- ஆத்மா சாந்தி அடைவதற்கான வெவ்வேறு விதமான தர்ப்பண பூஜை முறைகளைச் சித்த புருஷர்கள் அருளியுள்ளனர்.
- ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் முடிவு எவ்வாறு அமையும் என்பதை யாராலும் யூகிக்கக் கூட இயலாது.
தர்ப்பண பூஜை நாட்களில் நாம் யாருக்காக, எந்தக் காரணத்துக்காகத் தர்ப்பணம் அளிக்கின்றோமோ, அதைப் பொறுத்து தர்ப்பண பூஜை முறைகள் மாறுபடுகின்றன. ஒவ்வொரு தர்ப்பண பூஜை முறைக்கும் வெவ்வேறு விதமான சிறப்புப் பெயரும் உண்டு. அதைப் போலவே இறந்தவருடைய வாழ்க்கை முறை, செய்து வந்த தொழில், உத்தியோகம், அவரது உயிர் பிரிந்த விதம் இவ்வாறு எத்தனையோ காரண, காரியங்களைக் கொண்டு அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைவதற்கான வெவ்வேறு விதமான தர்ப்பண பூஜை முறைகளைச் சித்த புருஷர்கள் அருளியுள்ளனர்.
ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் முடிவு எவ்வாறு அமையும் என்பதை யாராலும் யூகிக்கக் கூட இயலாது. விபத்து, தற்கொலை, உறவினர், நண்பர்கள் தரும் வேதனைகள், வறுமை, கொடிய நோய் போன்ற பல காரணங்களால் மரணம் ஏற்படுவதுண்டு. ஏன், நம் தினசரி வாழ்க்கையில் கூட எத்தனையோ கொசுக்கள், வண்டுகள், ஈக்கள், புழு, பூச்சிகள், எறும்புகள் போன்ற எத்தனையோ உயிரினங்களின் மரணத்திற்கு நாம் காரணமாகி விடுகின்றோம்.
நாம் முறையாக நம் பித்ருக்களுக்கு சிரார்த்தம், திவசம் மற்றும் தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றினால் தான் இவ்வாறாக விதவிதமான முறைகளில் உயிர் விட்ட அனைத்து ஜீவன்களுக்கும் நிவாரணம் கிட்டுகின்றது. எந்த அளவிற்கு நம்முடன் வாழ உரிமை பெற்றிருக்கும் சக ஜீவன்களின் நல்வாழ்விற்காக நாம் மனதாலும், உடலாலும் சேவை, பூஜை, வழிபாடு, தான தர்மங்கள் ஆகியவற்றைச் செய்கின்றோமோ, அந்த அளவிற்கு நம் வாழ்க்கையும் மேம்படும்.