அடிலெய்டு டெஸ்டில் லபுசேன், டிராவிஸ் ஹெட் சதம் - முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 330/3
- முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 330 ரன்கள் எடுத்துள்ளது.
- லபுசேன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியா சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நேற்று தொடங்கியது. இது பகல்-இரவு போட்டியாகும். இந்த போட்டிக்கு பிரத்யேகமாக பிங்க் (இளஞ்சிவப்பு) நிற பந்து பயன்படுத்தப்படும். டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா அரை சதமடித்து 62 ரன்னில் அவுட்டானார். கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து இறங்கிய டிராவிஸ் ஹெட், லபுசேனுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் சதமடித்து அசத்தினர்.
முதல் நாள் முடிவில் ஆச்திரேலியா அணி 89 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்துள்ளது. லபுசேன் 120 ரன்னும், டிராவிஸ் ஹெட் 114 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 199 ரன்கள் சேர்த்துள்ளது.