ஆன்மிக களஞ்சியம்

கடன் தொல்லைகளை தீர்க்கும் விநாயக விரதம்..

Published On 2023-06-24 10:38 GMT   |   Update On 2023-06-24 10:38 GMT
  • சிறப்புகள் பல கொண்ட விநாயக விரதத்தை விநாயக சுக்கிர வார விரதம் என்றும் சொல்வார்கள்.
  • சுக்கிரனின் ஆதிக்கம் உடைய வெள்ளிக்கிழமையில் இந்த சக்தி வாய்ந்த விரதத்தை செய்து வர வேண்டும்.

சிவபெருமானின் மூத்த மகன் என்றும் பார்வதி தேவியின் அன்புப் புதல்வன் என்றும் போற்றப்படுகிற விநாயகப் பெருமானை வழிபட்டால் அல்லல் போகும். வல்வினைகள் போகும் - அன்னை வயிற்றில் பிறக்கும் தொல்லையாகிய பிறவிப் பிணி போகும் என்று வாயாரப்பாடி விளக்கி இருக்கிறார் அவ்வைப் பிராட்டி.

விநாயகர் பெருமான் சனாதன தர்மக் கடவுளாக உலக நாடுகள் அனைத்திற்கும் பரவிய காலத்திலிருந்தே விரத முறைகளும் வழிபாட்டு விதிகளும் பரவி பக்தர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியை மிகப் பிரபலமாகவும் சிறப்பாகவும் கொண்டாடி வரும் நாம், அவர் குறித்த வெள்ளி விரதம், செவ்வாய் விரதம் சதுர்த்தி விரதம், குமார சஷ்டி விரதம், சங்கடஹர சதுர்த்தி, தூர்வா கணபதி விரதம், சித்தி விநாயக விரதம், தூர்வாஷ்டமி விரதம், விநாயக நவராத்திரி விரதம் ஆகியவற்றைக் கொண்டாடுவதும் ஏற்றுச் செய்வதும் மிகக் குறைவே.

ஆனால் இவை சில நியதிகளுக்கு உட்பட்டு வருவதால் எடுத்துச் சொன்னால் தான் செய்பவர்களுக்குப் புரிகிறது. சிறப்புகள் பல கொண்ட விநாயக விரதத்தை விநாயக சுக்கிர வார விரதம் என்றும் சொல்வார்கள்.

தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட விரத நியமிங்களில் குறிப்பிட்டபடி விநாயகர் அருள் தருகின்ற இந்த விரதத்தை வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் தொடங்குதல் வேண்டும். 

விநாயக விரதத்தைத் தொடங்கி, ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் செய்தல் வேண்டும். அப்படி இயலாதவர்கள் தமிழ் மாதத்தின் முதல் வெள்ளியோ அல்லது மூன்றாவது வெள்ளிக் கிழமையோ ஏற்றுச் செய்யலாம்.

ஒரு பலனைக் குறித்து முற்காலத்தில் ஆண்களும், பெண்களும் கடைப்பிடித்த இந்த விரதத்தால் பல குடும்பங்களில் கடன் தொல்லைகள் நீங்கி விரைவாகப் பலன் கிடைத்துள்ளது.

எனவே, சுக்கில சதுர்த்தி எனப்படும் வளர்பிறை சதுர்த்தியில் தொடங்க வேண்டும் என்று சொல்வதற்குக் காரணம், ஜோதிட விதியில் நான்காவது ஸ்தானம் என்பதற்குச் சுகங்களைக் குறிக்கும் இடம் என்று பெயர்.

எனவே நான்காவது திதியாகிய சதுர்த்தியில் தொடங்கி சுக்கிரனின் ஆதிக்கம் உடைய வெள்ளிக்கிழமையில் இந்த சக்தி வாய்ந்த விரதத்தை செய்து வர வேண்டும்.

Tags:    

Similar News

கருட வசனம்