search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோட்டம்"

    • வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே இருக்கும் கிராமத்துக்குள் புகுவது தொடர்கதையாகி வருகிறது.
    • வனப்பகுதிக்குள் சென்ற சிறுத்தை எந்த நேரமும் மீண்டும் கிராமத்துக்குள் வரலாம் என மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே இருக்கும் கிராமத்துக்குள் புகுவது தொடர்கதையாகி வருகிறது.

    தாளவாடி வனச்சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவதுயும் தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்துக் குட்பட்ட கும்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இம்ரான் (37).விவசாயி. இவர் தனது விவசாய தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல மாட்டுக்கொட்டையில் ஆடு, மாடுகளை கட்டி வைத்திருந்தார்.

    இந்நிலையில் வெளியே சென்று விட்டு மதியம் திரும்பி வந்து பார்த்த போது மாட்டுக் கொட்டையில் கட்டி வைத்திருந்த 3 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து குதறிய நிலையில் இறந்து கிடந்தது. இது பற்றி தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை கால் தடைகளை ஆய்வு செய்தனர்.

    இதில் சிறுத்தை கடித்து ஆடு பலியானது தெரிய வந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். வனப்பகுதிக்குள் சென்ற சிறுத்தை எந்த நேரமும் மீண்டும் கிராமத்துக்குள் வரலாம் என மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தனக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை, மா உள்ளிட்ட மரங்களை அதிகளவில் வளர்த்து வருகிறார்.
    • தென்னங் கன்றை ஒரு கூடையில் எடுத்து திப்பணம்பட்டியில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களிடையே நேரில் சென்று காண்பித்து வருகிறார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்-மீனாட்சிபுரம் சி எஸ்.ஐ.சர்ச் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் தானியேல்(வயது 80). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை, மா உள்ளிட்ட மரங்களை அதிகளவில் வளர்த்து வருகிறார். தனது தோட்டத்தில் பதியம் வைத்து புதிதாக வளர்க்கப்படும் மரக்கன்று களை தனது காலி விளை நிலங்களில் ஊன்றி வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பதியம் வைத்து தென்னங்கன்றுகள் வளர்த்தபோது அதில் ஒரு தேங்காயில் இருந்து இரு தென்னங்கன்றுகள் முளைவிட்டு வந்ததை கண்டு ஆச்சரியமடைந்தார். ஏனெனில் ஒரு தேங்காயில் இருந்து ஒரு தென்னை கன்று தான் எப்பொழுதும் முளைக்கும். ஆனால் இதில் 2 தென்னங்கன்றுகள் முளைத் துள்ளது. தற்பொழுது ஓய்வு பெற்ற ஆசிரியர் தானியேல் வளர்ந்த அந்த தென்னங் கன்றை ஒரு கூடையில் எடுத்து திப்பணம்பட்டியில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களிடையே நேரில் சென்று காண்பித்து வருகிறார்.

    மேலும் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் அதிசயமாக வளர்ந்துள்ள தென்னங்கன்றுகளை தொடர்ந்து காண்பிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

    தானியேல் தான் செல்லும் இடங்களுக்கு கையிலேயே அந்த தென்னங்கன்றை எடுத்துச் செல்வதால் பொதுமக்களும் அதனை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

    • தோட்டத்தில் மக்காச்சோளம், மஞ்சள், வெற்றிலை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.
    • எலத்தூர் பேரூராட்சி மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனையுடன் கூறினார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வரதராஜன். இவர் 4 ஏக்கர் விவசாய தோட்டத்தில் மக்காச்சோளம், மஞ்சள், வெற்றிலை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

    கடந்த சில நாட்களாக தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், வெற்றிலை உள்ளிட்ட பயிர்களை பன்றிகள் மிகவும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து விவசாயி வரதராஜன் கூறுகையில் எலத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சிலர் இறைச்சிக்காக பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பன்றிகளை பட்டியில் அடைத்து வளர்க்காமல் திறந்தவெளியில் நூற்றுக்கணக்கான பன்றிகளை வளர்ப்பதால் தோட்ட த்து பகுதிகளில் புகுந்து அறுவடைக்கு தயாராக உள்ள மக்காச்சோளம், கரும்பு பயிர்களை சேதம் செய்ததால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    விவசாயிகள் நாங்கள் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து பயிர்களை வளர்த்தால் ஒரே நாளில் இந்த பன்றிகள் மிகுந்த சேதத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து எலத்தூர் பேரூராட்சி மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனையுடன் கூறினார்.

    எனவே இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து பயிர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏராளமான பொதுமக்களும் விவசாய தோட்டங்களும், கருப்பட்டி, கற்கண்டு, உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    • வாழை விவசாயிகள், வாழை குலைகளை வெட்டி தண்ணீரில் எடுத்து கொண்டு வருகின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

    தூத்துக்குடி மாநகர பகுதிகள் மட்டுமின்றி திருச்செந்தூர், உடன்குடி, மெஞ்ஞானபுரம், ஆழ்வார்திருநகரி, ஏரல், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிய ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக மாறின.

    இப்பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது. வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

    அதேநேரம் இதுவரை பல ஆண்டுகளாக மழை இல்லாத பகுதிகளாக இருந்து வந்த உடன்குடி பகுதியில், கனமழை காரணமாக அனைத்து குளங்கள், குட்டைகள், ஆறு மற்றும் ஏராளமான தற்காலிகமான நீர் பிடிப்பு பகுதிகள் எல்லாமே சுமார் 5 ஆண்டுகளுக்கு பின் முழுமையாக நிரம்பியது.

    இந்த ஆண்டு எல்லாமே முழுமையாக நிரம்பிவிட்டது என்று விவசாயிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரு சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.

    ஸ்ரீவைகுண்டம் அணையில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அத்துடன் இணைந்த சடைய நேரி கால்வாயில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக வந்து கொண்டிருந்தது.

    இதனால் உடன்குடி அருகே உள்ள சடையனேரி குளம் கிழக்கு பகுதி உடைந்தது, அதில் இருந்து வெளியேறிய வெள்ளநீர் உடன்குடி ஒன்றிய பகுதியில் உள்ள மெஞ்ஞானபுரம், மானிக்கபுரம், லட்சுமிபுரம், வேப்பங்காடு, மருதூர் கரை, செட்டியாபத்து, பரமன்குறிச்சி, என்.எஸ். நகர், சிங்கராயபுரம், வட்டன் விளை, வெள்ளாளன் விளை, சீயோன்நகர், செட்டி விளை, சிதம்பரபுரம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது.

    இதனால் ஏராளமான பொதுமக்களும் விவசாய தோட்டங்களும், கருப்பட்டி, கற்கண்டு, உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    தேக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி மதிப்புள்ள கருப்பட்டி, கற்கண்டு அனைத்தும் மழையிலும், வெள்ள நீரிலும் நனைந்தும் நாசமாயின.

    மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையம், அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பரமன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியன தண்ணீர் சூழ்ந்து இருந்ததால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் தற்காலிகமாக சுமார் 10 நாட்கள் வேறு இடங்களில் செயல்பட்டது. இதன் காரணமாக உடன்குடியில் இருந்து மெஞ்ஞானபுரம் செல்லும் நேர்வழி சாலையும், உடன்குடியில் இருந்து பரமன் குறிச்சி செல்லும் நேர்வழிச் சாலையும் முழுமையாக துண்டிக்கப்பட்டது.


    நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு செல்லும் மக்கள் சுமார் 25 நாட்களாக பல கிலோமீட்டர் சுற்றி சுற்றி சென்று வந்தனர்.

    இந்நிலையில், வட்டன் விளை மற்றும் சீயோன்நகர் பகுதியில் முதல் கட்டமாக ஏராளமான பம்புசெட், நீர் மோட்டார் மூலம் தேங்கி கிடந்த தண்ணீரை அருகில் உள்ள செம்மணல் தேரியில் கொண்டு சேர்க்கும் பணி இரவு பகலாக 10 நாட்கள் நடந்தது.

    தண்ணீர் அப்புறப்படுத்தவில்லை. குறையவும் இல்லை, அடுத்து மெஞ்ஞானபுரம் அருகே உள்ள மருதூர் கரையில் சாலையை உயர்த்தி 15 நாட்களுக்கு பின் போக்குவரத்தை தொடங்கினர். உடன்குடியில் இருந்து செட்டியாபத்து மெஞ்ஞான புரம் வழியாக நெல்லைக்கு போக்குவரத்து தொடங்கியது.

    அதன் பின்பு சியோன் நகர் அருகே பல லாரி மணல் மற்றும் கற்களை கொட்டி தரைப் பாலத்தை சுமார் 25 அடி உயர்த்தி 25 நாட்களுக்குப் பின் போக்குவரத்தை தொடங்கினர்.

    ஆனாலும் இன்று வரை சுமார் 40 நாட்கள் ஆகியும் வட்டன் விளை ஊருக்குள் பரமன்குறிச்சி மெயின் ரோட்டில் இருந்து உள்ளே வர முடியாத அளவிற்கு சுமார் 10 அடி ஆழத்திற்கு இன்னும் தண்ணீர் தேங்கிகிடக்கிறது.

    இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டத்தில் உள்ள தேங்காய்கள் மற்றும் விவசாய பொருட்ககளை தோட்டத்தில் இருந்து கொண்டு வருவதற்கு தற்காலிக படகு போல அமைத்து அதில் சென்று தேங்காய் மற்றும் விவசாய பொருட்களை வெளியில் கொண்டு வருகிறார்கள்.

    தோட்டத்திற்கு நீச்சலில் செல்கிறார்கள். வாழை விவசாயிகள், வாழை குலைகளை வெட்டி தண்ணீரில் எடுத்து கொண்டு வருகின்றனர்.


    இன்று வரை விவசாயிகள் மற்றும் பல தரப்பட்ட மக்கள் வடியாத வெள்ளத்தில் தங்களது வாழ்க்கையை கடத்தி வருகின்றனர்.

    இது பற்றி விவசாயிகள் கூறும் போது, நிரந்தரமாக வடிகால் அமைத்தால் தான் இனி தண்ணீர் வடியும். தண்ணீர் வடிவதற்கு எந்த விதமான சூழ்நிலையும் தற்போது இல்லை.

    தண்ணீர் தேங்கி 40 நாட்களை கடந்து விட்டதால் அதிகமான அளவில் சேறும்சகதியும் சேர்ந்து விட்டதால் தேங்கியதண்ணீர் பூமிக்குள் இறங்கும் நிலைமை இல்லை.

    அதனால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வடிகால் அமைத்தால் தான் எங்கள் விவசாயங்களை நாங்கள் காப்பாற்ற முடியும். மீண்டும் புதியதாக விவசாயம் செய்ய முடியும் என்றனர்.

    தரைமேல்பிறக்க வைத்தான், எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான் என்ற ஒரு சினிமாபாடலை பாடிக்கொண்டு விவசாயிகளும், கிராம மக்களும் தண்ணீருக்குள் சென்று தங்கள் தோட்டத்தில் உள்ள விவசாய பயிர்களை வெளியே கொண்டு வருவது மிகவும் பரிதாபமாகவும், பரிதவிப்பாகவும் உள்ளது.

    • சேலம் மாவட்டம் கெங்கவல்லி வனச்சரகர் சிவக்குமார் முயற்சியில் திண்டுக்கல் நத்தம் பகுதியில் இருந்து விதைகள் சேகரித்து மருத்துவ குணம் கொண்ட 2,000 சிகப்புப் புளி மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
    • சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக முத்தம்பட்டியில் ஒரே இடத்தில் 100 சிகப்புப் புளி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி வனச்சரகர் சிவக்குமார் முயற்சியில் திண்டுக்கல் நத்தம் பகுதியில் இருந்து விதைகள் சேகரித்து மருத்துவ குணம் கொண்ட 2,000 சிகப்புப் புளி மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவை சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக நடவு செய்யப்படுகிறது. வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை தன்னார்வலர்கள் வேண்டுகோளின் பேரில் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா செந்தில்குமார் தலைமையில் ஊராட்சிக்கு சொந்தமான மரத்தோட்டத்தில் 100 சிகப்புப் புளி மரக்கன்றுகள் நடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக முத்தம்பட்டியில் ஒரே இடத்தில் 100 சிகப்புப் புளி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. அருகி வரும் இந்த மரக்கன்றுகளை முறையாக பராமரித்து பாதுகாத்து வளர்க்க உரிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

    • 6 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
    • தோட்டத்தில் முருங்கைக்கீரை பறிப்பதற்காக சென்றுள்ளார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் ஊராட்சி வானவன் மகாதேவி கிராமத்தை சேர்ந்தவர் காளிதாசன். இவரது மனைவி கனகா (வயது 30). இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

    நேற்று கனகா வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் முருங்கைக்கீரை பறிப்பதற்காக சென்று கீரை பறித்துக் கொண்டிருந்தார் அப்போது கீழே இருந்த பாம்பு கடித்து விட்டது.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி கொண்டு போய் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி கனகா இன்று அதிகாலை இறந்துவிட்டார். புகாரின் பேரில் தலைஞாயிறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • 800-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக துப்பாக்கி ஏந்திய படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மரங்களில் குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்து வருகிறார்கள்.

    பரமத்திவேலுார்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா வடகரையாத்தூர் ஊராட்சி கரபாளையத்தில் கடந்த மார்ச் 11-ந் தேதி ஆடு மேய்க்க சென்ற பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்லம் ஆலை கொட்டைகையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் கடந்த மே மாதம் 13-ந் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த அறையை உடைத்த மர்ம நபர்கள் வட மாநில தொழிலாளர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தனர். இதில் 4 வட மாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ராஜேஷ் என்பவர் உயிரிழந்தார். இதனால் ஜேடர்பாளையம் பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக துப்பாக்கி ஏந்திய படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதுப்பாளையம் பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழை மற்றும் பாக்கு மரங்களை வெட்டி சாய்த்தனர்.

    இதேபோல் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (வயது 60). இவரது விவசாய தோட்டம் ஜேடர்பாளையம் அருகே சின்ன மருதூர் செல்லும் வழியில் விவசாய நிலம் உள்ளது. அதில் 2 ஏக்கரில் சுமார் 3,000 பாக்கு மரம் நடவு செய்துள்ளார். இந்நிலையில் பக்கத்து தோட்டத்துக்காரர் தங்கமுத்து அதிகாலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வந்தபோது சவுந்தர்ராஜன் தோட்டத்தில் சுமார் 1800-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தங்கமுத்து நிலத்தின் உரிமையாளர் சவுந்தர்ராஜனுக்கும், ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீஸ் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த பகுதியில் உள்ள மரங்களில் குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்து வருகிறார்கள் மேலும் பாக்கு மரம் இருக்கும் இடத்திற்கு நடந்து சென்றவர்களின் கால் தடத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஊர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில் எவ்வித சலனமும் இன்றி மர்ம நபர்கள் தைரியமாக அடுத்தடுத்து வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றன. பாக்கு மரம் வெட்டப்பட்ட பகுதிகளுக்கு போலீசார், வருவாய்த்துறையினர் தவிர மற்ற யாரையும் அனுமதிக்கவில்லை.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தோட்டத்தில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வி.முத்துலிங்கா புரத்தில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக வருவாய் ஆய்வாளர் ரமேசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குறிப்பிட்ட இடத்தில் அவர் சோதனை நடத்தினார். 


    அப்போது தங்கப்பாண்டி யன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை அமைப்பதாக கூறி அங்கு அய்யனார் (30) என்பவர் பட்டாசுகள் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  


    இதுகுறித்து கிருஷ்ணன் கோவில் போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் தோட்டத்தில் இருந்த 1000, 2000 வாலா சரவெடிகள், 27 கிலோ உதிரி வெடிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 


    மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அய்யனாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×