என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ukraine russia war"
- உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டைக் கடந்துள்ளது.
- ராணுவ உதவிகள் வழங்கிய பின்லாந்திற்கு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார்.
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியது. ரஷிய படைகளின் தாக்குதல்களை உக்ரைன் பாதுகாப்பு படை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவி மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.
உக்ரைனின் உள்கட்டமைப்புகளை தகர்க்கும் நோக்கில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டு இருளில் மூழ்கியுள்ளது. சர்வதேச நாடுகளில் தங்களுக்கு மேலும் ராணுவ உதவிகளை வழங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்து வருகிறார்.
இந்நிலையில், போர் நடந்து வரும் சூழ்நிலையில் உக்ரைனுக்கு பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரின் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்று உரையாடினார்.
ஓராண்டு கால போரில் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்கியதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பின்லாந்திற்கு நன்றி தெரிவித்தார்.
- சுமார் 7 மணி நேரம் அலை அலையாக ஏவுகணைகளை வீசியதில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
- இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கீவ்:
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்திய ரஷியா, கிழக்கு உக்ரைனில் உள்ள சில பகுதிகளை கைப்பற்றியதுடன், தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதேசமயம், ரஷிய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இந்த போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்குகின்றன.
இந்நிலையில், உக்ரைனில் மக்கள் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. நேற்று இரவு முழுவதும் சுமார் 7 மணி நேரம் அலை அலையாக ஏவுகணைகளை வீசியதில், குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
லிவிவ் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஏவுகணை தாக்கியதில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. இதில் 5 பேரும், தினிப்ரோ பிராந்தியத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 'ஆக்கிரமிப்பாளர்களால் பொதுமக்களை மட்டுமே அச்சுறுத்த முடியும், அவ்வளவுதான் அவர்களால் முடியும். ஆனால் இதுபோன்ற தாக்குதல்கள் அவர்களுக்கு உதவாது' என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
- ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் ராணுவம் போரிட்டு வருவதற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்கும் பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது.
- டீசல் ஜெனரேட்டர்களில் அணுமின் நிலையம் இயங்குகிறது.
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து வருகிறது. இதில் கிழக்கு உக்ரைனில் உள்ள சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை செய்து வருகின்றன.
ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் ராணுவம் போரிட்டு வருவதற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்கும் பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது.
ராக்கெட் தாக்குதல்களின் விளைவாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜப்போரிழ்ழியா அணுமின் நிலையம் மற்றும் உக்ரேனிய மின் அமைப்புக்கு இடையேயான கடைசி தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், போரை தொடர்ந்து உக்ரைனில் உள்ள ஜப்போரிழ்ழியா அணுமின் நிலையத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், அதற்கு மாற்றாக, தற்போது டீசல் ஜெனரேட்டர்களில் அணுமின் நிலையம் இயங்குவதாகவும் அந்நாட்டின் அணுசக்தி ஆபரேட்டர் ஒருவர் தெரிவித்தார்.
- ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த சூழ்நிலையும் இல்லை.
- மேற்கத்திய போர் விமானங்கள் வழங்குவது உக்ரைன் வெற்றிக்கு உதவும் என்று நம்புகிறோம்.
கிவ்:
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து வருகிறது. இதில் கிழக்கு உக்ரைனில் உள்ள சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன.
உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் ராணுவம் போரிட்டு வருவதற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்கும் பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனுக்கு போர் விமானங்கள் வழங்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார். அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அமெரிக்கா எங்களுக்கு ஆதரவு அளிக்கிறது என்பது முழு உலகிற்கும் ஒரு முக்கியமான செய்தியாகும். நாங்கள் வெற்றி பெறுவோம் என்று அமெரிக்கா நம்புகிறது. எங்களுக்கு எப்-16 போர் விமானங்கள் கண்டிப்பாக தேவை. இந்த போர் விமானங்கள்தான் ரஷியாவுக்கு எதிரான உக்ரைன் வெற்றியை தீர்மானிக்கும். உக்ரைன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபரிடம் முறையிட்டு இருக்கிறோம். அது செயல்படுத்தப்படும் என்று அவர் என்னிடம் கூறினார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடந்த விவாதத்தின் போது, தற்போது போர் விமானங்கள் தேவையில்லை என்று ஜோ பைடனும், அவரது உதவியாளர்களும் கூறினர். அப்போது எங்களுக்கு அந்த போர் விமானங்கள் தேவை என்று கூறினேன்.
மேற்கத்திய போர் விமானங்கள் வழங்குவது உக்ரைன் வெற்றிக்கு உதவும் என்று நம்புகிறோம். இதனால் எங்களுக்கு போர் விமானங்கள் அவசரமாக தேவை.
ரஷிய அதிபர் புதினை நம்ப முடியாது என்பதால் அவரை சந்திக்கமாட்டேன். ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த சூழ்நிலையும் இல்லை. ஏனென்றால் புதின் அவரது வார்த்தையை கடைபிடிக்கவில்லை. அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
எங்கள் நாட்டில் இருந்து ரஷிய படைகள் வெளியேற வேண்டும். அதன்பிறகே தூதரக ரீதியாக பேச்சில் சேர முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது.
- ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் கடந்த மாத இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பெர்லின்:
ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது. சமீப ஆண்டுகளாக ஜெர்மனியுடன் தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய அளவில் வர்த்தக நடைமுறைகளை மேற்கொள்ளும் நாடாகவும் சீனா இருந்து வருகிறது.
ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் கடந்த மாத இறுதியில் இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில், பிரதமர் மோடியைச் சந்தித்து இருதரப்பு, மண்டல மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டார்.
ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக ஜெர்மனி திகழ்கிறது என்று பிரதமர் மோடி பேசும்போது குறிப்பிட்டார். இந்தப் பயணத்தில் இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை கொண்டு வர அர்ப்பணிப்புடன் செயல்பட உள்ளேன். இந்த முக்கிய விஷயத்தில் தனிப்பட்ட முறையில் நானே செயல்படுவேன் என அதிபர் ஸ்கால்ஸ் கூறினார். இதன்பின், நாடு திரும்பிய அவர் இரு தினங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். இதில், வாஷிங்டன் நகரில் அந்நாட்டு அதிபர் பைடனை நேரில் சந்தித்துப் பேசினார்.
சமீபத்தில் அமெரிக்க அதிகாரிகள், ரஷியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கும் நடவடிக்கைகளை சீனா தொடங்க கூடும். ஆனால், அதில் இருந்து அவர்கள் விலகி இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடும் வகையில் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், அமெரிக்க பயணம் மேற்கொண்ட ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், உக்ரைனில் நடந்து வரும் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக ஆயுதங்களை சீனா வழங்கினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். ஆனால், சீனா அப்படி செய்யாமல் அதில் இருந்து விலகி இருக்கும் என்றே நான் நேர்மறையாக எண்ணுகிறேன் என அவர் கூறியுள்ளார்.
ஒருவேளை ரஷியாவுக்கு ஆயுதங்களை சீனா வழங்கினால் அந்நாடு மீது தடை விதிப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அதுபோன்று நடக்கக்கூடாது என நாங்கள் தெளிவுப்பட கூறி வருகிறோம். இந்த விவகாரத்தில் எங்களது கோரிக்கை வெற்றி பெறும் என்று நல்ல முறையிலேயே எண்ணுகிறேன். ஆனால், இந்த விஷயத்தில் நாங்கள் கவனம் செலுத்தி, மிக மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லையெனில் சீனா அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.
- பக்முத் நகரில் ரஷிய படைகள் நடத்திய கடுமையான தாக்குதல்களால் அந்நகரம் முற்றிலும் அழிந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்தது.
- பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றுவதில் ரஷிய படைகள் மிக நெருக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கிவ்:
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து கொண்டு இருக்கிறது.
இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. குறிப்பாக கிழக்கு உக்ரைனை முழுமையாக தன்வசப்படுத்த ரஷியா முயற்சித்து வருகிறது.
டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பக்முத் நகரை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றன. அதை எதிர்த்து உக்ரைன் ராணுவமும் சண்டையிட்டு வருகிறது.
பக்முத் நகரில் ரஷிய படைகள் நடத்திய கடுமையான தாக்குதல்களால் அந்நகரம் முற்றிலும் அழிந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்தது.
இந்த நிலையில் பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றுவதில் ரஷிய படைகள் மிக நெருக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பல மாத சண்டைக்கு பிறகு பக்முத் நகரம், ரஷியா வசம் செல்லும் நிலையில் உள்ளதாகவும், அந்நகரத்தின் பெரும்பாலான பகுதிகளை ரஷியா கைப்பற்றி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக ரஷியாவின் வாக்னர் தலைவர் கூறும்போது, பக்முத் நகர் கிட்டத்தட்ட முழுமையாக ரஷியா படைகளால் சூழப்பட்டுள்ளது. அங்கு ஒரு சாலை மட்டுமே உக்ரைன் ராணுவத்துக்காக திறந்து இருக்கிறது என்றார்.
ரஷிய படைகளை தடுக்க உக்ரைன் ராணுவ வீரர்கள் போராடி வருகிறார்கள். அவர்கள் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருந்த போதிலும் பக்முத் நகரம் ரஷிய படையிடம் விழும் விளிம்பில் உள்ளது.
தொழில் வளமிக்க டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் முழுமையாக ரஷியா தீவிர தாக்குதலை நடத்தி கொண்டிருக்கிறது. ஏற்கனவே அந்த பிராந்தியத்தில் ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள் வசம் சில பகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக போரில் பின்னடைவை சந்தித்து வந்த ரஷியாவுக்கு பக்முத் நகரை கைப்பற்றுவது மிகப்பெரிய வெற்றியாக கருதப்படும்.
- உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கி ஓர் ஆண்டை கடந்து விட்டது.
- பல நாடுகளில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பாரீஸ்:
நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கி ஓர் ஆண்டை கடந்து விட்டது. ஆனால் போர் முடிவின்றி நீண்டு வருகிறது.
இந்தப் போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஏவுகணைகள், பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் மற்றும் பிற உதவிகளையும் வாரி வழங்கி வருகின்றன. போர் முடிவில்லாமல் தொடர்வதற்கு இதுவும் ஒரு காரணம் என சர்வதேச அளவில் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
உக்ரைன்-ரஷியா போர் ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில் பல நாடுகளில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி மக்கள் போராட தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், பிரான்சில் தலைநகர் பாரீஸ் உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை கண்டித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராடினா். குறிப்பாக பாரீசில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அமைதி பேரணி நடத்தினர்.
அவர்கள் பிரான்ஸ் மற்றும் உக்ரைன் தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தியும், 'போர் வேண்டாம், அமைதி வேண்டும்', 'மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்த வேண்டாம்' 'நேட்டோவை விட்டு வெளியேறு' போன்ற வாசகங்கள் அடங்கி பதாகைகளை சுமந்தபடியும் பேரணியாகச் சென்றனர்.
- டென்மார்க் உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன.
- உக்ரைன்-ரஷியா போரில் ஒரு கட்டத்தில் போர் விமானங்களின் பங்களிப்பு என்பதை மறுக்க முடியாது.
கோபன்ஹேகன்:
உக்ரைன்-ரஷியா போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஏராளமான ஆயுதங்களை வழங்கி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டுமென அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் போர் விமானங்களை வழங்க தயக்கம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க் உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன.
இதுகுறித்து அந்த நாட்டின் ராணுவ மந்திரி டிரோல்ஸ் லண்ட் பால்சன் கூறுகையில், "உக்ரைன்-ரஷியா போரில் ஒரு கட்டத்தில் போர் விமானங்களின் பங்களிப்பு என்பதை மறுக்க முடியாது. எனவே ரஷியாவின் படையெடுப்புக்கு எதிரான உக்ரைனின் தற்காப்புக்கு உதவ எப்-16 ரக போர் விமானங்களை வழங்க டென்மார்க் அரசு தயாராக இருக்கிறது" என்றார்.
இதனிடையே வெள்ளை மாளிகையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் "உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்கள் வழங்கப்படுமா?" என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் "இப்போதைக்கு அது சாத்தியமில்லை" என பதிலளித்தார்.
- உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் ஓராண்டை நிறைவு செய்துள்ளது.
- இரு நாடுகளிடையிலான போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
உக்ரைனுக்குத் தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.
ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு 2 பில்லியன் டாலர்கள் ஆயுத உதவி வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் ஆயுத உதவியின் மொத்த மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 16 ஆயிரத்து 586 கோடியே 71 லட்ச ரூபாய் ஆகும்.
உக்ரைன் போர் ஓராண்டைக் கடந்துள்ள நிலையில் ரஷியாவுக்கு சீனா ஆயுத உதவிகளை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
- உக்ரைனில் ரஷியா படையெடுத்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
- போரில் உயிரிழந்த உக்ரைன் வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அஞ்சலி செலுத்தினார்.
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டைக் கடந்துள்ளது. ஆனாலும் இந்த போர் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. ரஷியா தொடர்ந்து தனது தாக்குதலை நடத்தி வருகிறது. அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் ஆக்ரோஷத்தடன் போரிட்டு வருகின்றனர்.
இந்தப் போரை நிறுத்துமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா. சபையிலும் ரஷியாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷியா உடனான போரில் உயிரிழந்த உக்ரைனிய வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அஞ்சலி செலுத்தினார்.
புனித சோஃபியா சதுக்கத்தில் குழுமியிருந்த உக்ரைனிய ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அதிபர் ஜெலன்ஸ்கி, போராடும் உக்ரைனிய வீரர்களை வெகுவாக பாராட்டினார். மேலும் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
- உக்ரைன், ரஷியா இடையிலான போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைகிறது.
- இதையொட்டி உக்ரைன் அரசு புதிய கரன்சிகளை வெளியிட்டுள்ளது.
கீவ்:
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிதியுதவி வழங்கி வருகின்றன.
ரஷியா, உக்ரைன் இடையே பனிப்போர் நிலவியதன் தொடர்ச்சியாக 2022 பிப்ரவரி- 24ம் தேதியில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது.
இந்நிலையில், போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைவதையொட்டி உக்ரைன் மத்திய வங்கி நேற்று புதிய கரன்சி அச்சடித்து வெளியிட்டுள்ளது. தேசிய கொடி பின்னணியில் 20 ஹிர்வ்னியா ( 0.54 அமெரிக்க டாலர்) மதிப்பு கரன்சியை வெளியிட்டுள்ளது.
- ரஷிய படையெடுப்புக்கு பிறகு முதல் முறையாக உக்ரைன் வந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
- அமெரிக்க அதிபர், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
வார்சா:
உக்ரைன் மீது ரஷியா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஒரு வருடம் ஆக உள்ளது. ரஷியாவின் தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே செல்கிறது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென உக்ரைன் சென்றார். ரஷிய படையெடுப்புக்கு பிறகு முதல் முறையாக உக்ரைன் சென்ற அவர், அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இரு தரப்பும் உக்கிரமான தாக்குதலை தொடங்குவதற்கு தயாராகி வரும் நிலையில், ஜோ பைடனின் இந்த திடீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், போலந்து சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைநகர் வார்சாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அமெரிக்காவும் ஐரோப்பாவின் நாடுகளும் ரஷியாவைக் கட்டுப்படுத்தவோ, அழிக்கவோ முயலவில்லை. புதின் கூறியதுபோல் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவைத் தாக்கத் திட்டமிடவில்லை. அண்டை நாடுகளுடன் சமாதானமாக வாழ விரும்பும் மில்லியன் கணக்கான ரஷிய குடிமக்களை எதிரிகளாக பார்க்கவில்லை.
உக்ரைன் ஒருபோதும் ரஷியாவிற்கு வெற்றியாக இருக்காது. குண்டுகள் விழ ஆரம்பித்து ஒரு வருடம் கழித்து, ரஷிய டாங்கிகள் உருள ஆரம்பிக்கின்றன, உக்ரைன் இன்னும் சுதந்திரமாகவே உள்ளது.
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பிற்கு ஒரு வருடம் கழித்து தலைநகர் கீவ் வலுவாக நிற்கிறது, அது பெருமையுடன் நிற்கிறது, அது உயரமாக நிற்கிறது மற்றும் மிக முக்கியமாக கீவ் சுதந்திரமாக நிற்கிறது என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்