search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞர்கள்"

    • ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
    • பயிற்சிக்கான மொத்த செலவும் தாட்கோ வழங்கும்.

    தஞ்சாவூா்:

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் தமிழ்நாடு மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    தற்போது பெருகி வரும் வேலைவாய்ப்பு சந்தையில் வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தாட்கோ நிறுவனமானது புகழ் பெற்ற தனியார் வங்கியுடன் இணைந்து கணக்கு நிர்வாக பணிக்கான பயிற்சியினை வழங்க உள்ளது.

    இப்பயிற்சியில் சேர 22 முதல் 33 வயது வரை உள்ள ஆதிதிராவிடர்/பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 20 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதிகள் மேற்கொள்ளப்படும்.

    இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் பட்சத்தில் நிறுவனத்தால் நடத்தப்படும் பயிற்சி தேர்வுக்கும் அனுமதி க்கப்படும்.

    இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வங்கி நிதி சேவை காப்பீடுவால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும்.

    மேலும் தனியார் வங்கி நிறுவனங்களில் கணக்கு நிர்வாக பணியில் சேர பயிற்சி அளிக்கும் நிறுவனத்தால் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும்.

    இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோ வழங்கும்.

    மேற்கண்ட தகவலை தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்

    செல்போனில் தொடர்ந்து 6 மணி நேரம் பப்ஜி கேம் விளையாடிய மாணவன் ஒருவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    போபால்:

    இளைஞர்கள், இளம் பெண்களின் மத்தியில் பப்ஜி கேம் வைரலாக பரவி வருகிறது. இதுவரை வெளிவந்த மொபைல் 'கேம்'களிலேயே உயர் தொழில்நுட்பம், கிராபிக்ஸ் காட்சிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டதால் இளைஞர்கள், கல்லூரி பெண்கள் மத்தியில் 'பப்ஜி' விளையாட்டு மோகம் அதிகரித்துள்ளது. இது அவர்களின் நேரத்தை வீணடித்து அந்த விளையாட்டிற்கு அடிமைகளாகவும் உருவாக்குகிறது. கேம் விளையாடுவதை தடுத்தால் அவர்களுக்கு கட்டுப்படுத்த முடியாத கோபம் ஏற்பட்டு விபரீதத்தில் முடிகிறது. இந்த கேம் பல உயிர்களை காவு வாங்கி உள்ளது.

    அவ்வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில், தொடர்ந்து 6 மணி நேரம் பப்ஜி கேம் விளையாடிய 12ம் வகுப்பு மாணவன், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜஸ்தானைச் சேர்ந்த பர்கான் குரேஷி தனது குடும்பத்தினருடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய பிரதேச மாநிலம் நீமுச் நகருக்கு வந்துள்ளார். பப்ஜி விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட பர்கான் குரேஷி, கடந்த 28-ம் தேதி தனியாகச் சென்று செல்போனில் பப்ஜி கேம் விளையாடி உள்ளார். 

    தொடர்ந்து 6 மணி நேரம் தீவிரமாக கேம் விளையாடிய பர்கான் குரேஷி, ஒரு கட்டத்தில் ஆக்ரோஷமாக கத்தியுள்ளர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரது உடலில் எந்த அசைவும் இல்லை. இதயத்தை துடிக்கச் செய்வதற்காக டாக்டர்கள் தீவிர முயற்சி செய்தனர். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. மாணவன் குரேஷி பரிதாபமாக உயிரிழந்தார். பப்ஜி கேமால் தன் மகன் உயிரிழந்ததாக, அவரது தந்தை கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார். 

    செல்போன்களில் போர்க்கள விளையாட்டுகளில் ஈடுபடும் இளைஞர்கள் அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். திரிலிங்கான இந்த கேமை மிகுந்த உற்சாகத்துடன் விளையாடுவதால் இதயம் பாதிக்கப்படுவதாக இதயநோய் மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். குழந்தைகளை அதுபோன்ற கேம்களை விளையாட விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். 

    இதுபற்றி பெற்றோர் தரப்பில் எந்த புகாரும் அளிக்கப்படாததால் விசாரணை நடத்தப்படவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே வன்முறை எண்ணத்தை விதைக்கும் இந்த பப்ஜி கேமை, குஜராத்தின் சில நகரங்களில் காவல்துறை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    உத்தர பிரதேசத்தில் இருசக்கர வாகனத்தில் இளம்பெண்ணை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த 3 இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். #UPWomanMolested #WomanHarassed
    முசாபர்நகர்:

    உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் கந்தர்வாலி கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் நேற்று வீட்டில் இருந்து புறப்பட்டு தனியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 வாலிபர்கள், அந்த பெண்ணுக்கு லிப்ட் கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.

    ஆனால், அந்தப் பெண் கூறிய இடத்திற்குச் செல்லாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்கு கடத்திச் சென்றுள்ளனர். அங்கு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, இளம்பெண்ணை மூவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

    இதுபற்றி பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியை தேடி வருகின்றனர். #UPWomanMolested #WomanHarassed
    இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஐ.டி. ஊழியர்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் கூறினார். #LokSabhaElections2019
    சென்னை:

    தரமணியில் உள்ள ராமானுஜம் ஐ.டி. பார்க் நிறுவனம் சார்பில் பாராளுமன்ற தேர்தலையொட்டி இளம் இந்திய குரல் சின்னம் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தி ரிவர் என்ஜிஓ நிறுவனர் டாக்டர் மதுசரண் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    நான் எனது 25-வது வயதில் அரசியலுக்கு வந்தேன். எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது புரட்சி தலைவி அம்மா அவர்கள் என்னை அரசியலுக்கு அழைத்து எம்.பி.யாக்கினார். என்னைப் போன்ற இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும். உங்களால் தான் அரசியல் மாற்றத்தை கொண்டு வரமுடியும். எனது எம்.பி. பதவியின் மூலம் தென் சென்னை தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.

    மீண்டும் வெற்றி பெற்று மத்திய அரசிடம் போராடி பல்வேறு திட்டங்களை தொகுதி மக்களுக்கு கொண்டு வருவேன். தினமும் 100 பேருக்கு சிகிச்சை அளித்து வந்த நான் இன்று எம்.பி. பதவி மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தொண்டு செய்து வருகிறேன். ஐ.டி. ஊழியர்கள் முதலாளிகளை எளிதில் தொடர்பு கொள்வதற்கான பிரத்யேக திட்டம் ஒன்றை விரைவில் செயல்படுத்துவேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019

    வயது முதிர்ந்தோர் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று புதுவை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி கூறினார். #LSPolls #Rangaswamy
    புதுச்சேரி:

    புதுவை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளராக டாக்டர் நாராயணசாமியை அறிமுகப்படுத்தி கட்சியின் தலைவர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை பாராளுமன்ற தொகுதி அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் பேரியக்கத்தின் வேட்பாளராக அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளின் ஆதரவோடு நாராயணசாமி போட்டியிடுகிறார். டாக்டருக்கு படித்த சிறுவயது இளைஞர்.

    டாக்டர் நாராயணசாமி

    ஒரு இளைஞரை பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம் என்ற பெருமையை நாம் பெற முடியும். இவர் நன்றாக மக்கள் பணியாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. வயது முதிர்வு காரணமாக சோர்வு ஏற்படும். வயது முதிர்ந்தோர் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இளைஞர் என்பதால் வேட்பாளர் நாராயணசாமிக்கு சோர்வு ஏற்படாது. நீண்டநாட்கள் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு பணியாற்றுவார். நிறைய அனுபவத்தையும், நல்ல அனுபவத்தையும் அவர் பெறுவார்.

    என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரசாரம் செய்ய புதுவை வர உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளர் யார்? என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, விரைவில் அறிவிக்கப்படுவார் என ரங்கசாமி தெரிவித்தார்.

    சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவி இழந்துள்ளார். இதனால் தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரசுக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா? என எழுப்பிய கேள்விக்கு மக்களுக்கு நன்றாக தெரியும். யார்-யார் எப்படி? என தெரியும். அனைவரையும் புதுவை மக்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர் என்று ரங்கசாமி தெரிவித்தார். #LSPolls #Rangaswamy

    இந்தியாவில் 73% இளைஞர்கள் ஆழ்ந்து நிம்மதியாக தூங்குவதையே விரும்புவதாக ஒரு சர்வே முடிவில் தெரியவந்துள்ளது. #SleepHealthSurvey #IndianAdults
    புதுடெல்லி:

    இந்தியாவில் தூக்கம் குறித்து இளைஞர்களிடம் சர்வே ஒன்று எடுக்கப்பட்டது. தூக்கத்தின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை சுகாதார தொழில்நுட்பத்தின் சர்வதேச தலைவர் ராயல் பிளிப்ஸ் வெளியிட்டுள்ளார்.

    அதில், 73 சதவீதம் பேர் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த ஆவலாக உள்ளதாகவும், 55 சதவீதம் பேர் நிம்மதியாக தூங்குவதாகவும் கூறியுள்ளது தெரிய வந்துள்ளது.

    இதில் 38 சதவீத இளைஞர்கள் கடந்த 5 ஆண்டுகளில் தங்களின் தூக்கம் மேம்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இது உயர்ந்துள்ளது.



    இந்தியாவில் 31 சதவீதம் இளைஞர்கள் தூக்கத்தினை அதிகரிக்க யோகா செய்வதாக கூறியுள்ளனர்.  மேலும் டெல்லி (47%), மும்பை(84), பெங்களூர்(88), லக்னோ(70%) என குறிப்பிட்ட இடங்களில் தூக்கத்தின் அளவு குறைந்து காணப்படுகின்றது.

    இந்தியாவில் தூக்கத்தின் ஆரோக்கியம், முக்கியத்துவம் மற்றும் சதவீதத்தினை அதிகரிக்க  பிலிப்ஸ் முயற்சி மேற்கொண்டுள்ளார். மேலும் பல்வேறு நாடுகளிலும் 500க்கும் மேற்பட்ட தூக்கத்திற்கான ஆய்வுக் கூடங்களையும், 400 தூக்கத்தில் சிறந்த பயிற்சியாளர்களையும் உருவாக்கியுள்ளது.

    இந்தியா மட்டுமல்லாது, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், நெதர்லாந்து, சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 11,006 பேரிடம் இது குறித்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #SleepHealthSurvey #IndianAdults

    இளைஞர்களின் ஓட்டுபோடும் ஆர்வம் குறித்து டுவிட்டரில் ‘பவர் ஆப் 18’ என்ற பெயரில் கருத்து கேட்கப்பட்டது. அதில், தமிழ்நாட்டில் 98 சதவீத இளைஞர்கள் ஓட்டு போடுவோம் என்று கூறி உள்ளனர். #ParliamentElection
    சென்னை:

    தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகப்படுத்த தமிழக தேர்தல் துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    இதற்காக சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் மூலமாக பல்வேறு வகையான பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் இளைஞர்களின் ஓட்டு போடும் ஆர்வம் எப்படி இருக்கிறது? என்பது குறித்து டுவிட்டரில் ‘பவர் ஆப் 18’ என்ற பெயரில் கருத்து கேட்கப்பட்டது. அதில், 98 சதவீதம் பேர் ஓட்டு போடுவோம் என்று கூறி உள்ளனர்.

    ஜனவரி மாதம் 31-ந் தேதி முடிய வாக்காளர் பட்டியலில் ஆட்கள் சேர்க்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில், 18 வயதில் இருந்து 19 வயதுடைய முதல் முறை வாக்காளர்கள் 8 லட்சத்து 98 ஆயிரம் பேர் இடம்பெற்றுள்ளனர்.

    இது சம்பந்தமாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறும்போது, தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் சேர்க்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.



    ஏராளமான இளைஞர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்காக விண்ணப்பித்த வண்ணம் உள்ளனர். வாக்காளர்களிடம் ஓட்டு போடும் ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு விதமான விழிப்புணர்வுகளையும், பிரசாரங்களையும் மேற்கொண்டு இருக்கிறோம் என்று கூறினார்.

    2016 சட்டசபை தேர்தலின்போது, சமூக வலைத்தளங்களில் மீம்ஸ், வீடியோக்கள் போன்றவற்றை அதிகமாக வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அதேபோல் இப்போதும் பிரசாரம் செய்யப்பட உள்ளது.

    வாக்காளர்கள் ஓட்டு போடும் அவசியத்தை வற்புறுத்தும் வகையில் ரஜினிகாந்த உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வேண்டுகோள் விடுக்கும் விழிப்புணர்வு வாசகங்களையும் வெளியிட உள்ளனர். #ParliamentElection

    இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தாமாகவே முன் வரவேண்டும் என்று ஊட்டி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.

    ஊட்டி:

    ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தேசிய வாக்காளர் தின விழா நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அனைத்து வாக்காளர்களும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் 73 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மீதமுள்ள 27 சதவீத வாக்குகள் பதிவாகவில்லை. எனவே இன்றைய இளைஞர்கள் 31.1.2019 அன்று வெளியிடப்படவுள்ள வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தில் 18 மற்றும் 19 வயதுடைய வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகும் தங்களது பெயர்களை சேர்த்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் தங்களது முகவரி பெயர் நீக்கல், சேர்த்தல், பிழைகள் போன்றவைகள் ஏதேனும் இருப்பின் அதனை சரி செய்து கொள்ள வேண்டும். 

    நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 683 வாக்குச்சாவடி மையங்களும், 354 வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளிடம் பள்ளி பருவத்திலேயே வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் 18 வயதை அடைந்தவுடன் அவர்கள் தாமாகவே வாக்களிக்க முன் வரவேண்டும். நமது மாவட்டத்தில் சராசரியாக 5 லட்சத்து 62 ஆயிரத்து 883 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 625 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 90 ஆயிரத்து 280 பெண் வாக்காளர்களும், 8 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு வாக்காளர் தொடர்பான குறைகள், கருத்துக்கள், தகவல்கள் குறித்து இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.

    முன்னதாக வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் உறுதி மொழி கலெக்டர் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    அனைத்து வாக்காளர்களும் தேர்தல் சம்மந்தப்பட்ட தகவல்கள் பெற கருத்துக்கள் கூற புகார்கள் அளிக்க கலெக்டர் அலுவலகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வாக்காளர் உதவி மையத்தினையும், நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் புதிதாக ஏற்படுத்தப்பட்டள்ள வாக்காளர் விழிப்புணர்வு மையத்தினை அதற்கான வழிகாட்டு புத்தகத்தினை மாவட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு பகுதி மேம்பாடு திட்ட இயக்குநர் அமர்குஷ்வாஹா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித்சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கீதா பிரியா, ஊட்டி கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசுருதீன், உட்பட அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நான் மிகவும் நேர்மையான அரசியல்வாதி. நடிப்பை விட்டு கஜானாவை சுரண்டும் அரசியல்வாதி அல்ல என்று மாணவ- மாணவியர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசினார். #kamalhaasan #makkalneethimaiyam

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னையில் தனியார் கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார். வைஷ்ணவ கல்லூரி மற்றும் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் கமல் பேசியதன் விபரம்:

    நான் இங்கு வந்தது பொது நலத்திற்காக. நாளைய தமிழகம் எங்கே இருக்கிறது என்று சிலர் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

    ஆனால் எனக்கு தெரிகிறது நாளைய தமிழகம் இங்கே என்று. புதிய அரசியலை உருவாக்கும் கூட்டம் இது என்று நம்புகிறேன். நான் உங்களை போன்ற வயதில் பேசி இருந்தால் கிராமங்கள் இந்நேரம் ஸ்மார்ட் சிட்டிகளாக மாறி இருக்கும். அரசியல் என்றால் தெரு தெருவாக உண்டியல் குலுக்குவது அல்ல. அது கடமை.

    உங்கள் பிள்ளைகள் அற்புதமான தமிழ்நாட்டில் வலம் வர வேண்டும் அதற்கான விதையை நீங்கள் விதைக்க வேண்டும். பல்வேறு சாதனைகள் செய்ய முடியும் உங்களால் தமிழகத்திற்கு கை கொடுத்து தூக்கி விட முடியாதா? நாம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டால் கோழைகளின் ராணுவம் பயந்து நடுங்கும்.

    அரசியல் என் கடமை என் வேலை அல்ல. நான் மிகவும் நேர்மையான அரசியல்வாதி. நடிப்பை விட்டு கஜானாவை சுரண்டும் அரசியல்வாதி அல்ல. அரசியலில் வந்து சேவை செய்ய வேண்டியது அல்ல. அது கடமை. சம்பளம் வாங்கிக்கொண்டு மேலும் சுரண்டினால் அது திருட்டு. திருடனுக்கு அளவுகோல் இல்லை.

    இங்கிருந்து தான் அரசியல் தொடங்கவேண்டும். நேர்மையான அரசியல் வேண்டும் என்று நினைப் பவர்கள் அதற்கு அனுமதி அளிக்கவேண்டும். படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நாங்கள் தத்தெடுக்கும் கிராமத்தில் கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்க உள்ளோம். அந்த வேலை முடிந்தவுடன் நானே அதை சுத்தம் செய்ய உள்ளேன். உங்களால் முடிந்தவரை அரசியலுக்கு நேரம் ஒதுக்குங்கள்.

    ஒரு கண்ணை அரசியலில் வைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது இவ்வளவு அநியாயம் நடக்காது. சினிமாவிற்கு பின் என் கடமையை செய்யப்போகிறேன். சொன்னான் செய்தான் சென்றான் என்ற போது நான் எப்போதும் வாழ்ந்துக் கொண்டே இருப்பேன். திட்டம் கொள்கையை காப்பாற்றப்போராடுவது. அதை மாற்றினால் இலக்கை அடையலாம் என்றால் மாற்ற வேண்டும்.

    பொய் சொல்லக்கூடாது என்பது தான் எங்கள் முதல் கொள்கை. ஊழலை பெருக்கி வெளியில் தள்ள வேண்டும். அதற்கு பெரிய ஆயுதம் வேண்டும். அந்த ஆயுதத்தை தேடித்தான் இங்கு வந்துள்ளேன். கல்லூரி மாணவர்கள் முழுவதுமாக வாக்காளர் அட்டை வைத்துள்ளார்களா என்பதை சோதிக்கவேண்டும். எந்த கல்லூரி முதலில் செய்து முடிக்கிறதோ அவர்களே வெற்றியாளர்கள். ஓட்டின் முக்கியத்துவத்தை 100 பேரிடமாவது எடுத்துக்கூற வேண்டும். யாராக இருந்தாலும் யோசித்து வாக்களிக்க வேண்டியது உங்கள் கடமை. நோட்டாவில் வாக்களிப்பது பெருமை அல்ல.

    நல்ல சாயல் தெரியும் போது உதவிக்கரம் நீட்டுங்கள். புதிய வாக்காளர்கள் இளம் வாக்காளர்கள் தான் என்னுடைய ஆயுதம். தமிழன் என்பது தகுதி அல்ல. முகவரி. இந்த அரங்கில் இருக்கும் இளைஞர்கள் மட்டுமல்ல தமிழகத்தில் இருக்கின்ற பல இளைஞர்களும் முதல் முறை வாக்காளர்களாக இருக்கக்கூடும். நீங்கள் அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்வதை மிகவும் பொறுப்புணர்வுடன் செய்திட வேண்டும்.

    நான் அரசியல் கட்சி துவங்கியதற்கு முக்கிய ஊக்கசக்தியே இளைஞர்கள் தான். வாக்குகளை பணம் கொடுத்து வாங்க நினைப்பவர்களுக்கு எதிரான ஆயுதமே இளைஞர்கள் நீங்கள் தான். இன்று வாக்காளர் தினத்தில் தமிழகத்தின் ஒவ்வொரு கல்லூரியில் இருக்கும் மாணவ மாணவியரும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்திட வேண்டும்.

    அதை பிற கல்லூரிகளில் படிக்கும் உங்கள் சக மாணவியரிடம் பகிர்ந்து அவர்களையும் வாக்காளர்களாக பதிவு செய்ய வைத்திட வேண்டும். இதை ஒரு போட்டியாக செய்திட வேண்டுகிறேன். எந்த கல்லூரி முழுவதுமாக அனைத்து மாணவியரையும் வாக்காளர்களாக பதிவு செய்து முடித்திடுகிறார்களோ அவர்களை பாராட்டி மரியாதை மக்கள் நீதி மய்யம் கட்சி செய்திடும்.

    இங்கு மாற்றுத் திறனாளிகள் பலர் இருக்கின்றனர். இவர்களை கருணையுடன் பார்க்க வேண்டும் என்று பலர் சொல்கின்றனர். ஆனால் நான் இவர்களை ஆச்சரியத்துடன் பார்க்கிறேன். வியந்து தான் பார்க்கிறேன். இருப்பதை வைத்துக் கொண்டு மற்றவர்கள் செய்ய முடியாததை இவர்கள் செய்கிறார்கள்.

    இவர்களுக்கு நீங்கள் பரிதாபமோ கருணை காட்ட வேண்டும் என்று விரும்பமாட்டார்கள். அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று தான் சொல்கிறார்கள். தமிழக வீல்சேர் கூடைப்பந்து வீராங்கனைகள் மற்றும் வீரர்களுக்கும் வீல்சேர் வழங்குவதை எனது கடமையாக கருதுகிறேன்’.

    இவ்வாறு அவர் பேசினார். #kamalhaasan #makkalneethimaiyam 

    பிரதமர் மோடியை வீழ்த்த எந்தவித பயமுமின்றி விவசாயிகளும், இளைஞர்களும் முன்வர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். #RahulGandhi #PMModi #Farmers
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடியின் ஆட்சியை கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டு இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

    கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் போது முன்னால் வந்து ஆடுவது சிரமமாக இருக்கும். ஆனால், நாம் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை வீழ்த்துவதற்கு களத்தில் முன்னால் வந்து ஆடி சிக்சர் அடிக்க வேண்டும்.



    விவசாயிகளும், இளைஞர்களும் எந்தவித பயமுமின்றி முன்வர வேண்டும். களத்தில் அவர்கள் முன்னால் வந்து ஆடவேண்டும்.
    கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரதமர் மோடி தடுப்பு ஆட்டத்தை மட்டுமே ஆடி வந்துள்ளார்.
     
    சமீபத்தில் நடைபெற்ற மூன்று  மாநில சட்டசபை தேர்தல்களில் விவசாயிகள் தங்கள் பலத்தை நிரூபித்துக் காட்டியுள்ளனர். இதன்மூலம் உலகுக்கு நமது பலத்தையும் வெளிப்படுத்தி உள்ளோம்.

    கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்யாததை, நாங்கள் ஆட்சிக்கு வந்த 2 தினங்களில் செய்துகாட்டி உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். #RahulGandhi #PMModi #Farmers
    புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம், நாகை, புதுக்கோட்டை மாவட்ட கிராமப்பகுதி மக்களுக்காக 10 ஆயிரம் சப்பாத்திகளை தயார் செய்து இளைஞர்கள் வேன் மூலம் அனுப்பி வைத்தனர். #GajaCyclone
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்க 10 ஆயிரம் சப்பாத்திகள் தயாரிக்கும் பணி நம்பியூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் நம்பியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கோசணம், மலையப்பாளையம், சாவக்கட்டுபாளையம், வேமாண்டம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தன்னார்வத்துடன் கலந்து கொண்டு சப்பாத்தி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இரண்டு நாட்களாக நடைபெற்ற பணியில் அதிக அளவில் இளைஞர்கள் கலந்து கொண்டு சப்பாத்திகளை தயார் செய்தனர்.

    மேலும் நம்பியூர் வட்டார பொதுமக்கள் உதவியுடன் கஜா புயல் சேதப்பகுதிக்களான வேதாரண்யம், நாகை, புதுக்கோட்டை உள்பட மாவட்ட கிராம பகுதி மக்களுக்கு அரிசி, ரொட்டி, தண்ணீர் பாட்டில், குழந்தைகளுக்கு பால் பவுடர், பிஸ்கட், கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி போன்ற பொருட்கள் அனைத்தும் வேன் மூலம் சென்று விநியோகம் செய்யப்பட்டது. #GajaCyclone



    தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புகிறவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருக்க வேண்டும். பதிவை தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

    மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படாது. ஆனால் தொலைதூரக் கல்வி மற்றும் தபால் வழி கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெறலாம்.

    ஏற்கனவே உதவித் தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 ஆண்டு வரை உதவித் தொகை பெற வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். சுயஉறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித் தொகை நிறுத்தப்படும்.

    மேலும் எந்தவிதமான அரசு உதவித்தொகையும் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்றவர்கள் அரசு உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.

    இந்த உதவித் தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.

    விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் ஆண்டு முழுவதும் வழங்கப்படும். மேலும் உதவிதொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. உதவித் தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எந்தவித தடையும் ஏற்படாது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    ×