search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ukraine russia war"

    • ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • போர் வேண்டாம். உடனே நிறுத்துங்கள் என்று போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போரை தொடங்கியது. 7 மாதங்களாக ரஷிய படைகளின் போர் தாக்குதல் நீடிக்கிறது. ரஷியாவுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் உக்ரைன் போருக்கு 3 லட்சம் வீரர்களை திரட்ட ரஷிய அதிபர் புதின் திட்டமிட்டு உள்ளார்.

    இதுதொடர்பாக புதின் நேற்று தொலைக்காட்சியில் உரையாற்றிய போது, உக்ரைனில் போரிட மேலும் 3 லட்சம் பேர் அழைக்கப்படுவார்கள். இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளேன். ஆயுதப்படை களில் பணியாற்றியவர்கள் பொருத்தமான அனுபவம் உள்ளவர்கள் அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.

    ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ராணுவ ஆள்சேர்ப்பு பற்றி ரஷிய அதிபர் புதினின் அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. 38 நகரங்களில் பொதுமக்கள் பேரணி, போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    அப்போது போர் வேண்டாம். உடனே நிறுத்துங்கள் என்று கோஷங்களை எழுப்பினர். போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து முன்னேறி சென்றதால் கைது செய்யப்பட்டனர்.

    தலைநகர் மாஸ்கோவில் 50 பேரை போலீசார் கைது செய்தனர். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் போராட்டக்காரர்களை கைது செய்து பஸ்சில் ஏற்றி சென்றனர். இதுபோல் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 1332 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே ராணுவ ஆள்சேர்ப்பு பற்றி புதின் அறிவிப்பு வெளியிட்ட பிறகு ரஷியாவில் இருந்த பலர் வெளிநாடுகளுக்கு செல்வதில் மும்முரமாக உள்ளனர். போரில் ஈடுபட விரும்பாத மக்கள் நாட்டில் இருந்து வெளியேறுவதாக கூறப்படுகிறது.

    ரஷியாவில் இருந்து புறப்படும் விமானங்கள் இந்த வாரம் முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    • ரஷிய ராணுவத்திற்கு அணி திரட்டல் அறிவிப்பை அதிபர் புதின் வெளியிட்டுள்ளார்.
    • எங்களிடம் உள்ள அணு ஆயுதங்கள் நேட்டோ அமைப்பின் ஆயுதங்களை விட அதிக ஆற்றல் மிக்கவை என புதின் பேச்சு

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர், இன்று 210-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. தற்போது உக்ரைன் படைகளின் ஆதிக்கம் சற்று அதிகரித்து வருகிறது. ரஷிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகிறது. இந்த பின்னடைவு ரஷியாவின் தோல்விக்கான அறிகுறியாக மேற்கத்திய நாடுகள் கட்டமைத்து வருகின்றன.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், ரஷிய ராணுவத்திற்கு அணி திரட்டல் அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். 2-ம் உலகப்போருக்கு பின்னர் முதல் முறையாக ரஷிய ராணுவ அணி திரட்டல் அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக நாட்டு மக்களிடம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தொலைக்காட்சி வாயில் நிகழ்த்திய உரையில், 'ரஷிய ராணுவத்திற்கான அணி திரட்டல் இன்று முதல் தொடங்குகிறது. ராணுவத்தில் பணியாற்றி, பயிற்சி பெற்று தற்போது வேறு பணிகளில் உள்ள நாட்டு மக்கள் ராணுவ பணிக்கு மீண்டும் அழைக்கப்படுவார்கள்.

    அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகள் ராணுவ நடவடிக்கையை ரஷியா மண்ணில் மேற்கொள்ள உக்ரைனை தள்ளுகின்றன. மேற்கத்திய நாடுகள் அணு ஆயுதத்தை வைத்து ரஷியாவை மிரட்டுகின்றன. அவ்வாறு மிரட்டல் விடும் நாடுகளுக்கு நான் ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன். பதிலடி கொடுக்க எங்களிடமும் நிறைய ஆயுதங்கள் (அணு ஆயுதங்கள்) உள்ளன. அவை நேட்டோ அமைப்பின் ஆயுதங்களை விட அதிக ஆற்றல் மிக்கவை. எங்கள் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க எங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துவோம். இது ஒன்றும் மழுப்பல் அல்ல' என்றார்.

    நாட்டு மக்களிடம் புதின் பேசிய சில நிமிடங்களில் ராணுவ அணி திரட்டலில் 3 லட்சம் பேர் படையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அணு ஆயுத எச்சரிக்கை மட்டுமின்றி உக்ரைன் மீதான போரை ரஷியா தீவிரப்படுத்த உள்ளது. இந்த அச்சுறுத்தலால் உக்ரைன் - ரஷியா இடையேயான போர் முடிவின்றி தொடர்ந்து அதிக உயிரிழப்புகளையும், பாதிப்பையும் ஏற்படுத்த வழிவகுத்துள்ளது. 

    • உக்ரைனுக்கு கூடுதலாக 600 மில்லியன் டாலர்கள் ராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.
    • இதுவரை 15 பில்லியனுக்கும் அதிகமான இராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போர் 6 மாதத்தை கடந்துள்ளது.

    போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.

    இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 600 மில்லியன் டாலர்கள் ராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

    ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரேனிய ராணுவத்திற்கு உதவுவதற்கான இந்த நடவடிக்கை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ராக்கெட் ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் ராணுவ ஆயுத உதவியின் கீழ் உக்ரைனுக்கு வழங்கப்படும். வெள்ளை மாளிகை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவியாக இதுவரை 15 பில்லியனுக்கும் அதிகமான ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் - ரஷியா போர் காரணமாக சுமார் 20,000 மாணவர்கள் இந்தியா திரும்பினர்
    • உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் இருந்து உக்ரைன் சென்று மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவ, மாணவிகள் உக்ரைன் - ரஷியா போர் காரணமாக தாயகம் திரும்பிவிட்டனர். உக்ரைன் - ரஷியா போர் காரணமாக தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள சுமார் 20,000 மாணவர்கள் இந்தியா திரும்பி இருந்தார்கள். அவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது, அவர்கள் தங்கள் கல்வியை இங்கேயே தொடர வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு பல தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதுதொடர்பான சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பை தொடர வழிவகை செய்வதற்கு, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை முதன்மை மருத்துவ பல்கலைக்கழகங்களில் சேர்க்க முடியாது. அதிகப்படியான கட்டணத்தை உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களால் செலுத்தவும் முடியாது. அவர்களை இங்குள்ள பல்கலைக்கழங்களில் அனுமதித்தால் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • ரஷிய வீரர்களுக்கு உக்ரைன் ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
    • இரண்டு வீரர்களில் ஒருவர் ஆபத்தை உணர்ந்து சற்று தள்ளி ஓடுகிறார்.

    கீவ்:

    ரஷியா-உக்ரைன் இடையிலான மோதல் 6 மாதங்களாக நீடித்து வருகிறது. போர் தொடங்கிய பிப்ரவரி 24ம் தேதியில் இருந்து இதுவரை இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனுக்குள் ரஷிய படையினா ஊடுருவி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு உக்ரைன் ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

    அவ்வகையில் தற்போது உக்ரைன் ராணுவத்துக்கு சொந்தமான ட்ரோன் ஒன்று ரஷிய ராணுவ வீரர்கள் மீது வெடிகுண்டு வீசுவதைக் காட்டும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவை ரெடிட் என்ற சமூக வலைத்தளத்தில் நிவிவி என்பவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், இரண்டு ரஷிய வீரர்கள் வயலில் நடந்து செல்லும்போது, அவர்கள் மீது திடீரென வெடிகுண்டு வீசப்படுகிறது. அப்போது இரண்டு வீரர்களில் ஒருவர் ஆபத்தை உணர்ந்து சற்று தள்ளி ஓடுகிறார். மற்றொருவரின் அருகில் வெடிகுண்டு விழுந்து வெடித்ததால் அவர் காயமடைந்தார்.

    இந்த வீடியோவைப் பார்த்த நூற்றுக்கணக்கானோர் ஆதரவை தெரிவித்துள்ளனர். சிலர் தங்கள் கருத்துகளையும் பகிர்ந்துள்ளனர். சில பயனர்கள் போர் பகுதிகளில் உயிர்களைக் காப்பாற்றுவது பற்றி முக்கியமான குறிப்புகளை வழங்கினர்.

    • ஆன்லைன் மூலம் படிப்பது செல்லாது என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது என மாணவர்கள் தரப்பில் கூறுகின்றனர்.
    • இந்திய மாணவர்கள் தங்களின் உயிரையும் பணயம் வைத்து மீண்டும் போர் களத்திற்குள் புகுந்துள்ளனர்.

    ரஷ்யா- உக்ரைன் இடையான போரின் காரணமாக உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் நாடு திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் மருத்துவம் படிக்க உயிரை பணயம் வைத்து உக்ரைன் செல்கின்றனர்.

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த நிலையில், அங்கு பல்வேறு இடங்களில் மருத்துவம் பயின்று வந்த இந்திய மாணவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் நாடு திரும்பினர்.

    போர் தொடங்கி 6 மாதங்களாகிய நிலையிலும், தற்போதும் உக்ரைன் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து ரஷிய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் போர் பதற்றம் இருக்கிறது. மேற்கு பகுதியில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்த மேற்கு பகுதியில்தான் அதிகமாக மருத்துவ பல்கலைக்கழங்கள் இயங்கி வருகிறது.

    இப்பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வந்த நிலையில், தற்போது மாணவர்களை திரும்பவும் பல்கலைக்கழகத்திற்கு வர அழைப்பு விடுத்துள்ளது.

    இதையடுத்து, ரஷிய போரின்போது அங்கிருந்து இந்தியாவிற்கு திரும்பி வந்த இந்திய மருத்துவ மாணவர்கள் மீண்டும் உக்ரைனுக்கு செல்ல முன் வந்துள்ளனர்.

    இதற்கு முக்கிய காரணம், ஆன்லைன் மூலம் படிப்பது செல்லாது என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது என மாணவர்கள் தரப்பில் கூறுகின்றனர். இதனால், இந்திய மாணவர்கள் பலர் தங்களின் உயிரை பணயம் வைத்து மீண்டும் உக்ரைனுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

    இதுகுறித்து திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் ஜீனோவின்ஸ் (வயது 27) என்பவர் கூறியதாவது:-

    உக்ரைனில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5-ம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கு இன்னும் 6 மாத காலம் தான் வகுப்பு உள்ளது. போர் காரணமாக கடந்த பிப்ரவரியில் இந்தியா திரும்பினேன். தற்போது, மீண்டும் பல்கலைக்கழகம் அழைத்ததால், கடந்த 3 வாரத்திற்கு முன்பு சுற்றுலா விசா மூலமாக திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து மால்டோவா சென்றேன்.

    பின்னர், மால்டோவில் இருந்து பஸ் மூலம் சுமார் 300 கி.மீ. பயணித்து பல்கலைகழகத்துக்கு வந்தேன். இங்கு விடுதியில் தங்கியுள்ளேன். போரின் தாக்கம் அதிகமாக இருந்த பிப்ரவரி மாதத்தில் தினமும் போர் அபாய எச்சரிக்கை மணி 25 முறை வரை ஒலிக்கும், தற்போது, 4 முதல் 5 முறை தான் ஒலிக்கிறது.

    பொதுமக்கள் எவ்வித பயமும் இல்லாமல் சாதாரணமாக இருக்கின்றனர். அனைத்து கேளிக்கை விடுதிகள், ஓட்டல்கள் வழக்கம் போல் செயல்படுகிறது. பல்கலைக்கழகத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் யாரும் வெளியில் செல்ல கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அவசர உதவிக்கு போலீசாரை தான் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களின் உதவியுடன்தான் வெளியில் செல்ல முடியும். உயிரை பணயம் வைத்து வந்துள்ளேன். எப்படியாவது மருத்துவ படிப்பை முழுமை செய்தபின் மீண்டும் இந்தியா திரும்ப உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த நவநீத ஸ்ரீராம் (22) என்ற மாணவர் தனது நண்பர்களுடன் விரைவில் மால்டோவா வழியாக உக்ரைன் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இந்திய மாணவர்கள் தங்களின் உயிரையும் பணயம் வைத்து மீண்டும் போர் களத்திற்குள் புகுந்துள்ளனர்.

    • உக்ரைன் மக்களுக்கு ரஷிய பாஸ்போர்ட்டுகளை ரஷியா வழங்கி வருகிறது.
    • உக்ரைனில் இருந்து ரஷியா வரும் மக்களுக்கு நிதியுதவி வழங்க அதிபர் புதின் உத்தரவிட்டார்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 6 மாதங்களைக் கடந்தும் சண்டை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், உக்ரைனில் இருந்து ரஷியாவிற்கு வரும் மக்களுக்கு நிதியுதவி வழங்கும் ஆணையை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பிறப்பித்துள்ளார். பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கும் ஆணையில் இன்று அவர் கையெழுத்திட்டார்.

    ஓய்வூதியம் பெறுவோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்பட உக்ரைனை விட்டு ரஷியாவிற்கு வரும் அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படும். கடந்த பிப்ரவரி 18 முதல் உக்ரைன் பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள மக்களுக்கு 10,000 ரூபிள் மாதாந்திர ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு உக்ரைனில் பிப்ரவரியில் ரஷியாவால் சுதந்திர பிராந்தியங்களாக அங்கீகரிக்கப்பட்ட ரஷிய ஆதரவு பிராந்தியங்களான சுய ஆட்சி நடைபெறும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதியிலிருந்து வருவோருக்கும் நிதியுதவி வழங்கப்படும்.

    ஏற்கனவே, உக்ரைன் மக்களுக்கு ரஷிய பாஸ்போர்ட்டுகளை ரஷியா வழங்கி வருகிறது.

    • ரஷிய ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரைன் விடுபடும் வரை அமெரிக்க பாதுகாப்பு ஆதரவு தொடரும்.
    • உக்ரைன் மக்களை அமெரிக்கா தொடர்ந்து பாதுகாக்கும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 6வது மாதம் தொடங்க உள்ளது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ரஷியா ராணுவத்தின் தாக்குதலுக்கு உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்நிலையில், உக்ரைனுக்கு கூடுதலாக 3 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

    இந்த உதவி டிரோன்கள், ஆயுதங்கள் மற்றும் பிற உபகரணங்களுக்கான ஒப்பந்தங்களுக்கு நிதியளிக்கும்.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இதுவரை உக்ரைனுக்கு 15க்கு மேற்பட்ட ராணுவ தொகுப்புகள் அடங்கிய உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.

    • ரஷிய ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரைன் விடுபடும் வரை அமெரிக்க பாதுகாப்பு ஆதரவு தொடரும்.
    • உக்ரைன் மக்களை அமெரிக்கா தொடர்ந்து பாதுகாக்கும் என அதிபர் தெரிவித்துள்ளார்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஐந்து மாதங்களுக்கு மேலாகிறது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    ரஷியா ராணுவத்தின் தாக்குதலுக்கு உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்நிலையில், உக்ரைனுக்கு கூடுதலாக 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

    இந்த ராணுவ உதவியில் ஹைமார்ஸ் ஏவுகணைகள், பீரங்கி மற்றும் கண்ணிவெடி அகற்றும் உபகரணங்கள், டொவ் ஏவுகணைகள் அடங்கும்.

    இந்த தொகுப்பில் கணிசமான அளவு கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இதுவரை உக்ரைனுக்கு 19 ராணுவ தொகுப்புகள் அடங்கிய உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.

    • உக்ரைன் ரஷியா போர் சுமார் 6 மாதங்களாக நடந்து வருகிறது.
    • உக்ரைன் போருக்கு பிறகு ரஷிய மக்களிடம் புதினின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்று கருத்து கணிப்பு நடந்தது.

    மாஸ்கோ :

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா சுமார் 6 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் ரஷிய அதிபர் புதினுக்கு சொந்த நாட்டிலேயே எதிர்ப்புகள் கிளம்பின. போர் தொடங்கிய சமயத்தில் ரஷியா முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. எனினும் அந்த போராட்டம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் உக்ரைன் போருக்கு பிறகு ரஷிய மக்களிடம் புதினின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பது குறித்து தனியார் அறக்கட்டளை நிறுவனம் ஒன்று கருத்து கணிப்பு நடத்தியது.

    இதில் 77 சதவீதம் பேர் அதிபர் புதினை நம்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர். 13 சதவீதம் பேர் மட்டுமே புதினை நம்பவில்லை என்று கூறியுள்ளனர்.

    மேலும் 81 சதவீம் பேர் நாட்டின் தலைவராக புதினின் செயல்பாடுகளை அங்கீகரித்ததாகவும், 10 சதவீம் பேர் அவரது பணியைப் பற்றி எதிர்மறையான பார்வையை கொண்டிருப்பதாகவும், 9 சதவீம் பேர் உறுதியாக தெரியவில்லை என்று கூறியதாகவும் கருத்துகணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    • உக்ரைன் மீது ரஷியா 5 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது.
    • கார்கிவ் மீது ரஷிய ராணுவம் ஏவுகணைகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. தற்போது வரை தொடர்ந்து வரும் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.

    இரு தரப்பிலும் மிகப்பெரிய் அளவில் உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் ரஷிய ராணுவம், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வருகிறது.

    இதற்கிடையே, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனிய பகுதிகளில் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. அங்குள்ள கார்கிவ் நகரில் கடந்த திங்கட்கிழமை நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

    இந்நிலையில், நேற்று மீண்டும் கார்கிவ் நகரின் மீது ரஷிய ராணுவம் ஏவுகணைகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. ரஷிய படைகளின் தாக்குதல்களுக்கு உக்ரைனிய படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றன.

    • தற்போது கிழக்கு உக்ரைன் பகுதிகள் மீது ரஷிய படைகள் தீவிரமாக தாக்குதலை நடத்தி வருகின்றன.
    • கடலில் நீந்திக்கொண்டிருந்த 3 பேர் அடையாளம் தெரியாத சாதனம் வெடித்ததில் உயிரிழந்தனர்

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இதில் மரியுபோல், மெலிடோபோல் உள்ளிட்ட சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. அங்கு தங்களது ராணுவ நிலைகளை அமைத்துள்ளனர். தற்போது கிழக்கு உக்ரைன் பகுதிகள் மீது ரஷிய படைகள் தீவிரமாக தாக்குதலை நடத்தி வருகின்றன.

    இந்த நிலையில் ரஷியாவின் ராணுவ தளம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளது. ரஷியா கைப்பற்றிய மெலிடோபோல் நகரில் தனது துணை ராணுவ தளத்தை அமைத்துள்ளது. இங்கிருந்து உக்ரைனின் மற்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த ராணுவ தளத்தை குறிவைத்து உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ரஷிய ராணுவம் தளம் மீது குண்டுகள் வீசி தாக்கப்பட்டது. ராணுவ தளத்துக்கு செல்லும் பாலம் தகர்க்கப்பட்டது.

    இதுகுறித்து கிழக்கு உக்ரைனில் உள்ள லுகான்ஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் செர்ஜி கெய்டே கூறும்போது, "ரஷியாவின் ராணுவ தளம், துல்லியமான தாக்குதல் மூலம் அழிக்கப் பட்டது என்று தெரிவித்தார்.

    ரஷிய அதிபர் புதினின் நெருங்கிய கூட்டாளியான பிரிகோஜினுடன் தொடர்புடையதாக கூறப்படும் வாக்னர் ராணுவ குழுவினர், மெலிடோபோல் நகரில் உள்ள ராணுவ தளத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஒடேசா நகரில் கடலில் நீந்திக்கொண்டிருந்த 3 பேர் அடையாளம் தெரியாத சாதனம் வெடித்ததில் உயிரிழந்தனர் என்றும் வெடிக்காத கண்ணி வெடிகள் இருப்பதால் கடற்கரைக்கு செல்வோர் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று உக்ரைன் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ×