என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ukraine russia war"
- ரஷிய தாக்குதல் 4 மாதத்தை தாண்டிய நிலையில் சர்வதேச நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருகின்றன.
- உக்ரைன் விவகாரத்தில் இந்தியா சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறது என வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்தார்.
புதுடெல்லி:
டெல்லி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது.
உக்ரைன் விவகாரத்தில் நாம் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம். இது மிகவும் சிக்கலான விவகாரம். இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் தீங்கை அதிகரிக்கும் வகையிலான பகைமையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது தான்.
பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதிக்கு திரும்பி பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதை ஊக்குவிக்க வேண்டும். இதுதான் உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு. இந்தியா அதன் சொந்த நலனில் முக்கியத்துவம் கொண்டுள்ளது.
உக்ரைன் போரில் இருந்து எரிபொருள், உணவு, உர தட்டுப்பாடு உள்ளிட்ட மிகப்பெரிய பிரச்சினைகள் உருவெடுத்துள்ளது என தெரிவித்தார்.
- உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 4 மாதத்தை தாண்டியுள்ளது.
- போரில் உருக்குலைந்துள்ள உக்ரைன் நாட்டிற்கு உதவுதற்காக சர்வதேச நாடுகள் உறுதியளித்தன.
கீவ்:
உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி தொடங்கிய தாக்குதல் தற்போது வரை நீடித்து வருகிறது. இந்தப் போரில் இரு நாடுகளின் தரப்பிலும் அதிக அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து, அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, போரில் உருக்குலைந்துள்ள உக்ரைன் நாட்டிற்கு உதவுதற்காக சர்வதேச நாடுகள் உறுதியளித்துள்ளன. இந்த ஆண்டிற்கான (2022) உக்ரைன் மீட்பு மாநாடு சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.
இந்நிலையில், உக்ரைன் மீட்பு மாநாட்டில் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ரஷியா உடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனை புனரமைக்க 750 பில்லியன் டாலர் தேவை என தெரிவித்தார். இந்த நிதியை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள நாடுகள் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
- உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களை ரஷியா ஏற்கனவே கைப்பற்றியது.
- ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
மாஸ்கோ:
நேட்டா நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போர் தொடுத்தது. ராணுவ கட்டமைப்புகளை தாண்டி அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், வணிக வளாகங்கள், ஆலைகள் என தாக்குதல் வரம்பை ரஷியா நீட்டித்ததால் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.
உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களை ரஷிய படைகள் ஏற்கனவே கைப்பற்றி விட்டன.
இந்நிலையில், லுஹான்ஸ்க் மாகாணத்தின் கடைசி முக்கிய நகரமான பிவோடலை கைப்பற்றி விட்டதாக ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
ரஷிய அதிபர் புதினிடம் பாதுகாப்புத்துறை மந்திரி செர்கே ஷோய்கு கூறுகையில், லுஹான்ஸ்க் மக்கள் குடியரசின் மக்கள் ராணுவம் மற்றும் ரஷிய படைகள் இணைந்து நடத்திய போரில் பிவோடல் நகரம் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என கூறியதாக ரஷிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
- ரஷிய ராணுவம் முக்கிய நகரங்களை கைப்பற்றிய நிலையில், தொடர்ந்து முன்னேறி வருகிறது.
- வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற ரஷிய ரெயில் மெலிடோபோல் அருகே தடம் புரண்டதாக தகவல்
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் ஐந்தாவது மாதமாக நீடிக்கிறது. முக்கிய நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றிய நிலையில், தொடர்ந்து முன்னேறி வருகின்றன. அதேசமயம், தற்காப்பு மற்றும் பதிலடி தாக்குதல்களை உக்ரைன் படைகள் மேற்கொண்டுள்ளன. ரஷியாவிடம் இருந்து ஒரு சில பகுதிகளை மீட்டுள்ளனர்.
இந்நிலையில், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள மெலிடோபோல் நகரில் உக்ரைன் படைகள் இன்று உக்கிரமான தாக்குதலை நடத்தி உள்ளன. ரஷிய ராணுவ தளத்தை குறிவைத்து 30 முறை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக நகர மேயர் இவான் பெடோரோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் தாக்குதலால் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற ரஷிய ரெயில் நேற்று மெலிடோபோல் அருகே தடம் புரண்டதாகவும் பெடோரோவ் கூறினார்.
- உக்ரைனுக்கு மேலும் 820 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
- ஏவுகணை எதிர்ப்பு ராக்கெட்டுகள், பீரங்கி ராக்கெட்டுகள் ஆகியவையும் இதில் உள்ளடங்கி உள்ளன.
வாஷிங்டன்:
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேவைப்படும் வரை மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும். ரஷியா இந்தப் போரில் வெற்றி பெறாது என தெரிவித்தார்.
இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 820 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் ஏவுகணை எதிர்ப்பு ராக்கெட்டுகள், பீரங்கி ராக்கெட்டுகள் மற்றும் பிற ஆயுதங்கள் ஆகியவையும் உள்ளடங்கி உள்ளன.
- ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வணிக வளாகத்தில் இருந்ததாக உக்ரைன் அதிபர் தகவல்
- அதிக கூட்டம் இருந்த போது குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கிவ்:
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மத்திய உக்ரைன் நகரமான கிரெமென்சுக் பகுதியில் உள்ள வணிக வளாகம் மீது ரஷிய படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக பொல்டாவா பிராந்தியத்தின் ஆளுநர் டிமிட்ரோ லுனின் கூறியுள்ளார். இந்த தாக்குதலில் 59க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் தொடங்குவதற்கு முன்பு கிரெமென்சுக் நகர பகுதியில் 2,20,000 மக்கள் வசித்ததாகவும், அந்த நகரத்தை ஏவுகணைகள் தாக்கியபோது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வணிக வளாகத்தில் இருந்ததாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.
வணிக வளாகம் தீப்பற்றி எரிகிறது, மீட்புப் படையினர் தீயை அணைக்க போராடுகிறார்கள், பலியானவர்களின் எண்ணிக்கையை நினைத்துப் பார்க்க இயலாது என்று ஜெலன்ஸ்கி தமது சமூக வளைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வணிக வளாகத்தில் அதிக மக்கள் கூட்டம் இருந்த போது குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகளை ஏற்படுத்த ரஷிய படைகள் திட்டமிட்டது தெரிய வந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
- ரஷியா மீது கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால், நிதிக் கட்டுப்பாடுகளின் தாக்கத்தைத் தவிர்க்க அங்குள்ள செல்வந்தர்கள் தங்கள் சொத்துகளைத் தங்கத்திற்கு மாற்றி வருகின்றனர்.
- இந்த சூழலில் ஜெர்மனியில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் ரஷிய தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான தடை பற்றி அறிவிப்புகள் வெளியாகும் என்ற தகவல் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
பெர்லின்:
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள 'ஜி-7' அமைப்பின் உச்சி மாநாடு, ஜெர்மனியின் ஸ்குலோஸ் எல்மாவ் நகரில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து இன்றும் மாநாடு நடைபெறுகிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். மாநாட்டில், பல்வேறு அமர்வுகளாக விவாதம் நடந்தது. உக்ரைன்-ரஷியா போர் முக்கிய இடம் பிடித்தது. 7 நாடுகளின் தலைவர்களும் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தனர்.
உக்ரைன்-ரஷியா போரால் பாதிக்கப்பட்டுள்ள எரிபொருள் வினியோகத்தை சீரமைப்பது, பணவீக்க உயர்வை கட்டுப்படுத்துவது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. எரிபொருளுக்கு விலை உச்சவரம்பு நிர்ணயிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதன்மூலம், ரஷியாவுக்கு லாபத்தை குறைக்க வியூகம் வகுக்கப்பட்டது. பருவநிலை மாற்றம் பற்றியும் பேசப்பட்டது.
உச்சி மாநாட்டின் ஆரம்பத்தில் உரையாற்றிய ஐரோப்பிய பேரவையின் தலைவர் சார்லஸ் மிச்சேல் பேசுகையில், உக்ரைன் மீதான ரஷியா முன்னெடுக்கும் போர் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த போர் உலகத்தையே ஆபத்திற்குள் தள்ளி உள்ளது. , இந்தப் போர் காரணமாக உணவு மற்றும் எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளது. விலைகள் அதிகரித்துள்ளதுடன், உணவுப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி இருக்கிறது. உக்ரைனுக்கு ஆதரவு வழங்கும் விஷயத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் ஜி 7 நாடுகளும் அசையாத ஒற்றுமையுடன் இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு நிதி, மனிதாபிமான மற்றும் அரசியல் ஆதரவை தொடர்ந்து வழங்கும் என்றார்.
மாநாட்டிற்கு முன்னதாக ஜேர்மன் சான்ஷிலர் ஓலாப் ஸ்சொட்ஸ்சை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மேற்கு உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும். நேட்டோவும் ஜி 7 நாடுகளும் பிளவுபடும் என ஆரம்பத்தில் இருந்தே விளாடிமிர் புதின் எண்ணிக்கொண்டிருக்கிறார். ஆக்கிரமிப்பு செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல அனுமதிக்கக்கூடாது என்றார்.
இதனிடையே ஜி 7 மாநாட்டில் ரஷிய தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான தடை பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனிலிருந்து கோதுமை ஏற்றுமதியைத் தடுக்க ரஷியா முயல்வதால், பணவீக்கத்தை அதிகரித்து, உலகளாவிய உணவுப் பற்றாக்குறை குறித்த அச்சத்தைத் தூண்டிய போரை முடிவுக்குக் கொண்டுவர அழுத்தத்தை எவ்வாறு அதிகரிப்பது என்று ஜி 7 தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். இதனிடையே பிரிட்டன், கனடா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் ரஷியத் தங்க ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளன.
அந்தத் தடையால் ரஷியாவில் அரசியல் செல்வாக்குள்ள பெருஞ்செல்வந்தர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவர் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார். உலக அளவில் தங்க வர்த்தகத்தில் லண்டனுக்கு முக்கிய பங்கு உண்டு.
அதனால் தடையின் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படும் என்று பிரிட்டன் குறிப்பிட்டுள்ளது. ரஷியாவின் பெரிய ஏற்றுமதிகளில் தங்கம் பிரதானமானது . சென்ற ஆண்டு ரஷியத் தங்க ஏற்றுமதியின் மதிப்பு சுமார் 15.5 பில்லியன் டாலர். ரஷியா மீது கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால், நிதிக் கட்டுப்பாடுகளின் தாக்கத்தைத் தவிர்க்க அங்குள்ள செல்வந்தர்கள் தங்கள் சொத்துகளைத் தங்கத்திற்கு மாற்றி வருகின்றனர். இந்த சூழலில் ஜெர்மனியில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் ரஷிய தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான தடை பற்றி அறிவிப்புகள் வெளியாகும் என்ற தகவல் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே ஜி 7 மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றார். நேற்று ஜெர்மனியின் முனிச் நகரை அடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு இந்திய தூதரும், இந்திய வம்சாவளியினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முனிச் நகரை அடைந்தவுடன் பிரதமர் மோடி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஜி 7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க முனிச் நகரை வந்தடைந்தேன். உலக தலைவர்களுடன் ஆக்கபூர்வமான விவாதம் நடத்த ஆர்வமாக இருக்கிறேன். பருவநிலை மாற்றம், எரிசக்தி, உணவு பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, சுற்றுச்சூழல், பாலின சமத்துவம், ஜனநாயகம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
பிரதமர் மோடி, பிற நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துவார் என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியுள்ளார். இன்றைய மாநாட்டில், பருவநிலை மாற்றம், சுகாதாரம் ஆகியவை தொடர்பான ஒரு அமர்விலும், உணவு பாதுகாப்பு, பாலின சமத்துவம் ஆகியவை தொடர்பான ஒரு அமர்விலும் பிற தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.
முன்னதாக வரவேற்பு நிகழ்வின்போது இந்தியர்களுடன் மோடி உரையாடினார். பிரதமருடன் அவர்கள் 'செல்பி' புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.
- பொருளாதார ரீதியாக ரஷியாவை மேலும் தனிமைப்படுத்தும் வகையில் ஜி7 நாடுகள் நடவடிக்கை எடுக்க திட்டம்
- ஜி7 மாநாட்டின் முதல் நாளான இன்று பணவீக்கத்தை சமாளிப்பதற்கான உத்திகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
எல்மாவ்(ஜெர்மனி):
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. பொருளாதார ரீதியாக அந்த நாட்டை மேலும் தனிமைப்படுத்தும் வகையில், அந்நாட்டில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யவும் தடை விதிக்க முடிவு செய்துள்ளனர்.
ரஷியாவிடம் இருந்து தங்கம் இறக்குமதிக்கு தடை விதிப்பது தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட ஜி7 உறுப்பு நாடுகள் அறிவிக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை ஜி7 மாநாட்டின்போது இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி7 மாநாடு ஜெர்மனியில் இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று எரிசக்தி விநியோகங்களைப் பாதுகாப்பதற்கும் பணவீக்கத்தைச் சமாளிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் உத்திகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
இந்த மாநாடு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவ்வில் உள்ள அணு ஆராய்ச்சி நிலையம் மீது ரஷியா குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
- அண்டை நாடான பெலாரசில் இருந்து உக்ரைன் மீது பெரிய அளவில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்து உள்ளது.
கிவ்:
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போர் தொடங்கியது. ரஷிய படைகளின் தாக்குதல் 5-வது மாதத்தை நெருங்கி உள்ளது.
தொடக்கத்தில் உக்ரைனின் அனைத்து நகரங்கள் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷியா முயற்சித்து வருகிறது. குறிப்பாக டான்பாஸ் பிராந்தியத்தை முற்றிலும் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர தீவிரம் காட்டி வருகின்றன.
அங்குள்ள செவரோடோனெட்ஸ்க் நகரை கைப்பற்ற ரஷிய படைகள் சில வாரங்களாக கடும் தாக்குதல் நடத்தி வந்தன. கட்டிடங்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன.
இந்த நிலையில் அந்நகரை ரஷிய ராணுவம் முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதனை அந்நகர மேயர் ஒலெக்சாண்டர் ஸ்ட்ரிக் உறுதிப்படுத்தினார்.
அவர் கூறும்போது, ரஷியர்களால் செவரோடோனெட்ஸ்க் நகரம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றார். கிழக்கு உக்ரைனின் முக்கிய நகரம், ரஷிய படைகள் வசம் சென்றுள்ளது என்பது குறிப்பித்தக்கது.
மேலும் கிழக்கு உக்ரைனில் உள்ள லிசிசான்ஸ்க் நகரை நாட்டின் தெற்கு பகுதியில் துண்டிக்க ரஷிய படைகள் முயற்சித்து வருகின்றன.
இதற்கிடையே உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவ்வில் உள்ள அணு ஆராய்ச்சி நிலையம் மீது ரஷியா குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அண்டை நாடான பெலாரசில் இருந்து உக்ரைன் மீது பெரிய அளவில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்து உள்ளது.
வடக்கு செர்னிகிவ் பிராந்தியத்தில் உள்ள டெஸ்னா கிராமத்தை குறி வத்து 20 ராக்கெட்டுகள் வீசப்பட்டன என்றும் இதில் ராணுவ நிலையின் உள்கட்டமைப்பு சேதமடைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெலாரஸ், ரஷியாவின் நட்பு நாடாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மீது ரஷியாவின் போரில் பெலாரஸ் அதிகாரப்பூர்வமாக ஈடுபட்டாத நிலையில் அந்நாட்டில் இருந்து தாக்குதல் நடத்தபபட்டதாக உக்ரைன் புகார் தெரிவித்துள்ளது.
- கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டிமிட்ரி முரடோவுக்கு வழங்கப்பட்டது.
- உக்ரைன் குழந்தைகளுக்கு உதவ தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை விற்க டிமிட்ரி முரடோவ் முடிவு செய்தார்.
நியூயார்க்:
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரினால் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர்.
இதற்கிடையே, போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் குழந்தைகளுக்கு உதவும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட நோபல் தங்கப்பதக்கத்தை விற்க ரஷியாவை சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் முடிவு செய்தார்.
கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுடன் இவருக்கு தங்கப்பதக்கமும், 5 லட்சம் டாலரும் பரிசாக வழங்கப்பட்டது. பரிசுத்தொகையாக கிடைத்த 5 லட்சம் டாலரை யுனிசெப் அமைப்புக்கு வழங்குவாக டிமிட்ரி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஹெரிடேஜ் எனும் நிறுவனத்தால் நியூயார்க்கில் நடந்து முடிந்த ஏலத்தில் இவரின் நோபல் பரிசு தற்போது 103 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 808 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த தொகை முழுவதையும் உக்ரைனில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நிறுவனமான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திற்கு பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் வழங்கியுள்ளார்.
இவரது முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
- உக்ரைன் நாட்டின் பொருளாதாரத்தின் மீது போரால் ஏற்படும் நீண்டகால சேதம் இன்னும் அதிகரிக்கும் என இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ரஷியா போர் தொடுத்த பிறகு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2வது முறையாக உக்ரைன் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கீவ்:
உக்ரைனுக்கு எதிரான ரஷிய படைகளின் தீவிர போரானது 100 நாட்களை கடந்தும் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. ரஷிய படை வீரர்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். இரு நாட்டின் வீரர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து உள்ளனர்.
இந்தப் போரில் ரஷியாவை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்பட சில நாடுகள் ஆயுத உதவிகளையும், நிதி உதவியையும் வழங்கி வருகின்றன.
போரை நிறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் ரஷியாவில் இருந்து பல்வேறு பெரிய நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன.
இதற்கிடையே, இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் பணக்கார பிரமுகர்கள் ரஷியாவில் இருந்து வெளியேற கூடிய சூழலால் அந்நாட்டின் பொருளாதாரத்தின் மீது போரால் ஏற்படும் நீண்டகால சேதம் இன்னும் அதிகரிக்கும். ரஷியாவில் இருந்து வெளியேறுவதற்கான விண்ணப்பங்களில் இருந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் முன்பே அந்நாட்டில் இருந்து கிளம்ப முயற்சித்துள்ளனர் என தெரியவந்ததாக தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில், உக்ரைன் போரின் நிலைமை குறித்து இருவரும் விவாதித்தனர்.
இதுதொடர்பாக பிரதமர் ஜான்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உக்ரைன் ராணுவத்தில் உள்ள ஆயிரக்கணக்கான படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய வகையில் பெரிய அளவிலான பயிற்சியை இங்கிலாந்து வழங்க இருக்கிறது. உக்ரைனுடன் துணை நிற்போம் என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.
- டான்பாஸ் பகுதியை கைப்பற்ற ரஷிய படைகள் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.
- உக்ரைன் போரால் பல நாடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் உக்கிரமான தாக்குதலால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, உலக தானிய சந்தையில் முக்கிய இடம்பிடித்துள்ள உக்ரைனில், தற்போது நடத்தப்படும் தாக்குதல்களால் உணவு தானியங்கள் அழிந்து வருகின்றன. ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட கோதுமை, மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில், தற்போது அறுவடை செய்யப்படும் தானியத்தை சேமிக்கவும் இடமில்லாத நிலை உள்ளது. உக்ரைன் போரால் பல நாடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், உக்ரைனில் உள்ள உணவு தானிய கிடங்குகள் அழிக்கப்படும் அவலமும் அரங்கேறுகிறது.
உக்ரைனில் விவசாயம் செழிக்கும் கிழக்கு பகுதியில் தற்போது போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டான்பாஸ் பகுதியை கைப்பற்றுவதற்காக ரஷிய படைகள் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. கருங்கடல் துறைமுக பகுதியான மைகோலைவில் உணவு தானிய கிடங்கை ரஷிய ஏவுகணைகள் தகர்த்துள்ளன.
இந்த தானிய கிடங்கில் மட்டும் 3 லட்சம் டன் கோதுமை, மக்காச்சோளம், சூரியகாந்தி விதைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. அவை முற்றிலும் நாசமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வயல்களில் குறுக்கும் நெடுக்கும் செல்லும் டாங்கிகள் மற்றும் ஏவுகணைகளால் டான்பாஸ் கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வயல்களில் ஆங்காங்கே தீப்பற்றி எரிகிறது.
தீயை அணைக்க முயற்சிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் என்ன செய்தோம்? வயல்களை எரிப்பதால் என்ன கிடைக்கப்போகிறது? என அவர்கள் கண்ணீர்மல்க கூறுகின்றனர்.
இதுபோன்ற நிலை தொடர்ந்தால் விலைவாசி உயர்வு தொடரும், பட்டினிச்சாவு அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்