கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு அச்சுறுத்தல்.. இரண்டு ஆடுகளங்களை தயார்படுத்திய ஐசிசி

Published On 2023-06-07 08:08 GMT   |   Update On 2023-06-07 08:08 GMT
  • போட்டி நடைபெறும் லண்டன் ஓவல் மைதானத்தின் ஆடுகளங்களை சேதப்படுத்தப்போவதாக கூறி உள்ளனர்.
  • மோசமான வானிலை காரணமாக போட்டி தடைபட்டால் ஒரு ரிசர்வ் டேயும் இருக்கும்.

இரண்டாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்நிலையில் எண்ணெய் உற்பத்திக்கு எதிராக போராட்டம் நடத்தும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களால், இன்றைய கிரிக்கெட் போட்டிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் போட்டி நடைபெறும்போது ஆடுகளம் மற்றும் மைதானத்தை சேதப்படுத்தப்போவதாக போராட்டக்காரர்கள் கூறி உள்ளனர். இதையடுத்து மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், போராட்டக்காரர்கள், ரசிகர்களோடு ரசிகர்களாக வந்து ஆடுகளத்தில் புகுந்து சேதப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக ஐசிசி 2 ஆடுகளங்களை தயார்நிலையில் வைத்துள்ளது.

கேப்டன்கள் ரோகித் சர்மா மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோருக்கும் நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஆடுகளம் சேதமடையும்பட்சத்தில், இருவரும் விளையாட ஒப்புக்கொண்டால், மாற்று ஆடுகளத்தில் தொடர்ந்து விளையாடுவார்கள். இல்லையெனில் போட்டி ரத்து செய்யப்படலாம் அல்லது கைவிடப்படலாம். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று முதல் 11 வரை இந்திய நேரடிப்படி மாலை 3 மணிக்கு தொடங்கி நடைபெறும். மோசமான வானிலை காரணமாக போட்டி தடைபட்டால் ஒரு ரிசர்வ் டேயும் இருக்கும்.

பிரிட்டனில் புதிய புதைபடிவ எரிபொருள் உரிமம் மற்றும் உற்பத்தியை அரசு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது. இதற்காக ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் என்ற குழுவை அமைத்துள்ளனர்.

நாட்டில் புதைபடிவ எரிபொருட்களின் ஆய்வு மற்றும் உற்பத்தி தொடர்பான அனைத்து எதிர்கால ஒப்புதல்கள் மற்றும் உரிமம் தொடர்பான ஒப்பந்தங்களை நிறுத்தவேண்டும் என இந்த அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீடு செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags:    

Similar News