கிரிக்கெட் (Cricket)

சரிவில் இருந்து மீட்ட ரகானே, ஷர்துல் - இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்னில் ஆல் அவுட்

Published On 2023-06-09 13:15 GMT   |   Update On 2023-06-09 13:16 GMT
  • முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது.
  • இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்கள் எடுத்துள்ளது.

லண்டன்:

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 29 ரன்களும், கே.எஸ். பரத் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எஸ்.பரத் ரன் கணக்கை தொடங்காமல் நேற்றைய ரன்னிலேயே வெளியேறினார். அடுத்து ரகானே உடன் ஷர்துல் தாகூர் ஜோடி சேர்ந்தார். ஷர்துல் தாகூர் முதலில் உடலில் அடி வாங்கினார். நேரம் செல்ல செல்ல சுதாரித்து விளையாட ஆரம்பித்தார். மறுமுனையில் ரகானே பொறுப்புடன் விளையாடி 92 பந்தில் அரைசதம் அடித்தார்.

ஆஸ்திரேலியாவின் பீல்டிங் இன்று சிறப்பாக அமையவில்லை. 4 கேட்ச்களை தவறவிட்டனர். அத்துடன் எல்.பி.டபிள்யூ. ஆகிய பந்து நோ-பால் ஆக வீசப்பட்டதால் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.

7வது விக்கெட்டுக்கு இணைந்த ரகானே- ஷர்துல் தாகூர் ஜோடி 109 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ரகானே 89 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய உமேஷ் யாதவ் 5 ரன்னில் அவுட்டானார்.

மற்றொரு புறம் பொறுப்புடன் ஆடிய ஷர்துல் தாகூர் அரை சதமடித்த நிலையில் 51 ரன்னில் அவுட்டானார். கடைசியில் ஷமி 13 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 173 ரன்கள் பின்தங்கியுள்ளது.

ஆஸ்திரேலிய சார்பில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், போலண்ட், கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Tags:    

Similar News