ஆசிய கோப்பை அட்டவணை வெளியீடு - செப்டம்பர் 2ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் மோதல்
- இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை போட்டி இலங்கையில் நடைபெறுகிறது.
- ஆசிய கோப்பைக்கான இறுதிப்போட்டி செப்டம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது.
புதுடெல்லி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.
பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றால் அதில் பங்கேற்க மாட்டோம் என பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது.
இதற்கிடையே இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை போட்டி இலங்கையில் நடைபெறும் என ஐ.பி.எல். தலைவர் அருண் துமால் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆசிய கோப்பை போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஒரு பிரிவிலும், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றொரு பிரிவிலும் இடம்பெற்றுள்ளது.
அதன்படி, தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நேபாளம் அணியை ஆகஸ்ட் 30-ம் தேதி எதிர்கொள்கிறது.
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும், பரபரப்பை ஏற்படுத்தும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 2-ம் தேதி இலங்கையின் கண்டி நகரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.