கிரிக்கெட் (Cricket)

2026 உலக கோப்பை கால்பந்தில் மொத்தம் 104 ஆட்டங்கள்- 48 அணிகள் பங்கேற்பு

Published On 2023-03-15 07:00 GMT   |   Update On 2023-03-15 07:00 GMT
  • கடந்த உலக கோப்பையை விட 16 நாடுகள் கூடுதலாகும்.
  • உலக கோப்பையில் விளையாடும் 48 அணிகளும் 12 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன.

கிசாலி:

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்று உலக கோப்பை கால்பந்து போட்டியாகும்.

ஒலிம்பிக் போட்டியை போலவே உலக கோப்பை கால்பந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.

கடைசியாக உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த ஆண்டு கத்தாரில் நடந்தது. கத்தாரில் நடந்த 22-வது உலக கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா சாம்பியன் பட்டம் பெற்றது. மெஸ்சி தலைமையிலான அந்த அணி இறுதிப் போட்டியில் பிரான்சை வீழ்த்தியது.

23-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. 2026-ம் ஆண்டு ஜுன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

இந்த உலக கோப்பை போட்டியில் மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கின்றன. கடந்த உலக கோப்பையை விட 16 நாடுகள் கூடுதலாகும். கத்தார் உலக கோப்பை 32 அணிகள் பங்கேற்றன.

உலக கோப்பையில் விளையாடும் 48 அணிகளும் 12 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம் பெற்று இருக்கும். முதலில் 16 பிரிவாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது ஒரு பிரிவில் 3 நாடுகள் இடம் பெறுவது என்று திட்டமிடப்பட்டது.

தற்போது சர்வதேச கால்பந்து சம்மேளனம் அதை மாற்றி 12 பிரிவாக பிரிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மொத்தம் 104 ஆட்டங்கள் நடைபெறும். கத்தார் உலக கோப்பையைவிட 40 போட்டிகள் கூடுதலாகும்.கடந்த உலக கோப்பையில் மொத்தம் 64 ஆட்டங்கள் நடத்தப்பட்டது.

Tags:    

Similar News