கிரிக்கெட் (Cricket)

திருப்பூர் தமிழன்ஸ் கேப்டன் அணிருதா

திருப்பூர் அணிக்கு 2-வது வெற்றி: பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் அணிருதா பாராட்டு

Published On 2022-07-14 05:17 GMT   |   Update On 2022-07-14 05:17 GMT
  • பந்து வீச்சாளர்களை திருப்பூர் தமிழன்ஸ் கேப்டன் அணிருதா பாராட்டி உள்ளார்.
  • நாங்கள் பவர்பிளேயில் சரியாக ஆடவில்லை என தோல்வி குறித்து சேலம் அணியின் கேப்டன் முருகன் அஸ்வின் கூறினார்.

கோவை:

டி.என்.பி.எல். போட்டியில் சேலம் ஸ்பார்டன்சை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் 2-வது வெற்றியை பெற்றது.

கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய திருப்பூர் தமிழன்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் சேலம் அணிக்கு 136 ரன் இலக்காக நிர்ண யிக்கப்பட்டது.

கேப்டன் அணிருதா 22 பந்தில் 32 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) பாப்னா 29 ரன்னும், அரவிந்த் 25 ரன்னும் எடுத்தனர். டாரியல் பெராரியோ 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 19.2 ஓவரில் 103 ரன்னில் சுருண்டது. இதனால் திருப்பூர் தமிழன்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ரவி கார்த்திகேயன் அதிகபட்சமாக 25 பந்தில் 36 ரன் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். மோகன் பிரசாத் 3 விக்கெட்டும் எம்.முகமது, அரவிந்த் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

திருப்பூர் அணி பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகளை பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

இந்த வெற்றிக்காக பந்து வீச்சாளர்களை திருப்பூர் தமிழன்ஸ் கேப்டன் அணிருதா பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்த ஆடுகளத்தில் 160 முதல் 170 ரன்கள் வரை எடுக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் மழையால் பிட்சின் தன்மை சற்று மாறியதால் 135 ரன்களே எடுக்க முடிந்தது. இது நல்ல ஸ்கோர் என்று கருதினோம். அதற்கு ஏற்ற வகையில் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடி தந்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

சேலம் ஸ்பார்டன்ஸ் தொடர்ந்து 4-வது தோல்வியை தழுவியது.

இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் முருகன் அஸ்வின் கூறும்போது நாங்கள் பவர்பிளேயில் சரியாக ஆடவில்லை. நல்ல பார்ட்னர்ஷிப் அமையவில்லை. என்ன தவறு செய்தோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ளோம் என்றார்.

இன்று ஓய்வு நாளாகும். நாளை நடைபெறும் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

Tags:    

Similar News