ஆன்மிகம்
பழனி-உடுமலை சாலையில் திருச்செங்கோட்டை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி நோக்கி வந்த போது எடுத்த படம்.

பழனிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வருகை

Published On 2019-01-01 04:53 GMT   |   Update On 2019-01-01 04:53 GMT
பழனியில், தைப்பூச திருவிழா தொடங்குவதற்கு முன்பே பாதயாத்திரை பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி விளங்குகிறது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது.

திருவிழா தொடங்கியதும், மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருவார்கள். அப்போது அவர்களுக்கு தங்கும் வசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில், நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

பழனியில் இருந்து சில கிலோ மிட்டர் தூரம் வரை பக்தர்கள் தங்கும் இடம், அன்னதான கூடம், தற்காலிக கழிப்பறை உள்ளிட்டவை அமைக் கப்பட்டிருக்கும். இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்குவதற்கு முன்பே பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாகவந்தனர்.

அவர்கள் இளநீர், பால், தீர்த்தம், மயில் காவடிகளை எடுத்து ஆடிப்பாடியபடியே பழனிக்கு பாதயாத்திரையாக வந்தனர். பழனி-திண்டுக்கல் சாலையில் பாதயாத்திரை பக்தர்களுக்காக நடைபாதை வசதி உள்ளது. ஆனால் பழனி-உடுமலை ரோட்டில் அந்த வசதி இல்லை. இதனால் பக்தர்கள் சாலை யோரத்தில் நடந்து வருகின்றனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வரும் வாகனங்கள் பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பழனி-உடுமலை சாலையில் பக்தர்கள் நடக்க தற்காலிக பாதை ஏற்படுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கான உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க கோவில், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News