என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
- நடிகர் ரஜினிகாந்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தார்.
- சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் அவரை சீமான் சந்தித்தார்.
சென்னை:
நடிகர் ரஜினிகாந்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சந்தித்தார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை சீமான் சந்தித்தார்.
தனது பிறந்தநாளன்று நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க சீமான் நேரம் கேட்டிருந்தார். ஆனால், அன்றைய தினம் படப்பிடிப்பு காரணமாக சந்திக்க முடியவில்லை. இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்தை சீமான் இன்று சந்தித்துள்ளார். இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திருமாவளவனுக்கு சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் வரவேற்பு வழங்கினார்.
- கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள சாலையோர வியாபாரிகள் சூழ்ந்துகொண்டனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கட்சி நிகழ்ச்சிக்காக திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வருகை தந்தார்.
அப்போது அவர் அங்குள்ள பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதைதொடர்ந்து, மலையடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்திற்கு சென்று தொட்டிச்சி அம்மன் மற்றும் புலிப்பாணி ஜீவசமாதியில் தரிசனம் மேற்கொண்டார்.
கோவிலுக்கு வருகை தந்த திருமாவளவனுக்கு சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் வரவேற்பு வழங்கினார். கோவிலை விட்டு வெளியே வந்த அவரை கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள சாலையோர வியாபாரிகள் சூழ்ந்துகொண்டனர்.
அவர்களின் குறைகளை திருமாவளவன் கேட்டறிந்தார். பொது மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
- பெரும்பான்மையான வன்முறை சம்பவங்களுக்கு போதையே அடிப்படைக் காரணம்.
- பெண்குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோரும் அரசும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
வேலூரில் இயற்கை உபாதையை கழிக்க வெளியே சென்ற 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாஜக உறுப்பினர் சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "ஒவ்வொரு நாளும் கொலை மற்றும் பாலியல் பலாத்கார செய்திகளைக் கண்டும் கேட்டுமே மக்கள் மனம் பாதிப்படைந்துவிடுமோ என்று எண்ணத் தோன்றும் அளவிற்கு தொடர்ச்சியாக இங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவது ஆழமான வேதனையை அளிக்கிறது.
வேலூரில் இயற்கை உபாதையை கழிக்க வெளியே சென்ற 13 வயது சிறுமி மது போதையில் இருந்த 3 நபர்களால் கல்குவாரிக்குத் தூக்கிச் செல்லப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்துப் புகார் அளிக்கச் சென்றபோது, சம்பவம் நடந்த இடம் வேறு எல்லையில் வருவதாகக் கூறி அங்கும் இங்கும் சிறுமியின் பெற்றோர்கள் அலைக்கழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பையும் ஆறுதலையும் அளித்து இது போன்ற சூழலில் அவர்கள் பிற காவல் நிலையங்களில் புகார் அளித்தாலும் அவற்றை ஏற்றுக் கொள்ளும் சட்டரீதியான வழிகள் குறித்து சிந்திக்க வேண்டுமே அல்லாமல், துன்பத்தில் இருப்பவர்களை அலைக்கழிக்கக் கூடாது என சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாலியல் குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்து ஊடகங்கள் தலைப்புச் செய்தி வெளியிட வேண்டும்.
பெரும்பான்மையான வன்முறை சம்பவங்களுக்கு போதையே அடிப்படைக் காரணமாக இருப்பதைக் கவனத்தில் கொண்டு மது விற்பனைக்கு உறுதியான நேரக் கட்டுப்பாடுகள் கொண்டுவருவதை அரசும் காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்.
பெண்களின் சிரமங்களைக் குறைத்து, பாதுகாப்பை உறுதி செய்ய, வீட்டில் கழிவறைகள் அமைக்க வேண்டுமென்று மத்திய அரசு நலத்திட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் இது போன்ற பகுதிகளில் இன்னும் கழிவறைகள் இல்லாதது ஏன் என்று விசாரிக்கப்பட வேண்டும்.
பெண்குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோரும் அரசும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துவதோடு, பாலியல் குற்றங்களுக்கு உடனடியான தீர்ப்பு வழங்கி,கடும் தண்டனைகளை விதிக்க வேண்டும் என்று நீதித்துறையிடம் பணிவான கோரிக்கையை முன் வைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
- கஸ்தூரிக்கு அவரது ஆதரவாளர்கள் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிராமணர் சமூகத்தினர் சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசிய உரை, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அந்த நிகழ்ச்சியில் அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதனால் தனது கருத்துக்கு கஸ்தூரி வருத்தம் தெரிவித்தார்.
எனினும், நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். இதையடுத்து ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குடா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் பதுங்கி இந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அதன்பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, நடிகை கஸ்தூரி ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அதில் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் என்பதை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இதையடுத்து இந்த மனுவை விசாரிக்கும் காவல்துறை சார்பில் ஆட்சேபனை இல்லை என தெரிவித்ததால் கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், புழல் சிறையில் இருந்து நடிகை கஸ்தூரி வெளியே வந்தார். சிறையின் வெளியே கஸ்தூரிக்கு அவரது ஆதரவாளர்கள் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும், "அரசியல் வேறுபாடின்றி எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. தெலுங்கு மக்களுக்கும், ஆந்திரா மக்களுக்கும் நன்றி" என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
- பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது.
- திமுக எம்பிக்கள் கூட்டம் குறித்து அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25ம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை (நவ. 22) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 22-11-2024 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
அப்போது, கட்சி மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- சிறப்பு முகாம் நாளை முதல் வரும் 30ம் தேதி வரை அனைத்து மண்டலங்களிலும் நடைபெறவுள்ளது.
- கைபேசி எண் மாநகராட்சி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, புதிய அடையாள அட்டை வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 35,588 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நாளை முதல் வரும் 30ம் தேதி வரை அனைத்து மண்டலங்களிலும் நடைபெறவுள்ளது.
விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக சிப் (CHIP) பொருத்திய, க்யூஆர் கோடு (QR CODE) மற்றும் இணைய இணைப்பு பயன்பாட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்துதல், சட்டம் மற்றும் விதிகளை பின்பற்றி நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
நகர விற்பனைக் குழுவின் 06.11.2024 அன்று நடைபெற்ற 8வது கூட்டத்தில் மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 35,588 சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக Chip பொருத்திய QR Code மற்றும் இணைய இணைப்பு (Weblink) பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்குவதற்காக 22.112024 முதல் 30.112024 வரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
மேற்கண்ட சிறப்பு முகாம்களில் மாநகராட்சியால் வழங்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் கைபேசியினை கொண்டு வர வேண்டும். கைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அந்த கைபேசி எண் மாநகராட்சி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, பழைய அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு புதிய அடையாள அட்டை வழங்கப்படும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- பொதுநல மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.
- ஓசூர் சம்பவம் தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளது.
தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், தமிழகத்தில் வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவது, தாக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.
அப்போது, உள்துறை செயலாளர், டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்துரைகள் அளிக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் மீதான தக்குதல் சம்பவங்களை தடுக்க, மாவட்ட நீதிமன்றங்களில் சிசிடிவி பொருத்துவது தொடர்பாக பரிந்துரை கேட்கப்பட்டது.
மேலும், ஓசூர் சம்பவம் தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளது. ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
- திமுக அரசை மாற்ற வேண்டும் என்று மக்கள் முடிவுடன் இருக்கின்றனர்.
- திமுக பேசாத பேச்சா.. எல்லோரும் பேசுவதைப் போல் அந்த நடிகையும் பேசிவிட்டார்.
மதுரையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு திரைப்பட நடிகை. அவரது மகனுக்கு 12 வயது. ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர். அந்த பெண் தான் மகனை முழுவதுமாக உடன் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும்.
திமுக பேசாத பேச்சா.. எல்லோரும் பேசுவதைப் போல் அந்த நடிகையும் பேசிவிட்டார். சரி அந்த விஷயத்திற்குள் நான் செல்லவில்லை.
ஒரு நடிகையை இரண்டு தனிப்படைகளை அமைத்து காவல் துறை பிடித்திருக்கிறார்கள். ஒரு நடிகையை பிடிக்க இவ்வளவு செய்யும்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்று வந்து ஒரு வருடங்களுக்கும் மேல் ஆகியும் அவரது தம்பியை காவல்துறையினரால் இன்னும் பிடிக்க முடியவில்லையே. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கீழ் இருக்கும் காவல்துறை. இதற்கு மேல் என்ன கூறுவது.
ஆக மொத்தம் இந்த அரசை மாற்ற வேண்டும் என்று மக்கள் முடிவுடன் இருக்கின்றனர்.
எத்தனை நாட்களுக்கு முன்னால் தேர்தல் பணிகளை ஆரம்பித்தாலும் வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் மக்கள் முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கிராம மக்கள் தினம்தோறும் துக்கம் விசாரிப்பது போல அந்த வீட்டிற்கு வந்து விசாரணை செய்து சென்றுள்ளனர்.
- பாலகிருஷ்ணன் தற்போது தனது வீட்டிற்கு வராமல் வெளியிலேயே சுற்றி திரிகிறார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை பகுதியை சேர்ந்த சகோதரர்கள் பால கிருஷ்ணன், சக்திவேல். இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வருவதோடு, ஆடு வளர்த்து விற்கும் தொழிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பால கிருஷ்ணன் தனது மகளின் திருமணத்திற்காக ஒரு நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கடன் பெற்றுள்ளார். 19 மாதம் தவணையாக அந்த கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும். 15 மாத தவணை தொகை அவர் சரியாக செலுத்தி உள்ளார். ஆனால் கடந்து 3 மாதங்களாக தவணை செலுத்தவில்லை.
இதே போல சக்திவேல் மற்றொரு நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். அவரும் சரியாக தவணை செலுத்தி வந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக தவணை தொகை செலுத்தவில்லை.
இதன் காரணமாக கடன் தொகையை வசூலிக்க வந்த நிதி நிறுவன ஊழியர்கள் பாலகிருஷ்ணன், சக்தி வேலுக்கு சொந்தமான வீட்டில் பெரிய அளவில் இந்த வீடு அடமானத்தில் உள்ளது. 3 மாத நிலுவை ரூ.45,204 செலுத்தப்படவில்லை என்று கொட்டை எழுத்தில் எழுதிவிட்டு சென்றுள்ளனர். இதனை கண்ட அந்த கிராம மக்கள் தினம்தோறும் துக்கம் விசாரிப்பது போல அந்த வீட்டிற்கு வந்து விசாரணை செய்து சென்றுள்ளனர்.
அவமானத்தால் மனமுடைந்த சக்திவேல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை தடுத்து நிறுத்தி புத்தி சொல்லி வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்து உள்ளனர். பால கிருஷ்ணனின் மனைவி அவமானம் தாங்க முடியாமல் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பாலகிருஷ்ணன் தற்போது தனது வீட்டிற்கு வராமல் வெளியிலேயே சுற்றி திரிகிறார்.
இது குறித்து சக்திவேல் கூறும்போது, தவணை தொகையை சரியான காலத்தில் செலுத்தி வந்தோம். கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக எங்களது தாயாரின் உடல் நிலை கடுமையான பாதிப்பிற்கு உள்ளானது. இதன் காரணமாக அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததால், வைத்திருந்த பணம் மருத்துவத்திற்காக செலவிடப்பட்டு விட்டது. 3 மாத தவணையை எப்படியும் செலுத்தி விடுவோம் என்று நாங்கள் பணம் வசூலிக்கும் நிதி நிறுவன ஊழியரிடம் கெஞ்சினோம். ஆனால் அவர்கள் இவ்வாறு எங்களை அவமானப்படுத்தி விட்டு சென்று விட்டனர்.
இவ்வாறு அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது, தவணை தொகை செலுத்தவில்லை என்றால் நிதி நிறுவனங்கள் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, இது போன்ற அநாகரீகமான செயல்களில் அவர்கள் ஈடுபடக்கூடாது. இது மிகவும் தவறு. சட்டப்படி அவர்கள் மீது வழக்கு தொடரலாம் என்று அவர் கூறினார்.
- அந்த நிறுவனத்துடன் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
- தமிழ்நாட்டில் மிக குறைந்த விலையில் அதாவது ரூ.2.61 க்கு கொள்முதல் செய்கின்றனர்.
அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தொடர்பு இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
இதுதொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மின்சார வாரியத்தை பொறுத்தவரை அதானி நிறுவனத்தோடு எந்த விதமான வணிக ரீதியான தொடர்பும் கடந்த 3 ஆண்டுகளாக இல்லை என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் மின் தேவையை கருத்தில் கொண்டு மத்தியில் இருக்கக்கூடிய மத்திய மின்சாரத்துறை வாரியத்தின் அமைப்புகளோடு 1500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த நிறுவனத்துடன் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மத்திய அரசின் நிறுவனம். அந்த நிறுவனம் தான் யாரெல்லாம் மின் உற்பத்தி செய்கிறார்களோ அவர்கள் அந்த நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்கிறார்கள்
தமிழ்நாட்டில் மிக குறைந்த விலையில் அதாவது ரூ.2.61 க்கு கொள்முதல் செய்கின்றனர்.
அதனால், தமிழ்நாட்டின் மின்சார வாரியத்திற்கும் அதானி நிறுவனத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன்.
இதுதொடர்பாக மேலும் சந்தேகம் இருந்தால் அதை தெளிவுப்படுத்த தமிழக அரசு தயாராக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரியதர்ஷினிக்கு வயிற்று வலி ஏற்படவே அதே பகுதியில் மருந்தகம் நடத்தி வரும் பிரின்ஸ் என்பவரிடம் சிகிச்சைக்கு சென்றார்.
- போலி டாக்டர்கள் கொடைக்கானல் மலை கிராமங்களில் இதுபோல பல்வேறு இடங்களில் கிளீனிக் வைத்து செயல்படுகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகில் உள்ள கவுஞ்சி ராஜபுரத்தை சேர்ந்தவர் சர்வேஸ் (வயது 30) விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்ஷினி (24). இவர்களுக்கு ஏற்கனவே 2 வயதில் 1 ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் கருவுற்ற பிரியதர்ஷினி கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 20 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அவர் வீடு திரும்பினார்.
சில நாட்களிலேயே பிரியதர்ஷினிக்கு வயிற்று வலி ஏற்படவே அதே பகுதியில் மருந்தகம் நடத்தி வரும் பிரின்ஸ் என்பவரிடம் சிகிச்சைக்கு சென்றார். அவருக்கு மருந்து மாத்திரைகளை பிரின்ஸ் வழங்கி உள்ளார். இவர் முறையான மருத்துவம் படிக்காமல் தனது வீட்டிலேயே கிளீனிக் போல நடத்தி அப்பகுதி மக்களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் பிரியதர்ஷினிக்கு வயிற்று வலி ஏற்படவே பிரின்ஸ்சிடம் சிகிச்சைக்கு வந்துள்ளார். அவர் வலி குறைவதற்காக அதிக வீரியம் கொண்ட ஊசியை அவருக்கு செலுத்தினார். சற்று நேரத்தில் பிரியதர்ஷினிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தபோது அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கொடைக்கனால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவருக்கு சிகிச்சை அளித்த பிரின்சை தேடி வருகின்றனர். அவர் முறையான மருத்துவம் படிக்காமல் பல வருடங்களாக கிராம மக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளார். தற்போது அவரது சிகிச்சையால் ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு போலீசார் மற்றும் மருத்துவ துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
போலி டாக்டர்கள் கொடைக்கானல் மலை கிராமங்களில் இதுபோல பல்வேறு இடங்களில் கிளீனிக் வைத்து செயல்படுகின்றனர். அரசு ஆஸ்பத்திரிக்கு நீண்ட தூரம் செல்லவேண்டும் என்பதால் அருகில் கிடைக்கும் மருத்துவத்தை அப்பகுதி கிராம மக்கள் எடுத்து வருகின்றனர். இவர்களுக்கு ஒருசில டாக்டர்களும் உதவி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு கொடைக்கானல் மலை கிராமங்களில் போலி டாக்டர்களின் நடமாட்டத்தை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
- தூத்துக்குடியில் நடைபெற்றது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை 13 பேரை சுட்டுக்கொன்றது எடப்பாடி ஆட்சி.
- தூத்துக்குடி அருகே அரசுப்பள்ளி முன் ஆசிரியை படுகொலை 2019 ஆகஸ்ட் 8-ல் நடந்தது.
சென்னை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவாலயத்தில் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி சம்பந்தமாக சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விட்டுள்ளார்.
முதலில் அவர் தான் எடுத்த நடவடிக்கை குறித்து தன்னையே பரிசீலித்து கொள்ள வேண்டும். 2018 -ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்திலே நெடுஞ்சாலை துறையிலே 4800 கோடிக்கு ஊழல் செய்ததற்காக வழக்கு தொடரப்பட்டது. தி.மு.க. சார்பில் நான்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்கில் நாங்கள் சி.பி.ஐ. விசாரணை கோரவில்லை. ஆனால் நீதிமன்றமே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இவ்வளவு பேசுகிற எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி வழக்கை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு தமிழக அரசு, ஸ்டாலின் போகக்கூடாது என்று மனசாட்சியை அடகு வைத்து விட்டு அறிக்கை விட்டுள்ளார்.
அவர்தான் முதன் முதலில் உச்சநீதிமன்றத்தை நாடி அவர் மீது சி.பி.ஐ. வழக்கு நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்து தடை பெற்றார். அந்த வழக்கு நடைபெற்றது.
வழக்கு 2022-க்கு பிறகு விசாரணைக்கு வருகிறபோது தி.மு.க. சார்பில் அந்த வழக்கை தொடர்ந்த நானே சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று கேட்டதற்கு, ஆட்சேபனை இல்லை என்று நாங்கள் சொன்னோம். காரணம் என்னவென்றால், சி.பி.ஐ. வேண்டும் என்று நாங்கள் எந்த காலத்திலும் கேட்டது கிடையாது. அதற்கு பல காரணங்கள் உண்டு.
2016-ம் ஆண்டு தமிழ் நாட்டிலே, திருப்பூர் அருகே தேர்தல் நேரத்தில் 570 கோடி ரூபாய் கண்டெய்னர் லாரிகள் பிடிபட்டது. அப்போது அ.தி.மு.க. தான் ஆட்சியில் இருந்தது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். அந்த 570 கோடி ரூபாய் கட்டு கட்டான நோட்டுகள் தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
அது எங்கிருந்து வந்தது? கோவை மாவட்டத்தில் இருந்து திருப்பூரில் நடுரோட்டில் கைப்பற்றுகிறார்கள். இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று 2017-2018ல் உத்தரவு போடப்பட்டது. இன்றைக்கு நான் கேட்கி றேன். சி.பி.ஐ. இதுவரையில் அந்த வழக்கு பற்றி ஏதேனும் வழக்கை துலக்கி இருக்கிறதா? விசாரணை நடத்தி இருக்கிறதா? என்பதை கேட்டு நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் சி.பி.ஐ. எப்படிப்பட்ட விசாரணையை செய்யும் என்பதற்கு இதை விட எடுத்துக்காட்டு தேவை இல்லை.
இதுவரை அந்த ரூ.570 கோடி பணம் யாருக்கு சொந்தம்? யாருடைய பணம் என்று கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு சி.பி.ஐ. சொன்னதா? சொல்லவில்லை. அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை.
ஆனால் எடப்பாடி பழனிசாமி கேட்பது போல, உச்சநீதிமன்றத்துக்கு நாங்கள் போக வேண்டியது அவசியம் இல்லை என்றாலும் கூட கள்ளக்குறிச்சி சம்பவத்திலே, உடனடியாக முதலமைச்சர் துரிதமாக நடவடிக்கை எடுத்து ஏறத்தாழ 57 மருத்துவர்களை அங்கு அனுப்பினார். கலெக்டர் மாற்றப்பட்டார். எஸ்.பி. சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டார்கள். இதில் எல்லாவிதமான நடவடிக்கையும் அரசு மேற்கொண்டது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி யோக்கியர் போல, அப்பீல் போக கூடாது, சி.பி.ஐ. விசாரணைக்கு சென்றார். நான் கேட்கிறேன், இவர் தானே முதன் முதலில் ஒடினார். சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது என்று இன்றைக்கு பேசுகிறார்.
இவருடைய ஆட்சியில் ஒரு வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டார் என்ற சம்பவத்தை வைத்துக்கொண்டு சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது என்கிறார். இவர்கள் ஆட்சியில் நடக்கவில்லையா?
இதே சென்னையில் ஒரு மத்திய அமைச்சராக இருந்த தலித் எழில்மலையின் மருமகன் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் 2 நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வந்தது. அது யாருடைய ஆட்சியில் நடந்தது. ஆகவே தனிப்பட்ட கொலைகள் நடப்பதற்கும் சட்டம்-ஒழுங்குக்கும் சம்பந்தம் இல்லை என்பதை முதலமைச்சராக இருந்த எடப்பாடி புரிந்து கொள்ள வேண்டும்.
இப்போது ஓசூரில் வழக்கறிஞர் வெட்டப்பட்டது தனிப்பட்ட விவகாரம், காதல் விவகாரம். உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூரில் ஆசிரியை கொலை செய்யப்பட்டதை எடப்பாடி குறிப்பிடுகிறார். அதுவும் தனிப்பட்ட தகராறு.
அதாவது சட்டம்- ஒழுங்கு என்பது என்ன என்பதை முதலில் எடப்பாடி புரிந்து கொள்ள வேண்டும்.
தூத்துக்குடியில் நடைபெற்றது சட்டம்-ஒழுங்கு பிரச்சனை 13 பேரை சுட்டுக்கொன்றது எடப்பாடி ஆட்சி. அப்போது டி.வி.யில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்னவர்தான் இந்த எடப்பாடி பழனிசாமி.
அதேபோல் அம்மா, அம்மா என்று மூச்சுக்கு 32 தடவை சொல்கிற இவரது தலைவி, அம்மா கடைசி காலத்தில் வாழ்ந்தது கொட நாட்டில்தான்.
முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா ஏறத்தாழ 3 ஆண்டு காலம் கொடநாட்டில் இருந்துதான் அரசாங்கத்தை நடத்தினார். இது எல்லோருக்கும் தெரியும். அந்த அம்மையார் வாழ்ந்த கொடநாடு வீட்டில் காவலாளி பொன்பகதூர் கொலை செய்யப்பட்டார். 5 கொலை அங்கு நடந்து உள்ளது.
பலகோடி ரூபாய் கொள்ளையடித்து கொண்டு போனார்கள். இது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் நடந்தது. இவரால் இதை தடுக்க முடிந்ததா?
இதெல்லாம் சட்டம்-ஒழுங்கு கெட்டதுக்கு அடையாளம் ஆகும். ஆனால் தனிப்பட்ட முறையில் நடக்கும் கொலை எல்லாம் சட்டம்-ஒழுங்கு என்று பேசுவது நியாயம் அல்ல.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எத்தனை ஆசிரியர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்பதற்கு என்னிடம் சான்று உள்ளது.
கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஆசிரியை குத்தி கொலை. இது 2018, நவம்பர் 2-ந்தேதி நடந்தது.
பெரம்பலூர் அருகே பட்டப்பகலில் ஆசிரியை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை. இது 2018 ஆகஸ்ட் 14-ல் நடந்தது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியை படுகாலை , கணவன் கைது. இது 2020 டிசம்பர் 23-ல் நடந்தது.
கோவையில் கல்லூரி ஆசிரியை கழுத்தை அறுத்து தீ வைத்து எரித்து கொலை 2017-ஜூலை 8-ல் நடந்தது.
சென்னையில் கள்ளக்காதல் விவகாரம் காரை ஏற்றி கொலை செய்தது ஏன்? கைதான காதலன் பரபரப்பான வாக்குமூலம் 2017, மே-9ல் நடந்தது.
தூத்துக்குடி அருகே அரசுப்பள்ளி முன் ஆசிரியை படுகொலை 2019 ஆகஸ்ட் 8-ல் நடந்தது.
இப்படி எடப்பாடி ஆட்சியில் இவ்வளவு ஆசிரியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதேபோல்தான் தஞ்சையில் நேற்று நடந்துள்ளது. இதை வைத்து கொண்டு சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது என்று பேசுவது எந்த வகையில் நியாயம்.
எடப்பாடி ஆட்சியில் மட்டும் 1672 கொலைகள் நடந்துள்ளன. ஆனால் தி.மு.க. ஆட்சியில் 792 கொலைகள் நடந்துள்ளது. இன்றைக்கு கொலைகள், குற்றங்கள் குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்