தொடர் தோல்வி எதிரொலி: கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஹசரங்கா
- இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடருக்கான அட்டவணை வெளியானது.
- ஜூலை 26-ம் தேதி முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது.
கொழும்பு:
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது.
டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அட்டவணை வெளியானது.
முதல் டி20 போட்டி வரும் 26-ம் தேதியும், 2-வது டி20 போட்டி வரும் 27-ம் தேதியும், 3வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 29-ம் தேதியும் நடக்கவுள்ளது.
இதேபோல், ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 1-ம் தேதியும், 2வது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 4-ம் தேதியும், 3வது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 7-ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தொடர் தோல்வியின் எதிரொலியாக இலங்கை டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து வனிந்து ஹசரங்கா ராஜினாமா செய்துள்ளார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இலங்கை கிரிக்கெட் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில், வனிந்து ஹசரங்கா டி20 அணி கேப்டன் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் நலன் கருதி தலைமைப் பொறுப்புகளை துறந்து ஒரு வீரராக அணியில் நீடிக்க முடிவு செய்துள்ளார் என தெரிவித்துள்ளது.
ஒரு வீரராக எனது சிறந்த முயற்சிகளை இலங்கை எப்போதும் கொண்டிருக்கும், நான் எப்போதும் போல் எனது அணி மற்றும் தலைமைக்கு ஆதரவளிப்பேன் என ஹசரங்கா தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.