வீரர்களாக மாறிய ஆஸ்திரேலிய தலைமை தேர்வாளர் மற்றும் பயிற்சியாளர்
- வெஸ்ட் இண்டீஸ்க்கு 15 பேரில் 9 பேர் மட்டுமே சென்றுள்ளனர்.
- கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் போன்றோர் ஐபிஎல் போட்டியில் விளையாடியதால் இன்னும் அணியுடன் இணையவில்லை.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 1-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் தொடங்குகிறது. இதில் விளையாடுவதற்காக அனைத்து அணிகளும் (இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன) அங்கு சென்றுள்ளன. தற்போது டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
வெஸ்ட் இண்டீசில் உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- நமீபியா அணிகள் மோதின. நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்தது.
அப்போது ஆஸ்திரேலிய அணிக்காக அந்த அணியின் தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி, தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு ஆகியோர் பீல்டிங் செய்ய களம் இறங்கினர். இது போட்டியை பார்க்க வந்திருந்த அனைவரும் இது ஆச்சர்யமாக இருந்தது.
இது தொடர்பாக விசாரிக்கும்போது ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்துள்ள 15 பேர்களில் தற்சமயம் 9 பேர் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்துள்ளனர்.
டிராவிஸ் ஹெட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன் ஆகியோர் ஐபிஎல் பிளேஆஃப் சுற்று போட்டிகளில் விளையாடியதால் சற்று ஓய்வு எடுத்து பின்னர் வெஸ்ட் இண்டீஸ் செல்ல திட்டமிட்டுள்ளதால் ஆஸ்திரேலியா 9 வீரர்களுடன் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சப்ஸ்டிடியூட் பீல்டர்களாக தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு ஆகியோர் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
முதலில் களம் இறங்கிய நமீபியா 9 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆஸ்திரேலியா 10 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. டேவிட் வார்னர் 21 பந்தில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்கோரில் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்கும். ஐபிஎல் தொடரில் ரன் குவிக்க திணறிய டேவிட் வார்னர் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியது ஆஸ்திரேலிய அணிக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
டிம் டேவிட் 16 பந்தில் 23 ரன்கள் அடித்தார். மேத்யூ வடே 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹேசில்வுட் 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆடம் ஜம்பா 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.