கிரிக்கெட் (Cricket)

சேலத்தில் நாளை முதல் டி.என்.பி.எல். போட்டிகள்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் மோதல்

Published On 2022-07-18 07:39 GMT   |   Update On 2022-07-18 07:39 GMT
  • சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் நாளை தொடங்குகிறது.
  • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளியும் பெற்று உள்ளன.

சேலம்:

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 23-ந் தேதி நெல்லையில் தொடங்கியது. அங்கு 6 ஆட்டங்கள் நடந்தது. அதை தொடர்ந்து திண்டுக்கல்லில் 7 போட்டிகளும் , கோவையில் 8 ஆட்டங்களும் நடை பெற்றன.

இதுவரை 21 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. நெல்லை ராயல் கிங்ஸ் 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

மதுரை பாந்தர்ஸ் 4 வெற்றி , ஒரு தோல்வியுடன் 8 புள்ளியும், கோவை கிங்ஸ் 3 வெற்றி, 3 தோல்வி யுடன் 6 புள்ளியும் , சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளியும் பெற்று உள்ளன.

திண்டுக்கல் டிராகன்ஸ் (2 வெற்றி, 4 தோல்வி), திருப்பூர் தமிழன்ஸ் (2 வெற்றி, 3 தோல்வி) அணிகள் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. திருச்சி வாரியர்ஸ் 2 புள்ளி (1 வெற்றி, 4 தோல்வி) பெற்றுள்ளது. சேலம் ஸ்பார்டன்ஸ் தான் மோதிய 4 ஆட்டங்களிலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை.

2 நாள் இடைவெளிக்கு பிறகு சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் நாளை ( 19-ந் தேதி ) தொடங்குகிறது. கோவையை போல சேலத்திலும் முதல் முறையாக டி .என். பி எல். ஆட்டங்கள் நடைபெறுகிறது.

சேலத்தில் நாளை இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-முருகன் அஸ்வின் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் இரண்டு ஆட்டத்தில் தோற்றது. பின்னர் தொடர்ச்சியாக 3 போட்டியில் வெற்றி பெற்றது. அந்த அணி சேலம் ஸ்பார்டன்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் கேப்டன் கவுசிக் காந்தி, ஜெகதீசன், சசிதேவ், ராதாகிருஷ்ணன், சாய் கிஷோர், அலெக்சாண்டர், ஹரிஷ் குமார் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

4 ஆட்டத்தில் தோல்வி அடைந்த சேலம் ஸ்பார்டன்ஸ் முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

சொந்த மண்ணில் ஆடுவது கூடுதல் பலத்தை தரும் என்று அந்த அணி நம்பிக்கையில் இருக்கிறது.

Tags:    

Similar News