search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman police suicide"

    • சொக்கலிங்க பாண்டியன் செங்கோட்டையிலும், ஜெயலட்சுமி மதுரையிலும் இருந்ததால் இருவருக்குமான தொடர்பில் இடைவெளி அதிகரித்தது.
    • இரண்டு தற்கொலை சம்பவங்கள் குறித்தும் வழக்கு பதிவு செய்த ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சாத்தூர்:

    மதுரை அருகே உள்ள திருப்பாலை பகுதியை சேர்ந்த சுப்புராஜ் (வயது 40). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தை சேர்ந்த ஜெயலட்சுமி (37) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஜெயலட்சுமி மதுரை ரெயில்வேயில் போலீசாக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிக்கு பவித்ரா (11) என்ற மகளும், காளிமுத்து (9) என்ற மகனும் இருந்தனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இருந்தபோதிலும் பிள்ளைகள் இருவரும் தாய் ஜெயலட்சுமியின் பராமரிப்பில் இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஜெயலட்சுமி திருச்சி ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் திருச்சிக்கு செல்வதில் விருப்பமின்றி இருந்துள்ளார். தனது மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எதுவும் நடக்கவில்லை. இதனால் ஜெயலட்சுமி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

    இதற்கிடையே நேற்று மாலை ஜெயலட்சுமி தனது மகள், மகனை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார். பின்னர் அவர் நேராக அந்த பகுதியில் உள்ள தேனூர் தண்டவாள பகுதிக்கு சென்றார். திடீரென்று அந்த வழியாக மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற இண்டர்சிட்டி ரெயில் முன்பு குழந்தைகளின் கைகளை பிடித்துக்கொண்டு பாய்ந்தார். ரெயில் மோதிய வேகத்தில் 3 பேரின் உடல்களும் துண்டு, துண்டாக சிதறியது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரை ரெயில்வே போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    மதுரையில் ரெயில்வே பாதுகாப்பு படையில் போலீஸ்காரராக வேலை பார்த்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சொக்கலிங்க பாண்டியன் (47) என்பவருடன், ரெயில்வே போலீசாக வேலை பார்த்த ஜெயலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த விஷயம் தெரிந்த சுப்புராஜூக்கும், ஜெயலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத்தான் சுப்புராஜ், ஜெயலட்சுமி தம்பதியினர் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    அதேபோல் மதுரையில் ரெயில்வே பாதுகாப்பு படையில் இருந்த சொக்கலிங்க பாண்டியன் செங்கோட்டைக்கு மாறுதலாகி சென்றார். ஆனாலும் ஜெயலட்சுமியுடன் வைத்திருந்த கள்ளக்காதலை அவர் கைவிடவில்லை. 6 ஆண்டுகளாக அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. சொக்கலிங்க பாண்டியனுக்கும் திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் கல்லூரி படிப்பு படித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே சொக்கலிங்க பாண்டியன் அடிக்கடி பெண்களுடன் செல்போனில் பேசி வருவதாக கூறி அவரது மனைவியும் தகராறில் ஈடுபட்டு விவகாரத்து பெற்று சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தனியாக இருந்த சொக்கலிங்க பாண்டியன் ஜெயலட்சுமியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சொக்கலிங்க பாண்டியன் திடீரென தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சொக்கலிங்க பாண்டியன் செங்கோட்டையிலும், ஜெயலட்சுமி மதுரையிலும் இருந்ததால் இருவருக்குமான தொடர்பில் இடைவெளி அதிகரித்தது.

    இதனால் சொக்கலிங்க பாண்டியன் செங்கோட்டையில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக அறிந்த ஜெயலட்சுமி சொக்கலிங்க பாண்டியனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இருவரும் அடிக்கடி செல்போனில் வாக்குவாதம் செய்த நிலையில் நேற்று முன்தினம் சொக்கலிங்க பாண்டியன் மதுரை திருப்பாலையில் உள்ள ஜெயலட்சுமியின் வீட்டிற்கு வந்து வாக்குவாதம் செய்ததில் இருவருக்கும் கைகலப்பாகி உள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட சண்டையை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இதன் மூலம் அவர்களது கள்ளக்காதல் விவகாரம் ஊருக்கே தெரிந்து வெட்ட வெளிச்சமானது. கணவரை பிரிந்ததாலும், தனது கள்ளக்காதலன் ஏமாற்றியதாலும் சம்பவத்தை அவமானமாக கருதிய ஜெயலட்சுமி இனி இந்த உலகத்தில் வாழக்கூடாது என தனது 2 பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு நேற்று மாலை ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஜெயலட்சுமி தனது இரு பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்த சொக்கலிங்க பாண்டியன் போலீஸ் விசாரணைக்கு பயந்து நேற்று இரவு கோவில்பட்டியில் இருந்து கார் மூலமாக சாத்தூர் சென்றுள்ளார். சாத்தூர்-நல்லி ஊருக்கு இடையே உள்ள சின்னக்கொல்லப்பட்டி பகுதியில் சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்த போது தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விபத்தில் சொக்கலிங்க பாண்டியன் தலை துண்டித்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

    உடலை கைப்பற்றிய தூத்துக்குடி ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சொக்கலிங்க பாண்டியன் உடலை அனுப்பி வைத்தனர். இரண்டு தற்கொலை சம்பவங்கள் குறித்தும் வழக்கு பதிவு செய்த ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பவித்ராவிற்கு குழந்தை பிறந்த பிறகு அவினாசி நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது.
    • மது போதைக்கு அடிமையான அவினாசி தினமும் மது குடித்துவிட்டு வந்து பவித்ராவிடம் கூடுதலாக ரூ.2 லட்சம் வரதட்சணை கேட்டு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், திருமலகிரி, செகந்திராபாத் எஸ்.பி.எச் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா.

    இவர்களுக்கு பவித்ரா என்ற மகள் இருந்தார். பவித்ரா திருமலகிரியில் உள்ள போலீஸ் நிலையத்தில் காவலராக வேலை செய்து வந்தார். பவித்ராவிற்கும் மலக்பேட்டையை சேர்ந்த அவினாஷ் என்பவருக்கும் கடந்த 2016 ஜூன் மாதம் 6-ந் தேதி திருமணம் நடந்தது. தம்பதிக்கு அவிஷிதா (5) என்ற மகள் உள்ளார்.

    மகள் திருமணத்தின் போது அவரது பெற்றோர் ஏராளமான சீர்வரிசை பொருட்கள் மற்றும் நகை, பணத்தை கொடுத்து உள்ளனர்.

    பவித்ராவிற்கு குழந்தை பிறந்த பிறகு அவினாசி நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. மது போதைக்கு அடிமையான அவினாசி தினமும் மது குடித்துவிட்டு வந்து பவித்ராவிடம் கூடுதலாக ரூ.2 லட்சம் வரதட்சணை கேட்டு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்தார்.

    இதுகுறித்து பவித்ரா மலக்பேட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவினாஷை வரவழைத்து கவுன்சிலிங் கொடுத்து அனுப்பி வைத்தனர். இருப்பினும் மீண்டும் மது குடித்து விட்டு வந்து பவித்ராவிடம் தகராறில் ஈடுபட்டார்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பவித்ராவின் பெற்றோர் மகள் வீட்டிற்கு வந்து இருந்தனர். அப்போது அவினாஷ் அவர்களிடம், உங்களது மகளை நன்றாக பார்த்துக் கொள்வதாகவும் தனது நடத்தையை மாற்றிக்கொண்டு குடிப்பழக்கத்தை நிறுத்திவிடுவதாகவும் உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் கார் வாங்க ரூ.2 லட்சம், அவினாசியிடம் கொடுத்துவிட்டு சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் அவினாஷ் வேலைக்குச் சென்று விட்டு மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் உள்ள மின்விசிறியில் பவித்ரா தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்து பவித்ராவின் பெற்றோர் மலக்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதில் வரதட்சணை கேட்டு அவினாஷ் தனது மகளை துன்புறுத்தி வந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக புகாரில் தெரிவித்து இருந்தனர். இதுகுறித்து போலீசார் அவினாசியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட குஞ்சம்பட்டி கிராமத்தைச்சேர்ந்தவர் முத்துவேலன், ஆட்டோ டிரைவர்.

    இவரது மனைவி அமுதா (வயது34). இவர் உசிலம்பட்டி பெண் போலீசாக  பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அமுதா சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து தகவல் அறிந்த  உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    குடும்ப பிரச்சினையால் அமுதா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி காவலர் குடியிருப்பில் பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கே.கே.நகர்:

    திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றிய காவலர் முத்து, பெண்கள் ஜெயில் வார்டர் செந்தமிழ் செல்வி ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் இன்று மேலும் ஒரு பெண் காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலை எடமலைப் பட்டிபுதூர் கிராப்பட்டி காவலர் குடியிருப்பில் வசித்து வந்த பெண் காவலர் ராஜலட்சுமி (வயது 24).

    இவர் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் வேலை பார்த்து வந்தார். பெண் போலீஸ் ராஜலட்சுமி திருச்சி அருகே பெட்டவாய்த்தலையை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் சிவக்குமார் (26) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

    ஆனால் இருவரின் வீடுகளிலும் அவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. இதனால் ராஜலட்சுமி மன முடைந்து காணப்பட்டுள்ளார். இதற்கிடையே நேற்று இரவு சிவக்குமாரும், ராஜலட்சுமியும் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துள்ளனர். இதில் அவர்களுக்கிடையே பிரச்சினை எழுந்துள்ளது.

    அப்போது கோபத்தில் ராஜலட்சுமி செல்போன் இணைப்பினை துண்டித்துள்ளார். இன்று காலை சிவக்குமார், ராஜலட்சுமியின் செல்போனிற்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் செல்போனை எடுக்காமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர் கிராப்பட்டி காவலர் குடியிருப்பிற்கு வந்துள்ளார். அப்போது ராஜலட்சுமி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    அவர் அரளி விதையை அரைத்து குடித்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    அதனை தொடர்ந்து சிவக்குமார் அங்கிருந்த தனது பைக்கில் பெட்டவாய்த்த லைக்கு திரும்பியுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே சாலை விபத்தில் சிக்கினார். இதில் காயமடைந்த அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    திருச்சி காவலர் குடியிருப்பில் பெண் போலீஸ் ராஜலட்சுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ராஜலட்சுமி தற்போது கர்ப்பமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்த தற்கொலை சம்பவம் குறித்து அறிந்த கே.கே.நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×