டி20 உலகக் கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகளின் விவரம்
- ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.
- பாகிஸ்தான், கனடா மற்றும் அயர்லாந்து அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.
நியூயார்க்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இதில் 4 பிரிவுகளின் கீழ் மொத்தம் 20 அணிகள் மோதுகின்றன.
லீக் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அடுத்து நடைபெறும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கும், அதில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப்போட்டிக்கும் முன்னேறும். இதுவரை 32 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன.
ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. பாகிஸ்தான், கனடா மற்றும் அயர்லாந்து அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.
பி பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. நமீபியா மற்றும் ஓமன் அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.
சி பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நியூசிலாந்து, உகாண்டா, பப்புவா நியூ கினியா அணிகள் வெளியேறின.
டி பிரிவில் தென் ஆப்பிரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இலங்கை மற்றும் நேபாளம் அணிகள் வெளியேறின.