ஆன்மிக களஞ்சியம்

பூ விழுங்கி விநாயகர்

Published On 2023-06-24 10:02 GMT   |   Update On 2023-06-24 10:02 GMT
  • சுந்தரமூர்த்தி சுவாமிகளால் 7-ம் திருமறையில் 'பதிகம்' பாடப்பெற்ற ஸ்தலம்.
  • ஒரு காரியத்தை வேண்டிக் கொண்டு விநாயகரின் காதில் பூக்களை வைத்து விட்டு வலம் வந்து வழிபட்டால் காரியம் கைகூடும்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் பெரியநாயகி அம்பாள் உடனுறை அருள்மிகு புராதன வனேஸ்வரர் கோவில் மிகவும் பழமையான ஆலயங்களுள் ஒன்றாகும்.

கி.பி. 7-ம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தரால் மூன்றாம் திருமறையில் 'நிறைவன் திங்கள்' என்று தொடங்கும் திருப்பாட்டில், வைப்புத்தலமாக 'திருச்சிற்றேமம்' என குறிப்பிடப்படுகின்றது. சுந்தரமூர்த்தி சுவாமிகளால் 7-ம் திருமறையில் 'பதிகம்' பாடப்பெற்ற ஸ்தலம்.

இக்கோவிலில் மதுரை சவுண்ட கோப்பா கேசவர்மன், ராஜகேசரிவர்மன், ராஜேந்திர சோழதேவன், திரிபுவன சக்கரவர்த்தி, ராஜராஜதேவன், வரகுண மகாராஜன், வீரபாண்டியன், சுந்தரபாண்டியன், மற்றும் விஜயநகரத்து வேங்கடபதிராயர் ஆகியோர் திருப்பணிகள் செய்துள்ளனர் என்பதற்கு இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்களே சான்று.

இந்து சமயத்தின் இறை வழிபாட்டில் மூக்கண் முதல்வனாய், மூலப் பரம்பொருளாய் இருப்பதும் முதலாவதாய் நாம் வழிபடுவதும் விநாயகர் ஆகும்.

இத்தலத்தில் உள்ள 'பூ விழுங்கி விநாயகர்' தனிச்சிறப்பு உடையவர். ஒரு காரியத்தை வேண்டிக் கொண்டு விநாயகரின் காதில் பூக்களை வைத்து விட்டு வலம் வந்து வழிபட்டால் காரியம் கைகூடும். பக்தர்கள் பலரும் உணர்ந்த உண்மை அனுபவம் இது.

பெரியநாயகி அம்பாள் சன்னதியின் வலதுபுறம் சிறு பிள்ளையார் (விநாயகர்) இருக்கிறார். மூர்த்தி சிறிதானாலும் இவரின் கீர்த்தி பெரிது.

இந்த விநாயகரை மனதில் நிறுத்தி அவரிடம் பிரார்த்தனை செய்து தங்களின் வேண்டுகோளை மனதில் நினைத்து விநாயகரின் இரு காதுகளிலும் ஒவ்வொரு நந்தியா விடை (நந்தியா வட்டை) மலரை காம்பை கிள்ளி விட்டு வைத்து விட வேண்டும்.

பக்தர்கள் நினைத்த காரியம் உடன் நடக்குமென்றால் பூ வைத்த உடனேயே உள்ளே சென்று விடும். பூ தாமதமாக செல்லுமென்றால் நினைத்த காரியம் தாமதப்படும். பூ உள்ளே செல்லாவிட்டால் காரியம் நடைபெறாது. பக்தர்கள் அனுபவத்தால், கண்ட உண்மை இது.

ஆண்டவனின் திருவிளையாடலில் இதுவும் ஒன்று. ஆனால் உண்மை. பூவை விழுங்கி பக்தர்களுக்கு இவர் நல்வழி காட்டுவதால் பக்தர்கள் இவரை பூ விழுங்கி விநாயகர் என செல்லமாக குறிப்பிடுகின்றனர்.

Tags:    

Similar News

கருட வசனம்