search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stone throw"

    திருப்பூரில் நேற்று நள்ளிரவில் அரசு பஸ் மீது கல்வீசப்பட்டதில் டிரைவர் மற்றும் பயணிகள் காயம் அடைந்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 1 மணிக்கு திருச்சிக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை கரூரை சேர்ந்த டிரைவர் வெள்ளைச்சாமி ஓட்டி சென்றார்.

    இதில் 40 பயணிகள் பயணம் செய்தனர். பஸ் நல்லூர் அருகே உள்ள பள்ளக்காட்டு புதூர் பகுதியில் சென்று கொண்டு இருந்தது.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் திடீரென பஸ் மீது கல் வீசினார். இதில் முன் பக்க கண்ணாடி உடைந்து சிதறியது. இந்த கண்ணாடி டிரைவர் வெள்ளைச்சாமி மற்றும் பஸ்சில் பயணம் செய்த ஒரு பெண், இரு குழந்தைகள் மீது விழுந்தது.

    இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். கண்ணாடி டிரைவர் மீது விழுந்ததும் பஸ் கட்டுப்பாட்டை இழந்தது. சுமார் 500 அடி தூரம் தாறுமாறாக ஓடியது. டிரைவர் சுதாரித்து கொண்டு பஸ் விபத்தில் சிக்காமல் சாதுர்யமாக செயல்பட்டு நிறுத்தினார்.

    இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் உயிர் தப்பினார்கள். கண்ணாடி உடைந்ததில் காயம் அடைந்த டிரைவர் உள்பட 4 பேரும் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.

    விபத்து குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பஸ் கல் வீசப்பட்ட பகுதியில் ஒரு திருமண மண்டபம் உள்ளது. அங்கு திருமணம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள ஏராளமானோர் வந்து இருந்தனர்.

    அவர்கள் தான் கல் வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இது தொடர்பாக திருமணத்திற்கு வந்த 10 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது பஸ் மீது கல் வீசியது திருப்பூர் ராக்கியா பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மனோஜ் குமார் (20) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவர் எதற்காக பஸ் மீது கல்வீசினார். குடிபோதையில் வீசினாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரியில் இன்று பா.ஜ.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசு பேருந்து மீது கற்களை வீசி தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #BJPBandh #PuducherryBandh
    புதுச்சேரி:

    சபரிமலையின் புனிதத்தை காக்கக்கோரியும், பக்தர்களிடம் கெடுபிடியாக நடந்துகொள்ளும் கேரள அரசை கண்டித்தும் பாஜக சார்பில் புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    முன்னெச்சரிக்கை காரணமாக புதுவையில் பெருமளவிலான தனியார் பேருந்துகள் இன்று இயங்கவில்லை. பல தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    புதுச்சேரி மற்றும் தமிழக அரசு பேருந்துகள் போலீசார் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. போராட்டத்தினால் வன்முறை உருவாகாமல் தடுப்பதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


    இந்நிலையில் தமிழக அரசு பேருந்து மீது கற்களை வீசி சிலர் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த முழுஅடைப்பு தேவையற்றது என்று பல்வேறு அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன. கேரள மாநிலத்தில் உள்ள பிரச்சனைக்காக புதுவையில் பந்த் போராட்டம் நடத்துவது தேவையற்றது என்றும், யாராவது அதிகாரத்தை கையில் எடுத்து செயல்பட்டால் அவர்கள் மீது சட்டம் பாயும் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #BJPBandh #PuducherryBandh
    விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஏற்பட்ட கல்வீச்சு சம்பவம் தொடர்பாக வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருதரப்பை சேர்ந்த 17 பேரை கைது செய்தனர்.
    வந்தவாசி:

    வந்தவாசியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக நேற்று முன்தினம் ஊர்வலமாக புறப்பட்டனர்.

    அப்போது நெமந்தகார தெருவில் ஒருவர் இறந்துவிட்டதால் அந்த தெரு வழியாக செல்லக்கூடிய ஊர்வலம் மக்தும்மரைக்காயர் தெரு வழியாக சென்றது.

    அந்த வழியாக ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதிக்காமல் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர். அப்போது ஊர்வலத்தினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. இதில் ஊர்வலத்தில் சென்ற 2 பேர் காயமடைந்தனர். அதேபோன்று பழைய பஸ்நிலையம் அருகே விநாயகர் சிலை ஊர்வலம் சென்றபோது ஊர்வலத்தினர் மீது ஒரு தரப்பினர் கல்வீசி தாக்கினர். ஊர்வலத்தினரும் பதிலுக்கு கல்வீசினர்.

    இந்த சம்பவத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு போலீஸ்காரர் உள்பட பலர் காயமடைந்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர், வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஏற்பட்ட கல்வீச்சு சம்பவம் தொடர்பாக வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருதரப்பை சேர்ந்த 17 பேரை கைது செய்தனர்.
    மும்பையில் இருந்து திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவிலுக்கு வந்த ரெயிலை கல்வீசி தாக்கிய பிளஸ்-1 மாணவர் உள்பட 3 பேர் சிக்கினர்.
    நாகர்கோவில்:

    மும்பையில் இருந்து திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவிலுக்கு நேற்று மாலை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் பார்வதிபுரம் ரெயில்வே பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தண்டவாளம் பகுதியில் நின்று கொண்டிருந்த சிலர் ரெயில் மீது கற்களை சரமாரியாக வீசி விட்டு தப்பியோடிவிட்டனர்.

    இதில் கல் தலையில் பட்டதில் இளம்பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதை பார்த்ததும் சக பயணிகள் அவருக்கு முதல் உதவி சிகிச்சைகள் அளித்தனர். அதற்குள் ரெயில் நாகர் கோவில் ரெயில்நிலையத்தை வந்தடைந்தது. நடந்த விவரங்களை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசில் தெரிவித்த அந்த பெண் அது பற்றி புகாரும் செய்தார்.

    இதை தொடர்ந்து நாகர் கோவில் ரெயில்வே பாது காப்புப்படை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பெண் புகாரில் கூறிய இடத்திற்கும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். போலீசார் வருவதை கண்டதும் 3 பேர் அங்கிருந்து தப்பியோடினார்கள்.

    உடனே போலீசார் விரட்டிச் சென்று அவர்கள் 3 பேரையும் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தான் ரெயில் மீது கல் வீசியவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களில் பிளஸ்-1 மாணவராவார். மற்ற 2 பேரும் சிறுவர்கள் ஆகும்.

    இதை தொடர்ந்து அந்த 3 பேரின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் கொடுத்து போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். மாணவர் மற்றும் சிறுவர்களின் எதிர் காலம் கருதி அவர்கள் மீது போலீசார் வழக்கு தொடர வில்லை. அதேசமயம் கல் வீச்சில் பெண் காயம் அடைந்தது பற்றி அவர்களிடம் எடுத்துக்கூறிய போலீசார் கடுமையான எச்சரிக்கைக்கு பிறகு அவர்கள் 3 பேரையும் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
    மதுரையில் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கியவர் குறித்து போலீசில் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வாலிபரை தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்ததை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலைக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்தும் படிப்படியாக நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் ராமநாதபுரத்தில் இருந்து கோவை செல்லும் அரசு பஸ் மதுரை தத்தனேரி சாலையில் சென்றது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த டிரைவர் முருகேசன் பஸ்சை ஓட்டினார். அப்போது 25 வயது வாலிபர் பஸ் மீது கல்வீசினார்.

    இந்த சம்பவத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. உடனடியாக பஸ்சை நிறுத்திய டிரைவர் முருகேசன், கல்வீசிய வாலிபரை பிடிக்க முயன்றார்.

    ஆனால் அதற்குள் இருளில் அந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து செல்லூர் போலீசில் டிரைவர் முருகேசன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் மீது கல்வீசிய மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

    மதுரை நேதாஜி ரோட்டைச் சேர்ந்த முருகன் (43), தாணப்ப முதலி தெருவில் டீ ஸ்டால் மற்றும் பேக்கரி நடத்தி வருகிறார். இவர் நேற்று கடையை திறந்து வியாபாரம் பார்த்தார்.

    அப்போது அங்கு வந்த தி.மு.க. பிரமுகர் மணிகண்டன் வாக்குவாதம் செய்து கடையை சூறையாடியதாக திலகர்திடல் போலீசில் முருகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாணரப்பேட்டையில் ரோட்டில் நின்றவர்களை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    வாணரப்பேட்டை அன்னை இந்திராகாந்தி நகரை சேர்ந்தவர் முகமதுஷெரிப் (வயது 32). சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் நின்று கொண்டிருந்தார் அப்போது வாணரப்பேட்டையை சேர்ந்த அசோக், தீனதயாளன் ஆகியோர் சேர்ந்து முகமதுஷெரீப்பை திட்டி கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதேபோல் பெரியார் நகரை சேர்ந்த சதீஷ்குமார் (21) தேங்காய்த்திட்டு பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரையும் தீனதயாளன் அவரது நண்பர்கள் சேர்ந்து தாக்கினர்.

    இதையடுத்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தீனதயாளனை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். அப்போது கல்லூரி பஸ் மீதும் கற்கள் வீசப்பட்டது.

    மதுரை:

    மதுரை விளாச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு அபராதம் விதிப்பது, செல்போனில் பேச அனுமதி மறுப்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    மேலும் கல்லூரியில் உள்ள தனியார் ஒப்பந்த காவலாளிகள் அடிக்கடி சோதனை என்ற பெயரில் நிறுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு மாணவ -மாணவிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் அவர்கள் திரண்டு நின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்றனர். இந்த நேரத்தில் கல்லூரி வளாகத்தில் கல்லூரி பஸ் மீது கற்கள் வீசப்பட்டது. இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்தன.

    இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் காலவரையற்ற விடுமுறையை அறிவித்தது. அதன் பின்னர் மாணவ-மாணவிகள் கலைந்து சென்றனர்.

    திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலை குறித்து பரவிய தகவலால் தஞ்சை மாவட்டத்தில் 6 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. #karunanidhi #dmk

    தஞ்சாவூர்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் கருணாநிதிக்கு திடீரென உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டதாக வதந்தி கிளம்பியது. இதனால் சென்னை காவேரி ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர்.

    இதேபோல் தமிழகம் முழுவதும் இந்த செய்தி பரவியதால் தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கருணாநிதிக்கு உடல்நிலை குறித்து பரவிய தகவலால் தஞ்சை மாவட்டத்தில் 6 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

    தஞ்சை பழைய பஸ் நிலையம், ரெயிலடி, மருத்துவக்கல்லூரி ஆகிய இடங்களில் தலா ஒரு அரசு பஸ்களின் முன்பக்க கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதேபோல் கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூர் மற்றும் செட்டி மண்டபம் பகுதியிலும் தலா ஒரு அரசு பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

    தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே வெட்டிக்காடு பகுதியில் நேற்று இரவு சென்ற ஒரு அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

    நேற்று இரவில் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் 6 அரசு பஸ்கள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

    இந்த நிலையில் இரவில் அரசு பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்ததால் இன்று பஸ்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன.

    கும்பகோணம் பஸ் நிலையம் இன்று காலை பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பஸ்கள் அனைத்தும் பாதுகாப்பாக கும்பகோணம் அரசு போக்குவரத்து பணிமனையில் நிறுத்தப்பட்டன.

    தற்போது தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #karunanidhi #dmk

    ×