இது புதுசு

சத்தமின்றி உருவாகும் ஹோண்டா சிட்டி பேஸ்லிப்ட் மாடல் - எப்போ வெளியாகும் தெரியுமா?

Published On 2022-10-31 10:14 GMT   |   Update On 2022-10-31 10:14 GMT
  • ஹோண்டா நிறுவனம் அடுத்த ஆண்டு வாக்கில் டீசல் என்ஜின் கார்களின் விற்பனையை நிறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • முற்றிலும் புது எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்யும் பணிகளிலும் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. புதிய சிட்டி மாடல் சோதனையின் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன. இது 5th Gen சிட்டி மாடலின் பேஸ்லிபிட் வெர்ஷன் ஆகும். புதிய ஹோண்டா சிட்டி பேஸ்லிப்ட் மாடல் தாய்லாந்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மாடல் முதற்கட்டமாக தாய்லாந்திலேயே அறிமுகம் செய்யப்படலாம்.

புதிய பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புற டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. எனினும், பவர்டிரெயின் ஆப்ஷன்கள் தற்போது விற்பனை செய்யப்படும் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். ஸ்பை படங்களின் படி ஹோண்டா சிட்டி பேஸ்லிப்ட் மாடலில் ரி-ஸ்டைல் செய்யப்பட்ட முன்புற பம்ப்பர், புதிய பாக் லேம்ப் ஹவுசிங், ஏர் டேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

ஸ்பை படங்களில் காரின் பின்புறம் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், இதில் ரி-ஸ்டைல் செய்யப்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். காரின் உள்புறம் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மாற்றப்பட்டு அதிக உபகரணங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

ஹோண்டா சிட்டி பேஸ்லிப்ட் மாடலிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் ஹோண்டா சிட்டி மாடலில் டீசல் என்ஜின் நீக்கப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது விற்பனை செய்யப்படும் டீசல் என்ஜின் கார்களும் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் விற்பனைக்கு கிடைக்காது என்றே தெரிகிறது.

இவைதவிர ஹோண்டா ஜாஸ், WR-V மற்றும் 4th Gen சிட்டி மாடல்களின் விற்பனை விரைவில் நிறுத்தப்படும் என ஹோண்டா ஏற்கனவே அறிவித்து விட்டது. அமேஸ் மற்றும் சிட்டி மாடல்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் நிலையில், புதிய எஸ்யுவி மாடலை ஹோண்டா அறிமுகம் செய்ய இருக்கிறது.

Tags:    

Similar News