என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
- மறுவீடு வந்தவர் விஷம் குடித்தார்
- காதல் தோல்வியா? என போலீசார் விசாரணை
திருச்சி,
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 31). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கும், திருச்சி தாளக்குடி மகாலட்சுமி நகர் டேவிட் என்பவரின் மகள் ரெஸ்பாகா (25) என்பவருக்கும் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மறுவீடு அழைப்பிற்காக பெண்ணின் வீட்டிற்கு புதுமண தம்பதியினர் அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.அங்கு தடபுடல் விருந்து நடைபெற்றது. விருந்திற்கு பின்னர் பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து கொண்டு மாப்பிள்ளை வீட்டார் காரில் புறப்பட்டு உள்ளனர். ஆசையுடன் வளர்த்த மகளை ஆனந்த கண்ணீருடன் பெண் வீட்டார் வழி அனுப்பி வைத்துள்ளனர். புது வாழ்வு, புது கனவுகளுடன் தனது மனைவி அருகில் அமர்ந்து புது மாப்பிள்ளை சந்தோஷமாக பயணித்துள்ளார். ஆனால் இந்த சந்தோஷ பயணம் வெகு நேரம் நீடிக்கவில்லை.ஸ்ரீரங்கம் பகுதியை பைபாஸ் ரோட்டில் கார் சென்று கொண்டிருந்த போது புது மணப்பெண் ரெஸ்பாகா திடீரென்று மயங்கி, ஸ்டீபன் மீது சாய்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு காரை கொண்டு சென்று உள்ளனர். திருவானைக்காவல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு ரெஸ்பாகாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்த புது மாப்பிள்ளையும், அவரது வீட்டாரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். பின்னர் ஸ்டீபன் இது குறித்து மணப்பெண் வீட்டிற்கு தகவல் அளித்தார். அங்கு வந்த மணப்பெண் வீட்டார் கதறி துடித்தனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அங்கு வந்த கொள்ளிடம் போலீசார் புதுப்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து வழக்கு பதிவு செய்து, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மறுவீடு அழைப்பு விருந்திற்கு முன்னதாகவே ரெஸ்பாகா விஷம் அருந்தி இருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. விரும்பாத திருமணமா அல்லது ஏதேனும் காதல் தோல்வியா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடைபெற்று 3-வது நாளிலேயே மணப்பெண் தற்கொலை செய்து கொண்டிருப்பதால், இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இருவீட்டாரின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நாளை முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது
- தினமும் பொதுஜனசேவை நடைபெறுகிறது
திருச்சி,
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கோடைத் திருநாள் நாளை தொடங்குகிறது. இந்த திருநாள் உற்சவம் நாளை (17-ந்தேதி, புதன்கிழமை) தொடங்கி வருகிற 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.அதன்படி நாளை முதல் வருகிற 21-ந்தேதி வரை நடைபெறும் வெளிக்கோடை உற்சவத்தில் காலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடும், மாலை 6.45 மணி முதல் இரவு 7 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளல், இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை தீர்த்த கோஷ்டி, இரவு 7.15 மணி முதல் 8.30 மணி வரை பொதுஜன சேவை, இரவு 8.30 மணிக்கு தாயார் புறப்பாடு, 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைதல் நடைபெறுகிறது.அதேபோல் வருகிற 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெறும் உள்கோடை உற்சவத்தின்போது, மாலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு ஆகிறார். 5.45 மணி முதல் 6 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளும் தாயாருக்கு, 6 மணி முதல் 6.15 மணி வரை தீர்த்த கோஷ்டி நடக்கிறது. 6.30 மணிக்கு ஸ்ரீதாயார் உள்கோடை மண்டபம் சேருகிறார். 6.45 மணிக்கு அலங்காரம் அமுது செய்தல், இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்த கோஷடி, 7.30 மணி முதல் 8.30 மணி வரை பொதுஜன சேவை,இரவு 8.45 மணிக்கு ஸ்ரீதாயார் மண்டத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருகிறார். வருகிற 26-ந்தேதி அன்று வீணை வாத்தியம் கிடையாது. மேற்கண்ட தகவலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்
- அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
அரியலூர்:
அரியலூர் பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் தலைமை சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆதிகேசவன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வம் கண்டனம் தெரிவித்து பேசினார். 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வழங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் உள்ள ஓட்டுனர் காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். ஓட்டுனர்களுக்கு தர ஊதிய முரண்பாட்டை களைந்து புதிய ஊதிய திருத்தம் அமுல்படுத்திட வேண்டும். ஓட்டுனர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.
- திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றினார்
- தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர்,
ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவர் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து விசாரித்தனர். அப்போது அவர், தனது இடம் தொடர்பாக, சிலர் தன்னை மிரட்டுவதாகவும், அதனால் தீக்குளிக்க முயன்றதாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார், ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழக்குடியிருப்பு மற்றும் சீனிவாசன் நகர் பகுதிகளில் மது விற்பனை செய்தவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கீழக்குடியிருப்பை சேர்ந்த ரமேஷ் (வயது 39), சீனிவாசா நகரை சேர்ந்த கோபி (38) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்து 19 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பைக்கில் சென்றவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம்
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம், செந்துறை சென்னிவனம் நடுத்தெருவை சேர்ந்த கதிர்வேலின் மகன் சுவாமிநாதன்(வயது 33). இவர் ஒரு தனியார் சிமெண்டு ஆலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரம்யா (32). மகன் விஷ்வா. இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் அரியலூர் நோக்கி சென்றனர். அரசு நகர் பகுதியில் சென்றபோது எதிரே உடையார்பாளையம் பருக்கள் தெற்கு தெருவை சேர்ந்த கொளஞ்சிநாதன்(40) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், சுவாமிநாதனின் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் சுவாமிநாதன், அவரது மனைவியும் படுகாயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து கயர்லாபாத் போலீசில் சுவாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- கொள்ளிடம் ஆற்றில் இருவர் மூழ்கினர்
- இரண்டு பேரின் உடல்களும் மீட்கப்பட்டது
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம், பெரியமறை கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 54). இவர் கடந்த 13-ந் தேதி கொள்ளிடம் ஆற்றின் திட்டுப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை ஓட்டுவதற்காக சென்றபோது கொள்ளிடம் ஆற்றில் மூழ்கினார். அவரை தேடுவதற்காக கொள்ளிடம் ஆற்றில் இறங்கிய தஞ்சாவூர் மாவட்டம், மடம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்(54) என்பவரும் தண்ணீரில் மூழ்கினார்.இதையடுத்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்தது. இதில் அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தாசில்தார் கண்ணன், திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா ஆரோக்கிய மேரி தலைமையிலான போலீசார் மற்றும் அரியலூர் தீயணைப்புத் துறையினர், ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினர் ஆகியோரின் கடும் முயற்சியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இதில் நேற்று முன்தினம் இறந்த நிலையில் முருகானந்தம் மீட்கப்பட்டார். இந்நிலையில் நேற்று 3-வது நாளாக தேடுதல் பணி நடைபெற்றது. இதில் ஆறுமுகம் பெரியமறை கிராமம் அருகே பிணமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
- தரகம்பட்டியில் ரூ.12.40 கோடியில் கட்டப்பட உள்ளது
- எம்.எல்.ஏ.சிவகாமிசுந்தரி பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தரகம்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கி சில ஆண்டுகளான கல்லூரி வகுப்புகள் கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பகுதிகளில் இயங்கி வருகிறது, இதனால் தனியாக கல்லூரி கட்டிடம் கட்டி இயங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கோரிக்கைவைத்தனர்.இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்திலபாலாஜி பரிந்துரையில் ரூ.12 கோடியே 40 லட்சத்தில் கல்லூரி அமைப்பதற்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கீழப்பகுதி ஊராட்சி, மைலம்பட்டி அரசு மருத்துவமனை அருகில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. வழக்கறிஞர் சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது.விழாவில் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி, ஆடிட்டர் சங்கர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், ஒன்றிய செயலாளர்கள் சுதாகர், ராமலிங்கம், தரகம்பட்டி ஒன்றிய குழு தலைவர் செல்வராஜ், கீழப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் புல்லட் ஜாஜகான், மற்றும் அரசு அதிகாரிகள், திமுக முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- கரூர் சி.எஸ்.ஐ. பிஷப் சாலமன் துரைசாமி கல்லூரியில் நடைபெற்றது
- பல்வேறு பிரிவுகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது
கரூர்,
கரூர் சி.எஸ்.ஐ. பிஷப் சாலமன் துரைசாமிக் கல்லூரியில் முதலாம் ஆண்டுவிழா நடைப்பெற்றது. திருச்சி மறை மாவட்ட தலைவர் ராஜா மான்சிங் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் உமேஷ் சாமுவேல் ஜெபசீலன் வரவேற்புரை நிகழ்த்தினார்.சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்வினைத் துவங்கி வைத்தனர். விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது. பேராயர் ஆணையாளர் சுதர்சன் தலைமையுரை ஆற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் (பொ) முனைவர் சீனிவாசராகவன் சிறப்புரை ஆற்றினார்.திருச்சி தஞ்சை திருமண்டல பொருளாளர் ராஜேந்திரன், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் முதல்வர் முனைவர் பால்தயாபரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பல்வேறு பாடங்களில் நூறு சதவீத தேர்ச்சியினை அளித்த ஆசிரிய பெருமக்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.பல்வேறு பிரிவுகளில் சாதனை செய்து வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. வணிக மேலாண்மை துறை உதவிப்பேராசிரியர் முனைவர் கண்ணகி நன்றியுரை ஆற்றினார். கரூர் மறை மாவட்ட தலைவர் பாஸ்கர் முடிவு ஜெபத்தினை செய்தார். திருச்சி தஞ்சை திருமண்டல பேராயர் ஆணையாளர் சுதர்சன் ஆசி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இறைமக்கள் செயலர் மற்றும் ஆட்சிமன்ற உறுப்பினர் ஸ்டான்லி மதிசெல்வன், ஆட்சிமன்ற உறுப்பினர் ராஜய்யா, சி.எஸ்.ஐ தொழிற்பயிற்சிப் பள்ளி தாளாளர் கிறிஸ்டோபர் சுரேந்திர குமார், தாராபுரம் தார்ப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் (பொ) முனைவர் விக்டர் லாசரஸ், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் சத்தியசீலன், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் நிதியாளர் ஞானராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- டெக்ஸ்டைல் நிறுவன உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்
- 5 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிபட்டு வந்தவர் தற்கொலை
கரூர்,
கரூர் ஆண்டாங்கோவில் புதூரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 47). தொழிலதிபரான இவர், கரூரில் சொந்தமாக டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக பன்னீர்செல்வம் வயிற்று வலி மற்றும் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதனால் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உடல் நிலை சரியாகவில்லைஎன கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட பன்னீர்செல்வம் சம்பவத்தன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கினார்.இதைக்கண்ட உறவினர்கள் பன்னீர்செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள். இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தற்கொலை குறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகநாத வடிவேல் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர்கள் விடுதி திறக்கப்பட்டது
- ரூ.2 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது
கரூர்,
கரூர் தாந்தோணிமலை ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர்கள் விடுதி கட்டிடம் ரூ.2 கோடியே 44 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று விடுதியை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கலந்துகொண்டு விடுதியின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். இந்த விடுதியில், 7 மாணவர்கள் அறை, ஒரு காப்பாளர் அறை, ஒரு உணவருந்தும் அறை, ஒரு பொருள் வைக்கும் அறை, ஒரு எரிபொருள் அறை, ஒரு சமையலறை, 12 குளியலறை, 24 கழிவறை வசதி உள்ளது. இதேபோல் கடவூரில் ரூ.2 கோடியே 44 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நல விடுதியினையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் தாஜூதீன், திருச்சி கோட்ட தாட்கோ உதவி செயற்பொறியாளர் அருண்குமார், தனி தாசில்தார் மைதிலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- தகராறை விலக்கி விட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தாக்குதல்
கரூர்,
கரூர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 31). கூலி தொழிலாளி. இவரது சகோதரர் ஹரிஷ்குமாருக்கும், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மாயகிருஷ்ணன் (50) என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அருண்குமார் அந்த தகராறை விலக்கி விட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து அனைவரும் சென்று விட்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் பாபாகோவில் அருகே அருண்குமார் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாயகிருஷ்ணன், முருகன் (42), பாலன் (55) ஆகிய 3 பேரும் சேர்ந்து அருண்குமாரை உருட்டுக் கட்டை மற்றும் அரிவாளால் தாக்கி உள்ளனர்.இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, மாயகிருஷ்ணன், முருகன் ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய பாலனை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்