்து சேதமானது. இதே போல் வாய்க்கால் பாலத்தில் ராஜாசிங் என்பவரது மளிகை கடைக்கும் தீ வைக்கப்பட்டது. ராஜா சிங் பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து தென்காசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இதுதொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ வைத்த கும்பல் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள நகர தி.மு.க. அலுவலகம் முன்பு பேனர் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேருக்கு மண்டை உடைந்தது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள நகர தி.மு.க. அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். பேனர் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட இந்த மோதலில் தி.மு.க. நகர செயலாளர் நவாப் தலைமையில் ஒரு கோஷ்டியினரும், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் அஸ்லாம் தலைமையில் இன்னொரு கோஷ்டியினரும் மோதலில் ஈடுபட்டனர். இதில் அன்சர், அபியுல்லா ஆகிய 2 பேர் தாக்கப்பட்டு அவர்களது மண்டை உடைந்தது. அவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இது குறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸ் நிலையத்தில் இரு தரப்பிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×