search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US visit"

    • துபாய் சென்றடையும் வரை 4 மணி நேரம் அதிகாரிகள் மிகவும் பதற்றத்துடன் இருந்துள்ளனர்.
    • கடந்த 15 நாளில் மட்டும் விமான நிலைய மானேஜருக்கு 3 மெயில்களில் மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நேற்றிரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு 10.16 மணிக்கு புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து வேறு விமானம் மூலம் அமெரிக்கா சென்றுள்ளார்.

    அங்கு அவர் 14-ந்தேதி வரை அதாவது 19 நாட்கள் அரசு முறை பயணம் மேற் கொள்கிறார். இன்றிரவு சான்பிரான்சிஸ்கோ சென்றடையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    31-ந்தேதி சான்பிரான்சிஸ்கோவில் புலம் பெயர்ந்த தமிழர்களை சந்தித்து பேச உள்ளார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.

    செப்டம்பர் மாதம் 2-ந் தேதி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து 12-ந்தேதி வரை தங்கி இருந்து பல்வேறு நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்ட முதலீட்டாளர்களை சந்திக்கிறார். அங்கு 7-ந் தேதி அயலக தமிழர்களுடனும் கலந்துரையாடுகிறார்.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயணித்த எமிரேட்ஸ் விமானத்திற்கு நேற்றிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அதாவது சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்வதாக முதலமைச்சரின் பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.

    அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு 8.40 மணிக்கே சென்னை விமான நிலையம் வந்து விட்டார். அங்கு அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவரை வழியனுப்பி வைத்தனர்.

    அதன் பிறகு விமான நிலையத்திற்குள் சென்று அமர்ந்து இரவு 10.16 மணிக்கு புறப்பட்ட எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்தார்.

    அதாவது இந்த விமானம் துபாயில் தரையிறங்கியதும் அங்கு இறங்கி வேறு விமானம் மூலம் அவர் அமெரிக்கா செல்ல வேண்டும்.

    இந்த நிலையில் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்த எமிரேட்ஸ் விமானம் பறந்து சென்று கொண்டிருந்த போது அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    சென்னை விமான நிலைய டைரக்டருக்கு இ.மெயில் மூலம் (மின்னஞ்சல்) இரவு 7.55 மணிக்கே இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்து கிடந்துள்ளது. ஆனால் அதை யாரும் அப்போது பார்க்கவில்லை. இரவு 10 மணிக்கு மேல்தான் பார்த்துள்ளனர். அதன் பிறகு பதறியடித்து போலீசுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். ஆனால் அதற்குள் முதலமைச்சர் பயணம் செய்த எமிரேட்ஸ் விமானம் புறப்பட்டு சென்று விட்டது.

    இதனால் அதிகாலை துபாய் சென்றடையும் வரை 4 மணி நேரம் அதிகாரிகள் மிகவும் பதற்றத்துடன் இருந்துள்ளனர். இன்று அதிகாலையில் துபாயில் விமானம் தரையிறங்கிய பிறகு அதில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது தான் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாயில் இறங்கியதும் சில மணி நேரம் ஓய்வெடுத்த பிறகு அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

    வெடிகுண்டு மிரட்டலில் சென்னை விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கொண்டு பல இடங்களில் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் அந்த மிரட்டல் புரளிதான் என தெரிய வந்தது.

    வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியதால் பயணிகள் சற்று பதற்றம் அடைந்தனர்.

    கடந்த சில நாட்களாகவே விமான நிலையத்திற்கும், விமானங்களுக்கும் மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. கடந்த 15 நாளில் மட்டும் விமான நிலைய மானேஜருக்கு 3 மெயில்களில் மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
    • முதலீடுகளை ஈர்க்க இதுபோன்ற பயணங்களை மேற்கொண்டு வருகிறேன் என்றார்.

    சென்னை:

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

    சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளை ஈர்க்க உங்கள் வாழ்த்துகளுடன் அமெரிக்கப் பயணத்தை மேற்கொள்கிறேன்.

    முதலீடுகளை ஈர்க்க இதுபோன்ற பயணங்களை மேற்கொண்டு வருகிறேன்.

    ரூ.3,450 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் முன்னேற்ற நிலையில் உள்ளன.

    கடந்த 3 ஆண்டுகளில் 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளது. இதனால் 18 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் துரித கதியில் செயல்பட்டு வருகின்றன.

    ரூ.9,99, 093 கோடி மதிப்பிலான திட்டங்கள் மூலம் 18 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.

    கடந்த 21-ம் தேதி நடைபெற்ற மூதலீட்டாளர்கள் மாநாட்டில் 2 நிறுவன திட்டங்களை தொடங்கி வைத்தேன் என தெரிவித்துள்ளார்.

    • சிகாகோவில் தமிழர்களை சந்தித்து பேச ஏற்பாடு.
    • 29-ந்தேதி முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பு.

    சென்னை:

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்திய பொருளாதாரத்துக்கு மிக முக்கிய பங்களிக்கிற மாநிலமாகவும் தமிழ்நாட்டை உயர்த்திடும் பெரும் லட்சிய இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார்.

    இதற்காக அவர் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார்.

    அந்த வகையில் ஏற்னவே முதற்கட்டமாக முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1,90,803 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு ரூ.2,80,600 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது.

    இரண்டாம் கட்டமாக ஐக்கிய அரபு நாடுகள் சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துகிற வகையில் 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.

    3-ம் கட்டமாக 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தியது.

    இந்த மாநாடு மூலம் முன் எப்போதும் இல்லாத அளவாக 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளும், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 13 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் உருவாக்கப்பட்டது.

    4-ம் கட்டமாக 27.1.2024 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று அங்குள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தக துறை அமைச்சக அதிகாரிகள் தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.

    இதன் பயனாக ரூ.3,440 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    இதன் தொடர்ச்சியாக கடந்த 21-ந்தேதி தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1,7,616 கோடி முதலீட்டில் 64,968 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய 19 தொழில் திட்டங்களை தொடங்கி வைத்து ரூ.51,157 கோடி முதலீட்டில் அமைய உள்ள 28 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க நாளை இரவு அமெரிக்கா செல்கிறார்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை இரவு 10 மணி அளவில் அமெரிக்கா புறப்பட்டு 28-ந்தேதி சான்பிரான்சிஸ்கோ நகரை சென்றடைகிறார். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அமெர்ரிக்காவுக்கான இந்திய தூதர் மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கிறார்கள்.

    இதைத் தொடர்ந்து 29-ந்தேதி சான்பிரான்சிஸ் கோவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார்.

    அதைத் தொடர்ந்து 31-ந்தேதி புலம் பெயர்ந்த இந்தியர்களுடனான சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். சிகாகோவில் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து பேசுவதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    அமெரிக்காவில் பல்வேறு நாட்டு தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சுமார் 30 இடங்களுக்கு சென்று முதலமைச்சர் சந்தித்து கலந்துரையாடுவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    இதில் அமெரிக்காவில் முன்னணி 500 நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணத்தை நிறைவு செய்து அடுத்த மாதம் 14-ந்தேதி (செப்டம்பர்) சென்னை திரும்புவார் என தெரிகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா செல்வதை யொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பே தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அமெரிக்கா சென்று விட்டார்.

    சிகாகோவில் அமெரிக்க தமிழர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதையொட்டி அது குறித்து சிகாகோவில் அமெரிக்க தமிழ் சங்கங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

    இதேபோல் அங்கு நடைபெற உள்ள மற்ற நிகழ்ச்சிகள் குறித்தும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆகஸ்டு 22-ந்தேதி மு.க.ஸ்டாலின் அமெரிக்கா புறப்படுகிறார்.
    • பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க மாட்டார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்த மாதம் 4-வது வாரம் அவர் அமெரிக்கா செல்ல முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அவர் அமெரிக்கா செல்லும் தேதி மாற்றப்பட்டது.

    இப்போது வருகிற சுதந்திர தினத்தன்று 15-ந்தேதி கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வது என்று முடிவாகி உள்ளது. அதன்படி ஆகஸ்டு 22-ந்தேதி அவர் அமெரிக்கா புறப்படுகிறார்.

    மாநில முதல்-அமைச்சர் அரசு முறை பயணமாக வெளிநாடு செல்வதற்கு முன்பு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். அதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு மத்திய அரசி டம் அனுமதி கோரப்பட்டது. அதன்படி 15 நாட்கள் வெளிநாடு சென்று வர மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சரின் பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அவருக்காக அமெரிக்க தூதரகத்தில் விசா விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கும் தூதரகம் அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் தொழில்துறை செயலாளர், முதல்-அமைச்சரின் செயலாளர் என ஒரு குழு அமெரிக்கா பயணத்துக்கு தயாராகி வருகிறது.

    அமெரிக்கா செல்லும்போது கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை உள்ளிட்ட முக்கிய தொழில் அதிபர்களை சந்தித்து பேசுகிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த முறை துணை முதல்-அமைச்சர் ஆகி விடுவார் என்று மீண்டும் தகவல்கள் வரத் தொடங்கி உள்ளது.

    சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சிக்கு பிறகு ஓரிரு நாளில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 நாட்கள் வெளிநாடு செல்லும்போது அங்கிருந்தபடி அவரே தமிழக நிர்வாகங்களை கவனிப்பார் என்றும் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க மாட்டார் என்றும் தகவல்கள் தெரியவந்து உள்ளது.

    • மு.க. ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
    • அரசு நிர்வாகத்திலும் சில அதிரடி மாற்றங்களை செய்வார் என்று தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்கு இந்த மாதம் பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் அடுத்தடுத்து பல்வேறு தொடர் நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பங்கேற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதால் அவரது வெளிநாட்டு பயணம் சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-வது வாரத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக அவர் ஆட்சியிலும், கட்சியிலும், அரசு நிர்வாகத்திலும் சில அதிரடி மாற்றங்களை செய்வார் என்று தெரிய வந்துள்ளது.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், விரைவாக பொருளாதார வளர்ச்சியை எட்டவும், அதிகாரிகளை மாற்றும் நடவடிக்கைகளை அவர் கையில் எடுத்துள்ளார்.

    சமீபத்தில் போலீஸ் அதிகாரிகளை மாற்றி அமைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒரே நாளில் 65 ஐ.ஏ.எஸ். அதி காரிகளை இடமாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் நிர்வாக ரீதியாக மேலும் சில மாற்றங்கள் செய்து விட்டு அமைச்சரவையிலும் மாற்றங்கள் செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது.

    குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

    தற்போது அதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாக தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக நியமனம் செய்து அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அடுத்த மாதம் 15-ந்தேதி சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கொடியேற்றி வைக்க உள்ளார்.

    அதன் பிறகு ஓரிரு நாளில் அவர் வெளிநாடு செல்வார் என்று கூறப்படுகிறது. எனவே விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அமைச்சரவை மாற்றத்தின் போது சில மூத்த அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது. தங்கம் தென்னரசு உள்பட சில மூத்த அமைச்சர்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட இலாகாக்கள் உள்ளன. அவற்றை பிரித்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

    இதன் மூலம் அமைச்சரவையில் புதுமுகங்கள் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. அந்த புதுமுகங்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருப்பார் கள் என்று தெரிய வந்துள்ளது. அதற்கு ஏற்ப அமைச்சரவையை மாற்றம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.

    அமைச்சர் தங்கம் தென்னரசு தற்போது நிதி மற்றும் மின்சாரத் துறையை கவனித்து வருகிறார். இது அவருக்கு அதிக சுமையாக கருதப்படுகிறது. எனவே அவரிடம் உள்ள நிதி இலாகாவை வேறு ஒரு வருக்கு வழங்க ஆலோசிக்கப்படுகிறது.

    ஏற்கனவே நிதி அமைச்ச ராக இருந்த பழனிவேல் தியாகராஜன் வசம் மீண்டும் நிதி இலாகா ஒப்படைக்கப்படும் என்று கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த தகவல்கள் தி.மு.க. வட்டாரத்தில் மிகுந்த விறு விறுப்பை ஏற்படுத்தி உள்ளன.

    தி.மு.க.வில் உள்ள நடுத்தர வயதுள்ள பல எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர் பார்க்க தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக தி.மு.க. நிர்வாகிகள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    அமைச்சரவையில் சரியாக செயல்படாத சில ரை கட்சிப் பணிக்கு அனுப்பவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மூத்த தலைவர்களிடம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. எனவே அமைச்சரவை மாற்றம் தொடர்பான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


    இதற்கிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக்குவதற்கு தி.மு.க. மூத்த தலைவர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து தீவிர கட்சி பணிகளிலும், ஆட்சி பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலின் போது அவர் 40 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்தார். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அவர் தனி கவனம் செலுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

    அதுபோல விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் 2 நாட்கள் அவர் செய்த பிரசாரம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. எனவே அவருக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுக்கும் பட்சத்தில் கட்சி பணிகளையும் மேம்படுத்த முடியும் என்று தி.மு.க. மூத்த தலைவர்கள் நம்புகிறார்கள்.

    தமிழக சட்டசபைக்கு இன்னும் 1½ ஆண்டுகளில் தேர்தல் வர இருக்கிறது. அந்த தேர்தலில் சுமார் 200 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்துள்ளார். அந்த இலக்கை எட்டிப்பிடிக்க இப்போதே அதிரடி மாற்றங்களை செய்யத் தொடங்கி உள்ளார்.

    உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவதன் மூலம் ஆட்சி நிர்வாகத்தை மேலும் எளிமைப்படுத்தி விரைவு படுத்த முடியும் என்றும் கருத்து நிலவுகிறது. எனவே அடுத்த அமைச்சரவை மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

    • பிரதமர் மோடி ஜூன் 21 முதல் 24-ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
    • அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டு அமர்வில் பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளார்

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடி ஜூன் 21 முதல் 24-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அங்கு ஜூன் 22-ல் 7,000 இந்திய அமெரிக்கர்கள் முன்னிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அமெரிக்க முதல் பெண்மணியும் அவர் மனைவியுமான ஜில் பைடன் முன்னிலையில் வழங்கப்படும் வரவேற்பை ஏற்கிறார்.

    மேலும், அமெரிக்க பாராளுமன்ற இரு சபைகளின் (பிரதிநிதிகளின் சபை மற்றும் செனட் சபை) கூட்டு அமர்வில் உரை நிகழ்த்தவும் உள்ளார்.

    பிரதமர் மோடியின் வருகையை தாங்கள் மிகவும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளோம் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் செய்தி தொடர்புக்கான மேற்பார்வையாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகை அருகே அமெரிக்க கொடியுடன், இந்திய கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது.

    இது இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பிரதமர் மோடி வரும் ஜூன் 22-ம் தேதி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
    • அமெரிக்கா வரும் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் விருந்தளிக்கிறார்.

    வாஷிங்டன்:

    வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 22-ம் தேதி அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவரது இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் விருந்தளிக்கின்றனர் என தெரிவித்துள்ளது.

    மேலும், அவரது இந்தப் பயணம் இரு நாடுகளின் வெளிப்படையான, திறந்த நிலையிலான, வளம் சார்ந்த பகிரப்பட்ட உள்ளார்ந்த செயல்பாடுகளுக்கு வலிமை சேர்க்கும். இந்தோ-பசிபிக் பிராந்திய பகுதிகளைப் பாதுகாக்கும். பாதுகாப்புத்துறை, தூய்மையான எரிசக்தி மற்றும் விண்வெளி உள்ளிட்ட துறைகளில் நமது செயல்திட்டம் சார்ந்த தொழில்நுட்ப உறவை மேம்படுத்தும் வகையிலான பகிரப்பட்ட தீர்மானம் ஆகியவற்றையும் பாதுகாக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×