இது புதுசு

இந்தியாவில் அறிமுகமான புதிய டிசையர் டூர் S - விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2023-02-10 11:58 GMT   |   Update On 2023-02-10 11:58 GMT
  • மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய டிசையர் டூர் S மாடல் பாதுகாப்பு அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்டது.
  • புதிய டிசையர் டூர் S CNG மாடல் 32.12 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டிசையர் டூர் S மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய காம்பேக்ட் செடான் இந்திய விலை ரூ. 6 லட்சத்து 51 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 36 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

எர்டிகா டூர் M மற்றும் வேகன் ஆர் டூர் H3 வரிசையில் புதிய டூர் S மாடல் இணைந்துள்ளது. புதிய மாருதி சுசுகி டிசையர் டூர் S மாடல் அரீனா மற்றும் வர்த்தக விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய டூர் S மாடல் மாருதி சுசுகி 3rd Gen டிசையர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஆர்க்டிக் வைட், மிட்நைட் பிளாக் மற்றும் சில்கி சில்வர் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

புதிய டூர் S மாடல் தோற்றத்தில் தற்போதைய டிசையர் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், புதிய காரில் ஸ்டீல் வீல்கள், பிளாக் டோர் ஹேண்டில்கள், மிரர் கேப்கள், டெயில்கேட் மீது "Tour S" பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது. உபகரணங்களை பொருத்தவரை டூர் S மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லேம்ப்கள், மேனுவல் ஏசி மற்றும் ஸ்பீடு சென்சிடிவ் டோர் லாக் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் பாதுகாப்பிற்கு எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி ப்ரோகிராம், ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், டூயல் ஏர்பேக், ISOFIX சீட் ஆன்கரேஜ்கள் உள்ளன. புதிய டிசையர் டூர் S மாடலில் 1.2 லிட்டர் K சீரிஸ் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் பெட்ரோல் மோடில் 90 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

CNG மோடில் இந்த என்ஜின் 77 ஹெச்பி பவர், 98.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. பெட்ரோல் மோடில் புதிய டிசையர் டூர் S மாடல் லிட்டருக்கு 23.15 கிலோமீட்டரும், CNG மோடில் இந்த கார் 32.12 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுசுகி தெரிவித்து உள்ளது. இது தற்போதைய மாடலை விட 21 சதவீதம் அதிக மைலேஜ் வழங்குகிறது.

Tags:    

Similar News