சதத்தை தவறவிட்ட பென் டக்கெட் - இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 278/4
- ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது.
- அந்த அணியின் ஸ்டீவன் ஸ்மித் சதமடித்து அசத்தினார்.
லண்டன்:
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 85 ரன்னும், அலெக்ஸ் கேரி 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். டிராவிஸ் ஹெட் 77 ரன்னில் அவுட்டானார். டேவிட் வார்னர் அரை சதம் கடந்து 66 ரன்னில் ஆட்டமிழந்தார். லாபுசேன் 47 ரன்னில் வெளியேறினார்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் ஸ்மித் சதமடித்து அசத்தினார். இறுதியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் சேர்த்தது. ஸ்மித் 110 ரன்னில் அவுட்டானார்.
இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன், ஜோஷ் டங் தலா 3 விக்கெட்டும், ஜோ ரூட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஜாக் கிராலே, பென் டக்கெட் ஜோடி நிதானமாக ஆடியது. கிராலே 48 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஒல்லி போப் 42 ரன்னில் வெளியேறினார்.
சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பென் டக்கெட் 98 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 10 ரன்னில் அவுட்டானார்.
இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது. ஹாரி புருக் 45 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.