கிரிக்கெட் (Cricket)

10 வயது குழந்தை கூட இப்படி விளையாடாது- பாகிஸ்தானை விமர்சித்த மார்க் வாக்

Published On 2023-12-15 12:49 GMT   |   Update On 2023-12-15 12:49 GMT
  • 21 ரன்களில் உஸ்மான் கவாஜாக்கு கேட்ச் மிஸ் செய்யப்பட்டது.
  • டேவிட் வார்னர் 104 ரன்களில் இருந்த போது கேட்ச் மிஸ் செய்யப்பட்டது.

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 14-ம் தேதி பெர்த் நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 487 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 164 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் சார்பில் அறிமுக வீரர் அமீர் ஜமால் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. 2-வது நாள் முடிவில் பாகிஸ்தான் 2 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது. இன்னும் 335 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது.

முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு நிதானமாக விளையாடிய உஸ்மான் கவாஜா 21 ரன்களில் இருந்த போது பந்தை தூக்கி அடித்த போது, பந்து மேலே சென்றது. இதனை பிடிக்க ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த அப்துல்லா சபிக் சென்றார். ஆனால் கடைசியில் பந்தை கோட்டை விட்ட அவர் கேட்ச்சை தவற விட்டது மட்டுமல்லாமல் பவுண்டரியையும் கொடுத்தார். அது போக 164 ரன்கள் விளாசிய வார்னர் 104 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை மற்றொரு பாகிஸ்தான் வீரர் குர்ரம் ஷேசாத் தவற விட்டு ஆஸ்திரேலியா எக்ஸ்ட்ரா 60 ரன்கள் அடிப்பதற்க்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்நிலையில் 10 வயது குழந்தைகளை விட இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் பீல்டிங் மோசமாக இருந்ததாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மார்க் வாக் கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

10 வயது குழந்தைகள் உட்பட எந்த வகையான கிரிக்கெட்டிலும் அது பிடிக்கப்பட வேண்டிய மிகவும் எளிமையான கேட்ச். ஆனால் தன்னுடைய கேரியரில் முதல் முறையாக கேட்ச் பிடிக்க முயன்றது போல அந்த இடத்தில் ஷபிக் செயல்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமல்லாமல் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் நீங்கள் இப்படி செய்யக்கூடாது.

என்று மார்க் வாக் கூறினார். 

Tags:    

Similar News