கால்பந்து

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: நியூசிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த பிலிப்பைன்ஸ்

Published On 2023-07-25 11:20 GMT   |   Update On 2023-07-25 11:20 GMT
  • ஆட்டம் முழுவதும் ஏறக்குறைய 67 சதவீதம் பந்து நியூசிலாந்து வசமே இருந்தது.
  • இரண்டாவது பாதியில் இரு அணியாலும் கோல் அடிக்கமுடியவில்லை.

வெலிங்டன்:

பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகிறது.

6-வது நாளான இன்று நடைபெற்ற லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியே வெற்றி பெறும் என்று பலரும் நினைத்தனர். அதற்கேற்றவாறு போட்டியின் பெரும்பாலான நேரங்களில் பந்து அவர்களின் வசமே இருந்தது.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தங்களது முதல் உலகக் கோப்பை போட்டியில் அறிமுகமான பிலிப்பைன்ஸ் அணி நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது. 24-வது நிமிடத்தில் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி பிலிப்பைன்ஸ் வீராங்கனை சரீனா போல்டன் முதல் கோல் அடித்தார். இதன் மூலம் பிலிப்பைன்ஸ் அணி முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

இரண்டாவது பாதியில் நியூசிலாந்து அணியின் வசமே பந்து அதிக நேரம் இருந்தது. அவர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சியை பிலிப்பைன்ஸ் கோல் கீப்பர் ஒலிவியா மெக்டானியல் அற்புதமாகத் தடுத்தார். அணியின் வெற்றியில் அவருக்கும் முக்கிய பங்கு உண்டு. இரண்டாவது பாதியில் இரு அணியாலும் கோல் அடிக்கமுடியவில்லை.

ஆட்டம் முழுவதும் ஏறக்குறைய 67 சதவீதம் பந்து நியூசிலாந்து வசமே இருந்தது. ஆனால் அவர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் பிலிப்பைன்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மகளிர் உலகக் கோப்பையில் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

Tags:    

Similar News