குளத்தில் எழுந்தருளியது பற்றி மற்றொரு வரலாறு
- காஞ்சிபுரம் கருட சேவையும், தேர் உற்சவமும் மிகவும் புகழ்பெற்றவையாகும்.
இப்போது கோவில் இருக்குமிடம் ஒரு காலத்தில் (பல நூற்றாண்டுகளுக்கு முன்) அத்திமரங்கள் சூழ்ந்த மலையாக
இருந்ததாகவும், அப்போது பிரம்மா யாகம் செய்து அந்த யாகத்திலிருந்து இவர் (ஸ்ரீ அத்தி வரதர்) வந்ததாகவும்,
அதிலிருந்து அவரை பிரம்மா பூஜித்து வந்ததாகவும் ஒரு சில காலத்திற்குப் பின்னர் ஸ்ரீ அத்திகிரி வரதர் அர்ச்சகர்
கனவில் வந்து தான் பிரம்மாவின் யாக குண்டத்திலிருந்து வந்ததால், தனது உடல் எப்போதும் தகிப்பதாகவும்,
எனவே தன்னை தினந்தோறும் மூன்று வேளையும் நூற்றுக்கணக்கான குடம் நீர் கொண்டு அபிஷேகம்
செய்யும்படியும், அவ்வாறு முடியாமல் போனால் நிரந்தரமாக புஷ்கரணியில் (குளத்து நீரில்)
எழுந்தருளச் செய்யும்படியும் ஆணையிட்டதாகவும், அவருக்கு தினந்தோறும் மூன்று வேளையும்
நூற்றுக்கணக்கான குடம் நீர் கொண்டு அபிஷேகம் செய்வது கஷ்டமாக இருந்ததால் அவரை குளத்தில்
எழுந்தருளச் செய்வது என்று முடிவு செய்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், அவரை குளத்தில் எழுந்தருளச் செய்துவிட்டால் மூலவருக்கு எங்கு போவது என்று அந்த அர்ச்சகர்
கவலைப்படவே, மீண்டும் வரதர் கனவில் வந்து பக்கத்தில் சில மைல் தொலைவில் "பழைய சீவரம்' என்னும் ஊரில்
மலைமேல் தன்னைப்போலவே ஒரு பிரதிபிம்பமாக ஒரு வரதர் இருப்பதாகவும் அவரைக் கொண்டுவந்து பிரதிஷ்டை
செய்து பூஜித்துக் கொள்ளும்படியும், தன்னை 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளிக்கொண்டுவந்து
ஒரு மண்டல காலம் வெளியில் பூஜை செய்து விடும்படியும் ஆணையிட்டதாகவும் அதன்படியே பழைய
சீவரத்திற்குச் சென்று பார்த்தபோது அவர்கள் பெருமாள் கூறிய அதே இடத்தில் இவரைப் போலவே ஒரு
பிரதி பிம்பமாக இருந்தவரைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து (தற்போது உள்ள மூலவர்)
இவரைத் தண்ணீருக்குள் எழுந்தருளச் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
தற்போதும் வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தினத்தன்று காஞ்சியில் உள்ள வரதராஜப் பெருமாள் காஞ்சியிலிருந்து
பழைய சீவரத்திற்கு பார்வேட்டை உற்சவமாக சென்று வருவது இதன் அடிப்படையில்தான் என்று கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் கருட சேவையும், தேர் உற்சவமும் மிகவும் புகழ்பெற்றவையாகும்.
இன்றும் லட்சக்கணக்கான மக்கள் வந்து இந்த சேவையை தரிசித்துச் செல்வதன் மூலம் இதனுடைய சிறப்பு நமக்குப் புலனாகிறது.