கால்பந்து

கோபா அமெரிக்கா கால்பந்து.. இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கொலம்பியா

Published On 2024-07-11 03:10 GMT   |   Update On 2024-07-11 03:10 GMT
  • அர்ஜென்டினா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட்டது.
  • முதல் பாதியில் கொலம்பியா அணி முன்னணி வகித்தது.

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் துவங்கி இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அர்ஜென்டினா, கனடா, உருகுவே மற்றும் கொலம்பியா என நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கனடா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட்டது. இதனிடையே கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் உருகுவே மற்றும் கொலம்பியா அணிகள் களம்கண்டன.

இந்த போட்டி துவங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர். போட்டியின் 39-வது நிமிடத்தில் கொலம்பியா அணியின் லெர்மா தனது அணிக்கு முதல் கோல் அடித்தார். இதன் மூலம் போட்டியின் முதல் பாதியில் கொலம்பியா அணி முன்னணி வகித்தது.

முதல் பாதி வரை இதே நிலை நீடித்தது. 0-1 என்ற கணக்கில் முன்னிலையுடன் இரண்டாம் பாதியில் விளையாடியது கொலம்பியா. மறுப்பக்கம் உருகுவே அணி பதில் கோல் அடிக்கும் முயற்ச்சிகளை தீவிரப்படுத்தியது. எனினும், அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

இதன் காரணமாக போட்டி முடிவில் 0-1 என்ற கணக்கில் கொலம்பியா அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் மோத உள்ளன.

கோப்பா அமெரிக்கா 2024 கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி ஜூலை 15 ஆம் தேதி நடைபெறுகிறது. இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் மோதுகின்றன. முன்னதாக ஜூலை 14 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் கனடா மற்றும் உருகுவே அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி மூன்றாவது இடம் பிடிக்கும்.

Tags:    

Similar News