கிரிக்கெட் (Cricket)

ரியான் பராக் அபார பந்துவீச்சு - முதல் டி20-இல் 43 ரன்களில் இந்தியா வெற்றி

Published On 2024-07-28 01:05 GMT   |   Update On 2024-07-28 01:05 GMT
  • சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் பொறுப்புடன் ஆடினர்.
  • பதும் நிசங்கா 79 ரன்களை விளாசினார்.

இலங்கை நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

பல்லகெலெவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 74 ரன்களை எடுத்த போது சுப்மன் கில் 34 ரன்களில் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் 40 ரன்களை எடுத்த போது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் பொறுப்புடன் ஆடினர். இருவரும் முறையே 58 மற்றும் 49 ரன்களை எடுத்து அவுட் ஆகினர். இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை குவித்தது.

 


கடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. அந்த அணியின் பதும் நிசங்கா 79 ரன்களையும், குசல் மென்டிஸ் 45 ரன்களையும் விளாசினர். அடுத்து வந்தவர்களில் குசல் பெரரா மற்றும் கமின்டு மென்டிஸ் முறையே 20 மற்றும் 12 ரன்களை எடுத்து அவுட் ஆகினர்.

இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இவர்களில் யாரும் இரட்டை இலக்க ரன்களை எட்டாத நிலையில், கேப்டன் சரித் அசலங்கா மற்றும் தசுன் சனகா, தில்ஷன் மதுசனகா ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர்.

இந்தியா சார்பில் ரியான் பராக் 1.2 ஓவர்களை மட்டும் வீசி 5 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இலங்கை அணி 19.2 ஓவர்களில் 170 ரன்களை எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக இந்திய அணி 43 ரன்களில் வெற்றி பெற்று அசத்தியது.

Tags:    

Similar News