கிரிக்கெட் (Cricket)

முன்னாள் வீரர்களுக்கு உதவுங்கள்: பி.சி.சி.ஐ.யிடம் கோரிக்கை வைத்த கபில் தேவ்

Published On 2024-07-13 10:13 GMT   |   Update On 2024-07-13 10:13 GMT
  • இந்திய அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
  • கெய்க்வாடுக்கு நிதியுதவி அளிக்கவேண்டும் என பிசிசிஐயிடம் கபில் தேவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி:

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அணி வீரர் அன்ஷுமன் கெய்க்வாடுக்கு நிதியுதவி அளிக்கவேண்டும் என பிசிசிஐ-யிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அன்ஷுமன் கெய்க்வாட் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்தார்.

மொகிந்தர் அமர்நாத், சுனில் கவாஸ்கர், சந்தீப் பாட்டீல், திலீப் வெங்சர்க்கார், மதன்லால், ரவிசாஸ்திரி மற்றும் கீர்த்தி ஆசாத் போன்ற அவரது முன்னாள் அணியினர் கெய்க்வாட் சிகிச்சைக்காக நிதி திரட்டி வருகின்றனர் என தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தை பிசிசிஐ பரிசீலித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் கெய்க்வாட்டுக்கு நிதியுதவி அளிக்கும் என கபில்தேவ் குறிப்பிட்டார். இதுதொடர்பாக கபில் தேவ் கூறியதாவது:

இது ஒரு சோகமானது மற்றும் மிகவும் மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. நான் அன்ஷுவுடன் சேர்ந்து விளையாடியதால் நான் வலியில் இருக்கிறேன். இந்த நிலைமையில் அவரைப் பார்க்க சகிக்க முடியவில்லை. யாரும் கஷ்டப்பட வேண்டாம். அவரை வாரியம் கவனித்துக் கொள்ளும் என்று எனக்குத் தெரியும்.

அன்ஷுவுக்கு எந்த உதவியும் உங்கள் இதயத்தில் இருந்து வரவேண்டும். ரசிகர்கள் அவரைத் தவறவிட மாட்டார்கள், அவர் குணமடைய பிரார்த்தனை செய்ய வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக எங்களிடம் ஒரு அமைப்பு இல்லை. இந்த தலைமுறை வீரர்கள் நன்றாக பணம் சம்பாதிப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. துணை ஊழியர்களுக்கும் நல்ல ஊதியம் கிடைப்பது நல்லது.

எங்கள் காலத்தில் வாரியத்திடம் பணம் இல்லை. இன்று அது மூத்த வீரர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் ஒரு அறக்கட்டளையை உருவாக்கினால் அவர்கள் தங்கள் பணத்தை அங்கு வைக்கலாம். பிசிசிஐ அதைச் செய்யமுடியும் என்று நான் நினைக்கிறேன்.

அவர்கள் முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்களைக் கவனித்துக் கொள்கிறார்கள். நாங்கள் எங்கள் ஓய்வூதியத் தொகையை வழங்க தயார் என தெரிவித்தார்.

Tags:    

Similar News